
- சாஹா
பலமான விருந்து, பிரியாணி சாப்பிட்ட பிறகு சோடா குடித்தால்தான் ஓரளவு நிம்மதியாகிறது. இது சரியா... செரிமானம் ஆக சோடா தவிர வேறென்ன சாப்பிடலாம்?
- எம்.கிருஷ்ணவேணி, சென்னை-88
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்
எப்போதோ ஒருமுறை பிரியாணி சாப்பிட்டு, அது செரிமானமாக சோடா குடிப்பதில் தவறில்லை. சிலர் வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை பிரியாணியோ, பலமான விருந்தோ சாப்பிடுவார்கள். அப்படிச் சாப்பிடும்போதெல்லாம் சோடா குடிப்பார்கள். அதை வழக்கமாகவே மாற்றிக்கொள்வது நிச்சயம் தவறுதான். ஏற்கெனவே வயிற்று உப்புசம், அசிடிட்டி உள்பட வயிறு, குடல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் நிச்சயம் சோடாவை தவிர்க்க வேண்டும். சோடா குடிப்பதால் வயிற்று உப்புசம், பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் வரும். எனவே, பலமான உணவு உண்ட பிறகு செரிமானத்துக்கு எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். சீரகம், ஓமம் சேர்த்துக் கொதிக்கவைத்த நீர் அருந்தலாம். அதுவே செரிமானத்தைச் சீராக்கும். நேரம் கடந்து சாப்பிடுவதும் செரிமானத்தை பாதிக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

என் மாமியாருக்கு 70 வயதாகிறது. மெனோபாஸ் வந்து 17 வருடங்கள் ஆன நிலையில், இப்போது திடீரென லேசான ப்ளீடிங் இருப்பதாகச் சொல்கிறார். அது புற்றுநோயாக இருக்கும் என்ற பயத்தில் மருத்துவப் பரிசோதனைக்கும் வர மறுக்கிறார். மெனோ பாஸுக்கு பிறகு ப்ளீடிங் வருமா? அதன் காரணம் என்ன?
- கே. ராஜலட்சுமி, திண்டிவனம்
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக் கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று போவதையே நாம் மெனோபாஸ் என்கிறோம். நம் உடலிலுள்ள ஈஸ்ட்ரொ ஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார் மோன்கள் முற்றிலும் தம் சுரப்பை நிறுத்திக்கொண்ட பிறகு ஒரு வருடத்துக்கு பீரியட்ஸ் வராமலிருந்தால்தான் நமக்கு மெனோபாஸ் வந்துவிட்டதை உறுதிசெய்ய முடியும்.

மெனோபாஸுக்கு பிறகு வரும் ப்ளீடிங் சாதாரணமான தல்ல. ஆனாலும் மெனோபாஸுக்கு பிறகு வரும் ப்ளீடிங், பெரும்பாலும் புற்றுநோயல்லாத காரணத்தாலேயே வருகிறது என்பது நல்ல செய்தி. 10 சதவிகிதப் பெண் களுக்கு புற்றுநோய் காரணமாகவும் இந்த ப்ளீடிங் ஆகலாம். மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு முற்றிலும் நின்றுபோவதால் வெஜைனா பகுதியிலுள்ள சருமம் சுருங்கிவிடும். அந்த இடத்தின் அதீத வறட்சி காரணமாக ப்ளீடிங் ஆவது சாதாரணமாக நடப்பதுதான். கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியான செர்விக்ஸ் அல்லது கர்ப்பப்பையின் உள்பகுதியிலுள்ள எண்டோமெட்ரியம் ஆகிய பகுதிகளில் தொற்று ஏற்படு வதாலும் ப்ளீடிங் ஏற்படலாம். எண்டோமெட்ரியம் பகுதிக் குள் புற்று நோயல்லாத கட்டிகள் சிலருக்கு இருக்கலாம். அதுவும் மெனோபாஸுக்கு பிறகான ப்ளீடிங் ஏற்பட காரணமாகலாம். மாத்திரை அல்லது பேட்ச் அல்லது ஜெல் வடிவில் ஹெச்ஆர்டி எனப்படும் ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுக்கும் பெண்களுக்கும் இந்த ப்ளீடிங் ஏற்படலாம். இத்தகைய காரணங்களால் ஏற்படும் ரத்தப் போக்கை எளிதாக குணப்படுத்திவிடலாம்.
ஈஸ்ட்ரோஜென் குறைவு காரணமாக ஏற்பட்டிருந்தால் ஈஸ்ட்ரோஜென் க்ரீம் பரிந்துரைப்பார். அதை அளவுக்கதி மாகப் பயன்படுத்தக்கூடாது. இந்த க்ரீம் எல்லோருக்கும் உகந்தது அல்ல என்பதால் மருத்துவ ஆலோசனை இல்லாமல் எடுக்கக்கூடாது. தொற்று காரணமாக ஏற்பட்ட ப்ளீடிங் என்றால் ஆன்டிபயாடிக் மருந்துகள் உதவும். எண்டோமெட்ரியம் கட்டிகளை ஹிஸ்டரோஸ்கோப்பி சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம்.
சிலருக்கு கர்ப்பப்பையிலோ, கர்ப்பப்பை வாய்ப்பகுதி யிலோ புற்றுநோய் வரலாம். இதனாலும் ப்ளீடிங் வரலாம். எனவே மெனோபாஸுக்கு பிறகு ப்ளீடிங் ஏற்பட்டால் முழுமையான பரிசோதனை அவசியம். முதலில் பொது வான பரிசோதனை, அடுத்து வெஜைனா பகுதியில் பரிசோதனை, கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கான பரிசோதனை செய்து கட்டிகளோ, புற்றுநோய்க்கான அறிகுறிகளோ தென்படுகின்றனவா என்று பார்ப்போம். புற்றுநோய்க்கான பாப் ஸ்மியர் டெஸ்ட்டும் செய்யப்படும்.
கர்ப்பப்பையின் உள்பகுதியான எண்டோமெட்ரியத்தின் உள் லேயர், மெனோபாஸுக்கு பிறகு மெலிந்தே இருக்கும். ஒருவேளை அது, அடர்த்தியாக இருந்தால் புற்றுநோய் அறிகுறியாக இருக்குமோ என அந்தப் பகுதியை பயாப்சி பரிசோதனைக்கு அனுப்புவோம். எனவே மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்தால்தான் காரணம் அறிந்து சிகிச்சை எடுக்க முடியும். புற்றுநோயாக இருக்கும் என்ற பயத்தில் அதைத் தவிர்ப்பது சரியான தல்ல. புற்றுநோயாகவே இருந்தாலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்திவிட முடியும் என்பதை அவருக்குப் புரியவையுங்கள்.
உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை
`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,
avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.