சினிமா
Published:Updated:

இதயத்தின் மீது கவனம் செலுத்துங்கள்!

இதயம்
பிரீமியம் ஸ்டோரி
News
இதயம்

கோவிட் நோயின் தாக்கத்தால் இதயத்தின் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்படுகின்றன

கோவிட் நோய் என்பது நுரையீரலைத் தாக்கி நிமோனியாத் தொற்றை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நாம் அறிய வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயம், கோவிட் நோய் ரத்த நாளங்களில் உள்காயங்களை ஏற்படுத்தும் தன்மையுடையதாக இருக்கிறது.

பொதுவாக நமது சருமத்தில் எங்காவது காயம் ஏற்பட்டால், அதன்வழியே வெளியேறும் ரத்தக்கசிவை நிறுத்துவதற்காக ரத்த உறைதலை நமது உடல் தூண்டும். இது இயற்கையானது. ஆனால், கோவிட் நோயைப் பொறுத்தவரை ரத்த நாளங்களுக்குள்ளாகவே எந்த வெளிப்புறக் காயமும் ஏற்படாத நிலையிலும் ரத்த உறைதலை அது தூண்டுகிறது.

இதனால் பெரிய ரத்தநாளங்கள் ஆரம்பித்து நுண்ணிய ரத்த நாளங்கள் வரை ரத்தக் கட்டிகள் ஏற்படுகின்றன. இப்படி ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் நோயாக அது அறியப்பட்டுள்ளது. கோவிட் நோயின் இத்தகைய தன்மையால், நோயின் தாக்கத்தில் ஒருவர் இருக்கும்போது அவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகின்றது.

இதயத்தின் ரத்த நாளங்களிலும், மூளையின் ரத்த நாளங்களிலும், நுரையீரலின் தமனியிலும், கால்களில் உள்ள ஆழ்சிரையிலும், குடல் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களிலும் என்று பேதமின்றி அனைத்து இடங்களிலும் ரத்தக்கட்டிகளை உண்டாக்கி அடைப்பை ஏற்படுத்த வல்ல நோயாக கோவிட் இருக்கிறது.

இதயத்தின் மீது கவனம் செலுத்துங்கள்!

இவ்வாறாக கோவிட் நோய்த் தொற்றுக்கு ஆளான நபர்களுக்கு ரத்த உறைதல் தன்மையை மருத்துவர்கள் பரிசோதிக்கிறோம். இத்தகைய தீவிர ரத்த உறைதல் நிலையைப் பறைசாற்றும் உயிர் ரசாயன சமிக்ஞைகளை அடையாளம் காண்கிறோம். அவை மிக அதிகமான அளவில் ரத்தத்தில் தோன்றினால், உடனே ரத்த உறைதலைத் தடுக்கும் ஹெபாரின் எனும் மருந்தைச் செலுத்தி ஆபத்தான ரத்தக்கட்டிகள் உருவாகாமல் தடுக்கப்படுகின்றன.

இத்தகைய நோய் நிலையைக் கடந்து பலரும் நல்ல முறையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குச் செல்கிறார்கள்.

ஆனால், அவர்களில் சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சில வாரங்களுக்குள் மீண்டும் இதய ரத்த நாள அடைப்போ, மூளை ரத்த நாள அடைப்போ ஏற்பட்டு மருத்துவமனைகளில் மறுபடியும் அட்மிட் ஆவதைக் காண முடிகிறது.

இதன் மூலம் கொரோனாத் தொற்றின் ஆபத்தான பின்விளைவு ஒன்றை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கோவிட் நோயிலிருந்து ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனாலும் கூட அந்நோயின் தாக்கம் சில வாரங்களுக்கு அவரிடம் இருக்கும்.

இத்தகைய இதயம் சார்ந்த நோய் நிலைகளை மூன்றாகப் பிரிக்கலாம்...

முதல் நிலை: இதயத்தின் தசைகளை வலுவிழக்கச் செய்வது.

கோவிட் நோயின் தாக்கத்தால் இதயத்தின் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் மிகக் குறுகிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்துவதால் இதயத்தின் தசைகளுக்கு ரத்தமும் ஆக்சிஜனும் கிடைக்காமல் நாளடைவில் பழுதாகி இறக்கின்றன.

இதனால் இதயத்தின் தசைகள் முன்பைப் போல சிறப்பாகச் செயல்பட முடியாமல் குறைவான வேகத்துடன் செயல்படும். இதன் விளைவாக, ரத்தத்தை சரியாக உடல் முழுமைக்கும் உந்திச்செலுத்த இயலாது. நாளடைவில் இதயச் செயல்பாடு குறைந்து கொண்டே வந்து முழுதாகச் செயலிழக்கும் நிலை ஏற்படும்.

இரண்டாவது நிலை: இதயத்தின் துடிப்பில் மாற்றங்கள் உருவாவது.

சரியான வேகத்தில் துடித்துக்கொண்டிருந்த இதயம் வேகம் குறைந்தோ அல்லது கூடியோ துடிக்கும்.

மேலும் ஒரு துடிப்பு முழுதாக நிறைவடையாமல் அரைகுறையாகத் துடிப்பதால் உடல் முழுவதும் சரியாக ரத்தம் போய்ச் சேரும் நிலை இருக்காது.

இவையெல்லாம் கொரோனா வைரஸானது நேரடியாக இதயத்தின் தசைகளில் உள்ள ACE2 RECEPTOR எனும் இடத்தைத் தாக்கி வலுகுன்றச் செய்வதால் நேரும் பிரச்னைகளாக இருக்கின்றன.

மூன்றாவது நிலை: இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை அளித்திடும் ரத்த நாளங்களில் ரத்தக்கட்டிகளை ஏற்படுத்தி அடைப்பை உருவாக்குவது.

இதைத்தான் நாம் ‘ஹார்ட் அட்டாக்’ என்கிறோம். தீவிர கொரோனா நோய்க்கு உட்பட்டு ஐசியூ சிகிச்சையில் இருந்து குணமாகும் மக்களில் 50% பேருக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே ஒருவருக்கு கொரோனா நோய் வந்து குணமாகியிருந்தால், அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டாலும் பின்வரும் அறிகுறிகள் அவருக்குத் தோன்றினால் உடனே அலர்ட் ஆக வேண்டும்.

இதயத்தின் மீது கவனம் செலுத்துங்கள்!

அந்த அறிகுறிகள்

1. மூச்சுத் திணறல்

2. சாதாரண வேலைகளைச் செய்யும்போதும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது

3. அதீத உடல் சோர்வு

4. அவ்வப்போது தலைசுற்றல் / கிறுகிறுப்பு ஏற்படுவது

5. இதயப் படபடப்பு

6. கால்கள் மற்றும் முகம் வீங்குவது

7. உடல் எடை திடீரென்று கூடுவது

8. வறட்டு இருமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பது

9. பசியின்மை

10. குமட்டல்

மேற்சொன்ன அறிகுறிகள் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆன சில வாரங்களுக்குள் காணப்பட்டால், உடனே இதய நல சிறப்பு மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.

இதயத்தின் மீது கவனம் செலுத்துங்கள்!

இத்தகைய அறிகுறிகளை வெளிப்படுத்தும் மக்களுக்கு உடனே இதயத்தின் சீரான இயக்கம் குறித்து அறிய உதவும் ஈசிஜி எடுக்கப்படும். மேலும் இதயத்தின் செயல்திறன் குறித்து அறிய உதவும் எக்கோ கார்டியோகிராம் செய்யப்படும்.

மேலும், இதயத்தின் தசைகளில் உள்ள செல்கள் காயங்களைச் சந்தித்துள்ளனவா என்பதை அறியும் உயிர் ரசாயன சமிக்ஞைகளும் பரிசோதிக்கப்படும். அதுபோலவே, ரத்த உறைதல் தன்மை இருக்கிறதா என்பதும் சோதிக்கப்பட்டு அதற்குரிய ரத்த உறைதல் தன்மையைத் தடுக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

இதன் மூலம் இதய பாதிப்பை மருத்துவர் அளவிட்டு சிகிச்சை தருவார். இதை விரைவில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது என்பது மிக முக்கியம்.

காரணம், எவ்வளவு விரைவாக சிகிச்சை பெறுகிறோமோ, அதைப் பொறுத்தே இதயத்தின் நீண்ட நாள் செயல்திறனைப் பாதுகாக்க முடியும்.

நீரிழிவு , ரத்த கொதிப்பு போன்ற இணை நோய்கள் இருந்து கோவிட் நோய் ஏற்பட்டவர்களும் ஏற்கனவே இதய ரத்த நாள நோய் இருந்து அதற்காக ஸ்டண்ட்/ பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் , மூளை ரத்த நாள அடைப்பு ஏற்பட்டவர்களும் மிதமான மற்றும் தீவிர கோவிட் நோய் ஏற்பட்ட நிலையில் இன்னும் கவனத்துடன் மேற்சொன்ன அறிகுறிகளை கவனித்தால் போதுமானது.

சாதாரண கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான இளைஞர்கள் இது குறித்து அதிக அச்சப்பட தேவையில்லை. விழிப்புடன் இருந்தால் போதுமானது.

கோவிட் நோய் ஏற்பட்ட அனைவருக்குமே இதயம் பாதிக்கப்படுவதில்லை. எனினும் இது குறித்த விழிப்புணர்வு நம்மிடம் இருந்தால் அறிகுறிகளை எளிதில் கண்டு விரைவில் சிகிச்சை பெற உந்துதலாக அமையும்.எனவே எச்சரிக்கை உணர்வு போதுமானது. அச்சம் தேவையற்றது.