Published:Updated:

பழத்தோலும் பலம்!

பழத்தோலும் பலம்!

பழத்தோலும் பலம்!

பழத்தோலும் பலம்!

Published:Updated:
பழத்தோலும் பலம்!

யற்கை ஓர் அற்புதம்; அதன் கொடை மகத்தானது. அந்த வகையில், இயற்கையான முறையில் வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களை அளிக்கக்கூடியவை பழங்களும் காய்கறிகளும். பழத்தைவிட, தோலில் அதிகச் சத்து உள்ளது என்பது பொதுவான கருத்து. மாதுளை, பலா உள்ளிட்ட பல பழங்களின் தோல்கள் கடினமானவையாக இருக்கும்; பயன்படுத்த முடியாது. ஆனால், கொய்யா, மாம்பழம், ஆப்பிள் போன்ற சில பழங்களைத் தோலுடன் சாப்பிட முடியும். இங்கே சில பழத் தோல்களும் அவற்றின் பயன்களும்...

பழத்தோலும் பலம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழை

• வாழைப்பழத்தில், வைட்டமின் சி, மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம் உள்பட ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதன் தோலைத் தவிர மற்ற அனைத்துப் பாகங்களையும் நாம் பயன்படுத்துகிறோம். தோலும்கூட பயன் தரக்கூடியதுதான்.

• வாழைப்பழத் தோலை வெயிலில் நன்கு உலரவைத்து, அதைப் பொடி செய்து கொள்ளவும்.

• இந்தப் பொடியில், மாவுச்சத்து, புரதச்சத்து நிறைவாக உள்ளது. இதை, பாலில் கலந்து பயன்படுத்தினால், அது முழு உணவாகச் செயல்படும்; பாலின் சுவையையும் கூட்டும்.

• வாழைப்பழத்தோலின் உட்பகுதியைப் பற்களில் தேய்த்துவர, பல்லின் மஞ்சள் தன்மை நீங்கி, பளிச் வெண்மை பெறும்.

பழத்தோலும் பலம்!

ஆரஞ்சு

• வைட்டமின் சி அதிகம் உள்ள இந்தப் பழம், புற்றுநோய் தடுப்பானாகச் செயல்படுகிறது. ‘ஆரஞ்சு’ போன்ற சிட்ரஸ் பழங்கள், ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வல்லமை கொண்டவை. ஆரஞ்சு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.

• பாத வெடிப்புகளில் தோலைப் பூசி வந்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

• ஆரஞ்சுப்பழத் தோலை சேகரித்து, ரூம் ஃப்ரெஷ்னராகப் பயன்படுத்தலாம்.

• ஆரஞ்சுப்பழத் தோலுடன் சிறிது உப்பு சேர்த்து, வாஷ்பேஸின், கிச்சன் மேடை போன்றவற்றைச் சுத்தப்படுத்த ஸ்க்ரப்பர் போலப் பயன்படுத்தலாம்.

• ஆரஞ்சுப்பழத் தோலைப் பொடி செய்து, டீத்தூளுடன் சிறிதளவு சேர்த்துப் பயன்படுத்த, டீயின் சுவை கூடும். தொடர்ந்து எடுத்துவந்தால், புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

• மேலும், இந்தப் பொடியுடன் சிறிதளவு பால், தயிர் சேர்த்து, ஃபேஸ்பேக் போல பயன்படுத்த, பொலிவிழந்த முகம் களைகட்டும்.

• ஆரஞ்சுப்பழத் தோல் பொடிக்கு, பற்கூச்சத்தை நீக்கும் வல்லமை உண்டு.

• இதனை, வீட்டுத் தோட்டத்துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம்.

• இதன் தோலில் இருந்து சாறு எடுத்து, முகத்துக்குப் பூசிவர கரும் புள்ளிகள் நீங்கி, முகம் பளபளப்பாக மாறும்.

பழத்தோலும் பலம்!

மாம்பழம்

• மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு உள்ளது. இரும்புச்சத்து நிறைந்த மாம்பழம் கர்ப்பிணிகளுக்குச் சிறந்தது. 

• மாம்பழத்தில் உள்ள அளவுக்கு, அதன் தோலிலும் வைட்டமின் சி சத்து அடங்கி உள்ளது.

• மாம்பழத்தோலைக் கூழாக்கி, அதனுடன் பால் கலந்து சருமத்தில் தடவி வந்தால், கருவளையம் மெள்ள நீங்கும்.

• இதனுடன் சிறிது தேன் கலந்து, கழுத்தில் கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

பழத்தோலும் பலம்!

மாதுளை

• மாதுளம்பழத்தைப் போலவே, இதன் தோலும் அதிகப் பலன் கொண்டது. பெரும்பாலும் இதைச் சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம்.

• மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

• இந்தப் பொடியை நீருடன் கலந்து கொப்பளிக்க, வாய்துர்நாற்றம் நீங்கும்.

• மாதுளம்பழத் தோலின் பொடியுடன், பால், ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் ஃபேஸ்பேக் போடலாம்.

• ரூம் ஃப்ரெஷ்னராகப் பயன் படுத்தலாம்.

• மாதுளம்பழத் தோலைப் பொடித்து, தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.

• மாதுளம்பழத் தோலைச் சாப்பிட்டால், இதய நோய்கள் வராமல் காக்கும். எலும்பை வலுவாக்கும்.

பழத்தோலும் பலம்!

எலுமிச்சை

• எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளன. தாகம் தணிக்கும்; தலைவலி நீக்கும்; ஸ்கர்வியைத் தடுக்கும்... என நல்ல பல பலன்களைத் தரும் எலுமிச்சைத் தோலை பல வழிகளில் பயன்படுத்தலாம்.

• எலுமிச்சைத் தோல் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது. சிலருக்குக் கை, கால் முட்டிகளில் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோலை கருமையான இடங்களில் தேய்த்துவர, கருமை நீங்கி, நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது சருமத்துக்குப் பளபளப்பையும் தர வல்லது.

• எலுமிச்சைப்பழத் தோலில் உள்ள எண்ணெய், நறுமணத் தைலங்கள் தயாரிக்க உதவும்.

• எறும்பு போன்ற பூச்சிகளைத் தடுக்கும் சாக்பீஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எலுமிச்சைப்பழத் தோலை பயன்படுத்தலாம்.

• பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எலுமிச்சைப்பழத் தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்களில் நல்ல பலன் தெரியும்.

• சில குளிர்சாதனப் பெட்டிகளைத் திறந்தாலே துர்நாற்றம் வீசும். இதைக் கட்டுப்படுத்த, எலுமிச்சைப்பழத் தோலை அதில் போட்டு வைக்கலாம்.

• மைக்ரோவேவ் ஓவனைத் தூய்மைப்படுத்த, எலுமிச்சைப்பழத் தோலைப் பயன்படுத்தலாம்.

• எலுமிச்சைப்பழத் தோலை நகங்கள் மீது தேய்க்க பளபளப்புக் கிடைக்கும்.

பழத்தோலும் பலம்!

சப்போட்டா

• தித்தித்திக்கும் சுவை படைத்த சப்போட்டா, வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. அதிக ஆற்றல் தரும்; எளிதில் ஜீரணம் அடையக்கூடியது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவையும் உள்ளன. பொட்டாசியம், இரும்பு, தாமிரம் போன்ற தாதுக்களும் அடங்கியுள்ளன.

• சப்போட்டா பழத்தின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதைவிட, அப்படியே சாப்பிடுவதே சிறந்தது.

• இந்தப் பழத்தைத் தோலுடன் சாப்பிட, வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படும்.

• சப்போட்டா தோல் வயிறு, குடல் புற்றுநோயைத் தடுக்கும் வல்லமை கொண்டது.

- ச.ஆனந்தபிரியா