Published:Updated:

சருமப் பொலிவுக்கு களிமண் தெரப்பி

சருமப் பொலிவுக்கு களிமண் தெரப்பி

சருமப் பொலிவுக்கு களிமண் தெரப்பி

ருமத்தின் ஆரோக்கியத்தைக் காக்க எவ்வளவோ க்ரீம், ஃபேஷியல், பிளீச் என்று செய்கிறோம். சருமம் வெள்ளையாக, மிருதுவாக, மினுமினுப்புடன் இருக்க என விதவிதமான சோப், கிரீம், லோஷன்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை எல்லாம் முயற்சி செய்து பார்த்தால், கடைசியில் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே. கூடவே சருமமும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆனால், பக்க விளைவுகள் இல்லாத, ரசாயனக் கலப்புகள் இல்லாத சிறந்த தீர்வு இயற்கை மருத்துவத்தில் உள்ளது. அதுதான் களிமண் தெரப்பி.

மனித உடல் பஞ்ச பூதங்களின் கூட்டே. பஞ்ச பூதங்களில் ஒன்று மண் கொண்டு நம் உடலுக்கான சிகிச்சை செய்யும்போது, பலன்கள் பெரிய அளவில் கிடைப்பது உறுதி. உடலுக்குக் களிமண் தெரப்பி செய்யும்போது, மண்ணுக்கு இருக்கின்ற பாசிட்டிவ் எனர்ஜி நம் உடலுக்கும் கிடைக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சருமப் பொலிவுக்கு களிமண் தெரப்பி

சருமத்துக்கான மட் பேக்

• மண்ணில் நிறைய வகைகள் உள்ளன. பெரும்பாலும் சிகிச்சைக்குப் பயன்படுத்துவது களிமண் மற்றும் சிவப்பு மண். சருமம் தொடர்பாக சிகிச்சை செய்யும்போது களிமண்ணால் சிகிச்சை செய்வது நல்லது.

• களிமண்ணுடன் மஞ்சள், வேப்பிலை, கற்றாழைப் பொடி போன்ற மருத்துவப் பொக்கிஷங்கள் சேர்ந்த கலவையாகத் தயாரித்துப் பூசலாம்.

• உடல் முழுதும் பூச வேண்டும் எனில், பாதம், தொடை, மேல் உடல், முகம் எனப் பூச வேண்டும். முகத்துக்கு மட்டும் பூச வேண்டும் எனில் தாடை, கன்னங்கள், நெற்றி எனப் பூச வேண்டும்.

‘ஐ’ மட் பேக்

கண்களுக்குப் பூச வேண்டும் எனில், பருத்தித் துணியை ஈரப்படுத்தி, கண்களின் மேல் வைத்து, அதன் மேல் களிமண்ணைப் பூச வேண்டும்.

பலன்கள்

• மண்ணில் தாதுக்கள் நிறைந்திருக்கும். சூரிய ஒளியில் இருந்து சத்துக்களைப் பெற, மண்ணில் உள்ள தாதுக்கள் உதவும். இவை அனைத்தும் சருமத்தைச் சுத்தம் செய்யும். கிளென்சிங் செய்த பலன் கிடைக்கும்.

• சருமத்தின் மேல் படர்ந்த அழுக்கு, தூசு, கிருமிகள் நீங்கும்.

• சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும் இடத்தில், சருமம் பளபளப்பாக மாறும்.

• சரும நோய்கள் எதுவும் நம்மை அண்டாது.

• முகத்தில் வழியும் எண்ணெய்ப் பசை குறையும். பருக்கள் வருவது தடுக்கப்படும்.

களிமண் கலவையுடன் இரண்டு சொட்டு லாவண்டர் எண்ணெய் ஊற்றிப் பூசிவந்தால், சருமமும் மிருதுவாகும் நறுமணம் வீசுவதால் தலைவலி குணமாகும்.

• ரத்த நாளங்கள் சீராக வேலை செய்யும்.

• முட்டி வலிக்குக் களிமண் பூசினால், வலி குறைந்து சருமமும் ஆரோக்கியமாகும். 

சருமப் பொலிவுக்கு களிமண் தெரப்பி

கட்டளைகள்

• களிமண் பூசிய பின் 20-30 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவ வேண்டும்.

• வாரத்தில் மூன்று முறை களிமண் சிகிச்சை செய்துகொள்ளலாம். வறண்ட சருமத்தினர் வாரம் ஒருமுறை செய்தாலே போதும்.

• காலை 12 மணிக்கு முன் களிமண் சிகிச்சைசெய்வது நல்லது.

• ஆண்களுக்கு முகத்தில் பூசும்போது, தாடி இருப்பின் அந்த இடத்தில் உறிஞ்சும் தன்மை குறைவாக இருக்கும். அதனால், ஷேவிங் செய்த பின், களிமண்ணை முகத்தில் பூச வேண்டும்.

• குழந்தைகளுக்கு 10 வயதுக்கு மேல் பூசலாம். மூக்குத் துவாரங்கள், உதட்டுக்கு மேல் பூசுவதைத் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவர்கள்

சளி, இருமல் பிரச்னை இருப்போர், சைனஸ், தொற்று, மாதவிலக்கான பெண்கள், பருக்கள் பரவி இருப்பவர்கள், புண்கள், காயங்கள் இருப்பவர்கள், மண் தெரப்பி எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குளிர் காலத்தில் களிமண் தெரப்பி செய்ய வேண்டாம். அறுவை சிகிச்சை செய்தவர்கள், மருத்துவர் ஆலோசனையுடன் அறுவைசிகிச்சை செய்த இடத்தைச் சுற்றிலும் ஐந்து செ.மீ தள்ளி பூசிக்கொள்ளலாம்.

எப்படிப் பூசுவது?

முகத்தில் பூசும்போது, இளஞ்சூடான நீரில் கலந்து பூச வேண்டும். அரை செ.மீ அளவுக்கு உடல் முழுதும் களிமண்ணைப் பூச வேண்டும். கண்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் களிமண் பூசக் கூடாது.

காதினுள் மண் புக வாய்ப்பு இருப்பதால், காதில் பஞ்சை அடைத்துக்கொள்ள வேண்டும். பின், அதன் மேல் மண்ணைப் பூசலாம். சிலருக்குக் களிமண் தெரப்பி கூந்தலுக்கும் தேவைப்பட்டால் மட்டுமே பூசலாம். அனைவரும் கூந்தலில் பூசிக்கொள்ளக் கூடாது.

சிகிச்சைக்கு முன்...

சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தும் சருமம் என்றால், முதலில் காது ஓரம் அல்லது கைகளில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம். பூசிய இடத்தில் அரிப்பு, சிவப்பாகுதல் போன்ற பிரச்னைகள் இருப்பின், களிமண் சிகிச்சையைச் செய்யாமல் தவிர்க்கலாம். பிரச்னை ஏதும் இல்லை என்றால், தாராளமாக பூசிக்கொள்ளலாம்.

சருமப் பொலிவுக்கு களிமண் தெரப்பி

மண் எங்கு கிடைக்கும்?

முதன்முறையாக சிகிச்சை  செய்யும்போது, சித்த, ஆயுர்வேத அல்லது நேச்சுரோபதி மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செய்துகொள்ள வேண்டும். பிறகு, அவர் பரிந்துரையின் பேரில் வீட்டில் செய்யலாம். களி மண் பேக் சித்தா, ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். ஆற்று நீருக்குக் கீழ், இரண்டு அடி  ஆழத்தில் இருக்கும் மணலைத்தான் சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டும். அந்த மண்ணைச் சுத்தம்செய்து, ஒருநாள் முழுதும் நீரில் ஊறவைத்து, பிறகு வெயிலில் உலரவைத்து மிருதுவான பொடியாக மாற்றி, மீண்டும் வெயிலில் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

- ப்ரீத்தி

படங்கள்: ர.சதானந்த், ச.ஹர்ஷினி​