Published:Updated:

ஹேர் கலரிங் பாதுகாப்பானதா?

ஹேர் கலரிங் பாதுகாப்பானதா?

ஹேர் கலரிங் பாதுகாப்பானதா?

‘நோ கலர் மீன்ஸ்... நோ ஃபேஷன்’ இதுதான் இன்றைய ட்ரெண்ட். நரைமுடிக்காக மட்டும் அல்லாமல் ஸ்டைலுக்காகவும் முடியின் நிறத்தை மாற்றிக்கொள்வது, இன்று பெரும்பாலானோருக்கு ஃபேஷன். இளம் வயதினர் அழகுக்காகவும் மற்றவர்கள் இளமைத் தோற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் ஹேர் கலரிங் செய்துகொள்கின்றனர். இப்படி வெளி அழகைப் பராமரிக்க இரண்டு மணி நேரத்தைச் செலவழிக்கும் நாம், இந்த ரசாயனங்கள் நம் ஆரோக்கியத்துக்கு எப்படியெல்லாம் கேடு விளைவிக்கும் என்று இரண்டு நிமிடங்கள்கூட யோசிப்பது இல்லை.

தவறான உணவுப் பழக்கம், போதுமான தூக்கமின்மை, மரபியல், மனஅழுத்தம், வேலைப் பளு, அதிக அளவில் ரசாயனங்களைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால், தற்போது இளைஞர்களிடம் `ப்ரீமெச்சூர் கிரேயிங்’ என்கிற இளநரைப் பிரச்னை  காணப்படுகிறது. அதற்காக தொடர்ந்து ஹேர் கலரிங் செய்பவர்களுக்கு ஒவ்வாமை முதல் புற்றுநோய் வரை பல்வேறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, 20 வயதுக்கு உட்பட்டவர்கள் ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் பி.பி.டி உள்ள ஹேர் கலரைப் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பிணிகளும், பால் கொடுக்கும் தாய்மார்களும் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது குழந்தைகளை பாதிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

பி.பி.டி என்பது முடிக்கு கறுப்பு நிறத்தைக் கொடுக்கக்கூடிய ரசாயனம். இது அதிக அளவில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, பி.பி.டி அல்லாத ஹேர் கலரைத் தேர்வுசெய்வது நல்லது. பிரவுன், பர்கண்டியில் பி.பி.டி இல்லை என்பதால், அவற்றைப் பயன்படுத்தலாம். பி.பி.டி மற்றும் ஆக்சிடைசர் சேர்க்கும்போது, தோல் மற்றும் முடியில் சென்சிட்டிவிட்டியை ஏற்படுத்தும். இதனால், சரும அலர்ஜி ஏற்படும். தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது முகம், கண், உதடுகளில் வீக்கம், மூச்சுத்திணறல் ஏற்படலாம். டை படும் இடத்தில் மட்டும் வெண்புள்ளிகள் (கான்டாக்ட் லுக்கோடெர்மா) ஏற்படவும் வாய்ப்புள்ளது. சிலருக்கு, சிறுநீரகச் செயல்இழப்புக்கூட ஏற்படலாம்.

ஹேர் கலரிங் பாதுகாப்பானதா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து, டை பயன்படுத்துபவர்களுக்கு முடியின் வேர்ப்பரப்பிலும் முகத்திலும் கருமை நிறம் படிந்து, பிக்மென்டேஷன் தோன்றும். டை, கலரிங்கின் பயன்பாடு பல ஆண்டுகளைத் தாண்டும்போது சிறுநீரகப்பையில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. டை புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடியது. எனவே, மரபுரீதியாக, குடும்பத்தில் வேறு யாருக்காவது புற்றுநோய் பாதிப்பு இருந்திருந்தால் கட்டாயம் டை, கலரிங்கைத் தவிர்க்க வேண்டும். ஹேர்டையில் இருக்கக்கூடிய அமோனியா,  பேராபினலின்டையமின் (Paraphenylenediamine), ஹைட்ரஜன் பெராக்ஸைடு முடியில் உள்ள இயற்கையான பொலிவைக் குறைத்து, வறட்சியுடன் கம்பிபோல ஆக்கிவிடும். அமோனியா முடியின் வேர்துளைகளைத் திறக்கச் செய்யும். ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் பி.பி.டி கலவை, முடிக்குள் சென்று வேரில் இருந்து கறுப்பு நிறத்தைக் கொடுக்கும். இதனால், முடியில் உள்ள புரதச்சத்து அழிக்கப்படும். இதைத் தவிர்க்க, டை பயன்படுத்துபவர்கள் நிச்சயம் தொடர்ந்து முடியை ரின்ஸ்அவுட் மற்றும் லீவ் ஆன் போன்ற கண்டிஷனர் மூலம் கழுவ வேண்டும். இது, முடி வறட்சியையும் பிளவையும் தடுக்கும். சரிவிகித ஊட்டச்சத்து மிகுந்த உணவு, நேரம் தவறாத உணவுப் பழக்கம், சரியான கால இடைவெளியில் முடி அலசுதல், இயற்கைமுறையில் தயார்செய்த ஹென்னா  பயன்படுத்துவது போன்றவை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செம்பருத்தி பூ, இலை, கரிசலாங்கண்ணி, மருதாணி, வெந்தயம், கறிவேப்பிலையைக் காயவைத்து அரைத்து, 15 நாட்களுக்கு ஒரு முறை தலையில் போட்டு, ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளிக்கும்போது, தலைமுடி ஆரோக்கி
யமானதாக இருக்கும்.

மரபியல்ரீதியான குறைபாடு உள்ளவர்களுக்கு என்ன சிகிச்சை எடுத்தாலும் முடி கொட்டுவதையோ, முடி நரைப்பதையோ தவிர்க்க முடியாது. இவர்கள், போலியான விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது.

- பி.கமலா

படம்: சு.ஷரண் சந்தர்

இன்ஸ்டன்ட் டைகளைத் தவிர்க்க வேண்டும்.

அமோனியா, பி.பி.டி உள்ளிட்ட ரசாயனங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே, வாங்க வேண்டும்.

ஹேர் டையைப் பயன்படுத்தும்போது, உடனடியாகத் தலையில் தடவிவிடக்கூடாது. கை அல்லது காதின் பின்புறம் லேசாகத் தடவ வேண்டும். இதில், அலர்ஜி ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகு, தலையில் பூச வேண்டும்.

தலையில் அரிப்பு, அலர்ஜி ஏற்பட்டால், உடனடியாக டை பூசுவதை நிறுத்திவிட்டு, தலையை அலசிவிட்டு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எந்த ஒரு டையையும் பயன்படுத்த வேண்டாம். உங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்வு செய்யுங்கள்.