பிரீமியம் ஸ்டோரி
குட் பை டார்க்னெஸ்

கொதிக்கும் கோடை தொடங்கிவிட்டது. மக்கள் வெக்கையும் வியர்வையுமாகக் குளிர்ச்சியை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டார்கள். சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து தப்பிக்க, சன்ஸ்கிரீன், லோஷன், ஸ்கார்ப், சன் கிளாஸ் எனப் பயன்படுத்தினாலும் கடும் வெயிலின் தாக்கத்தால் தோலின் நிறம் மாறுபடவே செய்கிறது. சூரியக்கதிர்கள் தோலுக்குள் ஊடுருவி, மெலனினை அதிகப்படுத்தி தோலைக் கருமையாக்கும். மாநிறத்தில் உள்ளவர்கள் கறுப்பாகவும், வெள்ளையாக இருப்பவர்கள் சிவந்தும் காணப்படுவர். வறட்சியான சருமம் உள்ளவர்களுக்குச் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சிலருக்கு, முகத்தில் எண்ணெய் வழிந்து  பொலிவை இழந்துவிடுவர். விளம்பரங்களில் விதவிதமாகக் காட்டப்படும் கிரீம், லோஷன் எனக் கண்டதையும் பயன்படுத்தி, தோலின் இயற்கைத்தன்மையை இழக்க வேண்டாம். பார்லர்  போய் பணத்தை விரயம்செய்ய வேண்டாம். நம் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்களைவைத்தே அழகைப் பராமரிக்கலாம்.

குட் பை டார்க்னெஸ்

சன் டேன்

சூரியனின் கடுமையான தாக்கத்தால் சருமம் கறுப்பாகும். 

கடலை மாவு - மஞ்சள் பேக்

250 மி.லி ரோஸ் வாட்டரில் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் பால், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துப் பசை போன்று நன்கு கலக்க வேண்டும். கை, கால், முகம், கழுத்தில் பூசி, 20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் தூங்கும் முன்னர் செய்துவர, நல்ல பலன் கிடைக்கும்.

தேன் - பப்பாளி பேக்

நன்கு பழுத்த சிறிய பப்பாளிப் பழத்தைத் தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக்கி, நன்கு மசித்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, இரவு தூங்கும் முன்னர் கை, கால், முகத்தில் பூசி, 30 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை, வாரம் மூன்று முறை செய்யலாம்.

குட் பை டார்க்னெஸ்

தயிர் - மஞ்சள் பேக்

ஒரு கப் தயிரில், ஒரு சிட்டிகை மஞ்சள்தூளை நன்கு கலக்க வேண்டும். அதை முகம், கை, காலில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். காலை குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் செய்துவிட்டுக் குளிக்க வேண்டும். தினமும் செய்துவந்தால், இரண்டு வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை சிகிச்சை

தூங்கச் செல்லும் முன், கற்றாழையை இரண்டாக வெட்டி, கை, காலில் தேய்த்து, இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். காலையில், குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளித்துவர, சருமத்தின் கருமை நிறம் மாறும்.

டார்க் நெக்

தங்க நகை, கவரிங் நகை போடுவதால் சிலருக்குக் கழுத்தில் அலர்ஜி ஏற்பட்டு, கறுப்பாகும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு ஹார்மோன் பிரச்னையினாலும் நிறம் மாறும்.

ஆரஞ்சுத் தோல்

ஆரஞ்சுப் பழத்தின் தோலைக் காயவைத்து, அரைத்துப் பொடியாக்கி, அதனுடன் பால் சேர்த்து, தினமும் கழுத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவிவந்தால், கழுத்தில் உள்ள கருமை நிறம் மாறும்.

குட் பை டார்க்னெஸ்

எலுமிச்சைச் சாறு

எலுமிச்சைச் சாற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து, கழுத்தில் பூசி, இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். இவ்வாறு, ஒரு மாதம் செய்வது நல்லது.

தக்காளி - தேன்

தேன் நல்ல மாய்ஸ்ச்சரைசர். தக்காளியில் உள்ள அமிலம் கருமை நிறத்தை மாற்றக்கூடியது. தக்காளியை நன்கு பசைபோல் அரைத்து, தேன் கலந்து, கருமை உள்ள இடத்தில் பூச வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் இப்படிச் செய்துவந்தால், கருமை நீங்கிப் பளிச்சிடும்.
கருவளையம்

வயது அதிகரித்தல், தூக்கமின்மை, ஊட்டச்சத்துக் குறைவு, மன அழுத்தம் போன்றவற்றால் கண்களைச் சுற்றிலும் கருவளையம் தோன்றும்.

வெள்ளரி - எலுமிச்சை

வெள்ளரிச் சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன் கலந்து, அதைப் பஞ்சில் நனைத்துக் கண்களுக்கு மேல்வைத்து, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். தினமும் செய்துவர, ஒரு வாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்.

பாதாம் ஆயில் - தேன்

பாதாம் ஆயில் மற்றும் தேனைச் சம அளவு எடுத்து, நன்கு கலக்க வேண்டும். இதைக் கண்களைச் சுற்றிப் போட்டுவந்தால், கருவளையம் நீங்கும்.

குட் பை டார்க்னெஸ்

விளக்கெண்ணெய் - பால்

ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் உடன், ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து, கண்களைச் சுற்றிலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவிவந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும். கருவளையம் நீங்கும்.

டார்க் லிப்ஸ்

புற ஊதாக்கதிர் வீச்சு, புகைபிடித்தல், தவறான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல், அதிக அளவில் டீ மற்றும் காபி குடித்தல், தோல் ஈரப்பதம் போன்றவற்றால் உதடுகள் கருமை ஆகின்றன.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து, உதட்டில் தடவி, சில நிமிடங்கள் மசாஜ் செய்தபின், பருத்திப் பஞ்சால் துடைத்து எடுக்க வேண்டும். இது உதட்டின் கருமையை மாற்றும்.

பாலாடை - ரோஜா இதழ்கள்


ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களைக் கழுவி, நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் பால் ஆடையைக் கலந்து உதட்டில் தடவ வேண்டும்.

20 நிமிடங்கள் கழித்து பாலால் கழுவிவந்தால், உதடுகளின் கருமை மாறும்.

தேன் - சர்க்கரை

சர்க்கரை மற்றும் தேனைக் கலந்து உதட்டில் தடவி மெதுவாக மசாஜ் செய்துவந்தால், இறந்த செல்கள் நீக்கப்பட்டு உதடுகள் இளம் சிவப்பாக இருக்கும்.

- பி.கமலா

சி.சுபா, திருப்பரங்குன்றம்.

“நான் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை  செய்துகொண்டிருக்கிறேன். என் முகத்தில் முடி அதிகமாக இருக்கிறது. என்னுடன் வேலை செய்பவர்கள் என்னைக் கேலிசெய்கின்றனர். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற வழி உண்டா?”

டாக்டர் இரா.மனோன்மணி,

தோல் மருத்துவ நிபுணர், திருச்செங்கோடு.

குட் பை டார்க்னெஸ்“பெண்களுக்கான முக அழகைக் கெடுப்பதில் தேவையற்று வளரும் இந்த ரோமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் கோளாறுகளால், இப்படித் தேவையற்ற முடிகள் முகத்தில் வளர்கின்றன. இதற்குத் தீர்வு உண்டு. ஹார்மோன் டெஸ்ட் (டெஸ்ட்டோஸ்டிரான் பரிசோதனை) செய்து லேசர் சிகிச்சை மூலம், இந்த முடிகளை நீக்கிக்கொள்ளலாம். இயற்கைமுறையில் தீர்வு வேண்டும் என்றால், கஸ்தூரி மஞ்சளோடு பாலாடை கலந்து முகத்தில் தடவிவர, தேவையற்ற முடிகள் மெள்ள மெள்ளக் குறையும். மஞ்சளுடன் பப்பாளிக்காயையும் கலந்து பயன்படுத்தலாம். இதனால், முடிகள் மறைவதோடு முகமும் பொலிவு பெறும். பசும்பாலுடன் பாசிப் பயறு தோலைச் சேர்த்து, அதனோடு எலுமிச்சைச் சாற்றைக் கலந்து முகத்தில் தேய்த்தாலும் நல்ல பலன் உண்டு. மேலும், முட்டையின் வெள்ளைக்கருவுடன் சர்க்கரை, சோள மாவு முதலானவற்றைக் கலந்து பசைபோல் ஆனதும், முகத்தில் தடவிக்கொள்ளலாம். அது காய்ந்தவுடன் அதனை நீக்கும்போது முடிகள் நீங்கும்.

இப்போது கடைகளில் கிடைக்கும் ஹேர் ரிமூவிங் கிரீம்கள், லோஷன் போன்றவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஆண்களைப்போல முகத்தில் மீசை இருந்து, மஞ்சள் தடவியும் பலன் இல்லை எனில், ஒவ்வொரு முடியாக திரெட்டிங் செய்துகொள்ளலாம். பிளீச் செய்வதால் ரோமத்தின் நிறத்தை தோலின் நிறத்துக்குக் கொண்டுவரலாம். இதனால், முகத்தைப் பார்த்ததும்  முடிகள் இருப்பது   பளிச்செனத் தெரியாது. ஆனால், முடிகள் பிளீச் செய்வதன் மூலம் உதிராது. உதட்டின் மேல் பகுதியிலும் தாடைப்பகுதியிலும் இருக்கும் முடிகளை நீக்க வாக்ஸிங் செய்வது நல்லது அல்ல. கிரீம்கள் சருமத்தின் அடிப்பகுதி வரை பரவுவதாலும் சரும நிறம் காலப்போக்கில் மாறி சுருக்கங்கள் விழலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு