ஹெல்த்
Published:Updated:

அழகை மேம்படுத்தும் அறுவைசிகிச்சைகள்!

அழகை மேம்படுத்தும் அறுவைசிகிச்சைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அழகை மேம்படுத்தும் அறுவைசிகிச்சைகள்!

அழகை மேம்படுத்தும் அறுவைசிகிச்சைகள்!

அழகை மேம்படுத்தும் அறுவைசிகிச்சைகள்!

ழகு, அனைவரையும் வசீகரிக்க இயற்கை கொடுத்த அற்புதக் கொடை. அழகானவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்காக  அவர்களின் அழகுதான் முதலில் பேசுகிறது. அழகாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். விபத்தால் முகத்தில் காயம், புற்றுநோய் காரணமாக சில பகுதிகளை அகற்ற வேண்டிய நிலை, பிறவியிலேயே ஏற்படும் அன்னப்பிளவு போன்ற பிரச்னைகளுக்கு, முன்பு எல்லாம் எந்த சிகிச்சையும் இல்லை. தற்போது, முக அமைப்பை சீரமைக்கும் நவீன இம்பிளான்ட் சிகிச்சைகள் வந்துவிட்டன. அழகியல் மருத்துவம் (Aesthetic medicine) எனும் துறை தற்போது மிக வேகமாக வளர்ந்துவருகிறது.

அழகான முக அமைப்பு

முகத்தில் இருக்கும் மேல் தாடை எலும்பு, கீழ்த் தாடை எலும்பு, மூக்கு எலும்பு, நெற்றி ஆகியவற்றின் வடிவங்கள், அவை பொருந்தி உள்ள விதம் மற்றும் அவற்றுக்கு இடையிலான கோணங்களைப் பொருத்தே ஒருவரின் முகத் தோற்றம் அமைகிறது.

கருவில் இருக்கும்போது, தலையின் அடிப்பகுதியில் இருந்து கபால எலும்புகள் வளர்ச்சி அடைகின்றன. நம் தலை எலும்பை மேல், நடு, கீழ் என்று மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். இவை சரியான அளவில், சரியான கோணத்தில் பொருந்தி இருப்பதைத்தான் நாம் அழகான முக அமைப்பு என்கிறோம்.

யாருக்கு இந்த சிகிச்சை தேவை

பெரும்பாலான முகச் சீரமைப்பு அறுவைசிகிச்சைகள் நான்கு முக்கியக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. முகத்தில் ஏற்பட்ட காயங்களால், முக எலும்புகளில் சிதைவு ஏற்பட்டதை சீராக்குதல், முகத்தில் ஏதேனும் கட்டி அல்லது புற்றுநோய் இருந்தால் அதை அகற்றுதல், உதட்டுப்பிளவு, அன்னப்பிளவு போன்ற பிரச்னை இருந்தால் அதைச் சீராக்குதல் மற்றும் வயோதிகம் காரணமாக, முக எலும்பின் அடர்த்தி குறைவதால் முகத்தோற்றத்தில்  ஏற்படும் தோற்ற மாற்றத்தை சீராக்குதல் போன்ற காரணங்களுக்காக முகச்சீரமைப்பு அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அழகை மேம்படுத்தும் அறுவைசிகிச்சைகள்!

முகச்சீரமைப்பு

முகச்சீரமைப்பு செய்ய தாடையே அடிப்படை. தாடையில் இருந்து மேல் உதடும், கீழ் உதடும் அளவெடுக்கப்படும். இவை மூன்றின் அளவும் மாறுபடும்போது முகத்தோற்றம் மாறுபடுகிறது. இதனைச் சரிசெய்ய இம்பிளாண்ட் பொருத்தப்படுகிறது.  இந்த செயற்கைப் பொருள், சிலிக்கான், பாலி டெட்ராஃப்ளோரா எத்திலீன் (Poly tetrafluoro ethylene) பாலி எத்திலின் (Poly ethylene) போன்றவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.  பொதுவாக, உடலுக்குச் சம்பந்தம் இல்லாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, நோய் எதிர்ப்பு செல்கள் தாக்க ஆரம்பிக்கும். எனவே, இந்த இம்பிளான்ட்கள் நோய் எதிர்ப்பு அணுக்களால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி உருவாக்கப்படுகின்றன.

மூக்குச் சீரமைப்பு

மூக்கின் தோற்றத்தை அழகாக்க மூக்கு எலும்புகளில் பாராநேசல் இம்பிளான்ட் (Paranasal implant) செய்யப்படுகிறது. மேல் தாடை எலும்புதான் கன்னங்களுக்கு வடிவம் கொடுக்கும். விபத்தில் மேல் தாடை எலும்பு உடைந்தாலோ, பாதிக்கப்பட்டாலோ, முதலில் அதனைச் சரிசெய்ய வேண்டும். பிறகே, இம்ப்ளான்ட் செய்து முகத்தோற்றத்தை மேம்படுத்த வேண்டும்.

தாடை சீரமைப்பு

கீழ் தாடை எலும்பு உடைந்திருந்தாலோ, பிறவியிலேயே விகாரமாக இருந்தாலோ, சின் இம்பிளாண்ட் செய்யலாம். இப்படி முகத்தில் எந்தப் பகுதியை மேம்படுத்த வேண்டுமோ, அந்தப் பகுதியை இம்பிளான்ட் செய்து அழகாக்காலாம்.

முகச்சீரமைப்புக்குப் பிறகு...

இந்த சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் ஆலோசனையை முறையாகப் பின்பற்றாததால், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் மீண்டும் அறுவைசிகிச்சை செய்யாமல் இருப்பதே நல்லது. இதயம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளில் பிரச்னை இருப்பவர்கள், நரம்பு மண்டலக் கோளாறு, மயோபதி போன்ற தசைகளில் ஏற்படும் பிரச்னை இருப்பவர்கள் இந்த அறுவைசிகிச்சை செய்வதைத் தவிர்க்கலாம். 

- பி.கமலா