
ஒருவருக்கு அழகு, வசீகரம், ஆளுமை, தன்னம்பிக்கையைத் தருவது தலைமுடி. நீளமான, அடர்த்தியான, பொலிவான கூந்தல் வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் உண்டுதான். ஆனால், இதற்கான தேடுதல் என்பது சூப்பர் மார்க்கெட் ரேக்குகளிலேயே முடிந்துவிடுகிறது. 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கருமையான கூந்தலுக்கு சிகைக்காய், வெந்தயம், காய்ந்த செம்பருத்திப் பூ என்று இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இன்றைய அவசர உலகில், இதை எல்லாம் தேட நேரம் ஏது? அதனால், ஒவ்வொரு வீட்டுக் குளியல் அறையிலும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது ஷாம்பு. ஆனால், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற ஷாம்புகளில் சிறந்தது எது... தனக்குப் பொருந்தமானது எது என்ற குழப்பம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு.
டிடர்ஜென்ட், எண்ணெய், புரோட்டின் போன்ற பல்வேறு கலவைகளால் தயாரிக்கப்படும் திரவநிலை சோப்தான் ஷாம்பு. சில நிறுவனங்கள் இதனுடன் வீரியமிக்க ரசாயனங்களையும் கலந்து விற்கின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
என்னென்ன ஷாம்புக்கள் உள்ளன?
கிளென்ஸிங் ஷாம்பு (Cleansing): மிதமானது, வீரியமிக்க ரசாயனங்கள் இருக்காது.
ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பு (Anti-dandruff): பொடுகு இருந்தால் அகற்ற உதவுகிறது. மேலும், தலையில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்றவற்றைப் போக்க ஏற்றது.
ஆன்டி செபொரிக் ஷாம்பு (Anti seborrheic): அதிகமான பொடுகு, பூஞ்சைத் தொற்று இருந்தால், அவற்றைப் போக்க உதவுகிறது.
கெரடோலிடிக் ஷாம்பு (Keratolytic): சொரியாசிஸ் நோயாளிகள், செதில் செதிலாகத் தலையில் தோல் உரியும் பிரச்னை இருப்பவர்கள் பயன்படுத்தலாம்.
வால்யூமைசிங் ஷாம்பு (Volumizing): குறைந்த முடி கொண்டவர்கள் இதைப் பயன்படுத்துகையில், முடி அடர்த்தியாகத் தெரியும்.
மாய்ஸ்சரைசிங் ஷாம்பு: வறண்ட முடி கொண்டவர்களுக்கான பிரத்யேக ஷாம்பு. இதனால், மென்மையான கூந்தலைப் பெறலாம்.
ரிவைட்டலைசிங் ஷாம்பு (Revitalizing): கூந்தலுக்கு கலரிங் செய்தவர்கள், ஸ்ட்ரைட்டனிங், பர்மிங் போன்ற கெமிக்கல் சிகிச்சை எடுத்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ஷாம்பு.
2 இன் 1 ஷாம்பு: இதில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் இரண்டுமே கலந்திருக்கும்.
ஸ்விம்மர் ஷாம்பு (Swimmer): நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் கூந்தலில் படுவதால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்.
ஷாம்பு எப்படித் தேர்வு செய்வது?
ஒவ்வொரு வகைத் தலைமுடிக்கும் ஒவ்வொரு வகை ஷாம்பு இருக்கிறது. எனவே, அவரவர் தலைமுடி எந்த வகையைச் சேர்ந்தது என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
தலைமுடியில், வறண்ட, எண்ணெய் பசை, நார்மல் கூந்தல் எனப் பல வகை உள்ளன. எந்த வகையான கூந்தலுக்கு எந்த மாதிரியான ஷாம்பு சரியாக இருக்கும் என்று சரும மருத்துவர் ஆலோசனை பெற்று, அதன் அடிப்படையில் ஷாம்புவைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
எண்ணெய் பசைக் கூந்தலாக இருந்தால், மைல்டு ஷாம்பு பயன்படுத்தலாம்.
நார்மல் கூந்தல் உள்ளவர்களுக்கு பொடுகு, அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். இவர்கள், மைல்டு டிடர்ஜென்ட் உள்ள ஷாம்புவைப் பயன்படுத்தலாம். இது, தலையில், ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும்.
வறண்ட கூந்தல் உள்ளவர்கள், டிடர்ஜென்ட் உள்ள ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. முடியின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் ஷாம்பு பயன்படுத்த வேண்டும்.
பி.ஹெச் (pH) அளவு 5.5 இருக்கும் ஷாம்பு மிதமானது.

பொதுவாக, பி.ஹெச் அளவு 5 - 7 வரை இருக்கும் ஷாம்புவைப் பயன்படுத்தலாம். இதில், எந்த கூந்தலுக்கு, எது பொருந்தும் என மருத்துவரிடம் ஆலோசித்துப் பயன்படுத்த வேண்டும்.
பென்சாய்ல் (Benzoyl) இருக்கும் ஷாம்பு, ஓரளவுக்கு ஈரப்பதத்தைத் தரும். ஆனால், இந்த கெமிக்கலின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டும்.
ஷாம்புவில் புரோட்டின் இருந்தால், கூந்தலின் தரம் மேம்படும். அதன் நெகிழ்சித்தன்மை அதிகமாகும். கூந்தல் பார்க்க அழகாகத் தெரியும்.
சுருட்டை முடிக்கு, சிக்கு விழும் கூந்தலுக்கு எனப் பிரத்யேகமான ஷாம்புக்கள் உள்ளன.
மிகவும் வறட்சியான கூந்தலுக்கு இன்டென்ஸ் மாய்ஸ்சரைசிங் ஷாம்பு பயன்படுத்தலாம். இதில், தேங்காய் எண்ணெய், அவகேடோ எண்ணெய் கலந்திருக்கும்.
ஷாம்பு பாட்டிலில், அவகேடோ எண்ணெய், இலாஙஇலாங் எண்ணெய், ஆலிவ், பாதாம், ரோஸ்பெர்ரி, சோயாபீன் போன்ற பல்வேறு எசன்ஷியல் எண்ணெய்கள் கலந்திருந்தால், அந்த ஷாம்புக்கள் நல்லது.
முடி உதிர்வைப் போக்கும் ஷாம்பு தயாரிக்க...
ஜுனிப்பர் பெர்ரி (Juniper berry) - 5 துளிகள், இலாங் இலாங் எண்ணெய் (Ylang Ylang oil) - 7 துளிகள், பச்சோலி எண்ணெய் (Patchouli oil) - 8 துளிகள், நல்லெண்ணெய் - 90 மி.லி, ஆமணக்கு எண்ணெய் - 10 மி.லி எடுத்து ஒன்றாகக் கலந்து பாட்டிலில் ஊற்றிவைக்க வேண்டும். இதை, முந்தைய நாள் இரவில் தேவையான அளவு எடுத்து, கூந்தலில் தடவ வேண்டும். மறுநாள், செம்பருத்தி இலைகள், பூந்திக் கொட்டையை நீரில் கொதிக்கவைத்து, அந்த நீரைக்கொண்டு கூந்தலை அலச, மிருதுவான, பளபளப்பான கூந்தலாக மாறும். முடி உதிர்தல் பிரச்னை விலகும்.
- ப்ரீத்தி
படங்கள்: ச.ஹர்ஷினி, தே.அசோக்குமார்
பேக்கிங் சோடா வாஷ்
பேக்கிங் சோடா என்பது காரத்தன்மை குறைந்தது (Weakest alkali). இது, கூந்தலைச் சேதமாக்காத பொருள். அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு டீஸ்பூன் கல்உப்பை அரை பக்கெட் தண்ணீரில் கலந்து கூந்தலை அலச, துர்நாற்றம், பூஞ்சைகள், அழுக்கு நீங்கும்.
கூந்தலின் தரத்தைப் பாதுகாக்க...
ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, ஒரு ஜக் தண்ணீரில் கலக்க வேண்டும். கூந்தலை அலசி முடிந்த பின் இறுதியாக இதைக் கூந்தலில் ஊற்றி அலசினால், கூந்தலை கிளென்ஸ் செய்யும். சிக்கலை நீக்கும். கண்டிஷனராகச் செயல்படும்.
மூலிகை ஷாம்பு தயாரிக்க...
சிகைக்காய் - 1 கிலோ, கார்போக அரிசி, ரோஜா மொட்டு, செம்பருத்திப்பூ, செம்பருத்தி இலை, ஆவாரம் இலை, வெட்டிவேர், துளசி, வேப்பிலை, கறிவேப்பிலை - (உலர்ந்தது) தலா 50 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ, வெந்தயம் - தலா 100 கிராம் சேர்த்து, அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு கூந்தலை அலசலாம்.
பொடுகை விரட்டும் ஷாம்பு...
இது ஆன்டி-டாண்ட்ரஃப் ஷாம்பு. லெமன் கிராஸ் மற்றும் சிடர் வுட் தலா 50 மி.லி, நல்லெண்ணெய் மற்றும் ஈவ்னிங் ப்ரைம்ரோஸ் தலா 100 மி.லி கலந்து, கூந்தலில் தடவிய பின் வேப்பிலை, செம்பருத்தி இலைகள், பூந்திக் கொட்டை போட்டுக் கொதித்தவைத்த நீரில் அலச, பொடுகு நீங்கும்.
வீட்டிலேயே ஷாம்பு செய்வது எப்படி?
தேவையானவை
தேங்காய் பால் - 1/2 கப்
லிக்விட் சாஃப்ட் சோப் - 1/4 கப்
பெப்பர் மின்ட், ரோஸ்மெரி, லாவெண்டர், அவகேடோ ஆயில் போன்ற ஏதேனும் ஒரு அரோமா எண்ணெய் - 20 துளிகள்
வறண்ட கூந்தல் உடையவர்கள் ஆலிவ், பாதாம் எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம்.
செய்முறை
காலியான ஷாம்பு டப்பாவில் இவற்றைக் கலந்து, நன்றாகக் குலுக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து, ஸ்பூனில் இதை எடுத்துக் கூந்தலை அலசலாம். மிகக் குறைந்த அளவில் ரசாயனம் சேர்க்கப்படுவதால், கூந்தல் பாதுகாப்பாக இருக்கும்.
பாதிப்பை ஏற்படுத்தும் 5 வில்லன்கள்
சோடியம் லாரத் சல்ஃபேட் (Sodium laureth sulfate), சோடியம் லாரில் சல்ஃபேட் (Sodium lauryl sulfate), பாராபின் (Paraben), ட்ரைதானோலமைன் (Triethanolamine (TEA)), அம்மோனியம் லாரில் சல்ஃபேட் (Ammonium lauryl sulfate) போன்ற கெமிக்கல்களின் பெயர் லேபிளில் இருந்தால் இயன்றவரை அந்த ஷாம்புக்களைத் தவிர்க்கலாம். இவை, கூந்தலை மோசமாகப் பாதிப்பவை.