Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 23

அலர்ஜியை அறிவோம் - 23
பிரீமியம் ஸ்டோரி
News
அலர்ஜியை அறிவோம் - 23

சிகிச்சைகள்... ஏன்? எதற்கு? எப்படி?

அலர்ஜியை அறிவோம் - 23

டலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருள் நுழைந்துவிட்டது என்பதன் அறிகுறியே ஒவ்வாமை. ஆனால், சாதாரணப் பொருளையும் பாதிப்பை ஏற்படுத்தும் பொருளாக உடல் கருதிக்கொள்ளும்போது மிகப் பெரிய பிரச்னை ஏற்படுகிறது. ‘அலர்ஜியை அறிவோம்’ தொடரில், ஒவ்வோர் ஒவ்வாமையைப் பற்றியும் சொல்லும்போதே, அதற்கு உரிய சிகிச்சை முறைகளையும் குறிப்பிட்டுள்ளோம். அந்தச் சிகிச்சைகள் ஒவ்வாமையை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன அல்லது தடுக்கின்றன என்ற விவரங்களை இப்போது விளக்கமாகவே தெரிந்துகொள்வோம்.

ஹிஸ்டமின் எதிர் மருந்துகள் (Anti-histamines) 

ஒவ்வாமைக்கு அளிக்கப்படும் முதல்நிலை மருந்து இது. ஒவ்வாமை காரணமாக ஏற்படும் அரிப்பு, தோல் தடிப்பு, மூக்கு ஒழுகல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். மாத்திரை, திரவ மருந்து, ஊசி, மூக்கு ஸ்பிரே எனப் பல வடிவங்களில் இது கிடைக்கிறது. குளோர்பெனிரமின் (Chlorpheniramine), சைப்ரோஹெப்டடைன் (Cyproheptadine) போன்றவை ஹிஸ்டமின் எதிர் மருந்துக்கு சில உதாரணங்கள். இவற்றில்,   தூக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை, தூக்கம் ஏற்படுத்தாதவை என இரண்டு வகைகள் உள்ளன. எனவே, மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அலர்ஜியை அறிவோம் - 23

இந்த மருந்து எப்படி வேலைசெய்கிறது?

ஒவ்வாமை ஏற்படும்போது, ஐஜிஇ புரதமும் ஒவ்வாமைப் பொருளும் சேர்ந்து, ரத்தக்குழாய்த் திசுவில் உள்ள மாஸ்ட் செல்களைத் தூண்டும். அப்போது மாஸ்ட் செல்களில் இருந்து ‘ஹிஸ்டமின்’, `லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்கள் வெளியேறி அரிப்பு, தடிப்பு, தும்மல், தோல் சிவப்பது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஹிஸ்டமின், தோல் தசையில் உள்ள ஹெச்1 ஏற்பான்களோடு (H1 receptors) இணையும்போதே அரிப்பு ஏற்படுகிறது.  இணைப்பைத் தடுத்துவிட்டால் ஒவ்வாமை ஏற்படாது. ஹிஸ்டமின் எதிர் மருந்து, இந்த இணைப்பை நடக்கவிடாமல் செய்துவிடுகிறது.

லுயூக்கோட்ரின் மாற்று மருந்துகள் (Leukotriene modifiers)

ஒவ்வாமையின்போது வெளிப்படும் ஒரு வேதிப்பொருள் லுயூக்கோட்ரின்.  இது, பெரும்பாலும் சுவாசப்பாதையில் உள்ள மென்மையான தசைகளைச் சுருங்கச்செய்து, திரவச் சுரப்பை அதிகப்படுத்துகிறது. அதிக திரவம், சுவாசப்பாதையை அடைத்து, சுவாசித்தலைத் தடைப்படுத்தி, இளைப்புப் பிரச்னையை உருவாக்குகிறது. லுயூக்கோட்ரின் மாற்று மருந்துகள் லுயூக்கோட்ரின் வேதிப்பொருட் கள் உற்பத்தியா வதைத்தடுக்கின்றன. ஏற்கெனவே அவை உற்பத்தியாகி இருந்தால், அவற்றின் செயல்பாடு களைத் தடுத்துவிடும். இதனால், ஆஸ்துமா இளைப்புக் கட்டுப் படுகிறது.

மான்டிலூக்காஸ்ட் (Montelukast) மற்றும் ஜாஃபிர்லூக்காஸ்ட் (Zafirlukast) மருந்துகள் இந்த வகையைச் சேர்ந்தவை. இவை மாத்திரை யாகவும் திரவ மருந்தாகவும் கிடைக் கின்றன. ஆஸ்துமா, இளைப்பு மிதமாக உள்ள நோயாளி களுக்கு நோயைக் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் தடுப்பு மருந்தாகவும் இவை செயல்படுகின்றன.

மாஸ்ட் செல் நிலைநிறுத்திகள் (Mast Cell Stabilizers)

ஒவ்வாமையின்போது ஐஜிஇ புரதத்தாலும் ஒவ்வாமைப் பொருளாலும் மாஸ்ட் செல்கள் தூண்டப்படுவதை இந்த மாஸ்ட் செல் நிலைநிறுத்திகள் தடுக்கின்றன. இதனால், மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின், லுயூக்கோட்ரின் போன்ற வேதிப்பொருட்களை வெளிவிடுவது இல்லை. அரிப்பு, தடிப்பு போன்ற ஒவ்வாமைக் குணங்கள் ஏற்படுவதும் இல்லை.

மூக்கு அடைப்புக்கான மருந்துகள் (Decongestants)

மூக்கில் விடும் சொட்டு மருந்தாகவும் மூக்கு ஸ்பிரே வடிவிலும் இவை கிடைக்கின்றன. இவை, வீக்கமுற்ற ரத்தக் குழாய்த் திசுக்களையும் மென்தசைகளையும் சுருங்கவைக்கும். இந்த மருந்தை மூக்கில் விட்டால், மூக்கு அடைப்பு சரியாகிவிடும். இவற்றுடன் ஹிஸ்டமின் எதிர் மருந்துகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது, மூக்கு அடைப்பு உடனடியாக விலகிவிடும்.

மூச்சுக்குழல் தளர்த்திகள் (Bronchodilators)

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுக்குழல் சுருங்குவதால்தான் இளைப்பு ஏற்படுகிறது. சுருங்கிப்போன மூச்சுக்குழல்களைத் தளர்த்தி, சுவாசத்துக்கு வழிசெய்யும் மருந்துகள் இவை. அமினோபிலின், தியோபிலின், டெர்பூட்டலின், டாக்சிஃபைலின் போன்றவை இந்த வகையைச் சேர்ந்த மருந்துகள். ஊசி, மாத்திரை, திரவ மருந்து, இன்ஹேலர் எனப் பல வடிவங்களில் இவை கிடைக்கின்றன. 

அலர்ஜியை அறிவோம் - 23

ஸ்டீராய்டு மருந்துகள் (Steroids)

இந்த மருந்துகள் ஒவ்வாமையின்போது ரத்தக்குழாய், மூச்சுக்குழாய், தோல் மற்றும் மென்தசைகளில் ஏற்படுகிற அழற்சியையும் வீக்கத்தையும் தடுத்து, சுவாசம் தடை இன்றி நிகழ உதவுகின்றன. ஒவ்வாமைக்கு உடனடியாகப் பலன் தருகின்றன.

மாத்திரை, ஊசி, திரவ மருந்து, சொட்டு மருந்து, இன்ஹேலர் மருந்து, நெபுலைஸர் மருந்து எனப் பல வடிவங்களில் இவை கிடைக்கின்றன. இவற்றில், ஊசி மருந்தை அவசரத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஸ்டீராய்டு மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

கவனம் தேவை: இந்த மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இன்றி, தொடர்ந்து சாப்பிட்டால், சிறுநீரகம் பாதிப்படையும். முகம், கை, கால்கள் வீங்கிவிடும். எலும்புகள் பலவீனம் அடையும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரைநோய் வரும். எனவே, எச்சரிக்கை தேவை!

இன்ஹேலரே சிறந்தது

ஆஸ்துமா நோயாளிகளுக்கு, ஸ்டீராய்டு மாத்திரைகளைவிட இன்ஹேலரே சிறந்தது. மாத்திரை களைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து, நுரையீரலை அடைந்து பலன் கிடைக்க நேரம் ஆகும். ஆனால், இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சுக் குழாய்த் தசைகளை உடனே தளர்த்திவிடும். இதனால், மூச்சுத்திணறல் உடனடியாகக் கட்டுப்படும்.

இன்ஹேலர்களில் குறைந்த காலம் பயன் தருபவை, நெடுங்காலம் பயன்தருபவை, ஒரு மருந்து உள்ளவை, கலவை மருந்து உள்ளவை எனப் பலவிதங்கள் உள்ளன. ஒருவருக்கு எந்த மருந்து உதவும் என்பதை மருத்துவர்தான் தீர்மானிக்க முடியும். எனவே, ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் இன்ஹேலர்களை மருத்துவரின் ஆலோசனைப்படிதான் பயன்படுத்த வேண்டும்.

இமுனோதெரப்பி சிகிச்சை (Immunotherapy)

குழந்தைகளுக்குத் தொற்றுநோய்கள் வருவதைத் தடுக்க தடுப்பூசிகள் உள்ளதுபோல், அலர்ஜி ஏற்படாமல் தடுக்கவும் தடுப்பூசிகள் உள்ளன. ஒவ்வாமை ஏற்படும்போது ரத்தத்தில் ஐஜிஇ எதிர்ப்புரதம் உருவாகிறது அல்லவா? இதற்கு பதிலாக ஐஜிஜி (IgG) எதிர்ப்புரதம் உருவாகுமாறு செய்துவிட்டால், ஒவ்வாமை விளைவுகள் அவ்வளவாக ஏற்படுவது இல்லை என்ற அடிப்படையில் இந்தத் தடுப்பூசிகள் செயல்படுகின்றன.

இவை ஒவ்வொன்றும் ஓர் ஒவ்வாமைப் பொருள்கொண்டு தயாரிக்கப்படுகின்றன. எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை உள்ளதோ அந்தப் பொருளால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியைப் போடும்போது, ரத்தத்தில் ஐஜிஜி புரதங்கள் உருவாகின்றன. இவை அந்த ஒவ்வாமைப் பொருளுக்கும் மாஸ்ட் செல்களுக்கும் இடையில் அரணாக நின்று, ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்படுவதைத் தடுத்துவிடுகின்றன.

இந்தத் தடுப்பூசியைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் போட ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அளவைக் கூட்டிக்கொண்டே சென்று, அந்தப் பொருளுக்கு ஒவ்வாமை ஏற்படுவது நின்றுபோனதும் தடுப்பூசி போடுவதையும் நிறுத்திவிடுவார்கள். சிலருக்கு அவ்வப்போது மீண்டும் இது தேவைப்படலாம். இதுதான் ஒவ்வாமைக்கு உள்ள நிரந்தரமான சிகிச்சை.

தேர்ந்த ஒவ்வாமை மருத்துவரிடம் மட்டுமே இதை எடுத்துக்கொள்ள வேண்டும். வழக்கத்தில், ஐந்து வயதுக்குக் கீழ் உள்ளவர் களுக்கு இந்தச் சிகிச்சை, தரப்படுவது இல்லை. சரியான அளவில் தடுப்பு மருந்து கொடுக்கப்படவேண்டியதும், குறிப்பிட்ட இடைவெளிகளில் தவறாமல் போடப்பட வேண்டும் என்பதும் இந்தச் சிகிச்சையின் வெற்றிக்கு உதவும் சூத்திரங்கள்.

- எதிர்வினை முறிந்தது

தொகுப்பு: பா.பிரவீன் குமார்