ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம்! - 2

சகலகலா சருமம்! - 2
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 2

அழகுசெல்வி ராேஜந்திரன் சரும மருத்துவர்

சகலகலா சருமம்! - 2

ருமத்தின் அமைப்பைப் பற்றிப் பார்த்தோம். சரும அழகும் ஆரோக்கியமும் நபருக்கு நபர் வேறுபடுவதைப் பார்க்கிறோம். ஒரு சிலரது சருமம் கண்ணாடி போல பளபளக்கிறது. சிலருக்கு சின்ன வயதிலேயே முதிர்ந்த தோற்றம் இருக்கிறது. அழகான சருமம் கொண்டவர்களைப் பார்த்து ‘இவர்களுக்கு மட்டும் எப்படித்தான் சாத்தியமாகிறதோ?’ எனப் பெருமூச்சு விடுவதில் அர்த்தம் இல்லை. அழகான சருமம் என்பது உள்ளார்ந்த காரணங்கள், வெளிக் காரணங்கள் மற்றும் இயந்திரத்தனமான காரணங்கள் என மூன்று முக்கிய விஷயங்களைப் பொறுத்தது.

சகலகலா சருமம்! - 2


உள்ளார்ந்த காரணங்கள்

பாரம்பர்யம், மனஅழுத்தம், ஆல்கஹால், தூக்கமின்மை, ஊட்டச்சத்தில்லாத உணவுகள், உடலில் நீர்ச்சத்து வற்றிப்போவது, ஹார்மோன் மாறுதல்கள், சருமத்தின் மீள்தன்மைக்குக் காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் குறைபாடு, கொழுப்புக் குறைபாடு, உடல்நலக் கோளாறுகள் போன்றவை உள்ளார்ந்த காரணங்கள்.

வெளிக் காரணங்கள்

புறஊதாக் கதிர்வீச்சு, ஃப்ரீ ரேடிகல்ஸ் (புறஊதாக் கதிர்கள் சருமத்தில் பட்டதும் சில மோசமான செல்கள் உருவாகும். உடலுக்குக் கேடு விளைவிக்கும் அவைதான் ஃப்ரீ ரேடிகல்ஸ்), புகை, காற்று மாசு, கடுமையான வானிலை, சருமத்தை முறையாகப் பராமரிக்காதது, அழகு சாதனங்களை முறையின்றிப் பயன்படுத்துவது போன்றவை வெளிக் காரணிகள்.

அழகுசாதனப் பொருட்களில் பெரும்பாலும் ஸ்டீராய்டு, ஆன்ட்டிஃபங்கல் மற்றும் ஆன்ட்டிபயாட்டிக் கலவை இருக்கும். அதே போல சருமத்தைச் சிவப்பாக்கும் கிரீம்களில் ஸ்டீராய்டு, ரெட்டினாயிடு மற்றும் ஹைட்ரோக்வினான் காம்பினேஷன் இருக்கும். இந்த இரண்டுமே சருமத்தைப் பாதிப்பவை. இவற்றை உபயோகிப்பதால், சருமம் மெலிந்து, ரத்தநாளங்கள் வெளியே தெரியும்.

இயந்திரத்தனமான காரணங்கள்


சிலர் பேசும்போது முகத்துக்கு அதிக பாவங்கள் கொடுப்பார்கள். நடிப்புத்துறையில் இருப்பவர் களும், நடனக் கலைஞர்களும் புருவங்களை உயர்த்துவதும், நெற்றியைச் சுருக்குவதும், முகத் தசைகளை அதிகம் உபயோகிப்பதுமாக இருப்பார்கள். இதனால், இவர்களுக்குச் சீக்கிரமே சருமத்தில் கோடுகள் ஆரம்பிக்கும். உள்ளே உள்ள தசையானது சுருங்கும். அதனால், மேலே உள்ள சருமம் தளர்ந்துபோகும். இதற்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை.

தூங்கும் நிலைகளும் சருமத்தைப் பாதிக்கும். சிலர் ஒரே நிலையில் தூங்குவார்கள். இதனால், அந்தப் பகுதியில் கோடுகள் அதிகம் ஏற்படும்.

அடுத்தது புவி ஈர்ப்பு சக்தி. அதாவது, நமது முகமானது தலைகீழ் முக்கோண வடிவில் இருக்க வேண்டும். தாடைப் பகுதி குறுகலாகவும், முகத்தின் மேல் பகுதி அகலமாகவும் இருக்க வேண்டும்.  வயதாக, ஆக புவி ஈர்ப்பு சக்தியின் காரணமாக, அது நேராக வைக்கப்பட்ட முக்கோணம் மாதிரி மாறிவிடும். அதாவது, முகத்தின் மேல் பகுதி குறுகலாகவும், தாடைப் பகுதி அகலமாகவும் மாறும்.

சருமத்தைப் பாதிப்பதில் புகைப்பழக்கத்துக்கும் பெரிய பங்கு உண்டு.

ஆரோக்கியமான சருமத்துக்கு என்ன செய்ய வேண்டும்?


புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது, ஆரோக்கி யமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவது, முறையான சருமப் பராமரிப்பு மற்றும் புற ஊதாக் கதிர்களின் தாக்குதலில் இருந்து விலகி இருப்பது (காலை 11 முதல் மாலை 3 மணி வரையிலான வெயிலைத் தவிர்ப்பது) ஆகியவை அவசியம்.

 குறைந்தது ஆறு மணி நேரத் தூக்கம் அவசியம். சருமத்தின் ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்புகள் எல்லாம் பழுதுபார்க்கப்படுவது தூக்கத்தின் போதுதான். எனவே, தூக்கத்தைத் தியாகம் செய்யக் கூடாது. குறிப்பாக, நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கிற பலருக்கும் சருமம் ஆரோக்கியமாக இருப்பது இல்லை. அவர்களுக்கு சீக்கிரமே சருமச் சுருக்கங்கள் வருகின்றன.

ஆல்கஹால் தவிர்த்திடுங்கள். அது, சருமத்தின் நீர்ச்சத்தை வற்றச் செய்கிறது. அது உங்கள் தோற்றத்தில் பிரதிபலிக்கும்.

சருமம் காப்போம்...

- ஆர்.வைதேகி

வாவ்.... வாட்டர் மேஜிக்! - நடிகை மஞ்சிமா மோகன்

“வாட்டர் மேஜிக்... இதுதான் என் அழகு ரகசியம். நினைக்கும்போது எல்லாம் தண்ணீர் குடிப்பேன். காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதுதான் என் முதல் வேலை. தண்ணீர் என்பது தாகம் தணிப்பது மட்டும் இல்லை.  உடல் முழுவதையும் சுத்தப்படுத்தி, நச்சுகளை வெளியேற்றும். உடலின் உள் உறுப்புகள் சுத்தமானாலே சருமம் தெளிவாகும். ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்தில் சிம்புவுடன் டூ வீலரில் போகும்போது நான் எதையாவது தின்றுகொண்டே இருப்பது போல ஒரு காட்சி வரும். நிஜத்தில் எனக்கும் நொறுக்குத்தீனிகளுக்கும் ரொம்ப தூரம். பசி எடுத்தால் பழங்களைத்தான் சாப்பிடுவேன். ஜூஸாகக் குடிப்பதைவிட, பழங்களாகச் சாப்பிடுவதுதான் என் சாய்ஸ். வீட்டுச்சாப்பாடு ஆரோக்கியத்துக்கு மட்டும் அல்ல, அழகுக்கும் உதவும்.

சின்னதாக சருமத்தில் ஏதேனும் பிரச்னை வந்தாலும் நானாக எந்த சிகிச்சையையும் முயற்சி செய்ய மாட்டேன். டாக்டரிடம் ஆலோசனைக் கேட்பேன்.”

சில சந்தேகங்கள்...

“ரெட் ஒயின் குடித்தால் சருமம் அழகாகுமா?”

“பிரபலங்கள் பலரும் ரெட் ஒயின் குடிக்கிறார்கள். அதனால்தான் அவர்களது சருமம் சிவப்பாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது என்ற எண்ணம் பலருக்கும் உண்டு.  அதே போல மேக்கப் போட்டுப் போட்டு காலப் போக்கில் அவர்களது சருமம் நல்ல நிறத்துக்கு மாறிவிடுகிறது என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

ரெட் ஒயினில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால், சரும ஆரோக்கியத்துக்கு உதவும் என்பது உண்மைதான். ஆனால், அதை 60 மி.லிக்கு மேல் குடிப்பது கூடாது. சருமம் அழகாக வேண்டும் என்றால் ரெட் ஒயின்தான் குடிக்க வேண்டும் என்பது இல்லை. அதே அளவுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ள ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, அவகேடோ என்கிற பட்டர் ஃப்ரூட், எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றை எடுத்துக்கொண்டாலே போதுமானது. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறப் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளவும். கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டும் பீட்டாகரோட்டினும் சரும அழகை மேம்படுத்தும்.

தொடர்ந்து மேக்கப் போடுவதால் ஒருவரது சருமம் அழகாகவோ, நிறமாகவோ மாறிவிடாது. நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களது சரும மாற்றத்துக்கான காரணம், அவர்களிடம் உள்ள அக்கறையும் சருமப் பராமரிப்பும்தான். நிறையப் பழங்கள், காய்கறிகள், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்வார்கள். உடற்பயிற்சி செய்வார்கள். இவற்றைச் செய்யும் யாருக்கும் சருமம் அழகாகும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

சரும அழகுக்கு எளிமையான ரெசிப்பி

வெதுவெதுப்பான நீரில் சிறிது தேன், எலுமிச்சைச் சாறு மற்றும் கால் டீஸ்பூன் பட்டைத் தூள் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதில் உள்ள ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தைத் தெளிவாக்கும், பளபளப்பாக்கும்.