ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம்! - 3

சகலகலா சருமம்! - 3
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 3

அழகுதலத் சலீம், ட்ரைகாலஜிஸ்ட்

சகலகலா சருமம்! - 3

ழகான சருமம் என்பதற்குச் சிவப்பான சருமம் என்று அர்த்தம் இல்லை. ஆரோக்கியமான சருமமே அழகு. பிறப்பில் இருந்து இறப்பு வரை சருமம் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் அதன் ஆரோக்கியம் கேள்விக்குள்ளாகிறது என்பதை அறிவீர்களா?

சகலகலா சருமம்! - 3


கருவில் சருமம் உருவாகும் கதை முதல் அதன் ஆரோக்கியம் பாதிக்கிறவரையிலுமான பல விஷயங்களையும் தெரிந்து கொள்வோமா?

தாயின் வயிற்றில் கருவான மூன்றாவது வாரத்திலேயே சிசுவின் சருமம் உருவாகத் தொடங்குகிறது. எண்டோடெர்ம் (Endoderm), மீசோடெர்ம் (Mesoderm) மற்றும் எக்டோடெர்ம் (Ectoderm) என மூன்று அடுக்குகளாக அது உருவாகிறது. இவற்றில் எக்டோடெர்ம் என்கிற படிமத்தில்தான் முடி மற்றும் நகங்களின் வளர்ச்சி இருக்கிறது.

கரு வளர்ச்சியின் ஐந்து முதல் எட்டு வாரங்களில் குழந்தையின் உடலில் சருமம் வெளியே தெரியத் தொடங்கும். வழக்கமாக ஐந்து  படிமங்களைக் கொண்டிருக்கும் சருமத்தின் எபிடெர்மிஸ் அடுக்கில் இந்தப் பருவத்தில் பேசல் செல்கள் மற்றும் பெரிடெர்ம் செல்கள் என இரண்டு படிமங்கள் மட்டுமே இருக்கும். கருவின் வளர்ச்சி எட்டு வாரங்களைத் தாண்டிய நிலையில் சருமம் உருவான பிறகுதான் முடி வளர்ச்சியும் ஆரம்பமாகும். கர்ப்பத்தின் 9 மற்றும் 10-வது வாரங்களில், பேசல் மற்றும் பெரி டெர்ம் செல்களுக்கு இடையில் மூன்றாவதாக இன்னொரு செல் படிமமும் உருவாகும். அங்கேதான் குழந்தையின் ரோம வளர்ச்சிக்கான நுண் அறைகள் வெளிப்படும். நான்காம் மாத முடிவில் எபிடெர்மிஸின் எல்லா படிமங்களும் உருவாகி, குழந்தையின் சரும வளர்ச்சி முழுமையடையும். இப்படி உருவாகிற சருமம், பதின்ம பருவத்தில் பொலிவின் உச்சம் பெற்று, பிறகு மெள்ள மெள்ள முதுமையை நோக்கி நகர்கிறது.

20 வயது  தொடக்கத்திலேயே சருமம்  முதுமையை நோக்கி அடியெடுத்து வைக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆமாம், அதுதான் உண்மை. வயது கூடக்கூட சருமத்தின் உறுதித் தன்மைக்குக் காரணமான கொலாஜன் என்கிற புரத உற்பத்தியும் சருமத்தின் மீள்தன்மைக்குக்  காரணமான  எலாஸ்டின் என்கிற இன்னொரு புரத உற்பத்தியும் குறையத் தொடங்குகின்றன. இளவயதில் இருந்ததைப் போல அவற்றின் மறு உற்பத்தியும், அத்தனை வேகமாக இருப்பதில்லை. இறந்த செல்களின் உதிர்வும், அவற்றுக்கு மாற்றாக புதிய செல்கள் உருவாவதிலும்கூடத்  தாமதம் ஏற்படுகிறது. இவற்றின் தொடர்ச்சியாக சருமம் மெலியத் தொடங்குகிறது.

சருமத்தை வறண்டுபோகாமல் காக்கும் சீபம் என்கிற எண்ணெயைச் சுரக்கும் செபேஸியஸ் சுரப்பிகளின் (Sebaceous glands) இயக்கமும் தாமதமாகிறது. ஆண்களைவிடப், பெண்களுக்கு இந்த எண்ணெய்ச் சுரப்பு குறைவுப் பிரச்னை அதிகமாக இருக்கிறது. மெனோபாஸுக்குப் பிறகு அவர்கள் உடல் சந்திக்கிற மாற்றங்களில் இதுவும் ஒன்று.  சிலவகை  மருந்துகளின் பக்க விளைவாலும் சருமத்தில் சீக்கிரமே முதிர்ச்சி தெரியலாம். வயதாக ஆக,  சருமத்தின் காயம் ஆற்றும் தன்மையும் குறைகிறது. குழந்தைகளுக்கு அடிபட்டால் சீக்கிரமே ஆறிவிடும். அதுவே பெரியவர்களுக்கு அடிபட்டால் , அது ஆறுவதற்கு நான்கு மடங்கு அதிக காலம் பிடிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, சர்க்கரை நோய், ரத்த நாளங்களில் ஏற்படுகிற மாற்றங்கள் போன்றவையும் இதற்குக் காரணங்கள்.

‘எல்லோருக்குமா இப்படி நடக்கிறது? சில பேர் 40, 50 வயதைக் கடந்த நிலையிலும் ஒரு சுருக்கம் கூட இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறோமே’ என்கிற  கேள்வி  உங்களுக்கு  வரலாம்.  உண்மைதான். சருமத்தில் இயல்பாக ஏற்படக்கூடிய இந்த மாற்றங்களைப்  பல விஷயங்கள்  தீர்மானிக்கின்றன. மரபியல் தன்மைகள், சூழல், ஆரோக்கியம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் என அந்தப் பட்டியல் நீளமானது.  இவற்றில் எல்லாம் அக்கறை காட்டுகிறவர்களுக்கு  ஐம்பது வயதிலும் அழகிய சருமம் சாத்தியமே. இவற்றில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது சூரியனின் தாக்குதல். பகல் 12 முதல் மாலை 3 மணி வரையிலான வெயில் அதிகம் பட்டால்,  சருமத்தின்  முதுமை   விரைவுபடுத்தப்படும். இதனால், இளம் வயதிலேயே சருமம், முதுமைத் தன்மை பெறும்.

(சருமம் காப்போம்...)

- ஆர்.வைதேகி

கர்ப்பிணிகளின் கவனத்துக்கு...

சகலகலா சருமம்! - 3


* புரொக்கோலி, காலிஃபிளவர், குடமிளகாய், வெங் காயம், முள்ளங்கி, தக்காளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு என காய்களிலும், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, கிவி,கிர்ணி, தர்பூசணி, பேரிக்காய் எனப் பழங்களிலும் வைட்டமின் சி அதிகம். சரும அழகு மற்றும்  ஆரோக்கியத் துக்கு வைட்டமின் சி மிக முக்கியம். கர்ப்பிணிகள் இவற்றை எடுத்துக் கொண்டால், பிறக்கும் குழந்தையின் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

* பயோட்டின் என்கிற பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின், சருமம், கூந்தல், நகங்கள் மூன்றையும் காக்கக்கூடியது. எனவே, பயோட்டின் அதிகமுள்ள முட்டை, தக்காளி, கேரட், வேர்க்கடலை, காளான் போன்றவற்றையும் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அடர் மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்களான மாம்பழம், மாதுளை, கொய்யா போன்றவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன் கள், பிறக்கும் குழந்தையின் சரும ஆரோக்கியத்துக்கு உதவும்.

* குங்குமப்பூவுக்கும் பிறக்கும் குழந்தையின் சரும நிறத்துக்கும் தொடர்பு இல்லை. ஆனால், குங்குமப் பூ எடுத்துக் கொள்வதால் கர்ப்பிணியின் உடல் வலிமை அதிகரிக்கும். பிரசவம் சிரமமின்றி நிகழும். பிறக்கும் குழந்தையின் சருமம் அழகாக இருக்க வேண்டும் என்றால், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூ பெர்ரி, ராஸ்பெர்ரி என பெர்ரி வகைப் பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

* பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி மற்றும் உலர் பழ வகைகளான காய்ந்த திராட்சை, பேரீச்சை, அத்தி போன்றவையும் கருவிலுள்ள குழந்தையின் சரும அழகை மேம்படுத்தும்.

செலிப்ரிட்டி ஸ்கின்

ஒருநாள் ஓய்வு! - நடிகை மலாய்க்கா அரோரா

“உங்கள் கூந்தலும் சரி, சருமமும் சரி... உள் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அமையும். வெளிப்பூச்சுகளால் ஓரளவுக்கு, அதுவும் தற்காலிகமான அழகைத்தான் தர முடியும். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் ஊட்டம்தான் நிரந்தரம். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் தேனும் எலுமிச்சை சாறும் கலந்து குடிப்பேன். பிறகு ஒரு லிட்டர் வெறும் தண்ணீர். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றிவிடும்.

வாரம் ஒரு நாள் உடலை டீடாக்ஸ் செய்வேன். அதாவது வாரம் முழுக்க விரும்பிய உணவுகளைச் சாப்பிட்டிருப்பேன். ஒருநாள் நம் செரிமான மண்டலத்துக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் உள் உறுப்புகளைச் சுத்தம் செய்கிற உணவுகளாக எடுத்துக் கொள்வேன். எளிதில் செரிமானமாகும் ஜூஸ், ஸ்மூத்தி போன்றவற்றை எடுத்துக் கொள்வேன். வாரம் ஒருநாள் 100 சதவிகிதம் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன்.

அழகு அகராதியில் சி.டி.எம் (CTM) என ஒரு ரொட்டீன் இருக்கிறது. கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ச்சரைஸிங். சருமத்தைச் சுத்தம் செய்ய கிளென்சிங்; சருமத் துவாரங்களை அடைக்க டோனிங்; சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க மாய்ச்சரைசர். தினமும் இவற்றைச் செய்து வந்தாலே சருமம் தெளிவாக இருக்கும்.’’