ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம்! - 5

சகலகலா சருமம்! - 5
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 5

அழகுசெல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்

சகலகலா சருமம்! - 5

‘காதலிக்கும் பெண்ணின் வண்ணக் கன்னம் ரெண்டிலே... மின்னும் பருவும்கூட பவழம்தானே...’ என்பது போன்ற கற்பனை, பாடல்களுக்கு அழகாக இருக்கலாம்.  கவிதைக்கு எப்போதும் பொய் அழகு!
நிஜம் வேறாகவே இருக்கிறது. முகத்தில் முதல் பரு எட்டிப் பார்க்கிறபோது ஆரம்பிக்கிற தவிப்பு, அதன் எண்ணிக்கை அதிகரிக்கும்போதும் வடுக்களை விட்டுச்செல்கிற போதும் அதிகபட்ச மனக்கவலையைத் தரும்.  சிலநேரம், வந்தவழியே போய்விடக்கூடிய பருவைக்கூட, ஆர்வக்கோளாறு காரணமாக முரட்டுத்தனமாகக் கையாண்டு, நிரந்தர அடையாளமாக்கிக் கொள்வார்கள் பலரும். பருக்களைப் புரிந்து கொள்வதன் மூலம், அதை வரவிடாமலும், அப்படியே வந்துவிட்டாலும் வடுக்கள் இன்றி தப்பிக்கவும் முடியும்.

சகலகலா சருமம்! - 5பரு என்பது என்ன?

ஒவ்வொரு முடியும் சருமத்தில் இருந்து வெளியே வரும் இடத்தில், அதனுடன் ஒரு எண்ணெய்சுரப்பியும் இணைந்தே இருக்கும். அந்த இடத்தில் ஏற்படுகிற நாள்பட்ட வீக்கத்தையே பரு என்கிறோம். டீன் ஏஜில் பருப் பிரச்னையும் ஆரம்பிக்கிறது. செபேஷியஸ் சுரப்பிகள் சிலருக்கு சருமத்தில் அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் இருக்கும். எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு பருவ வயதில், டெஸ்டோஸ்டீரான் என்கிற ஹார்மோன், செபேஷியஸ் சுரப்பியைத் தூண்டும். அதனால் எண்ணெய் அதிகம் சுரக்கும்.  இவர்களுக்கு பருப் பிரச்னை சற்றே தீவிரமாக இருக்கும்.

பருக்களுக்கான பிரதான காரணங்கள்

அதிக எண்ணெய் சுரப்பது, சருமத்தின் செல்கள் அதிகமாக வளர்ந்து, சருமத் துவாரங்களை அடைப்பது, அப்படி அடைப்பட்டதன் மேல் எண்ணெய் சேகரிக்கப்பட்டு அதில் பாக்டீரியா வளர்வது (குறிப்பாக ப்ரோப்பியோனி பாக்டீரியம்), அந்த பாக்டீரியா வளர்வதால் ஏற்படுகிற வீக்கம் என பருக்கள் உண்டாக நான்கு முக்கிய காரணங்கள் உண்டு.

தவிர பரம்பரைத்தன்மை, பி.சி.ஓ.எஸ் எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிகள், ஹார்மோன் சமநிலையின்மை போன்றவற்றாலும் பரு வரும்.  ‘ஹை கிளைசீமிக் இண்டெக்ஸ்’, அதாவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிற உணவுகளை உண்பதுகூட பருக்கள் ஏற்பட ஒரு காரணம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. சாக்லெட், ஸ்வீட்ஸ் மட்டுமின்றி அதிக இனிப்புள்ள பழங்களைச் சாப்பிடுவதும்கூடப் பருக்களைத் தூண்டுமாம்.

பருக்களின் 4 நிலைகள்

உருண்டு, திரண்டு பழுத்து கட்டி போல வெளிப்படுவதை மட்டுமே பரு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது நான்கு நிலைகளைக் கொண்டது.

சருமத்தின் உள்ளேயே காணப்படுகிற அடைப்பை ‘ஒயிட்ஹெட்’ என்கிறோம். அது சூழல் தாக்குதலுக்குள்ளாகி, ‘பிளாக்ஹெட்’டாக மாறும். உள்ளே நடக்கும் வீக்கம் காரணமாக ‘பாப்பியூல்’ என்கிற சிறு வீக்கங்கள் கிளம்பும். அந்த பாப்பியூலில் சீழும் சேரும் போது அது ‘பஸ்ட்யூல்’ என்கிற சீழ் கலந்த கொப்புளங்களாக மாறும். அவை இன்னும் கொஞ்சம் பெரிதாகும் போது ‘சிஸ்ட்’ என்கிறோம். அதையும் விடப் பெரிதாவதை ‘நாட்யூல்’ என்கிறோம். இவற்றின் நிலைகளைப் பொறுத்து சிகிச்சைகளும் வேறுபடும்.

சகலகலா சருமம்! - 5

பொடுகுக்கும் பருக்களுக்கும் தொடர்புண்டு!

மண்டைப் பகுதி வறண்டு போயிருந்தால்தான் பொடுகு வரும் என்பது பலரின் எண்ணம். உண்மையில் சீபம் அதிகம் சுரந்து, அதில் பாக்டீரியா வளர்வதுதான் பொடுகு. அதனால் பொடுகுக்கும் பருக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பருக்கள் இருந்தால் தலையில் பொடுகு இருக்கிறதா எனப் பார்த்து உடனடியாக சரி செய்ய வேண்டியதும் அவசியம்.

எங்கெல்லாம் பரு வரும்?

செபேஷியஸ் சுரப்பியின் சீபம் சுரப்பு அதிகமாக உள்ள இடங்களில் எல்லாம் பரு வரும். அப்படிப் பார்த்தால் முகம், மண்டைப் பகுதி, தோள்பட்டை, முதுகு மற்றும் கீழ் இடுப்புப் பகுதி வரை எங்கு வேண்டுமானாலும் வரலாம். மண்டைப்பகுதியில் வருகிற சின்னச் சின்ன கட்டிகள்கூட பருக்கள்தான்.

சிகிச்சைகள்

தினமும் 2 முதல் 3 முறை முகத்தைக் கழுவ வேண்டும். அதிக எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்கள், சாலிசிலிக் அமிலம் கலந்த ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம். ரெட்டினாயிடு கலந்த ஃபேஸ்வாஷ், சருமத் துவாரங்களின் அடைப்புகளை சரி செய்யும். ஆன்ட்டி பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம்.

பென்ஸாயில் பெராக்சைடு உள்ள கிரீம் உபயோகிப்பதன் மூலம் பருக்களுக்குக் காரணமான பாக்டீரியா நீங்கும். அதிக எண்ணெய் சுரப்பும் கட்டுப்படும். அஸீலிக் அமிலமும், கிளைகாலிக் அமிலமும் கலந்த கிரீம்கள் பருக்கள் ஏற்படுத்திய தழும்புகளை நீக்கும்.

பருக்கள் மிக அதிகமாக இருப்பவர்களுக்கு ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கும் அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு ஐஸோட்ரெட்டினாயின் வகை மருந்துகள் பரிந்துரைக்கப்படும். இவை எண்ணெய் சுரப்பிகளையே சுருங்கச் செய்யக்கூடியவை. ஆனால் இந்த மருந்து கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால், கர்ப்பிணிகள் இதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

லைட் சிகிச்சை, கெமிக்கல் பீல் சிகிச்சை, லேசர் சிகிச்சை போன்றவையும் பலனளிக்கும். பருக்கள் வந்த பிறகு ஏற்படுகிற வடுக்கள், தழும்புகளைக் குறைக்க மைக்ரோடெர்மாப்ரேஷன், மைக்ரோ நீடிலிங் வித் ரேடியோ ஃப்ரீக்வன்சி போன்றவை பிரமாதமான பலன்களைத் தரும்.

முன்னெச்சரிக்கையும் முக்கியம்!

* பிளாக்ஹெட் வரும்போதே அதை அலட்சியம் செய்யாமல் உடனே கவனித்தால் அது பருவாக மாறுவதைத் தவிர்க்கலாம்.  பிளாக்ஹெட்டை நீக்கும் முரட்டுத்தனமான சிகிச்சைகளை முயற்சி செய்ய வேண்டாம். பாட்டி வைத்தியம் செய்வது, கையில் கிடைக்கிற மஞ்சள், சந்தனத்தை எல்லாம் பூசுவது போன்றவையும் தவிர்க்கப்பட வேண்டும்.

* பருக்கள் அதிகமிருப்பவர்கள் தலையில் எண்ணெயை வைத்து ஒரு மணி நேரத்தில்  அலசிவிட வேண்டும். அதாவது மண்டைப் பகுதி சுத்தமாக இருக்க வேண்டும்.

உணவுகள் உதவுமா?

* மீன் நல்லது. அதற்காக வறுத்த, பொரித்த மீன்களை சாப்பிட்டால் பருக்கள் பல மடங்கு அதிகமாகுமே தவிர குறையாது.

* சைவ உணவுக்காரர்களுக்கு சோயா நல்லது.

* அதிக இனிப்பில்லாத உணவுகளையே எடுத்துக் கொள்ளவும்.

* நிறைய பச்சைக் காய்கறிகள், அதிக இனிப்பில்லாத பழங்கள் சாப்பிடலாம்.

மேக்கப்பிலும் கவனம்!


எண்ணெய் பசை அதிகமானவர்களுக்கு பிசுபிசுப்புத் தன்மை உள்ள மேக்கப் சாதனங்கள் கூடாது. நான்காமிடியோஜெனிக் (Non-comedogenic) எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் அழகு சாதனங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அவற்றை உபயோகிப்பதன் மூலம் பிளாக்ஹெட், ஒயிட்ஹெட் வராது. பருக்கள் உள்ளவர்களுக்கென வரும் பிரத்யேக மாயிஸ்சரைசரை உபயோகிக்கவும்.

பார்லர்களில்  ஃபேஷியல் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். தேவைப்பட்டால் சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மைக்ரோடெர்மாப்ரேஷன் செய்வதன் மூலம் பிளாக்ஹெட்ஸை நீக்கிக் கொள்ளலாம்.
அடிக்கடி முகம் கழுவக்கூடாது. அப்படிச் செய்தால் சருமத்தில் எண்ணெய் பசை நீங்கி, அது மூளைக்குத் தகவல் அனுப்பும். உடனே மூளையின் கட்டளையால் அதிக எண்ணெய் சுரப்பு ஆரம்பிக்கும்.

(சருமம் காப்போம்...)

- ஆர்.வைதேகி

செலிப்ரிட்டி ஸ்கின்

சிம்பிள் மேக்கப்... செம அழகு! ஸ்குவாஷ் பிளேயர் தீபிகா பல்லிகல்


“அழகு என்பது மனம் சம்பந்தப்பட்டது. என் மனதை அழகா வச்சுக்கிற வித்தையை நான் கத்துக்கிட்டேன். அதனால உங்களுக்கெல்லாம் அழகா தெரியறேன். ரொம்ப சின்ன வயசுலேயே விளையாட வந்துட்டேன். தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லாத வயது அது. 16 வயதில் சம்பாதிக்க ஆரம்பித்தேன். என் வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களைப் பயணத்தில், அதுவும் தனிமையிலேயே கழித்திருக்கேன். என்னை நானே பார்த்துக்க வேண்டிய நிலைமையில்தான், உடலையும் மனதையும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். என்னுடைய பொழுது தினமும் காலையில ஐந்து மணிக்குத் தொடங்கும். ஆரம்ப நாட்களில் அது எனக்குச் சோர்வைக் கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் அதையே என் பலமாக மாற்றிக்கொண்டேன். உடற்பயிற்சியை ரசிக்க ஆரம்பித்தேன். தினம் காலையில் ஒரு மணி நேரம் ஜாகிங் பண்ணுவேன். அப்புறம் கொஞ்ச நேரம் ஜிம் வொர்க்அவுட், என்னோட ஸ்குவாஷ் பிராக்டிஸ்.

விளையாட்டு வீரர்களுக்கு வியர்வை அதிகமிருக்கும். அதனால் உடலில் உள்ள நீர் வற்றிப் போயிடாம இருக்க நிறைய திரவ உணவுகள் எடுத்துப்பேன். பயிற்சி செய்யும்போதும் விளையாடும்போதும் மேக்கப் போட மாட்டேன். அடிக்கடி குளிர்ந்த நீரில் முகம் கழுவுவதையும், இரவில் முகம் கழுவிட்டு, லேசான ஈரப்பதம் இருக்கிறபோதே மாயிஸ்சரைசர் உபயோகிப்பதையும் தவறாம செய்வேன். ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான தருணங்கள் தவிர மற்ற நேரங்களில் வெறும் லிப் பாம், காஜல்... இவை மட்டும்தான் என் மேக்கப் சாய்ஸ். மனசை அழகா வச்சுக்கோங்க. அது உங்க முகத்துல நிச்சயம் பிரதிபலிக்கும்.’’