ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம்! - 6

சகலகலா சருமம்! - 6
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 6

அழகுதலத் சலீம், ட்ரைகாலஜிஸ்ட்

நிலவில் களங்கம் இருந்தாலும் ரசிக்கிறோம்... ஆனால், நிலவுடன் ஒப்பிடப்படும் முகம் மட்டும் மாசு, மருவின்றி இருந்தால்தான் அழகென்று ஆராதிக்கிறோம். பளிங்குபோன்ற பிரகாசமான சருமத்துக்கு ஆசைப்படாதவர்களே இருக்கமாட்டார்கள். ஆசைப்படுகிற எல்லாம் எல்லோருக்கும் அமைந்துவிடாது. அப்படி அமைகிற சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வித்தையும் பலருக்கும் கைவராத கலை. அலட்சியத்தாலும் அக்கறையின்மையாலும் வருகிற சருமப் பிரச்னைகளில் ஒன்றுதான் மங்கு.

மங்கை ஆங்கிலத்தில் ‘மெலாஸ்மா’ (Melasma) என்கிறோம். ‘மெலாஸ்’ என்றால் கிரேக்க மொழியில் கறுப்பு என அர்த்தம். பெரியவர்கள் பலரின் முகங்களிலும் ஆங்காங்கே கறுப்பு மற்றும் பிரவுன் நிறத்திட்டுகளைப் பார்த்திருப்போம். அதுதான் மங்கு. கன்னங்களில், மூக்கின் இடையில், நெற்றி, தாடை மற்றும் மேல் உதடு ஆகிய பகுதிகளில் இது அதிகம் காணப்படும். சூரியஒளி அதிகம்படும், கையின் மேல்பகுதி, கழுத்து போன்ற இடங்களிலும் சிலருக்கு வரும். ஆண் பெண் இருவருக்கும் மங்கு ஏற்படும் என்றாலும், பெண்களுக்கு இதன் பாதிப்பு சற்றே அதிகம். குறிப்பாக வெப்ப மண்டலப் பகுதியில் வசிப்பவர்களுக்கும், கறுப்பான சருமம் கொண்டவர்களுக்கும் பாதிப்பின் தீவிரம் அதிகம்.

வெயில் காலத்தில் அறிகுறிகளைக் காட்ட ஆரம்பித்து, பனிக்காலத்தில் தீவிரமாகும். இது தொற்றுநோயோ, ஒவ்வாமையால் ஏற்படுவதோ இல்லை. மாற்றம் ஏற்பட்ட சருமப் பகுதியில் அரிப்போ, எரிச்சலோ இருக்காது. ஆனாலும் அது சருமத்தில் ஏற்படுத்துகிற மாற்றத்தைப் பலரும் வெறுக்கிறார்கள்.

சகலகலா சருமம்! - 6

காரணங்கள் என்ன?

* அதீத சூரிய ஒளி பாதிப்பு.

* ஹார்மோன் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது. ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் கலந்த கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது, ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் சிகிச்சை, காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவது, இம்பிளாண்ட் பொருத்துவது போன்றவையும் காரணங் களாகலாம்.

* சில வகையான மருத்துவ சிகிச்சைகள், உதாரணத்துக்கு, புற்றுநோய்க்கான சில பிரத்யேக சிகிச்சைகள், அதிக வாசனை உள்ள சோப், டியோடரன்ட், பாடி வாஷ் மற்றும் அழகு சாதனங்களின் உபயோகம்.

* தைராய்டு சுரப்பில் பற்றாக்குறை (ஹைப்போதைராய்டிசம்).

* கர்ப்பிணிகளுக்கு கர்ப்பத்தின் மூன்று முதல் ஒன்பது மாதங்கள் வரை ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் மற்றும் மெலனோசைட்டு களைத் தூண்டும் ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும். அதன் விளைவாக ஏற்படுகிற சரும மாற்றம்.

சகலகலா சருமம்! - 6* மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்கள் புரொஜெஸ்டிரான் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்வது.

* சருமத்தில் உறுத்தலை ஏற்படுத்துகிற பொருட்களை உபயோகிப்பதும் சிகிச்சைகளை மேற்கொள்வதும் மெலனின் உற்பத்தியைத் தூண்டி, மங்கின் பாதிப்பைத் தீவிரப்படுத்தும்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

திறமையான மருத்துவருக்கு ஒருவரது சருமத்தைப் பார்த்த உடனேயே மங்கு என்பதை உறுதிப்படுத்திவிட முடியும். அதையும் தாண்டி சந்தேகம் இருந்தால் ‘உட்ஸ் லேம்ப்’ என்கிற பிரத்யேக விளக்கின் மூலம் சருமத்தின் எத்தனை அடுக்குகள் வரை அந்தப் பாதிப்பு இருக்கிறது என்பதையும் கண்டுபிடிப்பார்.

குணப்படுத்த முடியுமா?

இதுவரை நிரந்தரத் தீர்வு எதுவும் இல்லை. ஆனாலும், வெளிப்புறத் தோற்றத்தை ஓரளவு மேம்படுத்தும் புற சிகிச்சைகள் உள்ளன. சரும நிறத்தை மாற்றக்கூடிய கிரீம், ஸ்டீராய்டு ஆயின்மென்ட்டுகளை மருத்துவர் பரிந்துரைப்பார். மருத்துவரின் பரிந்துரையின்றி, தவறான முறையில் தவறான அளவுகளில் ஹைட்ரோகுவினான் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தினால், exogenous ochronosis என்கிற பிரச்னை வரலாம். இதிலுள்ள பிளீச்சிங் பொருளின் காரணமாக சருமம் மேலும் கறுத்துப் போகும். ஹைட்ரோகுவினானின் அளவு நான்கு சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்கும்போது ஏற்படும் சருமக் கருமையானது நிரந்தரமாக நின்றுவிடும்.

கெமிக்கல் பீல் சிகிச்சை, டெர்மாப்ரேஷன், மைக்ரோடெர்மாப்ரேஷன் சிகிச்சைகளும் பலனளிக்கும். ஆனால் எந்த சிகிச்சையிலும் மங்கு முற்றிலும் மறைந்துவிடாது. மீண்டும் வரும்.

தவிர்க்க முடியுமா?

குடும்பப் பின்னணியில் மங்குப் பிரச்னை உள்ளவர்கள், அதிகப்படியான கவனத்துடன் இருக்க வேண்டும்.

 வெயிலின் உக்கிரத்தில் நடமாடுவதைத் தவிர்ப்பதன் மூலம் மங்கை மட்டுமல்ல, வயோதிகத் தோற்றத்தையும் தவிர்க்கலாம்.

எஸ்.பி.எஃப் 30 உள்ள சன்ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.

முகத்தின் மீது வெயில் படாதபடி மறைக்கும் தொப்பிகளை அணியலாம்.

(சருமம் காப்போம்...)

- ஆர்.வைதேகி

செலிப்ரிட்டி ஸ்கின்

மந்திரா பேடி ‘அந்த 45 நிமிடங்கள்!’

“என் அழகு, இளமை, எனர்ஜி... இப்படி எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் உடற்பயிற்சி. ஒருநாளைக்கு 24 மணி நேரம் இருக்கிறது. அதில் வெறும் 45 நிமிடங்களை உடற்பயிற்சிக்கு ஒதுக்க நேரமில்லை என்று யாராவது சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. உடல், மனம், சருமம் என மூன்றையும் ஆரோக்கியமாக வைக்கும் மேஜிக் உடற்பயிற்சி. ‘தினமும் உடற்பயிற்சி செய்கிறோமே... பிறகு உணவுக்கட்டுப்பாடு எதற்கு’ என நினைப்பதும் தவறு. என்னுடைய உணவில் அதிக மாவுச்சத்து, வறுத்த, பொரித்த அயிட்டங்கள், பதப்படுத்தப்பட்டவை, இனிப்புகள் போன்றவற்றுக்கு இடமே இருக்காது. முழுதானியங்கள், பழங்கள், காய்கறிகள் அதிகமிருக்கும். உடலுக்குள் தண்ணீர் சத்து குறைந்து போனால் அது சருமத்தில் பிரதிபலிக்கும். தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பது என்றில்லாமல் அடிக்கடி தண்ணீர் குடிப்பதை ஒரு வழக்கமாகக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போதும் அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்வேன். எப்போதும் என்னுடன் ஒரு ஜோடி வாக்கிங் ஷூஸ் வைத்துக் கொள்வேன். அரைமணி நேரம் ஓய்வு கிடைத்தாலும் வாக்கிங்கோ, ஜாகிங்கோ கிளம்பிவிடுவேன். அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்று நான் உடற்பயிற்சிகள் செய்வதில்லை. ஆரோக்கியமாக இருப்பதற்காக செய்கிறேன். அதனால் அழகாகவும் தெரிகிறேன்.’’

மங்கின் தீவிரம் குறைக்கும் வீட்டு சிகிச்சைகள்

சகலகலா சருமம்! - 6


அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

* இரண்டு டீஸ்பூன் பாலுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து மங்கு உள்ள இடங்களில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

* கற்றாழையின் ஜெல்லுடன் சிறிது தேன் கலந்து, பாதிக்கப்பட்ட சருமப் பகுதியில் தடவி, அரைமணி நேரம் ஊறியதும் தண்ணீரால் கழுவவும்.

* அரைகப் தண்ணீரில்  நான்கு டீஸ்பூன் ஓட்ஸ்மீல் சேர்த்து வேகவிடவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேனும், எட்டு சொட்டு எலுமிச்சை சாறும் கலந்து நன்கு குழைத்து மங்கு உருவாகியுள்ள சருமத்தின் மேல் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவிடவும்.

* இரண்டு டீஸ்பூன் கரும்புச் சாறுடன், இரண்டு டீஸ்பூன் தண்ணீர் கலந்து மங்கின் மேல் தடவி, ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து கழுவிவிடவும்.

* கொத்தமல்லிச் சாறும், வெள்ளரிச்சாறும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து இரண்டு டீஸ்பூன் பச்சைப் பயறு மாவுடன் கலந்து சருமத்தில் மங்கு உள்ள பகுதிகளில் தடவவும். பத்து நிமிடங்கள் கழித்து, மென்மையாகத் தேய்த்து எடுத்துவிட்டு முகம் கழுவவும்.