ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம்! - 7

சகலகலா சருமம்! - 7
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 7

அழகுசெல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்

ருமத்தில் ஏற்படுகிற கீறல்கள், சிராய்ப்புகள், காயங்கள் தவிர்க்க முடியாதவை.

தாங்க முடியாத இம்சையைக் கொடுத்தால் மட்டுமே நாம் அவற்றைக் கவனிப்போம். பெரும்பாலும் அவற்றை அலட்சியம் செய்தபடியே வேலைகளைத் தொடர்வோம். ஆனால், எல்லா காயங்களும் புண்களும் அப்படி அலட்சியப்படுத்தக்கூடியவை அல்ல. சின்னதாகத் தோன்றும் தேமல் முதல் ஆபத்தான வீக்கம் வரை பல பிரச்னைகளுக்கும் காரணமாகும் கிருமித் தொற்றுகள் இந்தக் காயங்களின் வழியாகத்தான் சருமத்தை அடைகின்றன.

சருமத்தில் தொற்று ஏற்பட பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவையே முக்கிய காரணங்கள். இவற்றில் பாக்டீரியா தொற்று மிகக் குறைந்த அளவிலிருந்து ஆபத்தான பிரச்னை வரை பலவித பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

சகலகலா சருமம்! - 7

ஒவ்வொருவருடைய சருமத்திலும் சாதாரணமாகவே பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை இருக்கும். அவற்றுக்கு 'ஸ்கின் மைக்ரோபயோம் (Skin Microbiome) என்று பெயர். மனித சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை ஒரு ட்ரில்லியன். அவற்றில் நல்ல பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரியாக்கள் இரண்டுமே அடக்கம். சருமத்தில் ஏதேனும் வெட்டுக்காயம் ஏற்பட்டால்தான் அந்த இடத்தில் பாக்டீரியாக்கள் அதிகம் வளரத் தொடங்கும்.  தொடை இடுக்கு, அக்குள் பகுதிகள் போன்றவை சருமத்தோடு உராய்ந்த நிலையில் இருப்பதால், அங்கேயும் பாக்டீரியாக் கள் வளரும். சருமத்தில் எங்கேயாவது கீறல் விழுந்தாலும், அங்கே பாக்டீரியா வளரும்.

நம்முடைய சருமத்திலேயே இயற்கையான எதிர்ப்புச்சக்தி உண்டு.  சருமத்தின் மேல் அடுக்கில் உள்ள கெராட்டின்கூட ஒருவித பாதுகாப்புக் கவசம்தான்.   டெர்மிஸ் மற்றும் எபிடெர்மிஸ் இரண்டும் சந்திக்கிற பகுதியில் இருந்துதான் சருமச் செல்கள் வளர்கின்றன. 28 நாள்களுக்கு ஒருமுறை சருமச் செல்கள் உதிர்ந்து புதிதாக உருவாகும். அப்படி உதிரும்போதே தேவையற்ற பாக்டீரியாக்கள் நீக்கப்பட்டுவிடும்.

சருமத்தில் சுரக்கும் சீபத்திலேயே பாக்டீரியாக் களைக் கொல்லும் ஆற்றல் இருக்கும். சீபம் சுரப்பது மிகவும் அதிகமாகிறபோதுதான் பருக்கள் வரும். சீபம் என்பது சருமம்  வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அதனால், பாக்டீரியா வளர்வது தடுக்கப்படும்.

சகலகலா சருமம்! - 7வியர்வையின் மூலமும் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும். சருமத்தின் ‘ஆன்டிமைக் ரோபியல் பெப்டைட்ஸ்' என்கிற சில ரசாயனங்களும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடக்கூடியவை.

ஸ்டெஃபைலோகாக்கஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஆகிய இரண்டும் சருமத் தொற்றுக்குக் காரணமான பிரபலமான பாக்டீரியாக்கள்.

ஸ்டைஃபைலோகாக்கஸ் பாக்டீரியாவால் ஏற்படுகிற பரவலான தொற்று என்றால், கூந்தலின் வேர்ப்பகுதியில் உண்டாகிற சீழ்க்கட்டிகள். ரிவர்ஸ் திசையில் ஷேவ் செய்யும்போது இந்தப் பிரச்னை வரும். இதற்கு ஆன்ட்டிபயாடிக் வெளிப்பூச்சுகளோ, ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளோ பரிந்துரைக்கப்படும். தலையில் சூட்டின் காரணமாக ஏற்படுவதாக நாம் சொல்கிற கட்டிகள்கூட இப்படி பாக்டீரியாவினால் ஏற்படுபவையே. கட்டிகள் என்றாலே, உடனே மஞ்சள் பூசுவார்கள்.  அது பிரச்னையை இன்னும் தீவிரப்படுத்தும். நிறைய கட்டிகள் சேர்ந்து வந்தால், குறிப்பாக கழுத்துக்குப் பின்னால் வந்தால் நீரிழிவு இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அந்தக் கட்டிகளைக் கீறி, உள்ளே இருக்கும் சீழை வெளியே எடுக்க வேண்டி வரலாம். கட்டிகளுடன் காய்ச்சலும் இருந்தால் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

சிலருக்கு நகம் கடிக்கிற பழக்கம் இருக்கும். அவர்களுக்கு ‘அக்யூட் பாரோநைக்கியா' என்கிற நகத்தொற்று வரும். நகச்சுற்று எனப்படுகிற இதுவும் ஸ்டெஃபைலோகாக்கஸ் என்கிற பாக்டீரியாவினால் ஏற்படுவதே.  இதற்கும் ஆன்ட்டிபாக்டீரியல் மருந்துகள் தேவைப்படலாம். தொற்றைக் கீறி உள்பகுதியை சுத்தம் செய்யவேண்டியதும் அவசியம்.

மண்ணில் விளையாடும் குழந்தைகளுக்கு ஸ்டெஃபைலோகாக்கஸ் பாக்டீரியாவினால்  இம்பெட்டைகோ (Impetigo) என்கிற தொற்று வரும். வாய் மற்றும் மூக்கின் ஓரங்களில் தேன்கூடு மாதிரி இதன் அறிகுறி தெரியும். இந்த பாக்டீரியா தொற்று கவனிக்கப்படாவிட்டால், சிறுநீரகங்களைக்கூடப் பாதிக்கும்.மண்ணில் விளையாடும் குழந்தைகள் சுத்தமாக இருக்கிறார்களா எனக் கண்காணிக்க வேண்டும். 

இதைவிட சற்றே தீவிரமான நிலை செல்லுலைட்டிஸ்.  இந்த வகைத் தொற்றினால், கைகால்கள் வீங்கும், சிவக்கும். இது  சருமத்தின் உள் அடுக்குகளில் பாக்டீரியா வளர்வதால் ஏற்படுவது. இது கட்டி மாதிரி இல்லாமல்  வீக்கமாக இருக்கும். இது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவால் உருவாகிறது. பிளே ஸ்கூலில் இருக்கும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள் எனக் கூட்டமாக இருப்போருக்கு இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கும். 

கார்னோபாக்டீரியம் என்கிற பாக்டீரியா தொற்றினால் அக்குள் பகுதியில் பிங்க் அல்லது பிரவுன் நிறத்திட்டுகள் ஏற்படும். ‘எரித்ராஸ்மா' என்கிற இது, பருமனான உடல்வாகுள் ளவர்களுக்கும், நீரிழிவு உள்ளவர்களுக்கும் வரும்.

பாக்டீரியா தொற்றுக்கு, சற்றும் சளைத்ததல்ல பூஞ்சை, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணித் தொற்றுகள். அவற்றைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்...

(சருமம் காப்போம்...)

- ஆர்.வைதேகி

சகலகலா சருமம்! - 7

செலிப்ரிட்டி ஸ்கின்

அதிதி ராவ்

ந்தோஷமான பெண்கள்தான் அழகான பெண்கள்!

‘’இயற்கை அழகுதான் நிரந்தரம் என்பது எனக்கு என் அம்மா சொல்லிக் கொடுத்த சீக்ரெட். குழந்தையாக இருந்தபோது அம்மா எனக்கு எந்த அழகுசாதனத்தையும் பயன்படுத்தியதில்லை. இப்போதும் ஷூட்டிங் இல்லாத நாள்களில் நான் மேக்கப்பைத் தவிர்த்துவிடுவேன். மேக்கப் சாதனங்களும் சரி, சாப்பிடுகிற உணவுகளும் சரி... எனக்கு இயற்கையானவையாக இருக்க வேண்டும். இரவில் எத்தனை தாமதமானாலும், மேக்கப்பை நீக்காமல் தூங்கப் போக மாட்டேன்.

அம்மாவும் பாட்டியும் பின்பற்றிய, எனக்குக் கற்றுக்கொடுத்த அழகுக் குறிப்புகளைத்தான் இன்றும் பின்பற்றுகிறேன். சருமத்தில் எண்ணெய் வழிந்தால், காயவைத்துப் பொடித்த ஆரஞ்சுப் பழத்தோல் பொடி கால் டீஸ்பூன், கடலை மாவு ஒரு டீஸ்பூன், வீட்டில் தோய்த்த தயிர் மூன்றையும் சேர்த்துத் தடவிக் கழுவுவேன். அதுவே சருமம் வறண்டு போயிருந்தால் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் தூளுடன், அரை டீஸ்பூன் தேனும், கொஞ்சம் பாலும் சேர்த்துக் குழைத்துத் தடவி முகம் கழுவிவிடுவேன்.
அழகாக இருப்பதற்கு இத்தனை எல்லாம் மெனக்கெட வேண்டியதே இல்லை. ஒரு சிம்பிள் சீக்ரெட் சொல்லவா?

சந்தோஷமான பெண்கள்தான் உலகிலேயே அழகான பெண்கள் என நம்புகிறவள் நான். அந்த வகையில் ஐயாம் ஹேப்பி அண்ட் ப்ரெட்டி!’’