ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம்! - 8

சகலகலா சருமம்! - 8
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 8

அழகுசெல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்

பாக்டீரியா தொற்றினால் ஏற்படுகிற சருமப் பிரச்னைகளைப் பற்றிப் பார்த்தோம். அதற்குச் சற்றும் சளைத்தவையல்ல பூஞ்சை, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்றுகள்.

சகலகலா சருமம்! - 8

பூஞ்சைத் தொற்று

பூஞ்சைகளால் ஏற்படும் தொற்றுகளில் முக்கியமானது படை. இது தலையில், உடலில், தொடை இடுக்குகளில், நகங்களில், கால் விரல்களுக்கு இடையில் வரலாம். டெர்மடோஃபைட்ஸ் எனப்படுகிற பூஞ்சையால் ஏற்படுகிற இந்தப் பிரச்னைக்கு 'டெர்மடோஃபைட்டோசிஸ்' என்று பெயர். இது பார்ப்பதற்கு வட்டமாக இருக்கும். அதிகளவில் அரிப்பு இருக்கும். அதிகம் வியர்க்கிற இடங்களில் வரும். நகங்களையும் பாதிக்கும். அதனால் நகங்கள் கெட்டியாகும். தலை, பாதங்களின் அடிப்பகுதியில் கூட வரும்.

அடுத்தது ‘பிட்டீரியாசிஸ் வெர்சிகோலர்' எனப்படுகிற அழுக்குத் தேமல். வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இதில் அரிப்பு இருக்காது. மேல்புறப் பகுதி உதிர்கிற மாதிரி இருக்கும். இதுவும் ஒருவகை பூஞ்சைத் தொற்றே. கிரீம், பவுடர், ஆன்ட்டிஃபங்கல் மாத்திரைகளின் மூலம் குணப்படுத்தலாம். சுத்தமாக இருப்பதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். உள்ளாடைகள் ஈரமாக இருக்கக்கூடாது. நீண்ட நேரம் உள்ளாடையை மாற்றாமல் இருப்பதாலும் இந்தப் பூஞ்சை தொற்று வரும்.

கேண்டிடா என்பது இன்னொரு வகை பூஞ்சைத் தொற்று. ஹார்மோன் சமநிலையின்மை, நோய்எதிர்ப்புச் சக்தி குறைபாடு போன்றவற்றால் வருவது. அரிப்பு இருக்கும். சிவப்பாக இருக்கும். அந்தரங்க உறுப்பில் கேண்டிடா தொற்றுள்ள பெண்களுக்குத் தயிர் மாதிரி வெள்ளைப்போக்கு தென்படும். ஆண்களுக்கும் அந்தரங்க உறுப்பில் சிவந்த தடிப்புகளும் கீறல்களும் காணப்படும். இதே தொற்று வாயிலும் வரும். வெள்ளையான திட்டுகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் எய்ட்ஸ் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். சரும மருத்துவரை அணுகி, எந்த வகையான பூஞ்சைத்தொற்று எனக் கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும்.

சகலகலா சருமம்! - 8வைரஸ் தொற்று

வார்ட் எனப்படுகிற வைரஸ் தொற்று, கை கால்களில் ஏற்படும். இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். நமக்கும் மற்றவர்களுக்கும் அதிகம் பரவும். மருவில் நிறைய வகைகள் உள்ளன. சில வழவழப்பாக இருக்கும். அது முகத்தில் வரும். ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' என்கிற வைரஸால் ஏற்படுகிற தொற்று இது. ரேடியோ ஃப்ரீக்வன்சி, சாலிசிலிக் அமிலம் கலந்த பூச்சுகள் போன்றவை இதற்கு உதவும்.

சில வகை மருக்கள், பார்ப்பதற்குக் கட்டிகள் மாதிரித் தெரியலாம். சருமத்தைப் போலவே இருக்கும். சில மருக்களின் மேற்பரப்பு சொரசொரப்பாக இருக்கும். அதைப் பிய்க்கக்கூடாது. பிய்த்துவிட்டால் சருமத்தின் வேறு பாகங்களுக்கும் பரவக்கூடும். சிலர் அறியாமையில் மருவைச் சுற்றி குதிரை முடியைக் கட்டி வைப்பார்கள். ரத்த ஓட்டம் நின்று அந்த மரு தானாக விழுந்து விடும் என்கிற நம்பிக்கையில் செய்யப்படுகிற இது போன்ற சிகிச்சைகள், வேறு விதமான பாக்டீரியா தொற்றுகளை ஏற்படுத்தி விடும். மஞ்சள், வேப்பிலை தடவுவதெல்லாம் கூடாது. சரும மருத்துவரிடம் காட்டி நீக்கிவிட வேண்டும். இதே பிரச்னை பாதத்தில் ஏற்படும்போது அதை கால் ஆணி என்கிறோம். செருப்புப் போடாமல் நடப்பது, சுத்தமற்ற நீச்சல் குளத்தை உபயோகிப்பது, தொற்று உள்ளவர்களின் செருப்புகளை அணிவது போன்றவற்றால் இது அடுத்தவருக்கும் பரவும்.  சிலருக்கு உள்ளங்கையிலும் வரலாம். ஹோட்டல் போன்ற இடங்களில் சுத்தமற்ற டவல்களை பலரும் உபயோகிப்பதாலும், கைகளைச் சுத்தமாக வைத்திருக்காததாலும் இது வரும். இதைக் குணப்படுத்த ஆயின்மென்ட், க்ரையோ என்கிற உறைநிலை சிகிச்சை, எலக்ட்ரோகாட்ரி, ரேடியோ ஃப்ரீக்வன்சி, லேசர் எனப் பலவித சிகிச்சைகள் இருக்கின்றன. தடுப்பூசிகளும் வந்திருக்கின்றன.

‘ஹெர்பிஸ் சிம்ப்ளெக்ஸ்' என்கிற பெயரில் கொப்புளங்கள் போல வருபவையும் வைரஸ் தொற்றுதான். வாயில் தோன்றும் இதை, பல்லி எச்சமிட்டதாகச் சொல்லிக் கொள்வார்கள். சிறுவயதில் அம்மை நோய் வந்து, அந்த வைரஸ் நம் உடல் நரம்புகளில் தங்கியிருக்கும். திடீரென மன அழுத்தம் ஏற்படும்போது அது வெளியே வந்து, உதடுகளில் பாதிப்பைக் காட்டும். இதை உடனடியாகக் குணப்படுத்த வேண்டும்.

வயதானவர்களுக்கு வரும் அக்கி பிரச்னையும்கூட இதே வைரஸ் தொற்றால் ஏற்படுவதே. இது முகத்தில் வந்தால் நரம்புகள் பாதிக்கப்படும். கண்களிலும் வரும். அது தீவிரமானால் பார்வை இழப்புகூட ஏற்படும். இதற்கு ஆன்டிவைரல் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால் ‘ஹெர்பைடிக் நியூரால்ஜியா’ என்கிற மோசமான பிரச்னையாக மாறும். அதில் வலி, வீக்கம், எரிச்சல் என எல்லாம் அதீதமாக இருக்கும். சருமத்தில் வெள்ளையாக முத்துகள் ஒட்டியது போல பளபளப்பாக, நடுவில் சின்ன புள்ளியுடன் காணப்படும் பிரச்னை Molluscum contagiosum. இது குழந்தைகளுக்கு அடிக்கடி வரும். சாதாரண ஊசியால் குத்தியே இதை சரிசெய்து விடுவார்கள் மருத்துவர்கள்.

 ஒட்டுண்ணி

நிறையப் பேர் சேர்ந்து தங்கும்போது ஏற்படுகிற ஒட்டுண்ணித் தொற்றுகளில் முக்கியமானது சிரங்கு. அந்தரங்கப் பகுதிகளில் வரும். இரவில் அதிக அரிப்பு இருப்பதுதான் அறிகுறி. அதிகமாகப் பரவும். சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு மட்டும் குணப்படுத்தினால் போதாது. அவர்களுடன் இருக்கும் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். கழுத்துக்குக் கீழே முழு உடலிலும் தடவக்கூடிய கிரீம் பரிந்துரைக்கப்படும். அடுத்த நாள் வெந்நீரில் குளித்து, உடைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறை எல்லாவற்றையும் வெந்நீரில் துவைக்க வேண்டும். இதை அலட்சியப்படுத்தினால் பாக்டீரியா தொற்றும் வரும். ஒட்டுண்ணித் தொற்றால் ஏற்படுகிற இன்னொரு பிரச்னை பேன்... இது தலையில், உடலில் மற்றும் அந்தரங்க உறுப்பில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். இதற்கும் சிகிச்சைகள் இருக்கின்றன.

(சருமம் காப்போம்...)

- ஆர்.வைதேகி

செலிப்ரிட்டி ஸ்கின்

வியர்வை சிந்த வேண்டும்!

‘‘வாழ்க்கையில் உயர்வதற்கு மட்டுமில்லை, அழகாக இருக்கவும் வியர்வை சிந்த வேண்டும். அதாவது வியர்வை சிந்தும் அளவுக்கு உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். வியர்வையின் மூலம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதுடன், சருமமும் ஆரோக்கியமாக மாறும். 

வியர்வையின் மூலம் இழந்த நீர்ச்சத்தை ஈடுகட்ட, நிறைய தண்ணீர் குடிப்பேன். தினமும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் குடிப்பேன். இது சருமத்துக்கான டானிக் போன்றது. இதிலுள்ள வைட்டமின்களும் மினரல்களும் சருமத்தின் இயற்கையான அழகைத் தக்க வைப்பவை. சருமத்தில் வழிகிற அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்தும். அதனால் பருக்கள் வராது.  இது சருமத்தின்  பி.ஹெச் பேலன்ஸை சரியான அளவில் வைப்பதால், சருமம் இளமையாக இருக்கும். நிறமாற்றம் ஏதும் இல்லாமல் சருமம் ஒரே மாதிரி காணப்படும். தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் சுத்தமான பன்னீரை முகத்தில் தடவிக் கொள்வேன். தேங்காய் எண்ணெய்க்கும் அழகுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதனால் தேங்காய் எண்ணெயில் சமைத்த உணவுகள்தான் என் சாய்ஸ்.’’

- நடிகை நிவேதா பெத்துராஜ்

ஆரோக்கியமான சருமத்துக்கு...

* அம்மை மாதிரியான நோய்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும்.

* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிற உணவுகள் அவசியம்.

* தினமும் காலையில் 1 டீஸ்பூன் தேனில் அரை மூடி எலுமிச்சைக் கலந்து குடிக்கலாம். இதையே வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம்.

* சருமத்தில் ஏற்படுகிற எந்தக் கீறலையும், காயத்தையும் அலட்சியப்படுத்தக்கூடாது.

* காட்டன் துணிகளால் ஆன, உலர்ந்த உள்ளாடைகளை அணிய வேண்டும்.

* தொற்றுள்ள பகுதிகளைத் தொட்டால் உடனே கைகளைக் கழுவ வேண்டும்.