ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம்! - 8

சகலகலா சருமம்! - 8
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 8

அழகுதலத் சலீம், ட்ரைகாலஜிஸ்ட்

சகலகலா சருமம்! - 8

வெண்புள்ளிப் பிரச்னையுடன் ஒருவர் கடந்து செல்லும்போது, நம்மில் எத்தனை பேர் அவரைப் பரிதாபத்துடனும் பரிகாசத்துடனும் பார்த்திருப்போம்?

தொட்டால் ஒட்டிக்கொள்கிற தொற்று நோயல்ல என்று தெரிந்தாலுமே, வெண்புள்ளிப் பிரச்னையுடன் ஒருவரை நெருங்கும்போது தன்னிச்சையாக விலகிச் செல்கிறவர்களே அதிகம்.

இது ஒரு மருத்துவப் பிரச்னை மட்டுமல்ல, சமூகப் பிரச்னையும்கூட.

கி.மு. 1550களிலேயே இந்த நோய் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளே, இது எவ்வளவு பழைமையான நோய் என்பதைக் காட்டுகிறது.

வெண்புள்ளிப் பிரச்னையில் சருமத்தின் நிறம் ஒரே மாதிரி இல்லாமல் ஆங்காங்கே நிறம் மாறிய திட்டுகளுடன் காணப்படும். ஆங்கிலத்தில் இதை ‘விட்டிலிகோ’ என்றும் ‘லூகோடெர்மா’ என்றும்  அழைக்கிறார்கள். கிரேக்க வார்த்தையான லூகோடெர்மாவில், லூகோ என்பது வெள்ளையையும் டெர்மா என்பது சருமத்தையும் குறிக்கும்.

ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் நோய்களில் ஒன்றாகக் கருதப்படுவது வெண்புள்ளிப் பிரச்னை. மரபியல் காரணங்களாலும் இந்தப் பிரச்னை தொடரலாம் என்கிறது மருத்துவ அறிவியல். இன, நிற பேதமின்றி, எல்லோரையும் தாக்கக்கூடிய இந்தப் பிரச்னை, மிக மெதுவாகத் தீவிரநிலையை அடையக்கூடியது. 10 முதல் 30 வயதுள்ளவர்களில் தீவிரமடைகிற இது, ஆண், பெண் பேதமும் பார்க்காதது. நாள்பட்ட நோய் என்பதால் இதற்கான சிகிச்சைகளுக்கும் மிகமிகத் தாமதமாகவே பலன்களைத் தரும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இது மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்.

சகலகலா சருமம்! - 8

காரணங்கள்...

நம் சருமத்தில்  மெலனின் என்கிற நிறமிகள் இருக்கும். போர்க்களத்தில் போர்வீரனுக்குக் கேடயம் எப்படிப் பாதுகாப்பு தருமோ, அது மாதிரி நம் சருமத்தைக் காக்கும் கேடயம் இந்த மெலனின். வெயிலில் போகிறபோது, அதன் தாக்கத்தால் சருமம் பாதிக்கப்படாமலிருக்க, இந்த மெலனின் உடனடியாக விரைந்து வந்து பாதுகாப்பு தரும்.

சருமம் போதுமான அளவு மெலனினை உற்பத்தி செய்ய முடியாத போது அல்லது மெலனின் இயக்கத்தில் கோளாறு வரும்போது, இந்தப் பிரச்னை வரும். லூகோடெர்மாவுக்கான காரணங்கள் இவைதான் என  இதுவரை உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஒரே நாளில் இது உடம்பு முழுவதிலும் பரவுவதில்லை. கைகால்களில், கண்களையும், வாயையும் சுற்றி எனச் சிறிது சிறிதாகவே உடலின் பல பகுதிகளுக்கும் பரவும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்துவது சுலபம்.

சிகிச்சைகள்...

யுவிஏ (UVA) மற்றும் யுவிபி (UVB) ரேடியேஷன்

பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் இந்த ஒளியைக் காட்டினால், மெலனின் உற்பத்தியாகும். வெண்புள்ளிப் பிரச்னை ஆரம்பநிலையில் இருப்போருக்கு,  இது மிக அருமையான சிகிச்சை.

ஃபோட்டோதெரபி


குறிப்பிட்ட ஒரு மாத்திரையை உள்ளுக்குக் கொடுத்துவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து, பியுவிஏ (PUVA) லைட் வெளிச்சத்தின் அடியில் பாதிக்கப்பட்டவர்கள் உட்காரவைக்கப் படுவார்கள்.  அதன் விளைவாக மெலனின் உற்பத்தியாகும். இந்த சிகிச்சையில் சில பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதவை.

மெலனோசைட் டிரான்ஸ்பிளான்ட்டேஷன்


 அறுவை சிகிச்சை மாதிரியே செய்யக்கூடிய இந்தச் சிகிச்சை, தேர்ந்த மருத்துவரிடம் மட்டுமே செய்துகொள்ளப்பட வேண்டும்.

கேமஃப்ளாஜ் (camouflage)


 பச்சை குத்துகிற மாதிரியான சிகிச்சை இது.  ஆனால், இரண்டு வருடங்களுக்குப் பிறகு  சருமத்தில் அந்த இடத்தின் நிறம்  மறுபடியும் மாற ஆரம்பிக்கும்.

சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்


* சுரைக்காய், பீன்ஸ் மற்றும் பச்சைக் காய்கறிகள்.
* வாழைப்பழம், சப்போட்டா, தர்பூசணி, மாதுளை போன்ற பழங்கள்.
* முளை கட்டிய தானியங்கள், ஊற வைத்த பாதாம் மற்றும் வால்நட்.
*  சுரைக்காய் ஜூஸ் மற்றும் இனிப்பு சேர்க்காத கேரட் ஜூஸ்.

(சருமம் காப்போம்...)

- ஆர்.வைதேகி

செலிப்ரிட்டி ஸ்கின்

அழகு என்பது மனது சம்பந்தப்பட்டது! - மிஸ் சவுத் இந்தியா மீரா மிதுன்


‘’மீடியாவில் இருப்பவர்களுக்கு அழகு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. தொடர்ச்சியான ஷூட்டிங், அதிக நேரம் மேக்கப்புடன் இருப்பது, கேமரா வெளிச்சம் போன்றவை காரணமாக, எங்களுக்குச் சருமம் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும்.  சருமத்தின் செல்கள் சீக்கிரமே பழுதடையும். கவனிக்காமல் விட்டால் சருமம் வறண்டு, முதுமைத்தோற்றம் பெறும். இதிலிருந்து விடுபட நான் காஸ்மெட்டிக் அக்கு பங்சர் என்கிற முறையைப் பின்பற்றுகிறேன். இது சீனாவில் ரொம்பவே பிரபலம்.  சீனாவில் அத்தனை பிரபலங்களும் இதைச் செய்து கொள்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். பக்க விளைவுகள் இல்லாதது. இது வெறும் பழக்கலவை கொண்டு செய்யப்படுகிற சிகிச்சை.  இதைத் தடவி, ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து எடுத்துவிடலாம். செல்கள் புத்துணர்வு பெறும். சருமத்தின் கருமை நீங்கிவிடும். மாதம் இரண்டு முறைகள் இதைச் செய்து கொள்வேன். மற்றபடி ஃபேஷியல் செய்வது, கெமிக்கல் பீல்ஸ், குளூட்டாதியான் இன்ஜெக்ஷன் (Glutathione injection) போன்றவற்றுக்கெல்லாம் நான் எதிரி. என் பார்வையில் ஆரோக்கியமான மனதே அழகின் ரகசியம்.’’

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

* எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாம்பழம், திராட்சை, ஆப்பிள், லிச்சி, நெல்லிக்காய் போன்ற புளிப்புச்சுவை உள்ள காய்கள், கனிகள்.

* பச்சை வெங்காயம், உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் மற்றும் மைதா.

* வினிகர், தயிர், மோர், ஊறுகாய் போன்ற புளிப்பான உணவுகள்.

* குளிர் பானங்கள் மற்றும் ஆல்கஹால்.

* தினசரி உணவில் சிக்கன், மட்டன், மீன் போன்றவை.

* கெமிக்கல் கலந்த சோப், டிடெர்ஜென்ட், பெர்ஃப்யூம், ஹேர் டை பயன்பாடு.

* ரப்பர் செருப்புகள்