Published:Updated:

சகலகலா சருமம் - 13

செல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்

பிரீமியம் ஸ்டோரி

எக்ஸிமா (அரிப்புடன் கூடிய தோலழற்சி)

எக்ஸிமா என்ன செய்யும்? சருமப்பகுதிகள் வீங்கும். அரிப்பெடுக்கும். சிவந்தும் தடித்தும் போகும். அரிப்பில் ஆரம்பித்து, சொறியாக மாறி, போகப்போகச் சருமம் வறண்டு, தடித்துப்போகும். கடைசியாகத் தோல் உரியத் தொடங்கும். சிலருக்குப் பாதிப்பின் தீவிரம் அதிகமானதன் காரணமாக  அந்த இடத்திலிருந்து நீர் வடியத் தொடங்கும். அதன் மேல் ஓடு போன்று உருவாகும்.

சகலகலா சருமம் - 13எக்ஸிமாவுக்கான உறுதியான காரணம் இதுதான் என்று எதையும் சொல்ல முடிவதில்லை. ஆனாலும் இந்தப் பிரச்னைக்கான காரணங்களை எக்ஸோஜீனஸ் எனப்படுகிற வெளிக் காரணிகள் மற்றும் எண்டோஜீனஸ் எனப்படுகிற  உள் காரணிகள் என இரண்டாக வகைப்படுத்தலாம். உள் காரணிகளில் எதிர்ப்புச்சக்தியின்மையே முதன்மையானது. பரம்பரையாகவும் எக்ஸிமா பாதிக்கலாம்.

வெளிக்காரணிகள்

* சோப், டிடெர்ஜென்ட், ஷாம்பூ, பூச்சிக்கொல்லிகள், அசைவம், சில வகைக் காய்கறிகள் மற்றும் பழங்களால்  ஏற்படுகிற ஒவ்வாமை (இரிட்டன்ட்ஸ்).

* சிமென்ட், மகரந்தம், பார்த்தீனியம் செடி போன்றவற்றால்  ஏற்படுகிற ஒவ்வாமை (அலெர்ஜென்ட்ஸ்).

* ஸ்டாஃபைலோகாக்கஸ் பாக்டீரியா, சிலவகை வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுகள்.

* நிக்கல் போன்ற உலோகங்கள் கலந்த நகைகள் அணிவது.

* அதீத குளிர் அல்லது அதிக வெப்பமான வானிலை.

* பால், முட்டை, நட்ஸ் போன்று சிலவகையான உணவுகள் ஏற்படுத்தும் ஒவ்வாமை.

மன அழுத்தம்

மாதவிலக்கின்போதும் பிரசவத்தின்போதும் பெண்ணுடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவுகள்.

எண்டோஜீனஸ் எனப்படுகிற உள்காரணிகளில் முக்கியமானது ஏடோபிக் டெர்மடைட்டிஸ் எனப்படுகிற ஒவ்வாமை. இது குழந்தைகளையே அதிகம் பாதிக்கும். குழந்தைகளைப் பாதுகாப்ப தாக நினைத்துக்கொண்டு சில பெற்றோர் ரொம்பவும் பொத்திப் பொத்தி வளர்ப்பார்கள். அதனால் எதிர்ப்புச் சக்தியே இல்லாமல் போய்விடும். ஏடோபிக் டெர்மடைட்டிஸ் உள்ளவர்களுக்கு அடிக்கடி தும்மல் வரும். கன்னங்கள் வறண்டு காணப்படும். சரும மடிப்புகளில் தடிப்பும் வறட்சியும் ஏற்படும்.

எக்ஸிமாவின் வகைகள்

‘செபோரிக் டெர்மடைட்டிஸ்’ என்பது ஒரு வகை எக்ஸிமா. இதற்கான துல்லியமான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும், நோய் எதிர்ப்புச் சக்தியின்மையும் குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக் குறைபாடும் காரணமாகச் சொல்லப்படுகின்றன.

‘ஸ்டேசிஸ் எக்ஸிமா’ என்பது ‘வேரிக்கோஸ் வெயின்ஸ்' எனப்படுகிற கால்களில் நரம்பு சுருட்டி இழுக்கும் பிரச்னை உள்ளவர்களுக்கு வருவது. ரத்தம் கால்களில் தேங்கி நிற்பதால் ஏற்படுகிற சருமப் பாதிப்பு இது.

‘ஹேண்ட் எக்ஸிமா’ என்பது அதிக நேரம் தண்ணீரில் கைகள் பட வேலை செய்கிறவர்களுக்கு, அலெர்ஜியை ஏற்படுத்துகிற டிடெர்ஜென்ட், சிமென்ட் போன்றவற்றைப் புழங்குகிறவர்களுக்கு வருவது.

மூன்று நிலைகள்

எக்ஸிமாவின் தீவிரத்தைப் பொறுத்து அதை அக்யூட், சப்அக்யூட் மற்றும் க்ரானிக் என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.

அக்யூட் நிலையில் வீக்கமும் சிவந்து போவதும் நீர்க்கசிவும் இருக்கும். சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

க்ரானிக் நிலை என்பது வருடக்கணக்காகத் தொடர்வது. அரிப்பிருக்கும்; சொரியச் சொரிய சருமம் தடித்துப் போவது, சருமம் கறுத்துப்போவது, சருமம் வறண்டு போவது போன்றவை இதன் அறிகுறிகள்.

சப் அக்யூட் என்பது இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை. செதில்கள் உதிர்வதும் சருமத்தின் மேற்பரப்பில் ஓடுபோல் உருவாவதும் இருக்கும்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒவ்வாமையைக் கண்டறிகிற பேட்ச் டெஸ்ட், ப்ரிக் டெஸ்ட் செய்யப்படும். அதையும் தாண்டிச் சந்தேகம் இருந்தால் ஸ்கின் பயாப்சி செய்யப்படும்.

தவிர்க்கும் வழிகள்!

* தினமும் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பது.

* வியர்வையின்றி இருப்பது.

* மன அழுத்தம் குறைப்பது.

* கம்பளித் துணிகளைத் தவிர்ப்பது.

* கடினமான சோப் மற்றும் டிடெர்ஜென்ட் தவிர்ப்பது,  துணி சோப்பில் நீலநிற சோப்புக்குப் பதில் மஞ்சள் நிற சோப்பைப் பயன்படுத்துவது சிறந்தது.

* ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்ப்பது.

(சருமம்  காப்போம்...)

- ஆர்.வைதேகி

செலிப்ரிட்டி ஸ்கின்

உணவே அழகு!

``சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். அதற்கு நிறைய தண்ணீரும் நீர்ச்சத்துமுள்ள காய்கறி, பழங்கள், ஜூஸ் சாப்பிடுங்கள்.

சகலகலா சருமம் - 13

யாரோ சொன்னார்கள் என்பதற்காகவோ யாருக்கோ பொருந்திப்போகிறது என்பதற்காகவோ எந்த அழகு சாதனத்தையும் உபயோகிக்காதீர்கள். சரும மருத்துவரிடமோ, நம்பிக்கையான அழகுக் கலை நிபுணரிடமோ உங்கள் சருமத்தின் தன்மையைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப மாய்ஸ்ச்சரைசரும் நைட் கிரீமும் உபயோகியுங்கள்.

வெளியிலிருந்து நீங்கள் என்னதான் ஊட்டம் கொடுத்தாலும் அதன் பலன் ஓரளவுக்குத்தான் சருமத்தில் தெரியும். உள்ளுக்குச் சாப்பிடுகிற ஒவ்வொன்றுமே உங்கள் சரும அழகுடனும் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது. எனவே உணவில் கவனமாக இருங்கள்.

எப்போதும் மேக்கப்புடன் இருக்க வேண்டாம். தேவையில்லாதபோது சருமத்துக்கு மேக்கப்பிலிருந்து சுதந்திரம் கொடுப்பதும்கூட அதன் ஆரோக்கியத்துக்கு அவசியமானதுதான்!’’

- ஸ்ருதி ஹாசன்

சிகிச்சைகள் என்ன?

* பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சிகிச்சைகளும் வேறுபடும்.

* முதலில் சருமம் சிவந்துபோனதையும் வீக்கத்தையும் குறைக்க வேண்டும்.

* ஸ்டீராய்டு கலந்த மேல்பூச்சும் தேவைக்கேற்ப ஆன்டிபயாட்டிக்கும் பரிந்துரைக்கப்படும்.

* வறட்சியும் சருமத் தடிப்பும் அதிகமாக இருந்தால் சாலிசிலிக் அமிலம் கலந்த மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டியிருக்கும். சிலருக்கு யூரியா கலந்த மாய்ஸ்ச்சரைசர் தேவைப்படும்.

* ஸ்டீராய்டு பயம் இருப்பவர்களுக்கு இம்யூனோமாடு லேட்டர்ஸ் என்கிற கிரீம் பரிந்துரைக்கப்படும்.

* அரிப்பைக் குறைக்கும் மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருக்கும்.

* பொட்டாசியம் பர்மாங்கனேட் துகள்களை ஒரு பக்கெட் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து கால்களை ஊறவைத்தால், எக்ஸிமாவால் கால்களில் ஏற்பட்ட பாதிப்பு ஓரளவு குறையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு