னித உடலில் மிகப்பெரிய உறுப்புகளில் ஒன்று தோல்.இதன் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிக் கடந்த இதழ்களில் பார்த்திருக்கிறோம். சரும அழகுக்கு உத்தரவாதம் தருவதாகச் சொல்லிக்கொண்டு தினம் தினம் விளம்பரப்படுத்தப்படும் அழகு சாதனங்களைக் கண்களை மூடிக்கொண்டு வாங்கிப்

சகலகலா சருமம் - 14

பயன்படுத்துகிறோம். அவை நமக்குப் பொருந்துமா, அவசியம்தானா, தவறாகப் பயன்படுத்தினால் பிரச்னைகள் வருமா என்று எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.

அழகு சாதனங்கள் பயன்படுத்தும்போது அந்தந்தச் சரும வகைக்கு ஏற்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கிளென்சர், டோனர், மாய்ஸ்ச்சரைசர், நைட் க்ரீம், டே க்ரீம், ஜெல், சன்ஸ் க்ரீம், ஷாம்பூ, கண்டிஷனர் என எல்லாமே அவரவர் சருமம் மற்றும் கூந்தலின் தன்மைக்கேற்ப தனித்தனியே கிடைக்கின்றன. எல்லாவற்றிலும் பி.எச் அளவு இருக்கும். நம் சருமத்தின் பி.எச் அளவு தெரிந்து அதற்கேற்ப பொருந்திப்போகிற அழகு சாதனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குச் சருமத்தின் தன்மை என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
 
தண்ணீர், புறச்சூழல் காரணிகள் போன்றவற்றாலும் சருமத்தின் தன்மை மாறலாம். சருமத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ள ஸ்கின் டெஸ்ட்டிங் அவசியம். பார்லர்களில் சிகிச்சை பெறச் செல்பவர்கள் முதலில் அவர்களது சருமத்தின் தன்மையையும் அதிலுள்ள பிரச்னைகளையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சைகளை மேற்கொள்வதுதான் சரியான முறையாகும்.

சருமத்தை எப்படி டெஸ்ட் செய்வது?

டிஷ்யூ பேப்பர் முறை: முகத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும். டி ஸோன்  (T Zone) எனப்படும் நெற்றி, மூக்கு அடங்கிய பகுதி ஒன்று. இன்னொன்று யு ஸோன் (U Zone) எனப்படும் கன்னங்கள். இந்த இரண்டு பகுதிகளிலும் வேறு வேறு டிஷ்யூ பேப்பரை அழுத்திப் பார்க்க வேண்டும். அப்படி அழுத்தும்போது அதில் லேசான எண்ணெய்ப் படலம் தெரிந்தால் அது எண்ணெய்ப் பசையான சருமம். எதுவுமே இல்லை என்றால் அது சாதாரண மற்றும் வறண்ட சருமமாக இருக்கலாம் எனத் தெரிந்துகொள்ளலாம். இதைக் காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டும்.

மாய்ஸ்ச்சர் செக்கர்: இது பார்லர்களில் செய்யப்படக்கூடியது. இதை நம் சருமத்தின் மேல் வைத்துச் சோதிக்கும்போது 40-க்கும் மேல் காட்டினால் உங்கள் சருமத்தின் ஈரப்பதம் நல்ல நிலையில் இருப்பதாகவும் அசிடிக் அளவு சரியாக இருப்பதாகவும் அர்த்தம். 40-க்குக் கீழ் இருந்தால் சருமத்துக்கு ஈரப்பதம் போதவில்லை என்றும் உணவிலும் ஈரப்பதத்திலும் கவனம் தேவை என்று அர்த்தம்.

ஜிகே 4: ஜிகே 4 என்ற கருவியின் மூலம் பார்க்கும்போது நம் சருமம் வறண்டிருக்கிறதா, ஈரப்பதத்துடன் இருக்கிறதா என்றெல்லாம் தெரிந்து கொள்ளலாம். இக்கருவியிலுள்ள மினி சிப் சருமத்தின் ஈரப்பதத்தைச் சரிபார்த்துச் சொல்லும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சகலகலா சருமம் - 14

உட்ஸ் லேம்ப்: இது அநேகமாக எல்லா பியூட்டிஷியன்களிடமும் இருக்கும். இதில் அல்ட்ரா வயலட் லைட்டும் சாதாரண லைட்டும் இருக்கும். கூடவே பூதக்கண்ணாடி ஒன்றும் இருக்கும். இந்தக் கண்ணாடி மூலம் பார்க்கும்போது 20, 25 மடங்கு அது சருமத்தைப் பெரிதுபடுத்திக் காட்டும். அதனால் சருமத்தில் சின்னதாக ஒரு பிரச்னை இருந்தாலும்கூட சரும மருத்துவர் அல்லது அழகுக்கலை ஆலோசகரால் கண்டுபிடித்துவிட முடியும். வாடிக்கையாளரின் கண்களை மூடச் சொல்லிவிட்டு, அல்ட்ரா வயலட் லைட் மூலம் அவரது சருமத்தைப் பார்ப்போம். வெள்ளை, ஆரஞ்சு, மஞ்சள், நீலம், ஊதா என நிறைய கலர்கள் தெரியும்.

வெள்ளைநிறப் புள்ளிகள் தெரிந்தால் அது வறண்ட சருமம். மஞ்சளாகத் தெரிந்தால் எண்ணெய் வழியும் சருமம்; பருக்கள் வரக்கூடிய சருமம் என்றும் புரிந்து கொள்ளலாம். ஆரஞ்சாகத் தெரிந்தால் எண்ணெய்ப் பசையான சருமம். நீலமாகத் தெரிந்தால் சாதாரண சருமம். ஊதா நிறத்தில் தெரிந்தால் அது நீர்ச்சத்து இல்லாமல் வறண்டுபோன சருமம். முதிர்ந்த, வயதான சருமம் அப்படித்தான் இருக்கும். பிரவுன் நிறத் திட்டுகள் தென்பட்டால் அது மங்குப் பிரச்னையாக இருக்கலாம்.

இப்போது கம்ப்யூட்டர் மூலம் ஒருவரின் சருமத்தை டெஸ்ட் செய்வதுதான் ட்ரெண்ட். சருமத்தை போட்டோ எடுத்துவிட்டு, அதன் தன்மை என்னவென்பதைக் கம்ப்யூட்டரே எடுத்துச்சொல்லும். சருமத்தின் ஈரப்பத அளவையும் சீபம் எனப்படும் எண்ணெய்ப்பசையின் அளவையும் காட்டும். சருமத்தின் டெர்மிஸ் என்ற லேயரில் உள்ள புரதங்களான கொலாஜன், எலாஸ்டின் ஆகியவற்றின் அளவுகளையும் இதில் அறியலாம். கொலாஜன் (Collagen), எலாஸ்டின் (Elastin) அளவானது குறைந்தது 40 சதவிகிதம் இருக்க வேண்டும் என்பது கணக்கு. ஆனால், நிறைய பேருக்கு 20 சதவிகிதம்கூட இருப்பதில்லை.

இந்த கொலாஜனும் எலாஸ்டினும்தான் சருமத்தைத் தொய்வின்றி இறுக்கமாக வைத்திருப்பவை. போதிய அளவு நீர்ச்சத்தின்மை, தூக்கமின்மை. புரதக் குறைபாடு போன்றவற்றால் இவை குறையலாம். வெயிலில் செல்கிறபோது எந்தப் பாதுகாப்பும் மேற்கொள்ளாதவர் களின் சருமத்தில் மெலனின் என்கிற நிறமி மேல்பகுதிக்கு வந்திருப்பதை ஸ்கின் டெஸ்ட்டிங்கில் பார்க்கலாம்.

விஷுவல் செக்:
பார்லருக்குப் போய் சருமத்தை டெஸ்ட் செய்யும் வசதி இல்லாதவர்கள் வீட்டில் தாங்களாகவே சருமத்தை டெஸ்ட் செய்துகொள்ளலாம். அதை ‘விஷுவல் செக்’ என்கிறோம். முதல்நாள் இரவு முகத்தை நன்கு கழுவிவிட்டு அப்படியே தூங்கச் செல்ல வேண்டும். மறுநாள் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னாடி நின்று சருமத்தைக் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கும் போது வாய்ப் பக்கத்தில் வறண்டிருந்தாலோ, நெற்றிப் பகுதியில் கோடுகள் தெரிந்தாலோ, இழுக்கும் உணர்வு இருப்பதாக உணர்ந்தாலோ அது வறண்ட சருமம். சிவப்புப் புள்ளிகள் இருந்தால் சென்சிட்டிவ் சருமம். எல்லாம் கலந்து இருந்தால் காம்பினேஷன் சருமம்.

(சருமம்  காப்போம்...)

- ஆர்.வைதேகி

சகலகலா சருமம் - 14

செலிப்ரிட்டி ஸ்கின்

‘நடிப்புத்துறையில் இருக்கும் எல்லோரும் அவரவர் சருமத்துக்குக் கொடுமைகளைக் கொடுக்கிறோம் என்பதுதான் உண்மை. மேக்கப், லைட்ஸ், கண்ட கண்ட வானிலைச் சூழல் என எல்லாமே சருமத்தைப் பாதிப்பவை. சரியான சாப்பாடு, நீர்ச்சத்துள்ள உணவுகள் மூலம் என் சருமத்தை அந்தப் பாதிப்புகளில் இருந்து மீட்டுக்கொள்கிறேன்.

காலையில் எழுந்ததும் வெந்நீரும் கிரீன் டீயும் குடிப்பேன். அது என் உடலை டீடாக்ஸ் செய்துவிடும். ஆயுர்வேதிக் மற்றும் இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அழகுச் சாதனங்களை மட்டும்தான் உபயோகிப்பேன். செலவே இல்லாத ஸ்கின் அழகு ரகசியம் சொல்லவா? வேக வைத்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் சாப்பிடுங்கள். முடிந்தபோதெல்லாம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் மேம்படும். அது உங்கள் சருமப் பளபளப்பில் பிரதிபலிக்கும்.’’

- நடிகை டாப்ஸி