ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம் - 15

சகலகலா சருமம் - 15
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம் - 15

செல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்

தினம் ஒரு நடிகை ஏதோ ஒரு சோப் விளம்பரத்தில் வந்து உங்களைச் சோதிக்கிறார். ‘சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்’ என்கிற கவர்ச்சி, காலம் காலமாக மாறவே இல்லை. பிரபலங்கள் பரிந்துரைக்கிற பொருள்களைக் கண்மூடித்தனமாக நம்பிக் கெடுகிற மக்கள் மனநிலையிலும் மாற்றமே இல்லை. அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாகிவிட்ட சோப்புப் பற்றி ஆளாளுக்கு ஆயிரம் சந்தேகங்கள்... எது நல்ல சோப் என்கிற தேடலுக்கு இங்கே தெளிவுபெறுவோம்.

நாம் உபயோகிக்கிற சோப்பை ‘டாய்லெட் சோப்’ என்றுதான் அழைக்கிறோம். அதற்கு இனிமையான நறுமணம் இருக்கும். உடலைச் சுத்தப்படுத்துவதற்கான சோப்புகள் இவை. சோப் வாங்கும்போது அதன் பிராண்ட், விலை, வாசனை எனப் பலதையும் பார்த்து வாங்குகிறோம். முக்கியமான ஒன்றைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அதுதான் டி.எஃப்.எம் (TFM) அதாவது ‘டோட்டல் ஃபேட்டி மேட்டர்’, இதுதான் சோப்பின் தரத்தை நிர்ணயிக்கிறது. சோப் உறையின் மீது இது குறிப்பிடப்பட்டிருக்கும். அது 80 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், முதல்தர சோப். 60 முதல் 80 சதவிகிதம் என்றால், இரண்டாம் தரம். ஆனால், அவையும் குளிக்க ஏற்றவையே. டி.எஃப்.எம் குறிப்பிடப்படாத சோப்புகள் உபயோகிக்க ஏற்றவை அல்ல.

சகலகலா சருமம் - 15

‘சப்பானிஃபிகேஷன் (Saponification) என்கிற முறையில்தான் சோப் தயாரிக்கப்படுகிறது. சோடியம் ஹைட்ராக்சைடு அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடுதான் அடிப்படை. தேங்காய் எண்ணெய், பாமாயில், ஆலிவ் எண்ணெய் போன்ற தாவர எண்ணெய்களுடன் கலந்து, கிளிசரினும் சேர்த்துத் தயாரிப்பார்கள்.

இந்தியத் தர நிர்ணய அமைவனம் சோப்புகளை இரண்டாக வகைப்படுத்தியிருக்கிறது. டாய்லெட் சோப் மற்றும் பாத்திங் பார் (Bathing Bar). டாய்லெட் சோப்பில் கிரேடு 1, 2, 3 இருக்கின்றன. கிரேடு 1 வகையில் டி.எஃப்.எம் 76 சதவிகிதத்துக்கும் மேலாக இருக்கும். கிரேடு 2 என்பது 70 முதல் 76 சதவிகிதத்துக்குட்பட்டது. கிரேடு 3 என்பது 70 சதவிகிதத்துக்கும் குறைவானது.

பாத்திங் பார் என்பது 60 சதவிகிதத்துக்கும் குறைவான டி.எஃப்.எம் கொண்டது. அவற்றை உபயோகிப்பது சிறந்ததல்ல.

கிளிசரின் சோப், பியூட்டி பார், ஆயுர்வேதிக் சோப் போன்று சோப்பில் நிறைய வகைகள் உள்ளன. எந்த சோப்பை வாங்குவதற்கு முன்னரும் டி.எஃப்.எம் அளவைப் பார்த்து வாங்குவது சிறந்தது.   இவை தவிர சருமப் பிரச்னைகளுக்கேற்பவும் சோப்புகள் கிடைக்கின்றன. உதாரணத்துக்கு, பருக்கள் இருப்போருக்கு பென்ஸாயில் பெராக்சைடு உள்ள சோப், வறண்ட சருமம் மற்றும் எக்ஸிமா பிரச்னை இருப்பவர்களுக்கு ஓட்ஸ், தேன், பால் கலந்த சோப், பூஞ்சைத் தொற்று உள்ளவர்களுக்கு ஆன்டி ஃபங்கல் சோப், பாக்டீரியா தொற்று உள்ளவர்களுக்கு ஆன்டி பாக்டீரியல் சோப்... இப்படி நிறைய உள்ளன.

கோஜிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட் உள்ள சோப்புகள் சரும நிறத்தை மேம்படுத்தக்கூடியவை. ரொம்பவும் வறண்ட சருமத்துக்கு மாயிஸ்ச்சரைசர் அதிகமுள்ள சோப் கிடைக்கிறது.
(சருமம்  காப்போம்...)

- ஆர்.வைதேகி

சகலகலா சருமம் - 15

செலிப்ரிட்டி ஸ்கின்

வயிற்றுக்கு வஞ்சனை செய்யாதீர்கள்!

``உடம்பில் நீர்ச்சத்து வற்றக் கூடாது. அப்போதுதான் சருமம் இளமையாக, மென்மையாக இருக்கும். சத்தான சாப்பாடு, போதுமான தூக்கம், அவசியமான உடற்பயிற்சி... இந்த மூன்றும்தான் என் ஸ்கின் பியூட்டி சீக்ரெட்ஸ். எனக்கு நன்றாகச் சாப்பிடப் பிடிக்கும். வஞ்சனையில்லாமல் சாப்பிடுவேன். ஆனால், அதே நேரம் அதற்கு இணையாக உடற்பயிற்சிகள் செய்துவிடுவேன். உடற்பயிற்சி என்பது உடலுக்கானது எனப் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது சருமத்துக்குமானது என்பது முறையாக உடற்பயிற்சி செய்கிறவர்களுக்குத்தான் புரியும். தினமும் உடற்பயிற்சிகள் செய்வதென்பது சில நேரங்களில் எரிச்சலாகவும் சலிப்பாகவும் இருக்கும். ஆனால், அந்த நேரத்தில் அழகையும் ஆரோக்கியத்தையும் நினைத்துப் பார்த்துக்கொள்வேன். உடலை இளைக்கச் செய்யவோ, இளமையாக வைத்துக்கொள்ளவோ செயற்கை வழிகளைப் பின்பற்றாதீர்கள். வயிற்றுக்கு வஞ்சனை செய்யாதீர்கள். அதே நேரம் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை கொள்ளுங்கள்.’’

- காஜல் அகர்வால்

சகலகலா சருமம் - 15

சோப் விளக்கங்கள்

பேபி சோப் பேபிக்களுக்கு மட்டுமே!

பிறந்த குழந்தையின் சருமம் மிக மிக மென்மையாக இருக்கும் என்பதால், அதை உறுத்தாதபடியான பேபி சோப்பை உபயோகிக்கலாம். ஆனால், தம் சருமமும் குழந்தையின் சருமம் போன்றே இருக்கும் என்கிற தவறான நம்பிக்கையில் வயதான பிறகும் பேபி சோப் உபயோகிக்கிறவர்கள் இருக்கிறார்கள். பெரியவர்களுக்கு பேபி சோப் ஏற்றதல்ல. சருமத்திலுள்ள சீபம் என்கிற எண்ணெயில் கொழுப்பு நிறைந்திருக்கும். அதை வெளியில் தள்ள பேபி சோப்பைவிடவும் சற்று ஸ்ட்ராங்கான சோப் அல்லது ஃபேஸ்வாஷ் முக்கியம்.

ஒருநாளைக்கு எத்தனை முறை சோப் உபயோகிக்கலாம்?

அதிகபட்சமாக ஒருநாளைக்கு இரண்டு முறை உபயோகிக்கலாம். அடிக்கடி சோப் உபயோகிக்கிறவர்களின் சருமம் வறண்டு போகும். அதனால் அதை ஈடுகட்ட சருமம் எண்ணெய்ப் பசையைத் தூண்டப் பார்க்கும். பருக்கள் இருப்பவர்கள் அதிகம் சோப் உபயோகிக்கவே கூடாது. இரண்டு முறை சோப் உபயோகித்ததும், அதன் பிறகு வெறும் தண்ணீரில் முகம் கழுவினால் போதும்.

மஞ்சளும் சந்தனமும் மட்டுமே போதாது!

மஞ்சளும் சந்தனமும் கலந்த சோப் உபயோகித்துவிட்டு வெயிலில் சென்றால், சருமம் சென்சிட்டிவாக மாறும். கறுத்துப் போகும் வாய்ப்புகளும் உண்டு என்பதால் சன் ஸ்கிரீன் உபயோகிக்காமல் வெளியில் செல்லக் கூடாது.

அந்தரங்க உறுப்புகளைச் சுத்தப்படுத்த சோப் வேண்டாம்!

சிலர் அதீத சுத்தம் என்கிற பெயரில் அந்தரங்க உறுப்புகளுக்குக்கூட சோப் உபயோகிப்பார்கள். உண்மையில் அந்தரங்க உறுப்புகளுக்கு சோப் உபயோகிக்கக் கூடாது. வெறும் நீரில் சுத்தப்படுத்தினாலே போதும். சோப் அல்லது அந்தப் பகுதிகளுக்கான பிரத்யேக வாஷ் உபயோகிப்பதன் மூலம் அங்குள்ள சாதாரண, அவசியமான பாக்டீரியாக்கள் நீக்கப்படும். அது தவறு. அந்த பாக்டீரியாக்கள் அங்கே இருக்க வேண்டும்.

முகத்துக்கும் உடலுக்கும் ஒரே சோப் உபயோகிக்கலாமா?

நமது சருமம், முகம் மற்றும் உடல் ஒரே மாதிரி இருப்பதில்லை. முகம் எண்ணெய்ப்பசையுடனும் உடல் வறண்டும் இருக்கலாம். வறண்ட பகுதிக்கு மாயிஸ்ச்சரைசிங் சோப் உபயோகிக்க வேண்டும் அல்லது சாதாரண சோப் உபயோகித்துவிட்டு பிறகு மாயிஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும்.

எப்போது சோப்பைத் தவிர்க்க வேண்டும்?

சருமத்தில் ஏதேனும் தொற்றோ, காயங்களோ, வெயிலில் அலைந்ததால் ஏற்பட்ட பாதிப்போ இருந்தால், சோப் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்போதெல்லாம் சோப் ஃப்ரீ கிளென்சர்கள் உபயோகிக்கலாம்.