ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம் - 16

சகலகலா சருமம் - 16
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம் - 16

அழகுசெல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்

ரும அழகு வேண்டுமா? உங்களுக்கு நீங்களே ரத்ததானம் செய்து கொள்ளுங்கள்!

இப்படிச் சொன்னால் சிரிப்பீர்கள்தானே? வேறெந்த அழகு சாதனத்தையும் அழகு சிகிச்சைகளையும் விட உங்கள் ரத்தத்தை வைத்துச் செய்யப்படுகிற சிகிச்சை அதிகப் பலன்களைத் தரும் என்றால் நம்புவீர்களா?

அப்படியொரு சிகிச்சைதான்  'பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா தெரபி'. சுருக்கமாக பி.ஆர்.பி.

சகலகலா சருமம் - 16

நம் ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்களைப் போலவே 'பிளேட்லெட்' என்கிற செல்களும் இருக்கும். சிவப்பணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லவும், வெள்ளையணுக்கள் அந்நியப் பொருள்கள் உள்ளே வந்தால் எதிர்த்துப் போராடவும், பிளேட்லெட்ஸ் காயங்களை ஆற்றவும், ரத்தம் உறையவும் உதவுகின்றன. பி.ஆர்.பி சிகிச்சையில் ரத்தத்தில் இருந்து பிளேட்லெட் செல்கள் பிரித்தெடுக்கப்பட்டுச் செறிவூட்டப்பட்டுச் கூந்தல் மற்றும் சருமப் பகுதிகளில் ஊசிமூலம் செலுத்தப்படும்.  சாதாரண சிரிஞ்ச் வைத்தே நரம்பிலிருந்து குறிப்பிட்ட அளவு ரத்தம் எடுக்கப்படும். குறைந்த அளவு பிளாஸ்மாவிலேயே நிறைய பிளேட்லெட் இருக்கும்.

பிளேட்லெட் செல்களுக்குள் ஆல்ஃபா துகள்கள் இருக்கும். அந்தத் துகள்களுக்குள் வளர்ச்சிக் காரணிகள் இருக்கும். நம் உடலில் எங்கேயோ அடிபடுகிறது என வைத்துக்கொள்வோம். உடனே ரத்தம் வரும். அந்த ரத்தம் விடாமல் வெளியேறினால் ஆபத்து. எனவே அது நிறுத்தப்பட வேண்டும். அதை நிறுத்துவதற்கான காரணிகள் மூளையின் தூண்டுதலின் பேரில் வெளியேற்றப்படும். ஆல்ஃபா துகள்களுக்குள் உள்ள வளர்ச்சிக் காரணிகளுக்கு இந்தச் செயலில் முக்கியப் பங்குண்டு. இதனால் சருமத்தின் செல்கள் புத்துணர்வு பெறும். சருமத்தின் மீள்தன்மைக்குக் காரணமான கொலாஜன் சீராக இருக்கும். காயம் சீக்கிரம் ஆறும். இதுதான் பி.ஆர்.பி சிகிச்சையின் அடிப்படை. இதே டெக்னிக்தான் மருத்துவச் சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

சகலகலா சருமம் - 16


எப்படிச் செய்யப்படுகிறது?

சம்பந்தப்பட்ட நபரின் உடலிலிருந்து 10 முதல் 50 மி.லி வரை ரத்தம் எடுக்கப்படும்.   மிகமிகச் சுத்தமான சூழலில் 20 முதல் 22 டிகிரி வெப்பநிலையுள்ள அறையில் இது செய்யப்பட வேண்டும். ரத்தம் உறையாமலிருக்கும்படியான பிரத்யேக டியூபில் அது வைக்கப்படும். பிறகு அது ‘சென்ட்ரிஃபியூஜ்' என்கிற கருவியில் வைக்கப்படும்போது அடர்த்தியான சிவப்பணுக்கள் எல்லாம் அடியில் தங்கிவிடும். அதற்குமேல் வெள்ளையணுக்கள் வரும். மஞ்சள்நிற பிளேட்லெட்ஸ் எல்லாம் மேல்பகுதிக்கு வந்துவிடும். அதை ஆக்டிவேட் செய்ய கால்சியம் குளோரைடு சேர்க்கப்படும். இதுதான் பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா. கூந்தல் உதிர்வு அதிகமுள்ளவர்களுக்கு ஒரு செ.மீ இடைவெளியில் இது ஊசியின்மூலம் செலுத்தப்படும். அதற்குமுன் மண்டைப்பகுதியில் மரத்துப்போவதற்கான ஸ்பிரே அடித்து 45 நிமிடங்கள் கழித்து, மண்டைப் பகுதியைச் சுத்தப்படுத்தியபிறகு இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதே சிகிச்சை சரும அழகு மற்றும் புத்துணர்வுக்கும் செய்யப்படுகிறது. ரத்தம் செறிவூட்டப்பட்ட 10 நிமிடங்களுக்குள் சருமத்தில் செலுத்தப்பட வேண்டும்.

எந்தப் பிரச்னைகளுக்கு பி.ஆர்.பி உதவும்?

`அலோபேஷியா அரியேட்டா' என்கிற வழுக்கைப் பிரச்னைதலையில் உள்ள முடிகளை மட்டும் உதிரச் செய்யாமல் புருவங்கள், மீசை, தாடி போன்ற இடங்களிலும் திட்டுத்திட்டாக முடி உதிரக் காரணமாகும். பி.ஆர்.பி சிகிச்சை இதற்குச் சிறந்த தீர்வு. பருக்கள் ஏற்படுத்திய தழும்புகள், நாள்பட்ட காயங்கள், பிரசவத்தின் போது ஏற்படுகிற தழும்புகள் போன்றவற்றுக்கு

பி.ஆர்.பி ஊசியைச் செலுத்தினால் கொலாஜன் தூண்டப்பட்டுச் சருமம் புத்துணர்வு பெறும். சருமம் பளபளப்பாகும். தளர்ச்சியும் சுருக்கமும் மறையும். முகத்திலும் முதலில் அனஸ்தீசியா தடவிவிட்டு. ஒரு செ.மீ இடைவெளியில் பி.ஆர்.பி செலுத்தப்படும். சருமத்தின் ஆழம் வரை செலுத்தப்படாது. ஊசியைச் செலுத்தும்போது லேசான குத்தல் வலி இருக்கும். அது சகித்துக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும்.  அந்த வலி அடுத்த சில மணி நேரத்தில் சரியாகிவிடும்.

சருமத்தின் திறந்த துவாரங்கள், பருக்கள், முதுமைத் தோற்றம் தவிர்க்கவெல்லாம் இது பிரமாதமான சிகிச்சை. மாதம் ஒருமுறை செய்தால் பலனைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.  செலவு ஐந்தாயிரம் ரூபாய். நம்முடைய ரத்தத்தையே பயன்படுத்திச் செய்யப்படுவதால் பக்க விளைவுகள் இருக்காது.

ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள யாரும் இதைச் செய்துகொள்ளலாம்.  ஆஸ்பிரின், வலி நிவாரணிகள் மாதிரியான மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறவராக இருக்கக்கூடாது. தொற்றுநோய்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.  கட்டுப்பாடில்லாத சர்க்கரைநோயாளிகளும் தவிர்க்க வேண்டும். சிகிச்சை முடித்ததும் லேசான வீக்கமும் சருமம் சிவந்துபோவதும் இருக்கும். ஆனால் அவை ஒரு மணி நேரத்தில் சரியாகிவிடும். மருத்துவமனையில் தங்கத் தேவையில்லாத சிகிச்சை இது.

(சருமம்  காப்போம்...)

- ஆர்.வைதேகி

சகலகலா சருமம் - 16

செலிப்ரிட்டி ஸ்கின்

சருமத்துக்குத் துரோகம் செய்யாதீர்கள்!

``இவற்றையெல்லாம் உபயோகித்தால் சருமம் அழகாகும் என நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் ‘எதையுமே உபயோகிக்கக்கூடாது... அப்போதுதான் சருமம் அழகாக, அதன் இயல்புத்தன்மையுடன் இருக்கும்’ என்று நம்புகிறவள் நான். தேவையற்ற நேரத்தில் மேக்கப்புடன் இருப்பது நாமே நம் சருமத்துக்குச் செய்கிற துரோகம்.

ஷூட்டிங்  இல்லாத நாள்களில் என்னை நீங்கள் மேக்கப்புடன் பார்க்கவே முடியாது. லிப் பாம் மட்டும்தான் உபயோகிப்பேன். ஷூட்டிங் முடிந்ததும் என் முதல் வேலை மேக்கப்பை நீக்குவது.

நிறைய தண்ணீர் குடிப்பேன். இரவில் மாயிஸ்ச்சரைசர் தடவிக்கொண்டு தூங்குவேன். எப்போதாவது அழகாக இருக்க மேக்கப் உதவலாம். எப்போதுமே அழகாக இருக்க அதைத் தவிர்ப்பதுதான் சிறந்த வழி!’’

- நடிகை சாயிஷா