சென்ற இதழில் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் குதிகால் வலி பற்றிப் பார்க்கலாம்.
குதிகால் வலி என்பது எல்லோருக்கும் வரக்கூடிய பொதுவான விஷயம் தான். ‘Plantar Fascitis’ எனப்படும் பாதத் திசுக்களில் உண்டாகும் வீக்கமே குதிகால் வலியை உண்டாக்குகிறது. ஆர்ச் (வளைவு) வடிவில் இருக்கும் இந்த திசுக்கள்தாம் பாதம் தொடங்கி விரல்கள் வரை பரவியுள்ளன. இவைதாம் எல்லா வகை பாத அழுத்தங்களையும் தாங்கிப் பலம் தருகின்றன. எல்லா அதிர்வுகளையும் உட்கிரகித்துக் கொள்கின்றன.

பொதுவாக குதிகால் வலி ஏற்பட அதிகமான உடல் எடை, திடீரென உருவாகும் பாத அழுத்தம் போன்றவை காரணமாக இருக்கின்றன. திடீரென வேகமாக ஓடுவது, ஒரே நாளில் அதிக தூரம் நடப்பது காரணமாகவும் குதிகால் வலி ஏற்படலாம். கர்ப்பிணிகள் குதிகால் வலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அதிக எடை சுமப்பதுகூட குதிகால் வலியை உண்டாக்கும். உறக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போது தரையில் கால் ஊன்ற முடியாமல் கடுமையான வலி உண்டாகும். ஆனால், கொஞ்ச தூரம் மெதுவாக நடந்ததும் வலி சரியாகிவிடும். உட்கார்ந்துவிட்டுத் திடீரென காலைக் கீழே வைத்து எழுந்திருக்க முடியாது. இவைகூட குதிகால் வலியின் அறிகுறிகள்தான். பொதுவாக இதுமாதிரியான குதிகால் வலி ஓரிரு நாள்களில் சரியாகிவிடும். வலி சரியாகாமல் தொடருமேயானால், மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலி எந்த இடத்தில் உண்டாகிறது, எதனால் உண்டாகிறது என்பதைக் கண்டறிய பாதத்தில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்க வேண்டும். இதில் குதிகால் எலும்புகளில் விரிசலோ உடைதலோ ஏற்பட்டிருந்தால் அதைத் தனியாகக் கவனிக்க வேண்டும். ‘Plantar Fascitis’ எனும் குதிகால் வலி இருந்தால் அதற்கென தனியே சிகிச்சை அளிக்க வேண்டும். பாதத்தில் ‘Heel Spur’ எனும் எலும்பு அதிகமாக வளர்ந்திருந்தால் அதை அறுவைசிகிச்சை செய்து எடுக்க வேண்டியதில்லை. இந்த எலும்புக்கும் குதிகால் வலிக்கும் தொடர்பில்லை என்பதே உண்மை.
குதிகால் வலி வந்தால், வேகமாக ஓடுவது, அதிக தூரம் நடப்பதைக் குறைத்துக்கொண்டு ஓய்வெடுக்க வேண்டும். `ஐஸ்பேக்’-கில் பாதங்களை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் வலி குறையும். அப்படியும் தொடர்ந்தால் மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம். குதிகால் பெல்ட், ஷூவில் அணியும் ‘Heel Cushion’, விசேஷமான காலணிகள் என நீங்கள் எதை அணிந்து கொண்டாலும் அவை தற்காலிகப் பலன்களையே தரும்.
‘Achilles Calf Stretching Exercises’ எனும் குதிகால் பயிற்சி உங்களுக்கு நல்ல குணமளிக்கும். ஒரு காலை முன்னே வைத்துச் சுவரில் உங்கள் இரு கரங்களையும் அழுத்தி வைத்து மற்றொரு காலைத் தூக்கி அழுத்தும் பயிற்சி இது. இதனால் குதிகால் வலி குறையும். 2 முதல் 3 மாதம் வரை மருத்துவர்கள் சொல்லும் பயிற்சிகளைச் செய்தாலே குதிகால் வலி பறந்து விடும். இதுபோன்ற பயிற்சிகளால் 90 சதவிகிதம் குதிகால் வலி குணமாகிவிடும். அதையும் தாண்டி வலி தொடர்ந்தால் Endoscopic Gastrocnemius Muscle Lengthening என்ற சிறிய அறுவைசிகிச்சை தேவைப்படலாம்.
- மு.ஹரி காமராஜ்