ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம் - 18

சகலகலா சருமம் - 18
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம் - 18

தலத் சலீம், ட்ரைகாலஜிஸ்ட்அழகு

ழும்புகள் எப்போதும் தர்மசங்கடத்தைத் தருபவை. அதுவும் வெளியே தெரியும் சருமப் பகுதிகளில் உண்டாகிற தழும்புகள் சட்டெனப் பிறரின் கவனம் ஈர்ப்பவை. சாதாரணத் தழும்புகளே இப்படியென்றால், கீலாய்டு தழும்புகள் இன்னும் மோசம்.

அதென்ன கீலாய்டு தழும்பு?

தழும்புகளுக்கெல்லாம் பெரியப்பா மாதிரி என வைத்துக்கொள்வோமே! ‘ரொம்ப நாளா தழும்பு ஒண்ணு பாடாப்படுத்துது. அதை எப்படியாவது சரி பண்ணிடுங்க டாக்டர்’ என்கிற கோரிக்கையுடன் சிலர் வருவார்கள். ஆனால் அது வெறும் தழும்பாக இல்லாமல் லேசான வீக்கத்துடன் சற்றே பெரிதாக இருக்கும். அவைதாம் ‘கீலாய்ட்ஸ்’.

அவை ஏன் ஏற்படுகின்றன? அவற்றுக்கான தீர்வுகள் என்ன?

சகலகலா சருமம் - 18கீலாய்டு தழும்பானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனாலும் கறுத்த சருமம் கொண்டவர்களுக்கு இது அதிகம். தென்னிந்திய மக்களிடையே பரவலாகக் காணப்படுகிற இது ஆண், பெண் யாருக்கும் வரலாம்.

கீலாய்டு எப்படி உருவாகிறது?

அடிபடுவதாலோ, வெட்டுப்படுவதாலோ, கடியினாலோ, பரு அல்லது பியர்சிங் (உடலில் துளையிட்டு வளையம் மாட்டுவது) செய்வதாலோ சருமம் பிளவுபடுகிறது. நம் உடல் கொலாஜன் என்கிற புரதத்தை உற்பத்தி செய்கிறது. பிளவுபட்ட சருமப் பகுதியைச் சுற்றி இந்த கொலாஜன் சேர்ந்து, அந்தக் காயம் ஆறுவதற்கு உதவுகிறது. பொதுவாக இந்தக் காயத்தினால் ஏற்பட்ட தழும்பானது மெள்ள மெள்ள மறைந்து சரியாகிவிடும்.

கீலாய்டாக உருமாறும் தழும்புகள் மறைவதில்லை. சாதாரணத் தழும்பு போல அல்லாமல் அவை பெரிதாக வளர்ந்து நிற்கும். கீலாய்டுகள் ஆரோக்கியத்தை எந்தவகையிலும் பாதிப்பதில்லை என்றாலும் புறத்தோற்றத்தைப் பாதிப்பதால் பலரும் அதை நீக்கிவிட விரும்புகிறார்கள்.

அறிகுறிகள்


* சருமத்தின் மேல் சதையைப்போன்றே உருண்டு திரண்டு தடித்த தழும்பு போலக் காணப்படும். லேசான பிங்க் நிறத்தில் இருக்கும்.

* அடிபட்டு உண்டான தழும்பைச் சுற்றியுள்ள பகுதி வழக்கத்தைவிட சற்றே பெரிதாகக் காணப்படும்.

* சிலருக்கு அந்தப் பகுதியைச் சுற்றிலும் அரிப்பு இருக்கும்.

எவற்றால் எல்லாம் கீலாய்டு ஏற்படும்?


* தீக்காயங்கள்

* பருக்கள் ஏற்படுத்திய தழும்பு

* அம்மை வடுக்கள்

* காது குத்துவது

* அறுவை சிகிச்சை

* தடுப்பூசிகள் போடுவது

சில நேரங்களில் இப்படி எந்தக் காரணமும் இல்லாமல் தானாகவே கீலாய்டு உருவாவதும் உண்டு. அதற்கு ‘ஸ்பான்ட்டேனியஸ் கீலாய்டு’ என்று பெயர். பரம்பரையாகவும் கீலாய்டு பிரச்னை தொடரலாம். அம்மா அப்பா இருவரில் யாருக்கு கீலாய்டு இருந்தாலும் அந்த வழியில் வரும் பிள்ளைகளுக்கும் வரலாம். ஆய்வுகளின் படி AHNAK என்கிற மரபணுவே கீலாய்டு உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகச் சொல்லப்படுகிறது.

கீலாய்டு தழும்பு எப்படிக் காட்சியளிக்கும்?

* பளபளப்பாக இருக்கும்.

* மேல்புறத்தில் ரோமங்கள் இருக்காது.

* கடினமாகவும் ரப்பர் தன்மையுடனும் தெரியும்.

* முதலில் சிவப்பாகத் தோன்றி, பிறகு பழுப்பு அல்லது வெளுத்த நிறத்துக்கு மாறும்.

சிகிச்சைகள் உண்டா?

கீலாய்டுகளை இருந்த இடமே தெரியாமல் முற்றிலும் நீக்குவது சாத்தியமே இல்லை. சிலவகையான சிகிச்சைகளின்மூலம் சிறிய அளவிலான கீலாய்டு தழும்புகளை ஓரளவுக்கு மறையச் செய்யலாம். பெரிய தழும்புகளில் அது சிரமம். அதேபோல ஆரம்பநிலை கீலாய்டு தழும்புகளை மறையச் செய்வதும் சுலபம்.

ஸ்டீராய்டு மருந்துகளை ஊசியின் வழியே கீலாய்டுக்குள் செலுத்தி அளிக்கப்படுகிற சிகிச்சை பரவலானது. இந்த ஊசியை மாதம் ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். தொடர்ச்சியான ஊசிகள், கீலாய்டு உள்ள சருமப் பகுதியில் பள்ளத்தை ஏற்படுத்தலாம்.

லிக்விட் நைட்ரஜன் உபயோகித்தும் கீலாய்டுகளை உறையச் செய்யலாம். இது தழும்புள்ள பகுதியின் நிறத்தை மாற்றி, ஓரளவுக்கு மறையச் செய்யும்.

வலியுடன் கூடிய கீலாய்டு


சிலருக்கு கீலாய்டு தழும்புள்ள இடத்தில் கடுமையான வலியும் இருக்கும். தழும்புள்ள பகுதியில் பிரஷர் பெல்ட்டைத் தொடர்ச்சியாக  3 மாதங்களுக்குக் கட்டிக் கொள்ள வேண்டும். நவீன சிலிக்கான் பெல்ட்டுகளும் பலனளிக்கும்.

க்ரையோ சிகிச்சை, போட்டாக்ஸ் ஊசி போன்றவற்றின் மூலமும் நிவாரணம் பெறலாம்.

தடுக்க முடியுமா?

கீலாய்டு உருவாவதை முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் கீலாய்டு உருவாகும் வாய்ப்புள்ளவர்கள் பாடி பியர்சிங், தேவையற்ற அறுவை சிகிச்சைகள்,  டாட்டூ போட்டுக்கொள்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அழகுக்காகச் செய்யப்படுகிற அறுவை சிகிச்சைகளையும் தவிர்க்க வேண்டும்.

கீலாய்டுக்கான வீட்டுச் சிகிச்சைகள்

சம அளவு பெட்ரோலியம் ஜெல்லியும் கற்றாழை ஜெல்லும் சேர்த்துக் கீலாய்டுகளின் மேல் தினமும் 3-4 முறை தடவி வரலாம்.

சிலருக்கு கீலாய்டு உள்ள பகுதியில் அரிப்பும் இருக்கும். அவர்கள் சுத்தமான சந்தனப் பவுடருடன் பன்னீர் கலந்து இரவில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

(சருமம் காப்போம்...)

-  ஆர்.வைதேகி

சகலகலா சருமம் - 18

செலிப்ரிட்டி ஸ்கின்

சீட்ஸில் இருக்கிறது சீக்ரெட்!

``பகல் வேளைகளில் சன் ஸ்கிரீன் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே போக மாட்டேன். பகலைவிடவும் இரவு நேரங்களில் சருமப் பராமரிப்பு இன்னும் முக்கியம். ரெட்டினால் கலந்த நைட் க்ரீம் இல்லாமல் தூங்கப் போக மாட்டேன்.

நினைத்த போதெல்லாம் நிறைய நிறைய தண்ணீர், ஃப்ரெஷ் ஃப்ரூட்ஸ் இவை இரண்டும் என் சருமத்தை அழகாக, இளமையாக வைத்திருக்கின்றன. சியா சீட்ஸ், பம்ப்கின் சீட்ஸ், ஃபிளாக்ஸ் சீட்ஸ் இவையும் என் உணவுகளில் தவிர்க்க முடியாதவை. சருமம் காக்கும் சூப்பர் உணவுகள் இவை.''

- மாடல் ப்ரதாயினி சர்வா

சகலகலா சருமம் - 18

எங்கெல்லாம் ஏற்படும்?

நெஞ்சின் மேல்பகுதி, தோள்பட்டைகள், காதோரங்கள் மற்றும் கழுத்துப் பகுதி.