`நீங்க ரொம்ப இளமையா இருக்கீங்க.... பல வருடங்களுக்கு முன்னாடி பார்த்ததுபோலவே இருக்கீங்க... மாற்றமே இல்லை...'' என்கிற புகழுரை, ஒருவரை அதிக மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.

இளமை என்பது புற அழகை மட்டுமல்ல, அக அழகையும் அதிகரிக்கச் செய்யக்கூடியது. முகத்தில் தென்படுகிற சுருக்கங்களே இளமையின் எதிரிகளாகக் கருதப்படுகின்றன. முதுமையால் மட்டுமே வரக்கூடியவை அல்ல இந்தச் சுருக்கங்கள். இளமையிலும் வரலாம். அதன் பின்னணியில் ஓர் அறிவியல் உண்டு. இளமையிலும் முதுமையிலும் வரக்கூடிய சருமச் சுருக்கங்களைப் பற்றியும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் பார்ப்போமா?

நமது முகத்தில் இரண்டு வகையான சுருக்கங்கள் உருவாகும். ஒன்று ஸ்டாட்டிக் (Static); இன்னொன்று டைனமிக் (Dynamic). சருமத்தில் தானாக உருவாகும் கோடுகள் ஸ்டாட்டிக் வகை. வயதாகும்போது நம் முகச் சருமத்தில் உள்ள ஹையலுரானிக் அமில ஜெல் (Hyaluronic acid gel) மற்றும் கொழுப்பு இரண்டும் குறையத் தொடங்கும். அதனால் கன்னங்கள் கீழே இறங்க ஆரம்பிக்கும்.            

பாவங்களைக் காட்டுவதால் உருவாகும் கோடுகள் டைனமிக் வகை. சிரிப்பது, புருவங்களை உயர்த்துவது மாதிரியான செய்கைகள் மட்டுமின்றி, முகத்தில் அதிக பாவங்களை வெளிப்படுத்தும் நடிகர், நடிகைகள், நடனக் கலைஞர்களுக்கெல்லாம் டைனமிக் வகைக் கோடுகள் சீக்கிரமே வரும். பாவங்களை வெளிப்படுத்துவதன் மூலம் உள்ளேயிருக்கும் தசை தொடர்ச்சியாக சுருக்கப் படுகிறது. ஒரு கட்டத்தில் அது நிரந்தரமாகவே சுருங்கிவிடுகிறது. அதனால் மேலே உள்ள சருமப் பகுதியானது தளர்ந்ததுபோலக் காட்சியளிக்கிறது.

சகலகலா சருமம்! - 19

சிகிச்சைகள்

ஃபில்லர்ஸ் (Fillers): இவை ஹையலுரானிக் அமில ஜெல்லால் தயாரிக்கப்பட்டவை. அதிலேயே மயக்க மருந்தும் கலந்திருக்கும். கன்ன எலும்பின் முக்கியமான புள்ளியில் ஃபில்லர்ஸ் ஊசியைச் செலுத்துவோம். இதன் மூலம் தொய்வடைந்த அந்தப் பகுதிக்கு சப்போர்ட் கொடுக்கப்படுவதால் சருமம் மீண்டும் இளமைத் தோற்றம் பெறுகிறது. வாயைச் சுற்றியும் கண்களுக்கு அடியிலும் உள்ள கோடுகள் நீங்கும். கன்னங்களில் முக்கியமான மூன்று புள்ளிகளில் இந்த ஃபில்லர்ஸைச் செலுத்தினால் அந்தப் பகுதிகளின் தொய்வு மறையும். ஓவல் வடிவம்தான் ஆகச் சிறந்த முக வடிவம் என்று நிரூபித்திருக்கிறார்கள். கன்ன எலும்புகள் தூக்கலாக இருப்பவர்கள் அழகானவர்கள் என்றும் அழகியல் ஆய்வுகள் சொல்கின்றன. அந்த ஆதர்ச வடிவத்தைப் பெறவும் ஃபில்லர்ஸ் உதவும்.

ஃபில்லர்ஸின் பலன் ஒன்றரை வருடங்கள் வரை நீடிக்கும். அதன் பிறகு மெள்ள மெள்ள அதன் பலன் குறையத் தொடங்கும். மீண்டும் அதே சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கொஞ்சம் காஸ்ட்லியான சிகிச்சை தான். இந்தச் சிகிச்சையின் மூலம் புருவங்களைக் கூட உயர்த் தலாம். உதடுகளின் வடிவத்தையும் மாற்றலாம். நடிகைகளின் ஃபேவரைட் சிகிச்சை இது. கை கால்களில் எலும்புகள் தெரிகிற இடங்களிலும் ஃபில்லர்ஸ் போட்டுச் சரி செய்யலாம். ஹையலு ரானிக் அமில ஜெல்லுக்குத் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை உண்டு. அதனால் சரும வறட்சி நீங்கி, சருமம் ஆரோக்கியமாகக் காட்சியளிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சகலகலா சருமம்! - 19


போடாக்ஸ் (Botox): போட்டுலினம் டாக்சின் (Botulinum toxin) என்பதே இதன் வேதிப் பெயர். க்ளாஸ்ட்ரிடியம் போட்டுலினம் (Clostridium botulinum) என்கிற பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்படுகிறது. அதைச் சுத்திகரித்துதான் போடாக்ஸ் தயாரிக் கிறார்கள். டைனமிக் கோடுகளைப் போக்க உதவும் மருந்து இது. மைக்ரேன் எனப்படுகிற ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சையாகத்தான் இது முதலில் உபயோகிக்கப்பட்டது. வலி குறைந்ததுடன், கூடுதல் பலனாக சருமச் சுருக்கங்களும் மறைவதைக் கண்டு இதை அழகுச் சிகிச்சையில் அறிமுகப்படுத்தினார்கள். இதில் தசைகள் தளர்த்தப்படுவதால், மேலே உள்ள சருமப் பகுதியும் ரிலாக்ஸ் ஆகிறது. முகபாவங்களின் போது நெற்றிச் சுருக்கங்கள், கண்களின் ஓரமுள்ள சுருக்கங்கள், வாயைச் சுற்றியுள்ள பகுதிகள் போன்றவை அதிகம் சுருங்குகின்றன. அந்தப் பகுதிகளில் போடாக்ஸ் மருந்தை ஊசி மூலம் செலுத்துவதால் சுருக்கங்களை நீக்கலாம்.

போடாக்ஸின் அளவு அதிகமானால், முகத் தசைகள் இறுகி, அசைக்கவே முடியாத அளவுக்குப் போகும் ஆபத்தும் உண்டு. போடாக்ஸ் சிகிச்சைக்கு ஒரு யூனிட்டுக்கு 300 ரூபாய் வரை செலவாகும். முகத்தின் மேல் பகுதிக்கு மட்டுமே 50 முதல் 60 யூனிட்டுகள் தேவைப்படும். தொடர்ந்து இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது போடாக்ஸ் அளவின் தேவை குறையத் தொடங்கும். முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும். போடாக்ஸ் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் அல்லாதவர்களிடம் செய்து கொள்ளும்போது பக்க விளைவுகள் வரலாம்.

(சருமம் காப்போம்...)

- ஆர்.வைதேகி

சகலகலா சருமம்! - 19

செலிப்ரிட்டி ஸ்கின்

அழகி... நான் பேரழகி!

``தினமும் 45 நிமிடங்கள் வொர்க் அவுட் செய்வேன். அது எனக்குச் சாப்பாடு மாதிரி.

பொரித்த உணவுகளுக்கும், இனிப்புகளுக்கும், மைதாவுக்கும் என் மெனுவில் இடமில்லை.

ஷூட்டிங் இல்லாத நாள்களில் வீட்டுச் சிகிச்சைகளைத்தான் அதிகம் விரும்புவேன். வெயிலில் ஷூட்டிங் நடந்து, என் சருமம் கறுத்துப் போயிருந்தால் தயிரும் எலுமிச்சை சாறும் கலந்து பூசுவேன். பப்பாளி, வாழைப்பழம், தக்காளி என ஏதோ ஒன்றை மசித்து முகத்திலும், வெள்ளரிக்காயைக் கண்களின் மேலும் வைத்து ஓய்வெடுப்பேன்.

அதிக மகிழ்ச்சியானவர்கள்தான் அதிக அழகாகனவர்கள் என்பது என் எண்ணம். அழகு என்பது ஆழ்மன உணர்வுகளின் வெளிப்பாடு. ஆழ்மனத்தில் சந்தோஷமும் பாசிட்டிவ் எண்ணங்களும் இருந்தால் அதுதான் அழகாக வெளிப்படும். அந்த வகையில் நான் பேரழகி என்றே நம்புகிறேன்.''

- நடிகை ரகுல் ப்ரீத் சிங்