ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம்! - 20

சகலகலா சருமம்! - 20
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 20

தலத் சலீம், ட்ரைகாலஜிஸ்ட்அழகு

லர்ஜி...

இது கிட்டத்தட்ட ரஜினி டயலாக் போன்றதுதான். எப்போ வரும்... யாருக்கு வரும் என்றே கணிக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும் வரலாம். யாருக்கும் வரலாம்.

அலர்ஜிக்கு ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். சாதாரண தூசும் ஒவ்வாமையை உருவாக்கும். டூ வீலர் ஹேண்டில்பாரும் அலர்ஜி யாகலாம். ஆமாம்.... உங்கள் சருமத்துக்கு ஒவ்வாத உலோகம்கூட அலர்ஜியை உருவாக்கலாம். அலர்ஜி, வயது பார்த்து வருவதில்லை.

சகலகலா சருமம்! - 20

அலர்ஜியின் அறிகுறிகள் என்னென்ன?

அரிப்பு, வலி, எரிச்சல், சிவந்து போதல், தடிப்பு, நடுவில் வெள்ளைப் புள்ளியுடன் கூடிய சிவந்த, வட்ட வடிவத் தடிப்புகள் போன்றவை.

எவையெல்லாம் அலர்ஜியை ஏற்படுத்தும்?

* உணவுகள், உடை, உறைவிடம் என எல்லாம்.

* எல்லோருக்கும் ஏற்றுக்கொள்கிற முட்டை, பால், பாதாம், புதினா, இறைச்சி, இறால், சீஸ், மகரந்தம் போன்றவை சிலருக்கு ஏற்றுக் கொள்ளாமல் அலர்ஜிக்கான அறிகுறிகளைக் காட்டும்.

* ஒருசிலருக்கு உடல்நலக் குறைவுக்காக எடுத்துக்கொள்கிற சில மருந்துகள்கூட அலர்ஜியை ஏற்படுத்தலாம். அதனால்தான் முக்கியமான மருத்துவ சிகிச்சைகளின்போது ‘உங்களுக்கு ஏதேனும் மருந்து அலர்ஜி இருக்கிறதா?' என்ற கேள்வி கேட்கப்படும்.

* பொட்டு வைக்கும் இடத்தில் கறுத்துப்போவது, அல்லது தடித்துப்போய் தோல் உரிவது, காதணி அணிகிற இடத்தில் அரிப்பும் புண்களும் ஏற்படுவது, வளையலோ, வாட்ச்சோ அணிகிற இடத்தில் அலர்ஜியாவது... இப்படி நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் மூலம்கூட ஒவ்வாமையை உணரலாம்.

* கெமிக்கல் பயன்பாடு காரணமாக ஏற்படுகிற அலர்ஜி மிக முக்கியமானது. ஆல்கஹால், டர்பன்டைன், அசிட்டோன், கீடோன், லேட்டக்ஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கையாள்கிறவர்களுக்கு அவை ஏற்படுத்தும் அலர்ஜி மிகவும் சகஜமானது.

அலர்ஜியின் வகைகள்

சகலகலா சருமம்! - 20


எக்ஸீமா:
சருமப்பகுதிகள் வீங்கும். அரிப்பெடுக்கும். சிவந்தும் தடித்தும் போகும். அரிப்பில் ஆரம்பித்து, சொறியாக மாறி, போகப்போகச் சருமம் வறண்டு, தடித்துப்போகும். கடைசியாகத் தோல் உரியத் தொடங்கும். இந்தப் பிரச்னையைப் பற்றி முந்தைய இதழ்களில் விரிவாகப் பார்த்திருக்கிறோம்.

ஹைவ்ஸ்: உடல் முழுக்க அரிப்புடன் கூடிய சிவந்த தடிப்புகள் காணப்படும். இதை ‘அர்ட்டிகேரியா' என்றும் சொல்கிறோம். இது ஆறு முதல் பன்னிரண்டுமணி நேரம் வரை நீடிக்கும்.

அலர்ஜி ஏற்படுகிறபோது உடலானது ஹிஸ்டமைன் என்கிற புரதத்தை விடுவிக்கும். அப்போது கேப்பிலரி என்கிற மெல்லிய ரத்த நாளங்கள் ஒருவிதத் திரவத்தைக் கசியச் செய்யும். அது சருமத்தின் மேல் சேர்ந்து தடிப்பை ஏற்படுத்தும். அதுதான் ஹைவ்ஸ் அல்லது அர்டிகேரியா எனப்படுகிறது. இது தொற்றக்கூடியதில்லை என்பதால் பயப்பட வேண்டாம்.  ஒவ்வாத உணவுகள், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள், பாக்டீரியா தொற்று, தூசு, செல்லப்பிராணிகள், வெயில், கரப்பான் பூச்சி என இந்த வகை அலர்ஜிக்கான காரணங்கள் எக்கச்சக்கம். அலர்ஜிக் கான காரணம், அதன் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்துச் சிகிச்சைகள் வேறுபடும்.

கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்: சருமத்துக்கு ஒவ்வாத ஓர் அந்நியப் பொருள், சருமத்தின் மீது படுவதன் விளைவாக, அரிப்பும் தடிப்பும் ஏற்படும். சருமத்தின் மேல் லேயரான எபிடெர்மிஸ் மற்றும் அதற்கடுத்த லேயரான டெர்மிஸில் உள்ள திசுக்களில்தான் இந்தப் பாதிப்பு தென்படும்.

 எது அலர்ஜியை ஏற்படுத்துகிறது என அறிந்துகொண்டு அதைத் தவிர்ப்பது முதல் ஆலோசனை. கெமிக்கல்கள் சேர்த்த பொருள்களைப் பயன்படுத்தும்போது கைகளுக்கு கிளவுஸ் அணிந்து கொள்ள வேண்டும். சொறியக் கூடாது.

மருத்துவரின் அறிவுரையின் பேரில் கேலமைன் லோஷன், ஹைட்ரோகார்ட்டிசோன் கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸும், வைட்டமின் ஏ, சி, இ, டி மற்றும் பி காம்ப்ளெக்ஸ் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

அலர்ஜியைக் கண்டுபிடிப்பது எப்படி?

உணவுகளால் ஏற்படுகிற ஒவ்வாமையைக் கண்டுபிடிக்க  ஒரு வாரத்துக்கு அன்றைய தினம் நீங்கள் என்னவெல்லாம் சாப்பிடுகிறீர்கள் என்பதைக் குறித்து வைக்க வேண்டும்.

இப்படி மூன்றுமுறை உங்கள் உணவுகளை ஒப்பிட்டுப் பார்த்து,  மூன்று நாள்களிலும் குறிப்பிட்ட ஓர் உணவு, பொதுவாக இருப்பது தெரிந்தால், அதுவே உங்கள் அலர்ஜிக்கான காரணமாக இருக்கக்கூடும்.

வேறு காரணங்களால் ஏற்படுகிற அலர்ஜியை மருத்துவரால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். ஸ்கின் டெஸ்ட் மூலம் உங்கள் சருமத்தின் சென்சிட்டிவிட்டியைக் கண்டுபிடிப்பார்.

இது தவிர பேட்ச் டெஸ்ட்டும் தேவைப்படலாம். குறிப்பிட்ட மணி நேரத்துக்கு பேட்ச் ஒன்றை உங்கள் சருமத்தில் ஒட்டிவிட்டு அலர்ஜியின் தன்மையை அறிகிற சோதனை இது.

டைமெதில்கிளையோக்சைம் ( Dimethylglyoxime) என்கிற டெஸ்ட்டும் பரிந்துரைக்கப்படும். இது நிக்கெல் போன்ற உலோகங்கள் ஏற்படுத்துகிற அலர்ஜியை அறிவதற்கான சோதனை.

(சருமம் காப்போம்...)

- ஆர்.வைதேகி

சகலகலா சருமம்! - 20

செலிப்ரிட்டி ஸ்கின்

ஏபிசி ரகசியம்!

``வெளிப்புறமாகச் செய்கிற எந்த சிகிச்சையையும்விட, உணவின் மூலம் கிடைக்கிற அழகே நிரந்தரமானது என நம்புகிறேன்.

தினமும் காலையில் காபி, டீ தவிர்த்து ஏபிசி ஜூஸ்தான் குடிப்பேன். ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து அரைத்து வடிகட்டாமல், சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.

அது சருமத்தை அழகாக, இளமையாக வைக்கும். எடையையும் கட்டுப்பாட்டில் வைக்கும்.

குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கினால், சரும ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும்.

 இதயத்துக்கும் நல்லது.

தாகம் எடுக்காதபோதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஷூட்டிங் போய்விட்டு வந்ததும், தயிரால் முகத்தைச் சுத்தப்படுத்திவிட்டுதான் அடுத்த வேலையைப் பார்ப்பேன். படுக்கச் செல்வதற்கு முன் நைட் கிரீம் அவசியம்.

கண்களுக்கு நாம் யாருமே ஓய்வு கொடுப்பதில்லை. எப்போதும் மொபைல் திரையில் மூழ்கிக் கிடக்கிறோம்.

காலையில் எழுந்ததும் கண்களை மூடிக்கொண்டு 20 முறை வலது பக்கம், இடப்பக்கம், பிறகு கடிகாரச் சுழற்சியில் கருவிழிகளை மட்டும் சுழற்ற வேண்டும். கண்களை மூடிக்கொண்டு செய்ய வேண்டும். இது கண்களுக்குள் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். கண்களின் களைப்பை நீக்கும். கருவளையங்களை நீக்கும். கண்களைப் பிரகாசமாக வைக்கும். வேறெந்த காஸ்ட்லியான ஐ கிரீம்களாலும் தர முடியாத கண் அழகை இந்தப் பயிற்சி தரும்.’’

- நடிகை ரித்விகா