Published:Updated:

சகலகலா சருமம்! - 21

சகலகலா சருமம்! - 21
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 21

வசுந்தரா, அழகுக் கலை நிபுணர்அழகு

``எப்போதும் போலத்தான் சாப்பிடறேன். அதே காஸ்மெட்டிக்ஸ்தான் யூஸ் பண்றேன். ஆனாலும் திடீர்னு என் ஸ்கின்ல பயங்கரமான மாற்றங்களை ஃபீல் பண்றேன். என் ஸ்கின் கலர் மாறிட்டே வருது. இத்தனை வயசுக்குப் பிறகு பருக்கள் வருது. முகத்துல முடி முளைக்குது. வெயில்ல போனா அலர்ஜியாயிடுது. என்னன்னே தெரியலை....''

சமீப காலமாக இத்தகைய புலம்பல்களுடன் என்னைச் சந்திக்கிற பெண்களை அதிகம் பார்க்கிறேன். அத்தனை பேரும் 45 பிளஸ்ஸில் இருப்பவர்கள். மெனோபாஸை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் என்பதும் புரிந்தது. மெனோபாஸ் என்பது பெண்களின் உடலிலும் மனத்திலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கேள்விப்பட்டிருப்போம். சிலர் அனுபவப்பட்டிருப்போம். அழகு விஷயத்திலும் அது தன் வேலையைக் காட்டும் என்பது பலரும் அறியாத சேதி. மெனோபாஸ் காலத்தில் புறத்தோற்றத்தில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களைச் சட்டென ஏற்றுக்கொள்வதென்பது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. அந்த மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் சந்திக்கப் போகிறவர்களுக்கும் விழிப்பு உணர்வு அளிக்கும் வகையில் சில விஷயங்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

சருமத் தொய்வு மற்றும் சுருக்கங்கள்

சகலகலா சருமம்! - 21



பெண்களின் உடலுக்குப் பல வகையிலும் கவசம் போலச் செயல்படுகிற ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான், அவர்களின் உடலில் கொழுப்பின் இருப்புக்கான தூண்டலையும் செய்கிறது. மெனோபாஸ் காலத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறையும். தவிர, இருப்பில் உள்ள ஈஸ்ட்ரோஜென், வயிறு, தொடைகள் மற்றும் பின்னுடல் பகுதிகளில் சேரத் தொடங்கும். இதன் விளைவாக உறுதியாக இருக்க வேண்டிய முகத் தசைகளும் கைகால் தசைகளும் தொய்வடைந்து, சுருக்கங்கள் உருவாகும். திடீரென ஒரே இரவில் வயதானது மாதிரி முகம், முதுமைத் தோற்றத்துக்கு மாறும்.

சருமத்தை இறுக்கமாகவும் இளமையாகவும் வைத்திருப்பவை கொலாஜென் மற்றும்  எலாஸ்டின். வயதாக ஆக இவற்றின் அளவு குறையும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதும் இதை இன்னும் துரிதப்படுத்தும். எனவே சருமத் தொய்வும் சுருக்கங்களும் மேலும் தீவிரமாகும்.

வறட்சி

சருமத்தின் அடியில் உள்ள ரத்த நாளங்கள்தாம் ஆக்சிஜனையும் ஊட்டச்சத்துகளையும் சருமத்தின் மேல்பரப்புக்குக் கொண்டு வருபவை. அதனால்தான் சருமம் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்தச் செயலிலும் ஈஸ்ட்ரோஜெனின் பங்கு ஓரளவுக்கு உண்டு. மெனோபாஸ் காலத்தில் ரத்த ஓட்டம் குறைகிறது. அதன் தொடர்ச்சியாக சருமப் பரப்பு முழுவதிலுமே நீர் இழப்பும் ஏற்படுகிறது. மெனோபாஸ் காலத்தில் சருமத்தில் ஏற்படுகிற வறட்சி, தோல் உரிதல், வெடித்துப் போவது, செதில் செதிலாகக் காட்சியளிப்பது என எல்லாவற்றுக்கும் இதுவே காரணம்.

முகத்தில் ரோம வளர்ச்சி

ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதைப் போலவே ஈஸ்ட்ரோஜென் மற்றும் ஆண்ட்ரோஜென் ஹார்மோன்களின் சமநிலையிலும் மாறுதல்கள் ஏற்படும். அதுவரை இல்லாத அளவுக்கு முகத்தில் ரோம வளர்ச்சி ஏற்பட இதுவே காரணமாகிறது.

வெயில் பாதிப்பு

மெலனோசைட்ஸ் என்கிற நிறமிகளின் பராமரிப்புக்கும் ஈஸ்ட்ரோஜென்தான் காரணம்.  வெயிலில் செல்கிறபோது சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தைத் தாக்காமலிருக்கும்படி, சருமத்தின் மேல்பரப்புக்கு விரைந்து தற்காப்பைத் தருவது மெலனின். மெனோபாஸ் நெருங்கும்போது மெலனின் என்கிற செல்களை  உற்பத்தி செய்கிற மெலனோசைட்ஸ் பாதிக்கப்படுகிறது. அதனால்தான் மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கு வெயிலில் செல்லும்போது ஏற்படுகிற பாதிப்புகள் மற்றவர்களைவிட அதிகமாக இருக்கிறது.

இளமையில் முதுமை


சருமத்தின் செல்களுக்கு வயதாவதால், அவற்றால் செயல்களும் பாதிக்கப்படுகின்றன. கொலாஜென், எலாஸ்டின்  உற்பத்தி குறைவதால், சருமம் மெலிதாகிறது. சருமம் இறந்த செல்களை விடுவிக்கத் தயாராக இருக்கிறது. இப்படி எல்லாம் சேர்ந்து நடப்பதால் இளவயதிலேயே மெனோபாஸ் வந்தாலும் வயதுக்கு மீறிய முதுமைத் தோற்றம் சீக்கிரமே வந்துவிடுகிறது.

பருக்கள்


மெனோபாஸை நெருங்கும் பெண்ணின் உடலில் ஹார்மோன் மாறுதல்கள் நடக்கும். அதுவரை பருக்களே எட்டிப் பார்த்திராத பெண்ணின் சருமத்தில் திடீரென பருக்கள் பயமுறுத்தும்.  ‘அடல்ட் அக்னே' எனப்படுகிற இது, மன அழுத்தம் காரணமாகவும் உருவாகும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் வேளைகளில் பெண்ணின் உடலில் ஆண்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும்.  ஆண்ட்ரோஜென் ஹார்மோன், எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி, பருக்கள் உருவாகக் காரணமாகின்றன.

(சருமம் காப்போம்...)

- ஆர்.வைதேகி

என்ன செய்யலாம்?

* உங்கள் சருமத்தில் திடீரென வறட்சியையோ, எண்ணெய்ப் பசையையோ, பருக்களையோ சந்திக்கும்போது, நீங்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருள்களில் கூடுதல் கவனமாக இருங்கள். சோப் கலந்த கிளென்சர் உபயோகிப்பதை முதலில் நிறுத்துங்கள். அவை உங்கள் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை நீக்கி, சரும வறட்சியை மேலும் தீவிரமாக்கும்.

* அதுவரை நீங்கள் எந்த அழகு சாதனங்களையும் உபயோகிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் மெனோபாஸ் நாள்களில் மாயிஸ்சரைசர் அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

* உங்கள் வயதைப் பற்றியோ, சருமத்தின் தன்மை பற்றியோ கவலைப்படாமல் தரமான சன் ஸ்கிரீன் உபயோகியுங்கள்.  மெனோபாஸ் காலத்தில் உங்கள் சருமம் மெலிதாவதன் காரணமாக வெயிலின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என ஏற்கெனவே பார்த்தோம். எனவே எஸ்.பி.எஃப் 15 அல்லது அதற்கும் அதிகமாக உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது உங்கள் சருமத்தை சூரியனின் தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.

* தினமும் இரவில் முகம் கழுவிய பிறகு சிறிதளவு பாலை உங்கள் சருமத்தில் தடவிக்கொள்ளுங்கள்.  பாலில் உள்ள லாக்டிக் அமிலம், இறந்த செல்களை நீக்கி, கொலாஜென் உற்பத்தியைத் தூண்டும். சுத்தமான பருத்தித்துணியைப் பாலில் நனைத்து வைத்து, பாதிப்புள்ள சருமப் பகுதியில் சிறிது நேரம் வைத்து எடுக்கலாம்.

* 2 டேபிள்ஸ்பூன் பன்னீருடன் அரை டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவவும். இது முகத்தை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைக்கும்.

* ஸ்ட்ராபெர்ரி, கிரான்பெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி பழ வகைகள், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தவை.  அவை சருமச் செல்கள் சீக்கிரமே முதுமையடைவதைத் தவிர்த்து, சருமத்தின் இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவுபவை.

சகலகலா சருமம்! - 21

செலிப்ரிட்டி ஸ்கின்

வாட்டர் மேஜிக்!


``அம்மா டயட்டீஷியன். அதனால் நான் என்ன சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்வார்.

 வெளியிடங்களில் பொல்யூஷன் அதிகமிருப்பதால் அடிக்கடி முகத்தைச் சுத்தம் செய்ய வசதியாக என் கையில் எப்போதும் ஃபேஸ்வாஷ் வைத்திருப்பேன்.

தேவையான நேரத்தில் மட்டுமே மேக்கப் உபயோகிப்பேன். மேக்கப் இல்லாமலிருப்பதுதான் சருமத்துக்கு ஆரோக்கியம்.

தண்ணீர்தான் என் சருமம் காக்கும் சீக்ரெட். நிறைய நிறைய தண்ணீர் குடிப்பேன். அதிகம் தண்ணீர் குடிக்காத நாள்களில் உங்கள் சருமம் நீங்கள் விரும்பும்படி இல்லை என்பதை உணர முடியும். தண்ணீரின் அளவு குறைந்தால் பருக்கள் எட்டிப் பார்க்கும். தாகத்துக்காகத் தண்ணீர் குடிக்காமல், அழகுக்காகக் குடியுங்கள். வாட்டர் மேஜிக் புரியும்.’’

- நடிகை ஷ்ரியா ஷர்மா