ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம்! - 23

சகலகலா சருமம்! - 23
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 23

தலத் சலீம் ட்ரைகாலஜிஸ்ட்அழகு

ச்சம்... சிலருக்கு அழகின் அடையாளம்,  பலருக்கு அதிர்ஷ்ட நம்பிக்கை. இயல்பாகவே அழகு மச்சம் அமைபவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.  

சகலகலா சருமம்! - 23

அழகுக்காகச் செயற்கை மச்சம் வைத்துக்கொள்ள விழைகிறவர்களும் இருக்கிறார்கள். அழகோ, அதிர்ஷ்டமோ.... அந்த மச்சம் ஆபத்தானதாக இருக்கக் கூடாது என்பது மட்டும் முக்கியம். மச்சம் எப்படி உருவாகிறது? அது ஆபத்தானதா, ஆபத்தற்றதா என்பதை எப்படி அறிவது? ஆபத்தானதென்றால் என்ன செய்ய வேண்டும்?

விரிவாகப் பார்க்கலாம்.

மச்சம் என்பது என்ன?

நிறமிகளைக் கொண்ட செல்களான ‘மெலனோசைட்ஸ்’ என்பவை சருமம் முழுக்கப் பரவி, விரவியிருப்பதற்குப் பதிலாக, ஓரிடத்தில் குழுவாகச் சேரும்போது மச்சம் உருவாகிறது. இவை வெயிலின் தாக்குதலுக்குள்ளாகும் போதும், பருவ வயதிலும், கர்ப்பக்காலத்திலும் அடர்த்தியான நிறம் பெறுகின்றன.

மனிதச் சருமமானது வாழ்நாள் முழுவதும்  நிறைய மாற்றங்களைச் சந்திக்கிறது. திடீரென, சருமத்தில் கரும்புள்ளிகளைக் காண்கிறோம். அவை மச்சங்களாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. சாதாரண அலர்ஜி முதல் சருமப் புற்றுநோய்க்கான அறிகுறி வரை எதுவாகவும் இருக்கலாம். மச்சம் என்பவை சருமத்தின் மேல் கருப்பு அல்லது பிரவுன் நிறத்தில் தென்படுகிற ஒருவகையான வளர்ச்சி. இவை எந்த வயதினருக்கும் உடலின் எந்தப் பகுதியிலும் வரலாம். மச்சம் என்பது தனியாகவும் வரலாம். சேர்ந்தும் உருவாகலாம். குழந்தைப் பருவத்தில்தான் மச்சங்கள் தோன்ற ஆரம்பிக்கும். வளர்ந்த நபருக்கு 3 முதல் 10 மச்சங்கள் வரை இருக்கலாம்.

சகலகலா சருமம்! - 23ஒருவரின் உடலில் இருக்கும் அத்தனை மச்சங்களுமே ஒரே மாதிரியான தன்மையுடன் இருக்கும் என்று சொல்ல முடியாது. சில மச்சங்கள் ஆயுள் முழுவதும் எந்த மாற்றத்தையும் காட்டாமல் அப்படியே இருக்கும். சில மச்சங்கள் அளவிலும் நிறத்திலும் மாறக்கூடும். சிலருக்கு மச்சங்களின் மேல் ரோமங்கள் தோன்றும். சில மச்சங்கள் காலப்போக்கில் காணாமல் போகலாம்.

எல்லா மச்சங்களும் பாதுகாப்பானவையா?

ஆபத்தில்லாத, புற்றுநோயின் அறிகுறிகளாக இல்லாத மச்சங்களைக் கீழ்க்கண்ட விஷயங்களை வைத்து அறிந்துகொள்ளலாம்.

* கரடுமுரடான முனைகள் அற்றவை.

* வழவழப்பாகவும் குவிந்த வடிவிலும் இருக்கும்.

* 3 முதல் 6 மி.மீ விட்டம் கொண்டவையாக இருக்கும்.

* அளவு, வடிவம் மற்றும் நிறத்தில் மாறாமல் இருக்கும்.

இப்படி அல்லாமல், மாற்றங்களை உணர்த்தும் மச்சங்களை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் ‘மெலனோமா’ என்கிற சருமப் புற்றுநோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

சருமப் புற்றுநோயின் அறிகுறிகள்

திடீரென சருமத்தில் மச்சம் போன்று தோன்றும், ஆனால், அது மச்சமாகவோ பிறவி அடையாளமாகவோ இருக்காது. ‘மெலனோமா’ எனும் சருமப் புற்றுநோய், ஆண்களுக்கு நெஞ்சு மற்றும் முதுகில் அதிகம் தோன்றும். பெண்களில் இளம் வயதினரை அதிகம் பாதிக்கும். அவர்களுக்குக் கால்களின் கீழ்ப்பகுதியில் அறிகுறி தெரியும்.

அழகா, ஆபத்தா?

புற்றுநோயாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிற மச்சங்களை மருத்துவர் பரிசோத னைக்குட்படுத்தி உறுதிசெய்வார். பிறகு அவை அகற்றப்படும்.

* மச்சம் உள்ள சருமப் பகுதியை ஷேவ் செய்வதால் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

* மச்சத்தின் மேல் காணப்படுகிற ரோமத்தை சருமத்துக்கு நெருக்கமாக வெட்டிவிடலாம்.

* விரும்பத்தகாத தோற்றத்தைத் தரும் மச்சத்தை  பிரத்யேக  மேக்கப் மூலம் மறைக்கலாம்.

* ஆபத்தில்லாத மச்சம் என்கிறபோது அதை அகற்ற நினைக்க வேண்டாம். அழகின்மை என நினைத்து அகற்றிக்கொள்கிற மச்சம், அந்த இடத்தில் அதைவிட மோசமான நிரந்தரமான வடுவை ஏற்படுத்திவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

ABCD அலர்ட்


மச்சம் என நீங்கள் நினைக்கிற ஒன்று அசாதாரண அறிகுறியாகத் தோன்றினால் ABCD விஷயங்களைக் கவனியுங்கள்.

A for ASYMMETRY: மச்சத்தின் ஒரு பாதியானது மறுபாதியுடன் பொருந்தாமல் இருக்கும்.

B for BORDER:
மச்சத்தின் ஓரங்கள் சொரசொரப்பாகவோ கரடுமுரடாகவோ இருக்கும்.

C for COLOUR: மச்சத்தின் நிறம் ஒரே மாதிரியில்லாமல், கருப்பு, சிவப்பு, பழுப்பு நிறங்களின் கலவையாக இருக்கும்.

D  for DIAMETER: 6 மி.மீ-க்கும் அதிகமாக இருக்கும். இவற்றில் சில நேரம் அரிப்பும் ரத்தக் கசிவும் இருக்கலாம்.

(சருமம் காப்போம்...)


- ஆர்.வைதேகி

சகலகலா சருமம்! - 23

செலிப்ரிட்டி ஸ்கின்

அம்மா தந்த அழகு!

``என் அம்மாவின் சருமமும் கூந்தலும் அவ்வளவு அழகாக இருக்கும். அது அப்படியே எனக்கும் வந்திருப்பதில் ஆச்சர்யமில்லை. அதைத் தக்க வைத்துக்கொள்வதுதான் சவால். தினமும் கேமரா முன் நிற்கிறேன்.. மேக்கப் போடுகிறேன்.. அந்த பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள நான் வீட்டுச் சிகிச்சைகளை மட்டும்தான் பின்பற்றுவேன். கடலைமாவுடன், தயிர், சிறிது மஞ்சள்தூள், சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுவேன். தினமும் காலையில் ஜிம் போவதற்கு முன் இதைச் செய்துவிடுவேன். தினமும் ஒரு மணி நேரம் வொர்க் அவுட் செய்வேன். வொர்க் அவுட் செய்யும்போதுதான் ரத்த ஓட்டம் சீராகும். அது சரும அழகில் பிரதிபலிக்கும்.’’

- நடிகை சாக் ஷி அகர்வால்