ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம்! - 25

சகலகலா சருமம்! - 25
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 25

செல்வி ராஜேந்திரன் சரும மருத்துவர்அழகு

மாதம் ஒருநாள் ஃபேஷியல் செய்வதாலும் வாரம் ஒருநாள் காய்கறி, பழங்கள் சாப்பிடுவதாலும் மட்டும் வருவதில்லை அழகு. அழகான, இளமையான சருமத்தைத் தக்க வைத்துக்கொள்வது என்பது ஒரு தவம் போன்றது. தினசரி மெனக்கிடல்கள் தேவைப்படுகிற விஷயம் அது. மாதத்தின் எல்லா நாள்களும் சருமப் பராமரிப்பில் அக்கறை தேவை. அழகுக்கு ஆசைப்படுகிற அத்தனை பேருக்குமானது இந்த 30 நாள்களுக்கான பியூட்டி காலண்டர். 

சகலகலா சருமம்! - 25


1. 6 முதல் 8 மணிநேரத் தூக்கம் அவசியம். தூங்கும்போது ஏடிபி (Adenosine triphosphate (ATP) என்கிற ரசாயனம் சுரக்கும். அதுதான் ஆற்றலை உற்பத்தி செய்யும். நன்றாகத் தூங்கும்போது கார்டிசால் என்கிற ஹார்மோன் குறைவதால் சருமம்  டைட்டாகவும் மீள்தன்மையுடனும் இருக்கும்.

2. வருடத்தின் எல்லா நாள்களுக்கும் சன் ஸ்கிரீன் அவசியம். வெயில் இல்லை என்பதால் அதைத் தவிர்க்கக்கூடாது. குறிப்பாகக் குளிர் காலத்தில் அதிக எஸ்பிஎஃப் (SPF) உள்ள சன் ஸ்கிரீன்  அவசியம்.

3. தண்ணீர்தான் சரும அழகுக்கான செலவில்லாத காஸ்மெடிக். சருமத்தின் நச்சுகளை நீக்குவதும் அதுதான். உடலின் ஒவ்வொரு 20 கிலோ எடைக்கும் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் அவசியம். 60 கிலோ எடை உள்ள ஒருவர், ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

4.கிளென்சிங், டோனிங், மாயிஸ்சரைசிங் என்பது சருமப் பராமரிப்பில் அடிப்படை. சிடிஎம் (CTM)எனப்படுகிற இதைத் தினமும் பின்பற்ற வேண்டும். சருமத்தைச் சுத்தம் செய்வது கிளென்சிங். சருமத் துவாரங்கள் மூடி சருமம் இறுக்கமாக இருக்க டோனிங். சருமம் வறட்சியடை யாமலிருக்க மாயிஸ்சரைசிங்.

சகலகலா சருமம்! - 255. முகத்துக்கு சோப் உபயோகிக்க வேண்டாம். அதற்குப் பதில் ஃபேஸ் வாஷ் உபயோகிக்கவும். குளிர்காலத்தில் க்ரீம் பேஸ்டு ஃபேஸ் வாஷ் உபயோகிப்பது சிறந்தது. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் சாலிசிலிக் அமிலம் உள்ள ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம்.

6. சருமத்தின் இறந்த செல்களை நீக்க ஸக்ரப் அவசியம். ஆனால் அதை வாரத்துக்கு இரண்டு நாள்களுக்கு மேல் உபயோகிக்கக்கூடாது. 

சகலகலா சருமம்! - 25

7.ஏசியில் இருப்பவர்களுக்கும் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டே இருப்பவர்களுக்கும்  லிப்ஸ்டிக் அலர்ஜி இருப்பவர்களுக்கும் உதடுகள் வறண்டு, தோல் உரியலாம். அதற்கு  உதடுகளுக்கான ஸ்க்ரப் உபயோகிக்கலாம். பிறகு லிப் பாம் தடவலாம்.

8. தினமும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சியின் போது வெளியேறும் வியர்வையில் சருமத்தில் உள்ள நச்சுகளும் வெளியே வரும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சருமப் பொலிவு கூடும்.

9.சிலர் இரவில் தலையில் எண்ணெய் தடவிக்கொண்டு தூங்குவார்கள். அதனால் தலையணையில் எண்ணெய் படியும். சருமம் அதில்படும்போது முகத்தில் பருக்கள் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே இதில் கவனம் தேவை.

10.முகத்தை அடிக்கடி கைகளால் தொடாமலிருப்பது நல்லது. கன்னத்தில் கை வைப்பது போன்ற பழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

11.புகை மற்றும் மதுப்பழக்கங்கள் இருப்பவர்களுக்கு சருமம் சீக்கிரமே முதுமைத் தோற்றம் பெறும்.  எனவே அவற்றைத் தவிர்ப்பது அவசியம்.

12.தலையணை உறை, படுக்கை விரிப்பு, டவல் போன்றவற்றை அடிக்கடி துவைத்து உபயோகப் படுத்த வேண்டும். பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள் இதில் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.  

சகலகலா சருமம்! - 25

13.முகத்துக்கு உபயோகிக்கிற எந்த காஸ்மெடிக்கையும் எக்ஸ்பைரி தேதி பார்த்தே உபயோகிக்க வேண்டும். வாங்கியதிலிருந்து ஒருமுறைகூட உபயோகப் படுத்தவில்லை என்றாலும் காலாவதித் தேதிக்குப் பின் அவற்றைப் பயன்படுத்துவது சருமத்துக்கு நல்லதல்ல.

14. ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் முகம் கழுவக்கூடாது. உடற்பயிற்சி செய்து அதிகம் வியர்க்கும்போது கூடுதலாக முகம் கழுவலாம்.

15.
ஸ்ட்ரெஸ் அதிகமாகும்போது மனது மட்டும் பாதிக்கப் படுவதில்லை. அதிகளவில் உங்கள் சருமமும் பாதிக்கப்படும். எனவே ஸ்ட்ரெஸ்சைக் கட்டுப்படுத்த உங்களுக்குப் பிடித்த வழிகளைப் பின்பற்றலாம்.

16. சன் ஸ்கிரீன் மற்றும் மேக்கப் சாதனங்கள் வாங்கும்போது நான்காமிடோஜெனிக் (Non-comedogenic) எனக் குறிப்பிடப்பட்டிருப்பவற்றைப் பார்த்து வாங்குவது சிறந்தது. அவை சருமத் துவாரங்களை அடைக்காதவை; பருக்களை ஏற்படுத்தாதவை.  

சகலகலா சருமம்! - 2517. சிவப்பழகுக்கான க்ரீம்களை நேரடியாக வாங்கி உபயோகிப்பது கூடாது. அவற்றில் என்ன கலக்கப் பட்டிருக்கின்றன என்பது தெரியாமல் உபயோகிப்பது சரியல்ல. சரும மருத்துவரைக் கலந்தாலோசித்து அவர்கள் பரிந்துரைக்கும் க்ரீமை உபயோகிக்கலாம்.

18.
வெளியில் செல்லும்போது சருமத்துக்கான பாதுகாப்பு அவசியம். சூழல் மாசிலுள்ள கார்பன் துகளானது நம் சருமத் துவாரங்களை விடவும் நுண்ணியது.  எனவே சுலபமாக நம் சருமத்துக்குள் நுழைந்து சருமம் பாதிக்கப்பட்டு சீக்கிரமே முதுமைத் தோற்றம் வரும்.  

சகலகலா சருமம்! - 25

19. எந்த காஸ்மெடிக்குமே இல்லை என்பவர்கள், முகத்தைக் கழுவியதும் சுத்தமான பன்னீரை (ரோஸ் வாட்டர்) முகத்தில் தடவிக் கொண்டாலே போதும்.

20.வெந்நீர் குளியல் தவிர்க்கப்பட வேண்டும். நீண்ட நேரம் தண்ணீரில் ஊறினால் வறட்சி அதிகமாகி, அரிப்பு வரும். வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதே சிறந்தது. குளிர்ந்த நீரும் கூடாது.

21.
வறண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். அது சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கும்.

22.
பருக்கள் பிரச்னை இருப்பவர்கள் முகத்தில் முடி விழுகிற மாதிரியான ஹேர் ஸ்டைல்களைத் தவிர்க்க வேண்டும்.

23. பீட்ரூட் எடுத்துக்கொள்வது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சருமப் பளபளப்பைக் கூட்டும். பீட்ரூட் சாற்றை உதடுகளிலும் தடவிக் கொள்ளலாம்.

24. தினமும் க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். உபயோகித்த க்ரீன் டீ பைகளை ஃப்ரிட்ஜில் வைத்துக் கண்களுக் கடியில் வைத்துக் களைப்பையும் விரட்டலாம். 

சகலகலா சருமம்! - 25

25. ஸ்க்ரப் உபயோகித்த பிறகு முகத்துக்கு வைட்டமின் சி சீரம் உபயோகிக்கலாம். சருமத்தில் படிந்த கருமையைப் போக்கும். நிறம் கூட்டும். இளமையாக வைக்கும்.

26. ரெட்டினால் கலந்த நைட் கிரீம் உபயோகிப்பது சருமச் சுருக்கங்களை நீக்கும். இதைப் பகலில் உபயோகிக்கக்கூடாது.  வெயில் பட்டால் அதன் பலன் போய் விடும்.

27. காலையில் எழுந்ததும் சிலருக்கு கண்களும் முகமும் உப்பியபடி இருக்கும். ஐஸ்கட்டிகளை நீரில் போட்டு வைத்து அந்தத் தண்ணீரால் முகத்தில் அடித்துக் கழுவலாம்.

28. ஸ்பூனைச் சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து விட்டு, அதை வைத்துக் கண்களுக்கடியில் மசாஜ் செய்யலாம். முகத்திலும் மசாஜ் செய்யலாம்.

29. சரும அழகுக்கு வைட்டமின் சி மிக முக்கியம். நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, சாத்துக்குடி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

30. இரவில் மேக்கப் ரிமூவர் அல்லது பேபி ஆயில் உபயோகித்து மேக்கப்பை நீக்கி, மாயிஸ்சரைசர் தடவிக் கொண்ட பிறகே தூங்கச் செல்லவும்.

(சருமம் காப்போம்...)

- ஆர். வைதேகி

சகலகலா சருமம்! - 25

செலிப்ரிட்டி ஸ்கின்

அழகாக இருப்பது அவ்வளவு சிம்பிள்!

``கேமராவுக்கு முன் நிற்கும் தருணங்களைத் தவிர மற்ற நேரத்தில் நான் மேக்கப் உபயோகிப்பதில்லை. என் ஹேண்ட் பேகில் மாயிஸ் சரைசரும், காஜலும், லிப் பாமும் எப்போதும் இருக்கும். சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இரண்டு டிப்ஸ் சொல்கிறேன். சருமத்தை வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். தூக்கத்தைத் தியாகம் செய்யாதீர்கள். நன்றாகத் தூங்கி எழுந்தாலே உங்கள் சருமம் அழகாக இருப்பதை உணர்வீர்கள். நிறைய நிறைய தண்ணீரும், முடிகிற போதெல்லாம் இளநீரும் குடிப்பேன். அழகாக இருப்பதென்பது அவ்வளவு எளிதானது!’’

- வித்யா பாலன்