Published:Updated:

சகலகலா சருமம்! - 27

சகலகலா சருமம்! - 27
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 27

வசுந்தரா அழகுக்கலை நிபுணர்அழகு

ரோக்கியத்தில் பிரச்னை என்றால் மருத்துவர்களை நாடுவதைப்போல, அழகில் பிரச்னை என்றால் அழகுக்கலை நிபுணர்களையே தேடுவோம். அழகு சார்ந்த அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் இடமாக பியூட்டி பார்லர்கள் கருதப்படுகின்றன.  

சகலகலா சருமம்! - 27

இது ஒரு பக்கம் இருந்தாலும், முறையற்ற அழகு சிகிச்சையின் காரணமாகப் பிரச்னைகளைச் சந்தித்தவர்களின் அனுபவங் களையும் அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.

அப்படியானால் பார்லர் சிகிச்சைகள் பாதுகாப்பானவையா? பயமுறுத்துபவையா?

பார்லர் செல்லும் முன் எந்தெந்த சிகிச்சைகள் பாதுகாப்பானவை என்கிற விழிப்பு உணர்வு இருந்தால் இந்தக் குழப்பம் தவிர்க்கலாம்.

த்ரெடிங்

சருமத்திலுள்ள அதிகப்படியான ரோம வளர்ச்சியை நீக்க, சிலர் பியூமிஸ் ஸ்டோனை வைத்துத் தேய்ப்பார்கள். சிலர் ரேசர் உபயோகிப்பார்கள். சருமத்தில் சிராய்ப்பு, ரத்தம் வடிவதெல்லாம் இருக்கும். இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு பார்லரில் த்ரெடிங் செய்துகொள்ளலாம். புருவங்கள், உதடுகள், தாடை, கன்னங்களில் உள்ள ரோமங்களை நீக்க இது பாதுகாப்பான சிகிச்சை. த்ரெடிங் செய்த பிறகு வளரும் முடி வளர்ச்சி குறைவாகவும் அடர்த்தியின்றியும் இருக்கும்.

சகலகலா சருமம்! - 27



பிளீச்சிங்

இந்தச் சிகிச்சைக்குப் பலரும் பயப்படுவார்கள். இப்போது பிளீச் செய்கிற அதே வேலையை ‘டீ டேன் தெரபி' செய்கிறது. சருமத்தின் கருமையைப் போக்குவதற்கானது. வெயிலில் சென்று வந்ததால் அல்லது அதிகக் குளிரால் ஏற்பட்ட கருமையைப் போக்கும். ஹெர்பல் பிளீச், ஆக்சிஜன் தெரபி, லேக்டோ பிளீச் என வேறு வேறு பெயர்களில் பார்லர்களில் செய்யப்படுகிறது. இதை ஆண்களும் செய்து கொள்ளலாம். டூ வீலரில் செல்வதால் கைகளில் ஏற்படுகிற கருமையையும் போக்கும். அமோனியா கிடையாது என்பதால் பாதுகாப்பானது.

வாக்சிங்

கோல்ட் வாக்ஸ், ஹாட் வாக்ஸ், லிபோ சாலிபிள் வாக்ஸ் என நிறைய இருக்கின்றன. ஸ்ட்ரிப் ஒட்டி இழுக்கும் வாக்ஸ் வேண்டாம் என்பவர்களுக்கு ஸ்ட்ரிப்பே தேவையில்லாமல் செய்யக்கூடிய வாக்சிங் வந்திருக்கிறது. அக்குள் போன்ற மென்மையான பகுதிகளுக்கு ஏற்றது. மூலிகை கலந்த வாக்ஸ் எப்போதும் பாதுகாப் பானது. கற்றாழை, பழங்கள், வெள்ளரி கலந்த வாக்ஸ் இன்று நிறைய கிடைக்கின்றன. இவை சருமத்தில் தடிப்புகள், எரிச்சல் என எதையும் ஏற்படுத்துவதில்லை.

ஃபேஷியல்

எத்தனை வருடமானாலும் மவுசு இழக்காத சிகிச்சை இது.

பழச்சாறுகள், அரோமா ஆயில், பால், தேன், வெண்ணெய் கலந்த ஃபேஷியல்கள் பாதுகாப் பானவை.

சகலகலா சருமம்! - 27

அலர்ஜி இருக்குமோ எனப் பயப்படுகிறவர்கள் பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டு சிகிச்சையைத் தொடரலாம். ஃப்ரூட் ஃபேஷியல் எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது. ரொம்பவும் வறண்ட சருமத்துக்கு சாக்லேட் ஃபேஷியல் செய்து கொள்ளலாம்.

கோல்டு, சில்வர் ஃபேஷியல்கள் பிரத்யேகத் தேவை இருப்பவர்கள் மட்டும் செய்து கொள்ளலாம்.

கண்களுக்கான சிகிச்சை

20 பிளஸ்சிலேயே இன்று பலருக்கும் கண்களுக்கடியில் கருவளையங்களும் சுருக்கங்களும் இருக்கின்றன. அதீத செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடே காரணம். கருமையையும் சுருக்கங்களையும் போக்கும் சிகிச்சைகளை வாரம் ஒருமுறை பார்லர்களில் செய்து கொள்ளலாம். அதனால் அந்தப் பகுதியில் உள்ள கொலாஜென் சீராகும்.

வெள்ளரி விழுது, உருளைக்கிழங்கு சாறு, பழங்களின் சாறு போன்றவற்றை உபயோகித்துச் செய்யும்போது பக்கவிளைவுகளே இருக்காது.

கை, கால்களுக்கான சிகிச்சை

கை, கால்களுக்கான மெனிக்யூர், பெடிக்யூர் சிகிச்சைகளை எல்லோரும் செய்துகொள்வதில்லை. ஆனால் ஃபேஷியலைவிடவும் முக்கியமானவை இவை.

இந்தச் சிகிச்சைகளில் முன்பு அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்றவற்றை உபயோகித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது சாக்லேட், பழங்கள், ஐஸ்க்ரீம் ஃபிளேவர்களில் இவை செய்யப்படுகின்றன. கால்தானே என முன்பெல்லாம் முரட்டுத்தனமாகக் கையாளப்பட்ட பெடிக்யூர், இன்று மென்மையாகச் செய்யப்படுகிறது. ஸ்க்ரேப்பர் வைத்துத் தேய்ப்பதில்லை. முகத்தை எப்படி மென்மையாகக் கையாள்வோமோ, அதே போன்ற அணுகுமுறை கை, கால்களுக்கும் காட்டப்படுகிறது. எனவே அப்படிப்பட்ட மெனிக்யூர், பெடிக்யூர் சிகிச்சைகளை பார்லர்களில் பயமின்றிச் செய்து கொள்ளலாம்.

கருவிகளை வைத்துச் செய்கிற சிகிச்சைகள்

சருமத்தை டெஸ்ட் செய்கிற உட்லேம்ப், ஸ்கின் அனாலைசர், மாயிஸ்சர் அனாலைசர் போன்றவை பாதுகாப்பானவை. இவை சருமத்தின் தன்மையைச் சொல்கிற கருவிகள். இவை தவிர கால்வானிக், ஹை ஃப்ரீக்வன்சி, அல்ட்ராசானிக் மெஷின்களும் பார்லர் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான மின்சார அளவு உண்டு. அந்தக் கருவிகளைச் சரியாகக் கையாளத் தெரிந்தவர்களிடம்  செய்து கொள்ளலாம்.

முக்கியமாக இந்தச் சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு முன் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்னைகள் இருந்தால் சொல்லிவிட வேண்டும்.

(சருமம் காப்போம்...)

- ஆர். வைதேகி

சகலகலா சருமம்! - 27

செலிப்ரிட்டி  ஸ்கின்:

என் ஸ்கின் எனக்குக் குழந்தை மாதிரி!


பக்கத்துல ஒரு குழந்தை இருந்தா எப்படிக் கொஞ்சிக்கிட்டே இருப்போம், அந்த மாதிரி என் ஸ்கின்னை நான் கொஞ்சிக்கிட்டே இருப்பேன். குழந்தையை சந்தோஷப்படுத்த ஏதாவது செய்துட்டே இருப்போம்ல... அந்த மாதிரி என் ஸ்கின்னுக்கு ஏதாவது அப்ளை பண்ணிட்டே இருப்பேன்.

நிறைய தண்ணீர் குடிப்பேன். கற்றாழைதான் என் ஃபேவரைட் காஸ்மெட்டிக்.  அதை அப்படியே அரைச்சு ஸ்கின்ல தடவலாம். தலைக்கும் பயன்படுத்தலாம். உள்ளுக்கும் சாப்பிடலாம். எல்லாமே அழகு தரும்.

- நடிகை கீர்த்தி சுரேஷ்