
அழகுவசுந்தரா, அழகுக்கலை நிபுணர்
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையைப் பார்த்தால் கன்னம் கிள்ளிக் கொஞ்சத் தோன்றுமல்லவா? கொழுகொழுவென இருக்கும் அந்தக் குழந்தையை இறக்கி விடவே மனது வராது.
குழந்தையின் அந்தப் பிஞ்சு சரும அழகுக்குக் காரணம் கொலாஜென். பிறந்தபோதுள்ள அதே சருமம் 20 வயதில் இருப்பதில்லை. 20 வயதை எட்டியதும் நம் சருமத்திலுள்ள கொலாஜென் அளவு குறையத் தொடங்கும். 80 வயதில், 20 வயதிலிருந்ததைவிட நான்கு மடங்கு குறைவான கொலாஜெனே சருமத்தில் இருக்கும்.கொலாஜென் குறையாமல் இருப்பவர்களின் சருமத்தில் இளமை நீடிக்கும். 40 பிளஸ்சிலும் 20 வயதுக்கான தோற்றத்துடன் சிலர் காட்சியளிக்கவும் இதுவே காரணம்.

அதென்ன கொலாஜென்?
நம் உடலில் உள்ள அதிகபட்ச புரதமே கொலாஜென்தான். நம் உடலில் 20க்கும் மேலான கொலாஜென் வகைகள் உள்ளன.
டைப் 1, 2 மற்றும் 3 ஆகியவையே 80 முதல் 90 சதவிகிதம் உள்ளவை. வயதாக, ஆக கொலாஜென் அளவு குறைவதன் காரணத்தினாலேயே சருமத்தில் சுருக்கங்கள் வருகின்றன. முதுமைத் தோற்றம் ஒட்டிக்கொள்கிறது. மூட்டுகள் வலுவிழந்து வலிக்கின்றன. கொலாஜென் என்பது நம் உடலின் அனைத்துப் பாகங்களிலும் முடி, நகங்கள் உட்பட இருக்கிறது. கொலாஜென் இன்று அழகு சாதனத் துறையில் தவிர்க்க முடியாத ஒன்று. முதுமையை விரட்டும் ஆன்டி ஏஜிங் சிகிச்சைகளில் கொலாஜென் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. தீக்காயங்களை ஆற்றும் மருந்துகளிலும் சேர்க்கப் படுகிறது. கொலாஜென் செயற்கையாகவும் கிடைக்கிறது. பசு, பன்றி போன்ற விலங்குகளிலிருந்து அவற்றைத் துன்புறுத்தாமல் எடுக்கப்படுவது ஒருவகை.
கடலுக்கடியில் இருந்தும், தாயின் தொப்புள் கொடியிலிருந்தும்கூட எடுக்கப்படுகின்றன.
ஃபைட்டோ கொலாஜென் என்பது தாவரங் களிலிருந்து எடுக்கப்படுவது. கற்றாழை ஜெல், கடல்பாசி போன்றவை சில உதாரணங்கள்.
வைட்டமின் சி நிறைந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடுவதன் மூலமும் கொலாஜென் உற்பத்தி அதிகரிக்கும்.

எலாஸ்டின்
கொலாஜெனைப் பற்றிப் பேசும்போது எலாஸ்டினைத் தவிர்க்கமுடியாது.கொலாஜெனும் எலாஸ்டினும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் மாதிரி. ஆனாலும் கொலாஜென் அளவுக்கு இது நம் உடலில் அதிகளவில் இருப்பதில்லை. எலாஸ்டின் என்பது இணைப்புத் திசுக்களில் காணப்படும் ஒருவகையான புரதம். எலாஸ்டிக்காக, அதாவது மீள்தன்மையுடன் இருப்பதுதான் இதன் சிறப்பு.
உடலிலுள்ள கொலாஜென் விரியும் போதெல்லாம் அதைப் பழைய நிலைக்குத் திரும்பச் செய்ய எலாஸ்டின் தேவை.
முதுமையைத் தள்ளிப்போடுவதில் கொலாஜெனுடன் எலாஸ்டினின் பங்கும் முக்கியமானது.
அழகுத்துறையில் பயன்பாடு
கால்வானிக் , ஹை ஃப்ரீக்வன்சி போன்ற சில சிகிச்சைகளின்போது கொலாஜென் உற்பத்தி தூண்டப்படுகிறது. சீரம், பேட் (Pad), ஷீட் வடிவங்களில் பார்லர்களில் கொலாஜென் பயன்படுத்தப் படுகிறது. கொலாஜென் சேர்த்த அழகு சிகிச்சைகள் முகத்தின் தளர்ச்சியை, தொய்வை நீக்கி, இன்ஸ்டன்ட் இளமைத் தோற்றம் தரும். வெளிப்புறப் பூச்சுகள் எப்போதுமே தற்காலிகமானவை என்பதால், உள்ளுக்குச் சாப்பிடுவதன் மூலமே நிரந்தரப் பலனைப் பெற முடியும்.

கொலாஜென் பவுடர்
சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் கொலாஜென் பவுடர் கிடைக்கிறது. அதைத் தண்ணீரிலோ, ஆரஞ்சு ஜூஸிலோ கலந்து குடிக்கிறார்கள். கொலாஜென் டீ கிடைக்கிறது. அங்கெல்லாம் இவற்றைத் தொடர்ந்து குடிக்கிறார்கள். உண்மையான வயதைவிட பத்து, இருபது வயது குறைவாகத் தோற்றமளிக்கக் காரணம் கொலாஜென் என்கிறார்கள். கொலாஜென் பவுடர் சேர்த்த திரவத்தின் வாசனை எல்லோருக்கும் பிடிப்பதில்லை. கடலிலிருந்து எடுக்கப்பட்டதா, தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்டதா என்பதைப் பொறுத்தது அதன் மணம். கடல் கொலாஜென்னின் மணம் சற்றே கடுமையாக இருக்கும். கொலாஜென் குடிப்பதன் மூலம் மூட்டுவலி குறைவதாகவும் சொல்லப்படுகிறது.
(சருமம் காப்போம்...)
- ஆர். வைதேகி
செலிப்ரிட்டி ஸ்கின்:
சும்மா விடுவதே சிறந்த சிகிச்சை!
``எனக்கு எப்போதும் மேக்கப்புடன் இருக்கத்தான் பிடிக்கும். அது கேமராவுக்கு முன்னால். ஆனால், கேமராவுக்குப் பின்னால் முடிந்தளவுக்கு மேக்கப்பைத் தவிர்த்துவிடுவேன்.
நிறைய தண்ணீர் குடிப்பேன். எதற்காகவும் யாருக்காகவும் தூக்கத்தை மிஸ் பண்ண மாட்டேன். போதுமான அளவு தூங்கினாலே உங்கள் சருமமும் கூந்தலும் அழகாகும்.

எண்ணெயும் சர்க்கரையும் அதிகம் சேர்த்த உணவுகளைத் தவிர்த்துவிடுவேன்.
வேப்பிலைதான் என் ஃபேவரைட் காஸ்மெடிக். அடிக்கடி அதை அரைத்து முகத்தில் பூசுவேன்.
அக்கறை எடுக்கிறேன் என்கிற பெயரில் சருமத்தில் எதையாவது தடவிக்கொண்டே இருப்பதைவிட, ஒன்றுமே செய்யாமல் அதைச் சும்மா விடுவதுதான் சிறந்த சிகிச்சை.’’
- மாடல், நடிகை ரைசா