ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம் - 29

சகலகலா சருமம் - 29
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம் - 29

செல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்

ப்போதும் கம்ப்யூட்டர் திரையையும் செல்போனையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தூங்குகிற நேரத்தை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டிருக்கிறோம். கண்களுக்கு ஓய்வு தேவை என்பதையே மறந்து, அவற்றின் வேலை நேரத்தை அதிகரித்துக்கொண்டிருக்கிறோம். விளைவு? வயது பேதமின்றி எல்லோருக்கும் கண்களுக்கு அடியில் கருவளையங்கள்!

சகலகலா சருமம் - 29

அழகான, ஆரோக்கியமான முகத்தைக்கூட நோய்வாய்ப்பட்ட தோற்றத்துக்கு மாற்றக்கூடியவை கருவளையங்கள். தவிர முதுமைத்தோற்றத்தையும் நிரந்தரமாக்கிவிடக் கூடியவை. கருவளையங்கள் வந்துவிட்டதே எனக் கவலைப்படுகிறவர்கள், உணவு, உறக்கம், வாழ்க்கைச்சூழல் என எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே தீர்வுகாண முடியும். அதற்கு முன் கருவளையங்களுக்கான காரணங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்.

கருவளையங்கள் ஏன்?

* பரம்பரைத்தன்மை

கண்களின் அடிப்பகுதியில் விழுகிற சிறிய அளவிலான நிழல்கூட கண்களுக்கடியில் கருவளையம் ஏற்பட்டதைப் போன்ற தோற்றத்தைத் தரும். எனவே உண்மையான கருவளையமா, நிழலா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

கண்களுக்கு அடியில் உள்ள சருமம் மிக மிக மென்மையானது. முதுமையின் காரணமாக அந்த இடத்தில் உள்ள கொழுப்பு செல்கள் குறைவதன் விளைவாகவும் குழிவிழுந்தது போன்றும், கருமை படர்ந்த மாதிரியும் தெரியும்.

ஒவ்வாமையும் ஒரு காரணம். தூசுகள் ஏற்படுத்தும் அலர்ஜி, தும்மல் இருப்பவர்களுக்கும் கருவளையங்கள் இருக்கும். ‘அடோபிக் டெர்மடைட்டிஸ்’ (atopic dermatitis) எனப்படும் சருமப் பிரச்னையின் காரணமாகவும் கருவளையங்கள் வரும்.

கண்களுக்கு அடியில் நுண்ணிய ரத்த நாளங்கள் இருக்கும். கண்களைத் தேய்ப்பது, கசக்குவது போன்றவற்றால் அந்த ரத்த நாளங்கள் ரத்தச் சிவப்பு செல்களைச் சேரவைத்து அதன் விளைவாகக் கருவளையங்களை உருவாக்கலாம்.

சருமம் மெலிதாவதன் விளைவாக அதிலுள்ள கொழுப்பு மற்றும் கொலாஜென் குறையும். அதனாலும் கண்களுக்கடியில் கருவளையங்கள் தோன்றும்.

போதுமான அளவு தூங்காதவர்களுக்கு ரத்த நாளங்கள் தளர்ந்துபோகும். ஏற்கெனவே சொன்னதுபோல கண்களுக்கடியிலான சருமம் மிக மெல்லியது என்பதால், ரத்த நாளங்கள் தளர்வதால் அந்தப் பகுதி நீலநிறமாக மாறும். அது கருவளையம் போலக் காட்சியளிக்கும்.

இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி 12 குறைபாடு காரணமாக சருமத்துக்குத் தேவையான ஆக்சிஜன் சப்ளை குறையும். தொடர்ச்சியாகப் பச்சையும் நீலமுமான நரம்புகள் கண்களுக்கடியிலுள்ள சருமத்தில் பளிச்செனத் தெரியும்.

உடலில் நீர்வறட்சி ஏற்படுதலும் ஒரு காரணம். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்கள் மட்டுமில்லை, உடலின் நீர்ச்சத்தைக் குறைக்கும் கஃபைன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதும் இதில் அடக்கம்.

ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளின் விளைவால் கண்களின் மேல்பகுதி வீக்கமடையும். அதிக உப்பு சேர்த்த உணவுகள், முட்டை, கடல் உணவுகள், பால், கோதுமை உணவுகள் போன்றவைகூட ஒவ்வாமைக்குக் காரணமாகி, கருவளையங்களை ஏற்படுத்தலாம்.

பெர்ஃப்யூம் மற்றும் கண்களுக்கடியில் தவறான அண்டர் ஐ க்ரீம் உபயோகிப்பதும்கூடக் காரணமாகலாம்.

இவைதவிர, களைப்பு, மங்குப் பிரச்னை, அளவுக்கதிகமாக வெயிலில் அலைவது, ஹைப்போதைராய்டு பிரச்னை, சைனஸ் தொற்று, புகை மற்றும் மதுப்பழக்கம் போன்றவற்றாலும் கருவளையங்கள் உண்டாகலாம்.

சகலகலா சருமம் - 29

சிகிச்சைகள்

ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

6 முதல் 8 மணி நேரத் தூக்கம் மிக அவசியம்.

தைராய்டு சோதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கருவளையங்களும் கண்களின் வீக்கமும் தைராய்டுக்கான அறிகுறிகள் என அலெர்ட் ஆக வேண்டும்.

இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 குறைபாடுகளுக்கான சப்ளிமென்ட்டை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி-யும் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது, அது இரும்புச்சத்தை முழுமையாகக் கிரகித்துக்கொள்ள உதவும்.

ஒழுங்கான ரத்த ஓட்டத்துக்கு வைட்டமின் கே மிக அவசியம். புரோக்கோலி, கீரைகள், குறிப்பாகப் பசலைக்கீரை போன்றவற்றில் வைட்டமின் கே உள்ளது.

சரும மருத்துவரைக் கலந்தாலோசித்துவிட்டு கண்களுக்கடியில் உபயோகிக்கும் அண்டர் ஐ க்ரீம்கள் உபயோகிக்கலாம். வைட்டமின் ஏ மற்றும் கே கலந்த க்ரீம்கள் பலனளிக்கும்.

கண்களுக்கடியில் ஏற்படும் குழிவுக்கு ஹையலுரானிக் ஆசிட் (Hyaluronic acid) சிகிச்சை மேற்கொள்ளலாம். சரும மருத்துவர் இதை சருமப் பகுதியில் இன்ஜெக்ட் செய்வார். இது அந்தப் பள்ளத்தைச் சரியாக்குவதுடன் கருவளையத்தையும் போக்கும்.

கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களுக்கு போடாக்ஸ் (Botox) சிகிச்சை பலனளிக்கும். அதன்மூலம் கருவளையமும் மாறும்.

வீட்டில் என்ன செய்யலாம்?

குளிர்ந்த டீ பேக்ஸை மூடிய கண்களின் மேல் வைத்துக்கொண்டு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம்.

வெள்ளரிக்காயை வட்டமாக ஸ்லைஸ் செய்து கண்களின் மேல் 15 நிமிடங்கள் வைத்திருக்கலாம்.

தினமும் 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஆல்கஹால், காபி போன்றவற்றைத் தவிர்க்கவும்.

உணவில் உப்பின் அளவைக் குறைக்கவும்.

கண்களைக் கசக்கவோ, தேய்க்கவோ கூடாது. டஸ்ட் அலர்ஜி காரணமாகக் கண்களில் அரிப்பு ஏற்பட்டால், அலர்ஜிக்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஈஸ்னோபில் எண்ணிக்கையைச் சரிபார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

(சருமம் காப்போம்...)

படம்: சொ.பாலசுப்பிரமணியன்

- ஆர்.வைதேகி

செலிப்ரிட்டி ஸ்கின்:

மஞ்சள் மேஜிக்கும் சூப்பர் சூரிய நமஸ்காரமும்

``நடிக்க வரும் வரை எனக்கு பார்லர் போகிற பழக்கமே இருந்ததில்லை. சிறு வயதிலிருந்தே ஸ்போர்ட்ஸில் இருந்ததால் சரும அழகு பற்றிப் பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. நடிகையான பிறகு சரும அழகையும் ஆரோக்கியத்தையும் பார்த்துக்கொண்டாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருக்கிறேன்.

சகலகலா சருமம் - 29

மஞ்சள், கடலைமாவு, தேன் கலந்த ஃபேஸ் பேக் ரொம்பப் பிடிக்கும். மஞ்சளை வீட்டிலேயே வளர்த்துக் காய வைத்துப் பொடித்து உபயோகிப்பேன். வெளிப்பூச்சைவிட, உள்ளே செல்கிற உணவுகள்தான் சரும அழகில் பிரதிபலிக்கும். ஒருநாள் ஜங்க் ஃபுட் சாப்பிட்டாலும் அடுத்த நாள் அது என் சருமத்தில் பிரதிபலிப்பதை உணர்கிறேன்.

யோகா செய்தால் அது உடனடியாக உங்கள் தோற்றத்தில் பலனைக் காட்டும். எல்லா ஆசனங்களையும் செய்ய வேண்டியதில்லை. சூரிய நமஸ்காரம் மட்டுமே போதும். உடல், மனம், சருமம் என எல்லாவற்றுக்கும் அதுதான் சீக்ரெட்.’’

- நடிகை அதிதி பாலன்