தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

Less is More... சருமத்துக்கும் கூந்தலுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம்!

பியூட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
பியூட்டி

பியூட்டி Vs ஹெல்த்

கொரோனா பரிதாபங்கள் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் வைரலாகும் மீம்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோக்களில் சமீப நாள்களாக ஒரு விஷயத்தை அதிகம் பார்க்க முடிகிறது. ‘பிரபா ஒயின்ஸ் ஓனருங்களா...

கடையை எப்போ திறப்பீங்க’ பாணியில், மூடியிருக்கும் பியூட்டி பார்லர்களைத் திறக்கச் சொல்லி அரும்பு மீசையுடனும், சால்ட் அண்டு பெப்பர் லுக்கிலும் பெண்கள் (ஸ்பெல்லிங் மிஸ்டேக்கெல்லாம் இல்லை, பெண்களேதான்!) கதறி காமெடி செய்வதைப் பார்க்கலாம்.

Less is More... சருமத்துக்கும் கூந்தலுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம்!

லாக் டௌன் அறிவிப்பு வந்த தருணம், `அடுத்த வேளை சாப்பிட பிபி மாத்திரை இருக்கா', `இன்சுலின் இருக்கா' என்று யோசித்தவர்களைவிட, ‘தெரிஞ்சிருந்தா நேத்தே தலைக்கு டை பண்ணியிருக்கலாமோ, திரெடிங்கும் வாக்ஸிங்கும் பண்ணியிருக்கலாமோ... தப்பு பண்ணிட்டோமே’ எனக் கலங்கியவர்களே அதிகம். அழகின்மீதான மாயை எப்போதும் அப்படித்தான் ஆரோக்கியத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.

உலகத்தின் பெரும்பான்மை இப்போது வொர்க் ஃப்ரம் ஹோமில் இயங்குகிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் அனுமதி வழங்கப்பட்ட அடுத்த நிமிடமே, அதற்கான விதிமுறைகளைப் பற்றிப் பாடம் எடுக்கப்பட்டிருக்கும் பல அலுவலகங்களிலும். மீட்டிங் அட்டெண்ட் செய்யும் அனைவரும் வீடியோ காலில் வர வேண்டும், தலைவிரி கோலமாகவோ, பரட்டைத் தலையுடனோ, நைட்டி, லுங்கியுடனோ மீட்டிங்கில் முகம் காட்டக் கூடாது என்பது முக்கிய முதல் விதியாகவும் வலியுறுத்தப்பட்டிருக்கும். வீட்டுச்சூழல் மந்த உணர்வைத் தந்து வேலையை முடக்கிவிடக்கூடாதென்பதுதான் இதன் உளவியல்.

முதல்நாள் வழக்கம்போல எழுந்திருந்து, குளித்து டிரஸ் செய்து, பர்ஃப்யூமைக்கூடத் தவறவிடாமல் மீட்டிங்குக்குத் தயாராகி இருப்பார்கள் பலரும். அடுத்தடுத்த நாள்களில் மெள்ள மெள்ள சோம்பல் அப்பிக்கொள்ள, சாயந்திரமா குளிச்சா போகுது... மீட்டிங்ல ஸ்மெல்லா வரப்போகுது’ என்று அவசரமாக க்ளோசப்பில் முகம் மட்டும் காட்டியவர்கள், பிறகு வீடியோவை ஆஃப் செய்துவிட்டு `நெட்வொர்க் பிரச்னை' என்று சமாளித்தவர்கள், நைட்டிக்கு மேல் துப்பட்டாவைப் போர்த்திக்கொண்டு பெண்களும், ஷார்ட்ஸில் ஆண்களும் மாறிப்போன கதைகளை அனுபவித்தவர்கள் அறிவார்கள். இதில் ஆண்களின் மனநிலை வேறு. சவரம் செய்யாத முகத்தையோ, ஹேர் கலரிங் செய்யாத தலையையோ மறைக்க அவர்கள் பெரிதாக முனைப்பு காட்டுவதில்லை. பெண்களின் நிலை அப்படியில்லை. நிமிடத்துக்கொரு முறை கண்ணாடி பார்த்துப் பழகிய அவர்களுக்கு பூனை மீசையுடனும் முன்னந்தலையில் எட்டிப்பார்க்கும் நரையுடனும் திருத்தப்படாத புருவங்களுடனும் அடுத்தவரை எதிர்கொள்வது எளிதான காரியமாக இருப்பதில்லை.

Less is More... சருமத்துக்கும் கூந்தலுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம்!

`மீட்டிங்கில் தன்னம்பிக்கையுடன் பேசுவேனோ, வொர்க் ஃப்ரம் ஹோமுக்கு என் உடல், மன ஆரோக்கியம் சப்போர்ட் செய்யுமா' என்பதையெல்லாம் விட, `நான் அழகாகத் தெரிவேனா' என்ற கவலை அவசியமானதுதானா... இது பட்டிமன்ற விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய விவகாரம்.

பிடித்த உடையை அணிவதில் தொடங்கி, மேக்கப் செய்வது, பிடித்த பர்ஃப்யூம் உபயோகிப்பதுவரை சில விஷயங்கள் சிலருக்குத் தன்னம்பிக்கையைத் தருவதுண்டு. இன்று பலரின் தன்னம்பிக்கை காணாமல் போகவும் அவையே காரணமாகி இருக்கின்றன.

‘`அந்த நடிகை ரெகுலரா என் பார்லருக்கு வருவாங்க. வாரத்துக்கொரு முறை அவங்களுக்கு டை பண்ணிக்கணும். சின்ன வயசுலயே நரைச்சுப்போச்சு. அது அவங்க ஹஸ்பண்டுக்குக்கூடத் தெரியாது. லேசா நரை எட்டிப் பார்க்கிறதுக்குள்ளே டை பண்ணிக்க வந்துடுவாங்க. இவங்களை மாதிரி நிறைய பேர் இருக்காங்க. என்னதான் பியூட்டி கான்ஷியஸோடு இருந்தாலும் வாரத்துக்கொரு முறை ஹேர் கலரிங் பண்றதெல்லாம் ரொம்ப தப்புன்னு சொன்னாலும் கேட்டுக்க மாட்டாங்க. ஆரோக்கியமா, அழகான்னு கேட்டா யோசிக்காம அழகுன்னு சொல்வாங்க இவங்கல்லாம்...’’ - பிரபலங்களின் பியூட்டீஷியன் ஒருவர் பகிர்ந்துகொண்ட தகவல் இது. அப்படிப்பட்டவர்களின் நிலை இந்த லாக் டௌன் நாள்களில் என்னவாகியிருக்கும்? தன்னம்பிக்கை தர வேண்டிய அழகு, அதைச் சிதைக்க அனுமதிக்கலாமா?

Less is More... சருமத்துக்கும் கூந்தலுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம்!

‘`நான் ஓர் உளவியல் ஆலோசகர். உளவியல் ஆலோசனை அதிகம் தேவைப்படும் இந்த நாள்களில் நான் என் கடமையைச் செய்வதிலிருந்து தவற முடியாது. மற்ற எல்லாப் பெண்களையும்போல எனக்கும் அழகுணர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் உண்டு. ஆனால், அவசரமாக ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு இன்ஸ்டாவிலும் ஃபேஸ்புக் லைவிலும் நான் பேச வேண்டியிருக்கிறது. நாள் முழுவதும் வீட்டில் வேறு வேறு வேலைகள் பார்த்த களைப்புடன்தான் மக்களைச் சந்திக்கிறேன். அந்த நேரத்தில் நான் என் தோற்றத்தைப் பற்றியெல்லாம் கவலையே படுவதில்லை. மற்றவர்களின் மன அழுத்தத்துக்குத் தீர்வுகள் சொல்லி மீட்பதைவிட வேறெதுவும் மனநிறைவைத் தருவதில்லை’’ - சொந்த அனுபவத்துடன் பேசுகிறார் உளவியல் ஆலோசகர் மினி ராவ்.

‘`வொர்க் ஃப்ரம் ஹோமில் வேலை செய்யும் பெண்கள் தங்களை அழகாகக் காட்டிக்கொள்ள முனைவது உண்மைதான். இந்தச் சூழலிலும் அப்படி இருக்க நினைப்பது அநாவசியமானது. மீட்டிங்கில் எல்லோரும் உங்கள் அழகையே கவனிப்பார்கள் என நினைக்காதீர்கள். உங்கள் பேச்சுக்கும் அதிலுள்ள கருத்துக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதில் எந்த காம்ப்ரமைஸும் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம். நல்ல உடை அணிந்துகொள்ளலாம். மிதமான மேக்கப் கூட ஓகே. இவையெல்லாம் கொடுக்காத அழகை, கவர்ச்சியை தன்னம்பிக்கைதான் தரும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்’ - அழகு குறித்த கவலையில் இருப்போருக்கு ஆறுதல் சொல்கிறார் மினி ராவ்.

புற அழகு பெரிதாக கவனிக்கப்படுகிற இந்தச் சமூகத்தில் அதை ஒரேயடியாக ஒதுக்கிவைப்பதெல்லாம் சாதாரண காரியமுமில்லை. லாக் டௌன் நாள்களில் எந்தெந்த அழகு சிகிச்சைகளை வீட்டிலேயே செய்துகொள்ளலாம், எவற்றை தவிர்க்கலாம், எப்படியெல்லாம் சமாளிக்கலாம்... அழகுக்கலை நிபுணர் வசுந்தரா ஆலோசனைகள் பகிர்கிறார்.

லாக் டௌன் நாள்களில் மனதளவில் எந்த அளவுக்கு அழுத்தத்தை உணர்கிறோமோ, அதே அளவு அழுத்தத்தை நம் சருமம் மற்றும் கூந்தலும் அனுபவிக்கும். அது நிச்சயம் நம் தோற்றத்தில் பிரதிபலிக்கும்.

வீட்டிலேயேதானே இருக்கிறோம் என்பதால் சருமத்தையும் கூந்தலையும் பெரிதாக கவனிக்க மாட்டார்கள் பலரும். இன்னும் சிலருக்கு அவர்கள் வழக்கமாகச் செய்து கொள்கிற அழகு சிகிச்சைகள் இல்லாமல் பித்துப்பிடித்ததுபோல உணர்வார்கள். இந்த நாள்களையும் இத்தகைய அனுபவங்களையும் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம்தான். இதுபோன்ற சூழலில் அழகு சிகிச்சைகளைப் பொறுத்தவரை எது மிக அவசியம், எது இல்லாமல் ஓரளவு சமாளிக்கலாம், எதைத் தவிர்க்கலாம், எதைத் தள்ளிப்போடலாம் என்று யோசிப்பதுதான் சரியானது.

வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடியவை...

ஆயில் மசாஜ்: தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை லேசாக சூடுசெய்து தலையில் தடவி மசாஜ் செய்து ஷவர் கேப் போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் வேலை எல்லாம் முடியும்வரை அப்படியே விட்டுவிட்டு, பிறகு தலையை ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் உபயோகித்து அலசுங்கள். உடல் இயக்கமே இல்லாததால் ரத்த ஓட்டம் குறைந்து, சோம்பலாக உணரும் இந்த நாள்களுக்கு இப்படிப்பட்ட மசாஜ், புத்துணர்வைத் தரும்.

  • பச்சரிசி மற்றும் வெந்தயம் தலா 2 டீஸ்பூன் எடுத்து வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். 100 மி.லி தேங்காய் எண்ணெயை அத்துடன் சேர்த்து லேசாக சூடுபடுத்தவும். இந்த எண்ணெயை உடல் முழுவதிலும் தடவி, மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிய பிறகு பச்சைப்பயறு மாவு அல்லது கடலை மாவு உபயோகித்துக் குளிக்கலாம். உடலுக்கு இன்ஸ்டன்ட் புத்துணர்வும் சருமத்துக்குப் பளபளப்பும் கிடைக்கும்.

  • கெமிக்கல் கலந்த ப்ளீச் எதையும் உபயோகிக்க வேண்டாம். இது உங்கள் சருமத்துக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ப்ளீச் செய்த எஃபெக்ட் வேண்டுமென நினைத்தால் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்குச்சாறு, 2 டீஸ்பூன் பால் மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வைத்திருந்து கழுவினாலே முகம் பளபளக்கும்.

  • புருவங்களிலும் மேல் உதட்டிலும் வளர்ந்துள்ள அதிகப்படியான ரோமங்களை நீக்க நிறைய பேர் ரேஸர் உபயோகிக்கிறார்கள். ஷேவ்கூட செய்கிறார்கள். இதெல்லாம் முடி வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். ட்வீஸர் (இடுக்கிபோன்ற சிறிய கருவி) வைத்திருந்தால், அதைவைத்து புருவங்களிலும் உதட்டின் மேலும் வளர்ந்துள்ள முடிகளை அகற்றலாம். அதிகமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்துள்ள ரோமங்களைச் சிறிய கத்தரிக்கோல் கொண்டு வெட்டி விடலாம். எக்காரணம் கொண்டும் ஹேர் ரிமூவிங் க்ரீம் உபயோகிக்க வேண்டாம்.

  • ட்வீஸர் உபயோகிப்பதற்கு முந்தைய நாள் அந்த இடத்தில் மாயிஸ்சரைசிங் க்ரீம் தடவி சருமத்தைத் தயார் நிலையில் வைக்கலாம். இது வலியையும் தழும்புகளையும் தவிர்க்கும்.

  • ஃபேஷியல் செய்ய நினைப்பவர்கள் வீட்டிலேயே அதைச் செய்யலாம். காய்ச்சாத பால் கொண்டு முகத்தை கிளென்ஸ் செய்துவிட்டு, மாயிஸ்சரைசிங் க்ரீமை முகத்திலும் கழுத்திலும் தடவி, மேல் நோக்கி மசாஜ் செய்து துடைத்துவிட்டு பேக் போடலாம். முல்தானி மிட்டியுடன் சுத்தமான ரோஸ் வாட்டர் சேர்த்து, வீட்டில் ஏதேனும் பழம் இருந்தால் (ஆப்பிள் எல்லா சருமத்துக்கும் ஏற்றது) அதையும் மசித்துச் சேர்த்து பேக் போடலாம். மசாஜுக்கான க்ரீம் இல்லாதவர்கள் பாலாடையைப் பயன்படுத்தலாம்.

ஹேர் கலரிங் பண்ணவும் வழியில்லை, பண்ணாமல்விட தைரியமுமில்லை. என்ன செய்யலாம்?

200 கிராம் மருதாணி பொடியுடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், அரை எலுமிச்சைப்பழத்தின் சாறு, இரண்டு டீஸ்பூன் காபி அல்லது டீ டிகாக்‌ஷன், கால் கப் தயிர், சிறிது வெதுவெதுப்பான நீர் எல்லாவற்றையும் கலந்து இரும்பு பாத்திரத்தில் முதல்நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில் ஒரு முழு முட்டையை அடித்துச் சேர்த்து நரை உள்ள பகுதிகளில் தடவி இரண்டு மணி நேரம் ஊறி அலசலாம்.

  • இந்த நாள்களில் நகங்களை வெட்டி, சுத்தமாக வைத்திருப்பது நல்லது.

  • அடிக்கடி கைகளைக் கழுவுகிறோம். வீட்டு வேலைகளைச் செய்கிறோம். இதனால் கைகளின் சருமம் சீக்கிரம் வறண்டு போகும். அதைத் தவிர்க்க மாயிஸ்சரைசர் தடவலாம் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.

லெஸ் இஸ் மோர்

அழகு சிகிச்சைகளுக்கு மட்டுமல்ல வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் ‘லெஸ் இஸ் மோர்’ தத்துவத்தைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை உணரும் தருணம் இது. மேக்கப், ஹேர் கலரிங் என சருமத்திலும் கூந்தலிலும் வருடத்தின் எல்லா நாள்களிலும் ஏதோ ஒரு கெமிக்கலை உபயோகித்துக்கொண்டே இருக்கிறோம். இருப்பதைச் சாப்பிடவும் உடுத்தவும் பழகிக்கொண்டிருக்கும் நாம், அழகு விஷயத்திலும் இப்போதைக்கு அதையே பின்பற்றுவோம். சருமத்துக்கும் கூந்தலுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம்.

இது ஆரோக்கியத்துக்கான நேரம்!

வொர்க் ஃப்ரம் ஹோம்தானே என்பதால் நினைத்த நேரத்துக்குத் தூங்கி, நினைத்த நேரத்துக்கு எழுந்திருக்க வேண்டாம். 10 மணிக்குத் தூங்கி, 6 மணிக்கு எழுந்திருக்கும் வழக்கம்தான் ஆரோக்கியமானது. இந்த நேரத்துக்குள்ளான தூக்கத்தின்போதுதான் உங்கள் உடல் உறுப்புகள் தம்மைத் தாமே பழுதுபார்த்துக் கொள்ளும். பகலெல்லாம் கம்ப்யூட்டர், இரவெல்லாம் டி.வி, சினிமா எனக் கண்களுக்கு ஓய்வு மறுக்கப்பட்டால், கருவளையங்கள் கியாரன்டி. லாக்டௌன் முடிந்து அலுவலகம் திரும்பும்போது கொஞ்சம் முதுமையாகத் தெரிவீர்கள்.. பரவாயில்லையா?

Less is More... சருமத்துக்கும் கூந்தலுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம்!

வீடு, வேலை எனப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நாள்களில் உங்களுக்கு எதற்கும் நேரமே இருந்திருக்காது. நிம்மதியாகக் குளித்திருப்பீர்களா... யோசித்துப் பாருங்கள். இந்த நாள்களில் மறந்துபோன எண்ணெய்க் குளியலுக்கு மீண்டும் பழகுங்கள். வாரத்தில் இரண்டு நாள்கள் உச்சி முதல் பாதம்வரை எண்ணெய் தேய்த்து நிதானமாகக் குளியுங்கள்.

அலுவலகத்துக்குக் கிளம்பும் அவசரத்தில் மாதக் கணக்கில், வருடக்கணக்கில் காலை உணவைத் தவிர்த்துப் பழகியவர்கள் அதிகம். காலை உணவைத் தவிர்ப்பதுதான் நீரிழிவு, பருமன் உட்பட பல பிரச்னைகளுக்கான தொடக்கம். எனவே, இத்தனை நாள்களாகச் செய்த அந்தத் தவற்றைத் திருத்திக்கொள்ள இதுவே நல்ல வாய்ப்பு. காலை உணவை மிஸ் பண்ணாதீர்கள்.

அலுவலகத்துக்குப் போய் வரும் நேரம் இப்போது மிச்சம். வாக்கிங் போக, உங்களுக்காக கொஞ்சூண்டு சாலட் செய்து சாப்பிட, உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யவெல்லாம் அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எதையெல்லாம் தள்ளிப்போடலாம்?

ஹேர்கட், ஹேர் கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் உள்ளிட்ட கெமிக்கல் சிகிச்சைகள், மரு மற்றும் மங்கு நீக்கும் சிகிச்சைகள்.