
அறிவோம்
`எந்த சோப் நல்ல சோப்' எனத் தேடிய பலரும் இன்று, `எது நல்ல பாடி வாஷ்' என்று தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதென்ன பாடி வாஷ்?
சருமத்தைச் சுத்தப்படுத்துவதோடு அதன் ஈரப்பதத்தையும் தக்கவைத்துக்கொள்கிற வேலையையும் சேர்த்துச்செய்வதுதான் பாடி வாஷின் சிறப்பு. பாடி வாஷை திரவ வடிவ கிளென்சர் என்றும் சொல்லலாம். ஷவர் ஜெல்லும் பாடி வாஷ் வகையைச் சேர்ந்ததுதான். ஷவர் ஜெல் என்பது சற்றே அடர்த்தியாக ஜெல் வடிவில் இருக்கும். பாடி வாஷ் என்பது திரவ வடிவ சோப் போல இருக்கும். இதில் ஷவர் ஜெல்லைவிட மாயிஸ்ச்சரைஸிங் தன்மை சற்று அதிகமாக இருக்கும். பாடி வாஷ் என்பது உடலுக்கானது. எனவே, அதை முகத்துக்குப் பயன்படுத்த வேண்டாம்.
ஏன் பாடி வாஷ்?
பயன்படுத்த எளிதானது. பயணங்களின் போது எடுத்துச் செல்லவும் வசதியானது.
சருமத்தின் ஆழத்தில் படியும் அழுக்கு களை அகற்ற கிளென்சர் பயன்படுத்துவோம். சிலவகை கிளென்சர்கள் சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப் பசையை முற்றிலும் நீக்கிவிடுவதால். சருமம் வறண்டுபோகும். அதை ஈடுகட்ட மாயிஸ்ச்சரைஸர் உபயோகிக்க வேண்டியிருக்கும். பாடி வாஷ் பயன்படுத்தும்போது சருமத்தின் ஆழத்திலுள்ள அழுக்குகள் நீங்குவதோடு. வறட்சியும் தவிர்க்கப்படும். சிலருக்கு சருமம் அதீத வறட்சியுடன் காணப்படும். அவர்கள் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ள மாயிஸ்ச்சரைஸரையும் சேர்த்துப் பயன்படுத்துவது சிறந்தது.

சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் கெமிக்கல் மற்றும் வாசனை கலந்த பாடி வாஷ் உபயோகிப்பதைத் தவிர்க்கலாம். மற்றவர்கள் கிளிசரின், மினரல் ஆயில், சோயா பீன் ஆயில். ஷியா பட்டர், ஆலிவ் அல்லது ஆல்மண்ட் ஆயில்... இவற்றில் ஏதேனும் ஒன்று கலந்திருக்கும் பாடி வாஷைப் பயன்படுத்தலாம்.