Published:Updated:

மூலிகை எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

கூந்தல் அழகை எப்படிப் பாதுகாப்பது என்பது தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

கூந்தல்
கூந்தல்

என்னதான் மேக்கப் செய்துகொண்டாலும் ஒரு பெண்ணுக்கு கூந்தல் அழகுதான் உண்மையான அழகு. விதவிதமாக ஹேர்ஸ்டைல் செய்துகொண்டு டிரெண்டில் அசத்தும் பெண்களுக்கு இளநரை, கூந்தல் வறட்சி, பொடுகுப் பிரச்னை போன்றவை தலையாய பிரச்னையாக இருக்கிறது. இவற்றிலிருந்து எப்படி விடுபடுவது? கூந்தல் அழகை எப்படிப் பாதுகாப்பது என்பது தொடர்பான சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

கூந்தல்
கூந்தல்

ஒவ்வொரு பெண்ணுக்கும் கூந்தலின் தன்மை, கூந்தல் சார்ந்த பிரச்னைகள் வேறுபடும். கூந்தல் பிரச்னைகளைட் தடுக்க நாம் அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் இருந்து ஷாம்பு வரை எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். கூந்தலை உரிய பராமரிப்பு செய்து பாதுகாத்தாலே, கூந்தல் சார்ந்த பிரச்னைகளுக்கு குட்பை சொல்லலாம்.

கூந்தல் செழித்து வளர மூலிகை எண்ணெய் தயார் செய்வது எப்படி?

தலைமுடி
தலைமுடி

நெல்லிக்காய் - 100 கிராம்

கீழாநெல்லி இலை - 100 கிராம்

கறிவேப்பிலை - 100 கிராம்

செம்பருத்தி பூ - 100 கிராம்

வெந்தயம் - 25 கிராம்

கரிசலாங்கண்ணி இலை - 50 கிராம்

தேங்காய் எண்ணெய் - 2 லிட்டர்

செய்முறை:

மூலிகைகளையெல்லாம் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் சுத்தமான வாணலியை வைத்து, மூலிகை மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்கவிடவும். மூலிகையின் தன்மை எண்ணெயில் இறங்கி நிறம் மாறத்தொடங்கிய உடன், அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும். மூன்று நாள்கள் கழித்து எண்ணெய்யை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றிவைத்துப் பயன்படுத்தவும். இந்த எண்ணெயை வாரம் 3 நாள்கள் பயன்படுத்தி வர, கூந்தல் வறட்சி இன்றி செழித்து வளரும்.

கூந்தல் நரைப்பதற்கும் நாம் பயன்படுத்தும் ஷாம்பிற்கும் சம்பந்தம் உண்டா?

ஷாம்பு
ஷாம்பு

நிச்சயம் உண்டு. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பில் பாராஃபைன் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அது உங்கள் கூந்தலில் உள்ள மெலனின் அளவைக் குறைத்து, கூந்தலை நரைக்கச்செய்யும். எனவே, ரசாயனம் இல்லாத ஷாம்பைத் தேர்வுசெய்து பயன்படுத்துவது ஆரோக்கியமானது. தினமும் ஷாம்பு பயன்படுத்தி ஹேர் வாஷ் செய்யாமல், வாரம் 3 முறை மட்டும் ஷாம்பு உபயோகிக்கும்பட்சத்தில் நரை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஹேர் கட் செய்துகொண்டால் அடுத்தடுத்து அதே ஹேர் ஸ்டைலை மெயின்டெய்ன் பண்ண என்ன செய்ய வேண்டும்?

ஹேர்கட்
ஹேர்கட்

யூ கட் அல்லது வி கட், ஸ்ட்ரெய்ட் கட் செய்திருக்கிறீர்கள் எனில் பிரச்னையில்லை. கூந்தல் வளரத்தொடங்கும்போது ஒரே நீளத்தில்தான் வளரும். சில மாதங்கள் கழித்து மீண்டும் கட் செய்துகொள்ளலாம். ஃபெதர் கட், ஸ்டெப் கட் செய்கிறீர்கள் எனில், கூந்தல் வளரத்தொடங்கும்போது, ஒரு முடி நீளமாகவும் ஒரு முடி குட்டையாகவும் வளரும் என்பதால், 2 மாதத்திற்கு ஒரு முறை கூந்தலின் நுனிப்பகுதியை ட்ரிம் செய்துகொள்வது நல்லது.

வீட்டிலேயே செய்துகொள்ளும் விதமாக நேச்சுரல் ஷாம்பு ஒன்று சொல்லுங்களேன்?

ஷாம்பு
ஷாம்பு

கற்றாழையின் சதைப்பகுதி 20 கிராம்

பூந்திக்காய் - 20 கிராம்

செம்பருத்திப் பூ - 3

பூந்திக்காயை முதல் நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து விடவும். மறுநாள் காலையில், பூந்திக்காயின் விதைகளை நீக்கிவிட்டு, கற்றாழையின் சதைப்பகுதி, செம்பருத்திப் பூ மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இதை ஷாம்புவாக உபயோகிக்க, கூந்தல் பட்டுப் போல மின்னும்.

வீட்டிலேயே எளிமையாக ஹென்னா எப்படி தயார் செய்வது?

ஹென்னா
ஹென்னா

மருதாணி பவுடர் - 200 கிராம்

நெல்லிக்காய் பவுடர் - 200 கிராம்

எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன்

தயிர்- ஒரு கப்

ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன்

மேலே கூறிய எல்லா பொருள்களையும் ஒன்றாகக் கலந்து, அடிக்கனமான பாத்திரத்தில் வைத்து, ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவிடுங்கள். மறுநாள் காலையில், இதனை கூந்தலில் அப்ளை செய்து ஒரு மணிநேரம் கழித்து ஹேர் வாஷ் செய்ய, நல்ல மாற்றம் தெரியும்.

பொடுகுக்கு என்னதான் தீர்வு?

பொடுகு
பொடுகு

காய்ந்த நெல்லிக்காய் மற்றும் வெந்தயத்தை சரிசமமாக எடுத்துப் பொடித்து, தயிர் கலந்து பேக்காக அப்ளை செய்து, ஒரு மணிநேரம் கழித்து கூந்தலை அலச, பொடுக்கு பை பை சொல்லலாம்.

கூந்தல் வறட்சியை எப்படிச் சரிசெய்வது?

கூந்தல் வறட்சி
கூந்தல் வறட்சி

தினமும் ஷாம்பு பயன்படுத்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

pH மதிப்பு குறைந்த ஷாம்புகளைத் தேர்வுசெய்து பயன்படுத்த வேண்டும்.

அதிக வறட்சி உள்ளது எனில், தயிர் மற்றும் முல்தானிமெட்டியை சம அளவில் எடுத்து, ஒன்றாகக் கலந்து பேக் போட்டு கூந்தலை அலசவும். வாரம் ஒரு முறை இதனைச் செய்து வர கூந்தல் வறட்சி நீங்கும்.

பாதாம், காய்கறிகள், கீரைகள் எனப் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.