Published:Updated:

``என் தேகமே என் திறமைக்குத் தடையாக இருந்திருக்கிறது!'' - விம்பிள்டன் சாம்பியன் சிமோனா ஹேலப்

சிமோனா ஹாலெப்
சிமோனா ஹாலெப் ( twitter.com/Simona_Halep )

''என் மார்பகங்களை அறுவை செய்து குறைத்த பின்பு, நீண்ட நாள்களாக என்னை வதைத்து வந்த தலைவலி, கழுத்து வலி, முதுகு வலியில் இருந்து மீண்டிருக்கிறேன்.''

''எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 2015-ம் வருடம் கிறிஸ்துமஸ்க்கு மூன்று நாள்களுக்கு முன்பு என் மார்பகங்களின் அளவைக் குறைக்கிற அறுவைசிகிச்சையைச் செய்திருந்தேன். சிகிச்சை முடிந்து நான் மருத்துவமனையில் தனியாக உட்கார்ந்து இருந்தபோது, முதல் முறையாக அந்த அறுவைசிகிச்சையின் வடுக்களையெல்லாம் பார்த்தேன். என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் ஓவென்று அழுதேன். அப்போது எனக்கு ஜஸ்ட் 19 வயதுதான். என் உடம்பை நினைத்து நான் இப்படி அழுவது ஒன்றும் முதல் தடவை கிடையாது.

சிமோனா ஹாலெப்
சிமோனா ஹாலெப்
i.guim.co.uk

ஆனால், இத்தனை நாளாக நான் அழுததெல்லாம், என் மார்பகங்கள் ஏன் இயல்பை மீறி அளவில் பெரிதாக இருக்கின்றன என்பதை நினைத்து. ஆனால், இந்த முறை அந்தப் பிரச்னையை அறுவைசிகிச்சை மூலம் சரி செய்துவிட்டேன் என்ற வெற்றிக்களிப்பில் ஆனந்தக்கண்ணீர் விட்டேன்'' - இந்த வார்த்தைகளைச் சொன்னவர் சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வெற்றிபெற்ற ருமேனியா வீராங்கனை சிமோனா ஹேலப்.

தன்னுடைய 17 வயதில் டென்னிஸ் உலகின் வளரும் நட்சத்திரமாக இருந்த சிமோனா, ''என் மார்பகங்களின் அதிகப்படியான எடை என் விளையாட்டுக்குத் தடையாக இருக்கிறது. உடனடியாகப் பந்தைத் திருப்பியடிப்பதுதான் என்னுடைய பலம். ஆனால், என் உடலே அதற்குத் தடையாக இருக்கிறது'' என்று சுமார் 10 வருடங்களுக்கு முன்பே தன் வருத்தத்தை வெளிப்படையாகச் சொல்லியிருந்தார்.

வெற்றிக்களிப்பில் சிமோனா ஹாலெப்
வெற்றிக்களிப்பில் சிமோனா ஹாலெப்

ஒரு ஸ்போர்ட்ஸ் பத்திரிகையில்கூட, "என் விளையாட்டுக்காக நான் செய்த மிகப்பெரிய தியாகம் என் மார்பகங்களின் அளவைக் குறைத்துக்கொண்டதுதான். அதை மட்டும் நான் செய்யாமல் இருந்திருந்தால் நானொரு ஸ்போர்ட்ஸ் உமன் என்கிற மரியாதையை அடைந்திருக்க முடியாது'' என்கிற சிமோனாவின் குரலில், பெண்கள் எதை அழகு என்று நினைக்கிறார்களோ, அதையேதான் குறைத்துக்கொண்டது பற்றிய எந்த வருத்தமும் இல்லை.

சிமோனா மட்டுமல்ல, இவரைப்போல இன்னும் பல பெண்கள் தங்கள் மார்பகங்களின் அளவைக் குறைத்திருக்கிறார்கள். 23 வயது பத்திரிகையாளர் ஒருவரும், ''இனிமேல் அடுக்கடுக்கான துணிகளைக்கொண்டு என் உடம்பை மறைக்க வேண்டியதில்லை. ஒரே பொஸிஷனில்தான் படுக்க வேண்டும். இல்லையென்றால் நெஞ்சு வலிக்கும், மார்பு தொங்கிப் போகும் என்கிற பிரச்னைகள் இல்லை. முக்கியமாக, மற்றவர்களுடைய கவனம் என் உடலின் மேல் திரும்பாமல் நிம்மதியாக இருக்கிறேன்.

'''மார்பகங்கள் இருந்தால்தானே, என்னைப் பெண்ணாக மற்றவர்கள் ஒப்புக்கொள்வார்கள்' என்கிற காரணத்துக்காகத்தான், அதன் எடையையும் அவை தந்த முதுகுவலியையும் பொறுத்துக்கொண்டேன். இல்லையென்றால், என் உடம்பில் இருந்தே அதை நீக்கியிருப்பேன்.''

என் மார்பகங்களை அறுவை செய்து குறைத்த பின்பு, நீண்ட நாள்களாக என்னை வதைத்து வந்த தலைவலி, கழுத்து வலி, முதுகு வலியில் இருந்து மீண்டிருக்கிறேன். இந்த வலிகளைப் போக்குவதற்காகத் தினமும் சாப்பிட்டு வந்த வலி நிவாரண மாத்திரைகளிடமிருந்தும் தப்பித்திருக்கிறேன்'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.

''பெரிதான மார்பகங்களை மறைப்பதற்காக, அதற்குப் பொருத்தமே இல்லாத இறுக்கமான உள்ளாடைகளை அணிந்துகொண்டு தவித்திருக்கிறேன். உள்ளாடைகளுக்குப் புகழ்பெற்ற ஒரு துணிக்கடையிலும் எனக்குப் பொருத்தமான உள்ளாடை கிடைக்காத அன்றைக்கு, டிரையல் ரூமில் உட்கார்ந்துகொண்டு ஓவென்று அழுதிருக்கிறேன். நான் ஏதோ செயற்கையாகச் செய்து மார்பைப் பெரிதாக்கி இருக்கிறேன் என்று நிறைய பேர் என்னைக் கேலிகூட செய்திருக்கிறார்கள். ஐ ஹேட் மை பிரெஸ்ட்'' என்று அழுத ஒரு ஜிம் டிரெய்னர் ஒருவரும், சிமோனாவைப் போலவே அறுவைசிகிச்சைக்குப் பின்னர் தன் கேரியரில் சக்ஸஸ்ஃபுல்லாக இருக்கிறார்.

பெண்கள் பேசாத பிரச்னைகளில் இதுவும் ஒன்று
பெண்கள் பேசாத பிரச்னைகளில் இதுவும் ஒன்று

''மார்பகங்கள் இருந்தால்தானே, என்னைப் பெண்ணாக மற்றவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்கிற காரணத்துக்காகத்தான், அதன் வெயிட்டையும் அவை தந்த முதுகுவலியையும் பொறுத்துக்கொண்டேன். இல்லையென்றால், என் உடம்பில் இருந்தே அதை நீக்கியிருப்பேன். மனதுக்குப் பிடித்த ஆடைகளை வாங்க முடியாது. வாங்கினாலும் அணிய முடியாது. எப்படியோ கஷ்டப்பட்டு உடம்பை அந்த ஆடைக்குள் திணித்தாலும், என்னைப் பார்ப்பதற்கு எனக்கே பிடிக்காது'' என்று குமுறிய கல்லூரி மாணவி ஒருவரும், சிமோனாவைப் போல மார்பகங்களின் அளவை அறுவைசிகிச்சை மூலம் குறைத்துக்கொண்டார்.

பெரிய மார்பகங்கள்தான் பெண்மைக்கு அடையாளம், அழகுக்கான அங்கீகாரம் என்றெல்லாம் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில், மேலே சில பெண்கள் சொல்லியிருக்கிற பிரச்னைகள் மட்டுமல்ல, கனத்த மார்பகங்களில் வெயிட் தாங்காமல் தோள்பட்டை வலி, உள்ளாடையின் எலாஸ்டிக் பட்டைகள் அழுத்தி அழுத்தி அந்த இடம் சிவந்து, ரணமாகி, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு, நாளடைவில் அந்த இடங்கள் கறுத்து என்று உடலளவில் எக்கச்சக்க பிரச்னைகள் இருக்கின்றன. தவிர, இந்தக் காரணத்துக்காக சம்பந்தப்பட்ட பெண்கள் சந்திக்கிற ஆண்களின் கேலிப் பேச்சுக்கள் சொல்வதற்கும் எழுதுவதற்கும் தகுதியற்றவை.

அறுவை சிகிச்சைத் தொடர்பான புள்ளி விவரங்கள்
அறுவை சிகிச்சைத் தொடர்பான புள்ளி விவரங்கள்

பல காலங்களாக மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட நாப்கின்போலவே, பெண்களின் சில உடல் அசௌகரியங்களும் உலகத்துக்கு தெரியாமலேதான் இருக்கின்றன. அதில், அளவில் பெரிதான மார்பகங்களும் ஒன்று. டென்னிஸ் நட்சத்திரமான சிமோனா ஹேலப், தான் விம்பிள்டனில் வெற்றிபெற்றிருக்கிற இந்த நேரத்தில், இந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசியிருப்பது பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. முக்கியமாக சிமோனாவுக்கு இருந்ததைப் போலவே பிரச்னையில் இருக்கிற பெண்களையும் சற்று ஆசுவாசப்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு