தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்!

சால்ட் & பெப்பர் லுக்
பிரீமியம் ஸ்டோரி
News
சால்ட் & பெப்பர் லுக்

எது அழகு?

லைமுடிக்கு `டை' அடிக்காமல், கலரிங் செய்யாமல் அப்படியே விடுவது சில பிரபலங்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஆண்களில் அஜித் முதல் ஜார்ஜ் க்ளூனிவரை பல உதாரணங்கள் உண்டு. நம் தமிழகத்தில் இந்த லுக்குக்கு மாறிய பெண்மணிகளைப் பற்றி சென்ற இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

சரி... சால்ட் & பெப்பர் லுக் பற்றி அழகுக்கலை, மருத்துவம் மற்றும் உளவியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

கவனிக்காமல் விட்டால், வெள்ளை முடி மஞ்சளாக மாறும்

- அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

‘கறுப்பா இருக்கிறவரைக்கும்தான் கவனிப்பு.

வெள்ளையாக மாறினபிறகு கவலையே இல்லை’ - டை அடிப்பதை நிறுத்திக்கொள்வதாக முடிவெடுக்கும் பலரும் இப்படி நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் நரைத்த கூந்தலுக்கும் கவனிப்பும் பராமரிப்பும் அவசியம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

சால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்!

‘`நம்முடைய கூந்தலில் உள்ள மெலனின் என்ற நிறமி குறைவதால்தான் நரைமுடி வருகிறது. முதுமை காரணமாகவும், உடலில் போதுமான ஊட்டச்சத்து இல்லாததாலும் இந்த மெலனின் குறையலாம். பி காம்ப்ளெக்ஸ் குறைபாடு இருப்பவர்களுக்கும் இள வயதிலேயே நரை ஏற்படலாம்.

மெலனின்தான் கூந்தலுக்குப் பாதுகாப்பைத் தருகிறது. அது குறைந்ததும் முடி முரடாக மாறுகிறது. நரைமுடி இருப்பவர்கள் வெயிலில் போகும்போது நரைத்த முடி இன்னும் முரடாகும். அது மட்டுமல்ல, வெள்ளை முடியானது மஞ்சள் நிறத்துக்கு மாறும். மஞ்சளாக மாறும் கூந்தலை சகித்துக்கொள்ள முடியாமல், டை அடிப்பதை நிறுத்தியவர்கள்கூட மீண்டும் அந்தப் பழக்கத்தைத் தொடர ஆரம்பிக்கிறார்கள்.

சால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்!

நரைத்த கூந்தலுக்கும் கவனிப்பு அவசியமா என்றால் நிச்சயம் அவசியம். நரைத்த கூந்தலுக்கு என்று பிரத்யேக ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் கிடைக்கின்றன. பற்களில் பிளேக் ஏற்படுவதுபோன்றதுதான் வெள்ளை முடியில் மஞ்சள் படிவதும். நரைத்த முடிக்கான பிரத்யேக ஷாம்பூ உபயோகிப்பதன் மூலம் மஞ்சள் படிமத்தைத் தவிர்க்கலாம். இந்த பிரத்யேக ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் வாங்க இயலாதவர்கள் சாதாரண ஷாம்பூ மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தலாம். முரடாக மாறுவதால் நரைத்த கூந்தல் படியாமல் காற்றில் அதிகம் பறக்கும். ஸ்டைலிங் பொருள்கள் உபயோகித்து நரைத்த கூந்தலைப் படிய வைக்கலாம். க்ரீம் மற்றும் சீரம் வடிவங்களில் ஸ்டைலிங் பொருள்கள் கிடைக்கின்றன.

மெலனின் இல்லாததால் நரைமுடியுடன் வெயிலில் செல்லும்போது சூடு அதிகம் தாக்கும். தலையைப் பாதுகாக்க தொப்பியோ குடையோ உபயோகிப்பது அவசியம்.

பார்லர்களில் செய்யப்படுகிற கெரட்டின் சிகிச்சையை செய்துகொள்வதன் மூலம் நரைத்த முடியை மிகவும் அழகாகப் பராமரிக்க முடியும்.

வெள்ளை முடியில் படிகிற மஞ்சள் படிமத்தை நீக்க பர்ப்பிள் ஷாம்பூ கிடைக்கிறது. நிபுணரின் ஆலோசனையுடன் இதை உபயோகிக்கலாம்.

வெள்ளை முடி உள்ளவர்கள் தினமும் தலைக்கு எண்ணெய் தடவலாம். மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயை இவர்கள் தவிர்ப்பது நல்லது. அப்படிச் சேர்க்கப்படும் மூலிகைகளில் உள்ள சாயம் கூந்தலில் இறங்கி, ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்துக்கு மாற்றும். முடியை அப்படியே அதன் பளபளப்புடன் வைத்திருக்க விரும்புபவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஏதேனும் ஒன்றை உபயோகிக்கலாம்.’’

ஆஸ்துமா முதல் புற்றுநோய், மலட்டுத்தன்மை வரை... ஹேர் டையால் ஏற்படக்கூடிய ஆபத்துகள்

சால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்!

- சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

ஆரோக்கியத்தைவிட அழகொன்றும் பெரிய விஷயமில்லை என்கிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

‘`ஹேர் கலரிங்கில் மூன்று வகைகள் உள்ளன. தற்காலிகமானவை, சில நாள்கள் நீடிக்கக்கூடிய செமி பர்மனென்ட் மற்றும் நிரந்தரமானவை. இவற்றில் நிரந்தரமான கலரிங்கில் ஸ்ட்ராங்கான கெமிக்கல் கலவை அதிகமிருக்கும். இதிலுள்ள அதிக அளவிலான பெராக்ஸைடு,கூந்தலின் தண்டுப்பகுதியைத் திறக்கச் செய்து, கலர் கூந்தலின் ஆழம்வரை செல்லவைக்கும். அதனால் கூந்தல் பெரிய அளவில் பாதிக்கப்படும். 8 முதல் 10 வாரங்கள் நீடிப்பவை இவை.

செமி பர்மனென்ட் கலர்களில் நிரந்தர டையைவிட பெராக்ஸைடின் அளவு குறைவு. தற்காலிக கலரிங் என்பவை தலைக்குக் குளிக்கும்வரை மட்டுமே நீடிப்பவை. நிரந்தர கலர்களைவிட இந்த இரண்டிலும் நிரந்தர கலரைவிட ஆபத்து குறைவு என்றாலும், அவையும் ஆரோக்கியமானவை அல்ல. இவை தவிர பிளீச்சிங் சிகிச்சையும் உண்டு. இதில் கூந்தலின் கலரை முழுமையாக நீக்கும். அடிக்கடி இதைச் செய்தால் கூந்தல் மஞ்சள் நிறத்துக்கு மாறும்.

ஹேர் கலரிங்கில் உள்ள கெமிக்கல்களால் கூந்தலின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். கூந்தலின் பளபளப்பு மறைந்து, எளிதில் உடைவதாக மாறும். டையில் உள்ள பாராபெனிலின் டை அமைன் (PPD) என்ற பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது. எக்ஸீமா, சோரியாசிஸ் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் ஹேர் டை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். அரிப்பு, சிவந்துபோவது, மண்டை மற்றும் முகத்தில் வீக்கம் போன்றவை டை அலர்ஜியின் அறிகுறிகள்.

நிரந்தர கலரிங்கில் உள்ள லெட் அசிட்டேட் மலட்டுத்தன்மைக்குக்கூட காரணமாவதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. ஆண், பெண் இருவரும் இதற்கு விதிவிலக்கல்ல. கர்ப்பிணிகள் கட்டாயம் கலரிங் செய்யக்கூடாது. அடிக்கடி டை உபயோகிப்பவர்களுக்கு பிங்க் ஐ அதாவது கன்ஜங்டிவிட்டிஸ் எனப்படும் கண் பாதிப்பு ஏற்படலாம். கண்கள் வீங்கும், சிவந்துபோகும்.

ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ஏற்கெனவே ஆஸ்துமா இருப்பவர்களுக்கு அது தீவிரமாகும். டையில் உள்ள பெர் சல்பேட் என்ற கெமிக்கலே காரணம். இதை சுவாசித்தால் இருமல், வீஸிங், தொண்டைக் கரகரப்பு, நுரையீரல் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

டை உபயோகம் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் பல ஆய்வுகள் சொல்கின்றன. ஆபத்துகளை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிற கெமிக்கல்களுக்குப் பதிலாக மாற்று ரசாயனங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிற டை வகைகள் வரத் தொடங்கியிருக்கின்றன. ஆனாலும் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

தவிர்க்கவே முடியாத தருணங்களில் ஹேர் கலரிங் செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

  • நிரந்தர டையைத் தவிர்ப்பது நல்லது. செமி பர்மனென்ட் அல்லது தற்காலிக கலரிங்கை தேர்ந்தெடுக்கலாம்.

  • பேட்ச் டெஸ்ட் செய்த பிறகே கலரிங் செய்ய வேண்டும். அலர்ஜி இருந்தால் இது உறுதிசெய்யும்.

  • கலரிங் செய்வதில் அடிப்படை தெரிந்த, அனுபவமுள்ளவரிடம் மட்டுமே செய்துகொள்ள வேண்டும்.

  • நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள இடத்தில் கலரிங் செய்ய வேண்டும். இருட்டான, காற்றோட்டமில்லாத சூழலில் செய்யும்போது கண் எரிச்சல் ஏற்படலாம்.

  • நம்பகமான நிறுவனத் தயாரிப்புகளைப் பயன்படுத்தவும். குறைவான கெமிக்கல் கலவை உள்ளவையா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.பாராபெனிலைன் டை அமைன் உள்ள கலர் தவிர்க்கப்பட வேண்டும். பிபிடி ஃப்ரீ என்ற குறிப்போடு நிறைய தயாரிப்புகள் வருகின்றன. அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

  • ஹென்னா, காபி, டீ டிகாக்ஷன், பீட்ரூட், கேரட் சாறு போன்ற இயற்கையான பொருள்களை இயற்கையான ஹேர் டையாக உபயோகிக்கலாம். இவை சரியான கலவையில் இருக்க வேண்டும். தவறினால் கூந்தல் வறண்டு உடைந்து உதிரும்.''

மாற வேண்டியது சமூகமல்ல... பெண்கள்தான்

உளவியல் ஆலோசகர் சித்ரா அர்விந்த்

நேற்றுவரை வயதை மறைத்து இளமைத் தோற்றத்தில் வலம் வந்துவிட்டு, திடீரென வெள்ளை முடிக்கு மாறுவதென்பது சாதாரண காரியமல்ல. இந்த உளவியல் பற்றி விளக்குகிறார் உளவியல் ஆலோசகர் சித்ரா அர்விந்த்.

சால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்!

‘`ஆண் அறிவுக்கும் பெண் அழகுக்குமான அடையாளமாகப் பார்க்கப்படுவது காலம் காலமாகத் தொடர்வதுதான். நரைமுடியைக் கறுப்பாக்குவதுகூட சாதாரணம். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உருவத்தைத் திருத்திக் கொள்ளும் அளவுக்கெல்லாம் பல பெண்கள் போகிறார்கள். சமூக அழுத்தங்களுக்காக கத்திக் கீறல்களுக்குக்கூட அவர்கள் தயாராகிறார்கள்.

ஹேர் கலரிங் செய்வது ஆரோக்கியத்தை பாதிப்பதை உணர்ந்து, ‘இனி இது எனக்குத் தேவையில்லை’ என்ற முடிவை எடுப்பது மிகப்பெரிய விஷயம். பல பெண்களும் தன்னம்பிக்கைக்கான ஆதாரமாக நினைப்பது தங்கள் புற அழகை. அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களுக்கு டை அடிக்காமல் நரைத்த கூந்தலுடன் வலம் வருவதென்பது தன்னம்பிக்கையை பாதிக்கும் விஷயமாகவே தெரியும்.

பெண் என்பவள் அழகை மட்டுமே வைத்து அடையாளப்படுத்தப் பட வேண்டியவள் அல்ல... அதைத் தாண்டிய திறமைகள் அவளிடம் உள்ளன என்று இந்தச் சமுதாயம் நம்ப வேண்டும் என எதிர்பார்ப்பதைவிடவும் முக்கியமானது ஒன்று இருக்கிறது. சம்பந்தப்பட்ட பெண்கள்தாம் தம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அழகு எனக்கு முக்கியமில்லை, என்னிடம் வேறு திறமைகள் உள்ளன என்று அந்தப் பெண்தான் நம்ப வேண்டும். எம்.எஸ்.சுப்பு லட்சுமியைப் பாராட்டாதவர்களோ, கொண்டாடாதவர்களோ இருக்க முடியுமா? அவரது முதுமையின் அழகை நாமெல்லாம் ரசிக்கவில்லையா?

சமுதாயம் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்... சமுதாயத்தின் பார்வை மாற வேண்டும் என்றெல்லாம் நினைக்காமல் நாம் நம்மை ஏற்றுக்கொள்வதும் நம் பார்வையை மாற்றிக்கொள்வதும்தான் சரி!’’