என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு உங்கள் கையில்!

சரும பராமரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
சரும பராமரிப்பு

சரும பராமரிப்பு

பொன்மேனி மிளிரட்டும்!

மா
சு மருவற்ற, பட்டுப்போன்ற, பொலிவான சருமத்தையும் தேகத்தையும் பெறுவதற்கான ஆசை யாருக்குத்தான் இருக்காது... என்றாலும் நம்மில் பலர் முகப் பருக்களில் தொடங்கி மருக்கள் வரை ஏராளமான சருமப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறோம். இதுபோன்ற சருமப் பிரச்னைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நபர்களும் உண்டு. குறிப்பாக, இளம் வயதுப் பெண்கள். அவர்களில் சிலர் தங்கள் முகங்களில் ஏற்படும் கரும்புள்ளிகளாலும், பருக்களாலும் தன்னம்பிக்கை இழப்பதைக் காண்கிறோம்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

சருமத்தின் நிறம், அழகுக்கான அடையாளமல்ல என்று நம் மனதில் பதியவைப்போம். அதே நேரத்தில், மாசற்ற முகமும், பளபளப்பான தேகமும் ஆரோக்கியத்தின் அங்கம் என்பதை உணர்ந்து, அதற்கு இடையூறாக இருக்கும் காரணிகளைக் களைவோம்.

நமக்கு ஏற்படும் சருமப் பிரச்னைகள் எதனால் ஏற்படுகின்றன என்பதை அறிந்தாலே அவற்றை எளிதில் குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். பருக்கள் முதல் படர்தாமரை வரை ஒவ்வொரு சருமப் பிரச்னையும் ஏற்படுவதற்கான காரணம் முதல், அதிலிருந்து குணம் பெறுவதற்கான தீர்வுவரை இந்த இணைப்பிதழில் வழிகாட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

 செல்வி ராஜேந்திரன்
செல்வி ராஜேந்திரன்

முகப்பருக்கள் ஏற்படுவது இதனால்தான்!

நாம் தினமும் ஆக்ஸிஜனை உள்வாங்கி சுவாசிப்பதுபோல் நம் சருமத்தில் உள்ள செல்களும் சுவாசிக்கும். அவற்றின் சுவாசத்துக்காகக் கண்ணுக்குத் தெரியாத சின்னச் சின்ன நுண் துவாரங்கள் சருமத்தின் மேற்பகுதியில் இடம்பெற்றுள்ளன. சருமத்தில் ஆய்லி ஸ்கின், டிரை ஸ்கின், காம்பினேஷன் ஸ்கின் எனப் பலவிதம் உண்டு. இவற்றில், ஆய்லி ஸ்கின் உள்ளவர்களுக்குச் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக எண்ணெயைச் சுரக்கும். இந்த எண்ணெய் மேற்கூறிய நுண்துவாரங்கள் வழியேதான் வெளியேறும்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

எண்ணெய் அதிக அளவில் சுரக்கும்போது அது துவாரங்களை அடைத்துக்கொள்ளும். மேலும் இதனுடன் காற்றிலுள்ள மாசு, நுண்ணுயிர்கள் மற்றும் நாம் முகத்துக்குப் பூசும் டால்கம் பவுடர் என எல்லாம் சேர்ந்துகொண்டு, சரும நுண்துளைகளை முழுவதும் அடைத்துவிடும். மேற்கொண்டு சுரக்கும் எண்ணெய், அடைபட்ட துளைகளின் வழியே வெளியேற முடியாமல் சருமத்தின் கீழ் அடுக்கிலேயே சேகரமாகும். இவ்வாறு சேமிக்கப்படும் எண்ணெய், நுண்துளைகளை அடைத்திருக்கும் மாசு மற்றும் நுண்ணுயிரிகளுடன் சேர்ந்து சீழ் நிறைந்த சிறு சிறு கட்டிகளை உண்டாக்கும். இந்த கட்டிகளே `பருக்கள்' (Pimples) எனப்படுகின்றன.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

ஆய்லி ஸ்கின் உள்ளவர்களுக்கும், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவோருக்கும் பருக்கள் அதிகம் ஏற்படலாம். சிலருக்கு சில உணவுப்பொருள்கள் ஏற்படுத்தும் அலர்ஜியின் காரணமாகவும் பருக்கள் ஏற்படலாம்.

பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பூப்பெய்தும் தறுவாயில் பருக்கள் ஏற்படத் தொடங்கிவிடும். மேலும், ஒவ்வொரு மாதவிடாய் நேரத்திலும் பருக்கள் தோன்றி மறையலாம். அவர்களின் உடலுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணம். உங்களுக்கு எந்தக் காரணத்தால் பருக்கள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிந்து அதிலிருந்து விடுபட, ஒரு சரும மருத்துவரின் உதவியை நாடலாம். பருக்களால் அவதிப்படுவோர் `சாலிசிலிக் ஆசிட்' (Salicylic Acid) உள்ள ஃபேஸ்வாஷை பயன்படுத்தலாம்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

பருக்களைக் கிள்ளினால்...

பருக்களைக் கைவைத்து அழுத்தும்போது அது உடைந்து, அதைச் சுற்றிலும் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவலாம். அதனால் முகத்தில் உள்ள பருக்களை கைகளால் அழுத்தவோ, கிள்ளிவிடவோ கூடாது.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!
torwai

வறண்ட சருமம் உள்ளவர்கள்வெந்நீரில் குளிக்கலாமா?!

சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் தேவையான அளவுக்குச் சுரக்கப்படாதபோது சருமம் வறட்சியடைகிறது. சிலர் மரபுரீதியாக வறண்ட சருமத்தைப் பெற்றிருப்பார்கள். குளிப்பதற்கு எப்போதும் வெந்நீர் பயன்படுத்துபவர்களுக்கும் சருமம் வறட்சியடையும். சோப்பு போட்டு அடிக்கடி முகத்தைக் கழுவிக்கொண்டே இருந்தாலும், சருமத்தில் உள்ள எண்ணெய் மூலக்கூறுகள் எல்லாம் வெளியேறி சருமம் வறண்டுவிடும். காலநிலை மாற்றமும் சருமம் வறட்சியடைய முக்கிய காரணம். தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

சருமம் வறட்சியடைவதைத் தடுக்க வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும். அதேபோல், குளிக்கிறேன் என்ற பெயரில் அரைமணி நேரத்துக்கு மேல் தண்ணீரிலேயே நின்று கொண்டிருக்கக் கூடாது. அதுவும் சருமத்தின் எண்ணெய்ப் பசையை நீக்கக்கூடும். குளித்து முடித்த மூன்று நிமிடங்களிலேயே சருமத்தில் மாய்ஸ்ச்சரைசர் க்ரீம் தேய்த்துக்கொள்வது நல்லது. இது சருமத்தில் இருக்கும் நீர் மூலக்கூறுகள் ஆவியாகாமல் தடுக்கும்.

உங்கள் சருமம் அதிகமாக வறட்சியடைந்திருக்கும்பட்சத்தில் குளிப்பதற்கு முன்பு உடலில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெய் அதற்கு சிறந்த பரிந்துரை. தண்ணீர் நிறைய அருந்துங்கள். சிலர் எண்ணெய் உணவுகளை முழுவதுமாகத் தவிர்ப்பார்கள். இதன் காரணமாகவும் சருமம் வறண்டு போகலாம். உடலுக்கு எண்ணெய்ச் சத்தும் அவசியம் என்பதால் குறைந்த அளவு எண்ணெயை அல்லது நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சாறு நிறைந்த பழங்களை அதிகமாகச் சாப்பிடலாம்.

ஆய்லி ஸ்கின் Vs பால் பொருள்கள்!

நம்மில் சிலருக்கு எப்போதும் முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டிருக்கும், பருக்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எல்லாம் ஆய்லி ஸ்கின் பிரச்னையே. சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெயைச் சுரக்கும்போது ஆய்லி ஸ்கின் ஏற்படுகிறது.

நம் சருமத்தில் இருக்கும் எண்ணெய்ச் சுரப்பிகள் அளவுக்கதிகமாக சுரப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முதலாவது, நம் உணவுப்பழக்கம். எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவு களையும், பால் சம்பந்தமான உணவுகளையும் அதிகமாக எடுத்துக் கொண்டால் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரக்கும். நமக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ்கூட எண்ணெய் சுரப்பைத் தூண்டக் கூடியது. நமக்கு ஏற்படும் அதிகப்படியான மன அழுத்தத்தால் `கார்டிசால்' (Cortisol) என்ற ஹார்மோன் தூண்டப்பட்டு எண்ணெய் சுரப்பிகளை தூண்டுகிறது. இதனாலும் ஆய்லி ஸ்கின் பிரச்னை ஏற்படுகிறது.

கருவளையம்... கவலை வேண்டாம்!

கருவளையம் என்பது கண்களைச் சுற்றிலும், குறிப்பாகக் கண்களுக்குக் கீழே உள்ள பகுதியின் சருமத்தின் நிறம் அடர்ந்து காணப்படுவது. கருவளையம் உள்ளவர்களின் கண்ணுக்குக் கீழே உள்ள சருமத்தைக் கைகளால் சற்று இழுத்துப் பார்த்தோம் என்றால், முகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள நிறத்தைக் காட்டிலும் அது அடர்ந்து கருமையாகக் காணப்படுவது நன்றாகத் தெரியும்.

கண்களைச் சுற்றிலும் உள்ள சருமப் பகுதியானது மிகவும் மிருதுவானது. அந்தப் பகுதியை அடிக்கடி கைகளால் கசக்கும்போது, சருமத்தின் உட்புறமிருக்கும் சின்னச் சின்ன ரத்தக் குழாய்கள் நசுக்கப்பட்டு, அவற்றிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கிவிடும். இதன் காரணமாகக் கண்களைச் சுற்றி இருக்கும் சருமத்தின் நிறம் கருமையாக மாறுகிறது.

தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ், சத்துக் குறைபாடு, அதிக நேரம் கணினி, மொபைல் பார்த்துக்கொண்டிருப்பது எனப் பல காரணங்களால் கருவளையம் ஏற்படலாம். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், கண்களில் அரிப்பு போன்ற அலர்ஜி உள்ளவர்கள் மற்றும் அனீமியா பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கருவளையம் ஏற்படலாம். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

இவற்றில் எந்தக் காரணத்தால் உங்களுக்குக் கருவளையம் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கருவளையம் வராமல் தடுக்க முருங்கைக்கீரை, எள், பேரீச்சை போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை நிறைய சாப்பிடுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரிடம் ஆலோசித்து `காட் லிவர் ஆயில்' (Cod Liver Oil) மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். 7 - 8 மணிநேர உறக்கம், முதன்மையான ப்ரிஸ்கிரிப்ஷன்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!
PeopleImages

ஆய்லி ஸ்கின்னுக்கு மாய்ஸ்ச்சரைசர் தேர்ந்தெடுக்கும்போது...

ஆய்லி ஸ்கின் உள்ளவர்கள் எண்ணெய் மிகுந்த உணவுகளை உண்பதைத் தவிர்க்கவும். மேலும், `சாலிசிலிக் ஆசிட்', ஃபேஸ்வாஷை பயன்படுத்தலாம். இந்த சாலிசிலிக் ஆசிட் எண்ணெய் மூலக்கூறுகளைக் கரைக்கக்கூடியது. முகத்தில் அதிகமாக எண்ணெய் வடியும் நேரங்களில் இந்த ஃபேஸ்வாஷ் கொண்டு முகம் கழுவ லாம். ஆயில் இல்லாத மாய்ஸ்ச்சரை சரைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவும்.

சருமத்தில் நிற மாற்றம்... காரணங்கள்

நம்மில் பெரும்பாலானோருக்குச் சருமத்தில் நிறமாற்ற பிரச்னை ஏற்பட்டிருக்கும். அதாவது, முகத்தில் நெற்றிப் பகுதி ஒரு நிறத்திலும், கன்னங்கள் வேறொரு நிறத்திலும் காணப்படலாம். சிலருக்கு நெற்றி, கன்னம், கழுத்துப் பகுதிகளில் சருமத்தின் நிறம் கறுத்துக் காணப்படுவது இந்த நிற மாற்ற பிரச்னையின் காரணமாகத்தான்.

சூரியன் மற்றும் மின் விளக்குகளிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் (UV) நம்மீது பட்டவுடன் சருமத்தில் `மெலனின்' (Melanin) என்ற நிறமி சுரக்கும். புற ஊதா கதிர்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தின் செல்களைக் காக்கவே இந்த நிறமி சுரக்கிறது. இது இயற்கையான நிகழ்வு. இதன் காரணமாகவே வெளியில் அதிக நேரம் சுற்றும்போது, நம் உடலில் சூரிய ஒளி படும் இடங்கள் எல்லாம் கறுத்துவிடுகிறது. இந்த `டானிங்' (Tanning) இயற்கையானது. நிற மாற்றம் வேறு காரணங்களாலும் ஏற்படலாம்.

காஸ்மெடிக்ஸ் மற்றும் தலைவலி, உடல்வலிக்கு நாம் பயன்படுத்தும் தைலம் போன்ற மருந்துகள் உடலில் நிற மாற்றத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு ஹேர் டை அலர்ஜியின் காரணமாகச் சருமத்தில் இந்தப் பிரச்னை ஏற்படலாம். உடலில் அதிகப்படியாகச் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் உடலில் எந்த இடங்களில் எல்லாம் சேமிக்கப்படுகிறதோ அந்த இடங்கள் எல்லாம் அடர்ந்த நிறத்தில் மாறும். தைராய்டு ஹார்மோன் பிரச்னை உள்ளவர்களுக்கும் உடலில் நிற மாற்றம் ஏற்படும்.

நிறமாற்ற பிரச்னைக்குத் தீர்வு காண, சருமத்தின் தன்மைக்கு ஏற்ற ஃபேஸ்வாஷ்களை பயன்படுத்தலாம். டிரை ஸ்கின் உள்ளவர்கள் கெமிக்கல் இல்லாத ஃபேஸ்வாஷையும், ஆய்லி ஸ்கின் உள்ளவர்கள் கிளைகாலிக் ஆசிட், சாலிசிலிக் ஆசிட் உள்ள ஃபேஸ் வாஷையும் பயன்படுத்தலாம். ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக நிற மாற்றம் ஏற்பட்டால் அந்தப் பிரச்னைக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ளவும்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

அது கருவளையமல்ல...

சிலருக்கு முகத்தில் கண்கள் உள்ளடங்கி இருக்கும். அவர்களின் முகத்தில் சூரிய ஒளி அல்லது ஏதேனும் லைட் படும்போது, அது கண்களைச் சுற்றிலும் நிழலை ஏற்படுத்தும். இந்த நிழல் சிலருக்குக் கருவளையம் போன்ற தோற்றத்தைக் கொடுக்கலாம்.

கேட்ஜெட்ஸின் ஒளி... சருமத்துக்கும் தீங்கு!

அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படுவதைத் தவிர்ப்பது நல்லது. எலெக்ட்ரானிக் கேஜெட்களிலிருந்து வரும் ஒளியின் காரணமாகவும் நிறமாற்றம் ஏற்படும் என்பதால் அவற்றை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

வெடிப்புகள் இல்லாத உதட்டுக்கு... வெண்ணெய்!

வறண்ட உதடுகள் பலரின் பிரச்னை. உதட்டில் எண்ணெய்ப் பசை இல்லாமல் போவதால் அது வறண்டுவிடுகிறது. உதட்டில் இருக்கும் எண்ணெய்ச் சுரப்பிகள் குறைவாகச் சுரப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. நாம் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கின் தரமும் இதற்கு ஒரு காரணம். தரம் குறைந்த லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தும் போது வறட்சியுடன் சேர்ந்து அலர்ஜியும் ஏற்படுகிறது.

உதடு வறண்டுபோனால் சிலர் நாவால் உதட்டை ஈரம் செய்வார்கள். இப்படிச் செய்வதால் உதட்டில் ஈரப்பதம் ஏற்படாது; வறட்சிதான் அதிகமாகும். நம் உமிழ்நீரில் எண்ணெய் மூலக்கூறுகளை நீக்கும் என்ஸைம்கள் உள்ளன. அதனால், ஏற்கெனவே வறட்சியாக உள்ள உதடு உமிழ்நீர்படும்போது மேலும் வறண்டு போகும். சிலருக்கு அடிக்கடி உதட்டைக் கடிக்கும் பழக்கும் இருக்கும். இதுவும் உதடு வறட்சியாவதற்கான காரணம்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட அதிகம் தண்ணீர் குடியுங்கள். உதட்டுக்குத் தரமான அழகுசாதனப் பொருள்களை உபயோகியுங்கள். நிறமூட்டிகள் அற்ற வெள்ளை நிற பற்பசையை உபயோகிப்பதே சிறந்தது. தேன் அல்லது வெண்ணெயில் சிறிதளவு வெள்ளை சர்க்கரையைக் குழைத்து உதட்டில் தடவலாம். ஆயில் மாய்ஸ்ச் சரைசர் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.

மருவைத் தவிர்க்க சருமப் பராமரிப்பும் சுத்தமும்தான் சிறந்த வழிகள். தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். ஆன்டிசெப்டிக் பவுடர் வகைகள் உபயோகிக்கலாம். அதிக நேரம் வியர்வையுடன் இருப்பவர்கள், சருமப் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

மருக்களை எப்போது நீக்க வேண்டும்?

மருக்கள் முகத்தில், கழுத்தில், உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். என்றாலும் முகம் மற்றும் கழுத்தில் அதிகப்படியாகத் தென்படும். மேலும், உடலில் மடிப்புகளுள்ள பகுதிகளில் உருவாகும். இவை மச்சம் போன்று சிறு அளவில்தான் தென்படும். இவற்றால் சருமத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. ஆனால் முகத்தின் பொலிவை மருக்கள் கெடுத்துவிடும். சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, வைரஸ் கிருமியின் தாக்கம், வயது முதிர்வு, வியர்வையோடு இருப்பது, முறையான பராமரிப்பு இல்லாமை போன்ற பலவித காரணங்களால் மரு உருவாகும். சருமத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாததும் மரு ஏற்பட முக்கிய காரணம்.

மருக்களின் அளவு பெரிதாகும்போது, அந்த இடத்தில் வடு உருவாகிவிடலாம் என்பதால் அவற்றை நீக்கி விடுவது நல்லது. சரும மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தழும்புகள், கரும்புள்ளிகளை சிகிச்சை மூலம் நீக்கலாம்!

முகத்தில் ஏற்படும் பருக்களைக் கவனிக்காமல் விடும்போது நாளடை வில் அவை தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளாக உருமாறுகின்றன. சருமத்தில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் சுரக்கும் எண்ணெய், சரும நுண் துவாரங்களை அடைத்திருக்கும் மாசு மற்றும் நுண்ணுயிரிகளுடன் சேர்ந்து சீழ் நிறைந்த சிறு சிறு கட்டிகளான பருக்களை உருவாக்கு கின்றன. இந்தப் பருக்களைச் சிலர் கைகளால் கிள்ளும்போது கட்டிகள் சிறுசிறு வடுக்களாக மாறிவிடுகின்றன. மேலும் பரு கட்டிகள் சருமத்தின் கீழ் அடுக்கில் வெடித்து அங்கேயே படிந்து விடுகின்றன. இதனால் பொலிவைக் கெடுக்கும் கரும்புள்ளிகள் முகத்தில் ஏற்படுகின்றன. முற்றிய பரு குணமடைந்து வரும் நேரத்தில் அதன் மீது சூரிய ஒளிபட்டால், கரும்புள்ளியாக மாறிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஒரே தீர்வு, பருக்களை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டும். கரும்புள்ளி மற்றும் தழும்பாக மாறவிடக் கூடாது. பருவைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. மஞ்சள், பயத்த மாவு போன்ற கொர கொரப்பான பொருள் களைப் பருக்கள் உள்ள இடத்தில் தேய்க்கக் கூடாது. உங்கள் சருமத்துக்குத் தகுந்த ஃபேஸ்வாஷ், காஸ்மெடிக்ஸ் போன்றவற்றை தரமானதாக வாங்கிப் பயன்படுத்துங்கள். தழும்புகள், கரும்புள்ளிகளை சிகிச்சைகள் மூலம் நீக்க வழியிருக்கிறது. சரும மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்ளலாம்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

தாடையில் ரோம வளர்ச்சி... ஆரோக்கிய பிரச்னை!

பெண்களில் சிலருக்குத் தாடை, உதட்டுக்கு மேலே உள்ள பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் முடி வளரலாம். இது ஹார்மோன் பிரச்னையால் ஏற்படக்கூடும். குறிப்பாக இவை தைராய்டு மற்றும் பிசிஓஎஸ் (PCOS) போன்ற ஹார்மோன் பிரச்னைகளுக்கான அறிகுறிகள். பெண்களுக்கு தாடி, மீசை வளர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொண்டு தங்களுக்கு இருக்கும் ஹார்மோன் பிரச்னையைக் கண்டறிய வேண்டும். மேலும் தாமதப்படுத்தாமல் அந்தப் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. அந்த ரோமங்களை நீக்க விரும்பினால் சரும மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு, அதன்படி செயல்படவும். கைகளால் பிடுங்கி எடுப்பதைத் தவிர்க்கவும்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

செருப்பு, சாக்ஸ், ஸ்க்ரப்...

பாத வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், எடை குறைந்த, லெதர் செருப்புகளையே அணிய வேண்டும். அதேபோல், மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துபவர்கள் இரவில் பாத வெடிப்பில் க்ரீமைத் தடவி அப்படியே விட்டுவிடாமல், மேலே சாக்ஸ் அணிந்து கொள்வது நல்லது. குளிக்கும்போது பாதத்துக்குரிய ஸ்க்ரப்பர்களைப் பயன்படுத்தி கால்களை லேசாக `ஸ்க்ரப்' செய்யலாம்.

பாத வெடிப்பு... உடல் எடையும் காரணம்!

வறட்சியான தேகமும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணங்கள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது சருமம் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். நம் காலில் உள்ள சருமம் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி சருமத்தில் வெடிப்பு உண்டாகும். ஒரு சிலருக்குத் தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நீரிழிவாளர்கள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான நீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். காலையிலும் இரவிலும் பாதத்தை நீரில் நன்றாகக் கழுவிச் சுத்தம்செய்து மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்தினால் வெடிப்பு ஏற்படாது.

வெண்புள்ளிகள்... யாருக்கும் ஏற்படலாம்!

சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்கக்கூடிய `மெலனின்' நிறமியின் சுரப்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்துபோவதால் அந்தப் பகுதியில் வெண்புள்ளிகள் (Vitiligo) ஏற்படுகின்றன. இது தொற்றுநோயல்ல, ஒருவகை சருமக் குறைபாடே. இந்தப் பிரச்னை, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வயதினருக்கும் வரலாம். கை கால் முகத்தில் தொடங்கி இனப்பெருக்க உறுப்புகள் வரை எங்கு வேண்டுமானாலும் வெண்புள்ளிகள் ஏற்படலாம்.

மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள், தைராய்டு, நீரிழிவு, வைட்டமின் பி 12 குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்தச்சோகையின் தீவிர நிலை போன்ற பல காரணங்களால் வெண்புள்ளிகள் உடலில் உருவாகின்றன. உங்கள் சருமத்தில் வெண்புள்ளிகள் ஏற்படும் பட்சத்தில் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை அணுகி பிரச்னைக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். களிம்புகள், ஸ்டீராய்டு சிகிச்சை, அறுவைசிகிச்சை என பாதிப்புக்கு ஏற்ற வகையில் மருத்துவர் சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பார்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

இது மிக முக்கியம்!

எல்லாவற்றையும்விட, வெண்புள்ளி குறைபாடு ஏற்பட்டவருக்கு அவர் குடும்பத்தின் அன்பும் ஆதரவும் மிக முக்கியம். மனதளவில் அவர் சரிந்துபோகும்போது குடும்பமும் சுற்றமும், `இது ஒரு சருமக் குறைபாடு அவ்வளவுதான், இதனால் ஆரோக்கியத்தில் வேறு எந்தப் பிரச்னையும் ஏற்படப்போவதில்லை' என்பதைப் புரிந்துகொண்டு, அவருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இளமையிலேயே சருமச் சுருக்கமா?

சருமச் சுருக்கம் என்பது, வயது ஆக ஆக ஏற்படக்கூடிய இயற்கையான ஒரு விஷயம்தான். ஆனால், சிலருக்கு இளம் வயதிலேயே சருமச் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தந்துவிடுகிறது. சருமப் பராமரிப்பில் அக்கறையின்மை, ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பல்வேறு காரணங்களால் சருமச் சுருக்கம் ஏற்படலாம்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

அதிக நேரம் சூரிய ஒளி நேரடியாகப்படும்படி வேலைபார்ப்பதும், உடல் செல்களைப் பாதித்துத் சருமச் சுருக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் சூரியனிலிருந்து வரும் UV கதிர்கள், உடலிலுள்ள `கொலாஜென்' எனும் என்சைமை பாதிக்கக்கூடியவை. இந்த கொலாஜென் என்சைம்தான் இளமையைத் தரக்கூடிய, இளமைக்குக் காரணமான என்சைம். ஆகவே, UV கதிர்களின் பாதிப்புக்கு உள்ளாவதைத் தவிர்க்க வேண்டும்.

கொலாஜென்... இயற்கையாக அதிகரிக்க!

குளிர்ச்சியான பழங்கள், காய்கறிகளை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ளவும். வைட்டமின் சி உணவுகள் உடலில் உள்ள கொலாஜென் அதிகரிக்க வழிவகுக்கும். கோழி, மீன், முட்டை, பூண்டு, கீரை வகைகள், தக்காளி, முந்திரி உள்ளிட்ட உணவு வகைகள், கொலாஜெனை அதிகரிக்கக் கைகொடுக்கும். இளமையான சருமம் விரும்புபவர்கள், அதற்கான கவனம் மற்றும் அக்கறையை உணவிலும் காட்ட வேண்டும்.

தேமல், படர்தாமரை... நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலும் ஏற்படலாம்!

தேமல், படர்தாமரை ஆகியவை நுண்ணுயிரிகளான பூஞ்சை களால் (Fungus) நம் சருமத்தில் ஏற்படும் ஒருவித தொற்று நோய்கள். மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை கால் போன்ற இடங்களில் சருமம் சிறிது நிறம் குறைந்து அல்லது நிறம் அதிகரித்து மெல்லிய செதில்களுடன் திட்டுத்திட்டாக படைகள் போன்று காணப்படுவது தேமலின் முக்கிய அறிகுறி. அதேபோல் சருமத்தில் ஆங்காங்கே அரிப்புடன் கூடிய சிவப்புத் திட்டுகளாக படர்தாமரை ஏற்படும். வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும், நீரிழிவு உள்ளவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும் இந்தத் தொற்றுகள் எளிதில் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும் இதனால் பாதிக்கப்படலாம்.

சுத்தமும் சுகாதாரமும் மட்டுமே இதற்கான ஒரே தீர்வு. நகங்களை வெட்டி கைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். தேமல், படர்தாமரை சருமத்தில் ஓர் இடத்தில் ஏற்பட்டாலும் உடல் முழுவதும் பரவும் என்பதால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

மச்சம் வளரத் தொடங்கினால்...

நம் சருமத்தில் காணப்படும் சிறிய கறுநிறப் புள்ளிகளை மச்சம் என்கிறோம். இவை பெரும்பாலும் அழகு, அதிர்ஷ்டம் என்ற அடிப்படையிலேயே பார்க்கப்படுகின்றன. இவற்றால் பெரும்பாலும் பிரச்னைகள் எதுவும் ஏற்படுவதில்லை. ஒருவேளை உங்களின் மச்சம் வளரத் தொடங்கினாலோ, மச்சத்திலிருந்து ஏதேனும் திரவம் கசிந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. ஏனெனில், சில நேரத்தில் இவை கேன்சருக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

வறண்ட சருமமும் வைட்டமின் உணவுகளும்!

நம் சருமத்துக்குப் போதுமான நீர் கிடைக்காமல் வறட்சி, சுருக்கங்கள், வீக்கம் மற்றும் விரிசல்கள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும் வகையில், பல்வேறு வைட்ட மின்கள் நம் சருமத்தைப் பாதுகாக்க வல்லன. கீழே, கொடுக்கப் பட்டுள்ள வைட்டமின்களை உணவின் மூலம் எடுத்துக்கொண்டால் சருமம் பளபளப்பாகவும் இருக்கும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

சருமச் சுருக்கங்களுக்கு... வைட்டமின் ஏ உணவுகள்!

சருமத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கவும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் ஏ மிக முக்கியம். போதுமான வைட்டமின் ஏ எடுத்துக் கொள்ளவில்லை என்றால் சருமம் வறண்டு போகும். வைட்டமின் ஏ மற்றும் அதன் உட்பொருளான ரெட்டினால், சருமச் சுருக்கங்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது சருமத்தின் மேற்புறத்தைப் பாதுகாத்து சருமத்திலிருந்து நீர் இழப்பைத் தடுக்கிறது.

முட்டையின் மஞ்சள் கரு, மீன், கேரட், கீரைகளில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. மா, திராட்சைப்பழம் மற்றும் தர்பூசணி போன்ற பழங்கள் கரோட்டினாய்டுகளைக் கொண்டுள்ளன. அவை செரிமானத்தின்போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்படுகின்றன.

பொலிவுக்கு... வைட்டமின் ஈ உணவுகள்!

வைட்டமின் ஈ காற்று மாசுபாடு, சூரிய ஒளி போன்றவற்றால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுத்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் என்றும் இளமையோடும் பொலிவுடனும் இருப்பீர்கள். வைட்டமின் ஈ கொழுப்பைக் கரைக்கக்கூடியது. அது ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது. எனவே, சருமத்தில் செல்களில் நிகழும் ஆக்ஸிஜனேற்றத்தின் சேத விளைவுகளிலிருந்து நமது சருமத்தை இந்த வைட்டமின் ஈ பாதுகாக்குகிறது.

அவகாடோ, கடுகு, கீரைகள், பாதாம், வேர்க்கடலை, பெர்ரி, கிவி மற்றும் முழு தானியங்களில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. வறண்ட சருமம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர் களுக்கு இந்த உணவுகள் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

சரும வறட்சிக்கு... வைட்டமின் டி உணவுகள்!

சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க வைட்டமின் டி மிக முக்கியமானது. சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் படாத காரணத்தால் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படும். குறிப்பாக, குளிர்காலத்தில் இது அதிகம் ஏற்படும். இதன் குறைபாட்டால் சருமம் வறண்டு போகும். வைட்டமின் டி நிறைந்த உணவுகளான காளான்கள், மத்தி, சால்மன் மீன் வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, சீஸ், தானியங்கள், சோயா பால் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இளமைக்கு... வைட்டமின் சி உணவுகள்!

உணவை நம் உடல் உட்கிரகிக்கும்போது ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில், செல்களின் மூலக்கூறுகளுக்கு கேடு விளைவிக்கும் `ஃப்ரீ ராடிகிள்கள்' (free radicals) உருவாகும். இந்த ஃப்ரீ ராடிகிள்களிலிருந்து சருமத்தைக் காக்க, உணவில் உள்ள சில சத்துமிக்க மூலக்கூறுகளான `ஆன்டிஆக்ஸிடன்ஸ்கள்' (Antioxidants) துணை புரியும். வைட்டமின் சி, சருமத்துக்கு ஆன்டி ஆக்ஸிடன்டாகச் செயல்படும். மேலும், சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் கொலாஜென்களை உற்பத்தி செய்யும்.

வைட்டமின் சி சத்து குறைந்தால் வறண்ட சருமம், சருமச் சுருக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, உருளைக்கிழங்கு, புரொக்கோலி போன்ற காய்கறிகளில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கொலாஜென் உற்பத்தியைத் தூண்டுவது மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத் தையும் பராமரிக்கிறது.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

காயங்கள் குணமாக... வைட்டமின் கே உணவுகள்!

வைட்டமின் கே, சருமத்தில் உள்ள காயங்களை குணப்படுத்த உதவி செய்கிறது. வறட்சி காரணமாக குளிர்காலத்தில் நமக்கு ஏற்படும் சரும பாதிப்பு எளிதில் குணமடைய இது அவசியம். பச்சைக் காய்கறிகளில் முக்கியமாகக் கீரை, புரொக்கோலி, முட்டைகோஸ் ஆகியவற்றில் வைட்டமின் கே நிறைந்துள்ளது.

க்ளென்ஸிங், டோனிங், மாய்ஸ்ச்சரைஸிங் CTM (Cleansing - Toning - Moisturising)

க்ளென்ஸிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ச்சரைசிங்... தினசரி பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை சருமப் பராமரிப்பு. சருமத்தை முதலில் க்ளென்ஸ் செய்ய வேண்டும். பிறகு டோனிங் செய்முறை, அதைத் தொடர்ந்து மாய்ஸ்ச்சரைஸிங் செய்முறை என்று பின்பற்ற வேண்டும்.

க்ளென்ஸர் - சருமத்தின் படிந்துள்ள அழுக்கை நீக்கிச் சுத்தப்படுத்துவது. இதற்கு பசும்பால், தயிர் போன்ற இயற்கை பொருள்களைப் பயன்படுத்தலாம். கொஞ்சம் பஞ்சில் சிறிது பால்/தயிர் தோய்த்தெடுத்து அதன் மூலம் சருமத்தைச் சுத்தப்படுத்த, அழுக்குகள் நீங்கும்.

டோனர் - சருமத் துவாரங்களை மூடச்செய்து, இறுகச் செய்யும். ரோஸ் வாட்டர், சிறந்த டோனராகச் செயல்படும். பஞ்சில் ரோஸ் வாட்டரைத் தோய்த்தெடுத்து, சருமத்தில் ஒற்றிக்கொள்ளலாம்.

மாய்ஸ்ச்சரைசர் - சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கும். கற்றாழை, பப்பாளி, தயிர் போன்ற இயற்கை மாய்ஸ்ச்சரைசர்களை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்துக் கழுவி வரலாம்.

சருமக் கழிவுகளை நீக்க... டீடாக்ஸ்!

சருமம், நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு. தூசு, ரசாயனங்கள் கலந்த தண்ணீர், மாசு, காஸ்மெடிக்ஸ் பொருள்களின் அதிக பயன்பாடு உள்ளிட்ட இன்னும் பல காரணங்கள் சருமத்தில் நச்சுப் பொருள்கள் தேங்கக் காரணமாகின்றன. அவற்றையெல்லாம் வெளியேற்ற சருமத்தை டீடாக்ஸ் செய்ய வேண்டியது அவசிய மாகிறது. சரிவிகித உணவு முதல் உடற்பயிற்சிகள் வரை, சருமத்தை நச்சுநீக்கம் செய்யப் பல வழிகள் உள்ளன. சரும மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உங்களுக்குத் தகுந்த ஒரு வழியை தேர்ந்தெடுத்துப் பின்பற்றுங்கள்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

வியர்வைக்குத் தீர்வு... தண்ணீர்!

அதிகம் தண்ணீர் குடிப்பதன் மூலம், உடல் துர்நாற்றத்திலிருந்து விடுபடலாம். அதாவது தண்ணீர் அதிகம் குடித்தால், உடலில் உள்ள நச்சுகள் சிறுநீர் வாயிலாக வெளியேறும். இதனால் அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுவதைத் தவிர்க்கலாம்.

கண்கள் பளிங்குபோல் மின்ன... தண்ணீர் மருந்து!

உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவது, நம்மை பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும் எளிய முறை. தினமும் தண்ணீரை போதுமான அளவில் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் சருமமும் வறட்சியின்றி மென்மையாக இருக்கும். இளமையிலேயே சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைத் தவிர்க்கலாம். நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால், கண்கள் பொலிவிழந்து காணப்படும். எனவே தண்ணீரைத் தினமும் போதிய அளவில் குடித்துவந்தால், நீர்ச்சத்து அதிகரித்து கண்கள் பளிச்சென்று காணப்படும். இளமையைத் தக்கவைக்கத் தண்ணீர் சிறந்த மருந்து. ஏனெனில் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மை யைச் சீராகப் பராமரித்து, சுருக்கம், சரும வறட்சி போன்றவற்றைத் தடுத்து, எப்போதும் இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கிறது.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

தூக்கமும் சருமமும்!

உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டும் வலுவாக இருக்க தினசரி எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். உரிய நேரத்தில் தூங்காமல் இருப்பதும், போதுமான நேரம் தூங்காமல் இருப்பதும் உடல், மன ஆரோக்கியத்தோடு சரும ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

செல்கள் உடலில் வளர்வதும் அழிவதும், புதிய செல்கள் உருவாவதுமான இந்த சீரான சுழற்சி, சருமத்தின் புத்துணர்ச்சியையும் பொலிவையும் பளபளப்பையும் அதிகரிக்கும். ஆனால் தூக்கமின்மை பிரச்னையால், இறந்த செல்கள் வெளியேறாமல் சருமத்தில் தங்கி முதிர்ச்சியான தோற்றத்தை வெளிப் படுத்தும். இதன் காரணமாகவே ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லை என்றாலும் முகம் களையிழந்து காணப்படுகிறது. அதனால், எக்காரணம் கொண்டும் தூக்கத்தைத் தவிர்க்காதீர்கள், தொலைக்காதீர்கள்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

உடற்பயிற்சியும் ரத்த ஓட்டமும்!

உடற்பயிற்சி, சருமத்தின் ஆரோக்கியத்துக்கு பங் களிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று. சருமத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உடற்பயிற்சி உதவுகிறது. தசைகளை நெகிழவைக்க யோகா, ஜிம், ஜாகிங் என உங்களால் இயன்ற பயிற்சி களை செய்யுங்கள்.

இது வியர்வையையும், உடல் நச்சுகளையும் வெளி யேற்ற உதவும். சருமத்துக்கு ரத்த ஓட்டம் தடையின்றி கிடைக்கச் செய்யும். சருமத்தின் ஜொலிஜொலிப் புக்கு வழிசெய்யும். தினமும் காலை மற்றும் மாலையில் குறைந்தபட்சம் அரை மணிநேரமாவது உடற்பயிற்சிக்கு என ஒதுக்கினால் சருமம் மிளிரும்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!
ADragan

சூரிய ஒளி, சன்ஸ்க்ரீன், வைட்டமின் டி!

சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் சருமத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்று பார்த்தோம். குறிப்பாக உச்சி நேர சூரிய ஒளி சருமத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியது. அந்த நேரத்தில் மட்டும் சூரிய ஒளி சருமத்தில் படாமல் பார்த்துக்கொள்ளவும். அந்த நேரத்தில் வெளியில் செல்ல நேரிட்டால், சருமத்துக்கு சன்ஸ்க்ரீன் பூசிக்கொள்ளலாம். தவிர வீட்டிலிருக்கும்போதும் சருமத்துக்கு சன்ஸ்க்ரீன் பயன் படுத்துவது, மின் விளக்குகள் மற்றும் கேட்ஜெட்டுகளி லிருந்து வரும் நுண்ணலைகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். அதிகாலை நேரத்தில் குறைந்தது 10 நிமிடங் களாவது சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுமாறு பார்த்துக்கொண்டால், சருமத்துக்கு இயற்கையான வைட்டமின் டி சத்து கிடைத்துவிடும்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

மனசே... ரிலாக்ஸ்!

பட்டு போன்ற நம் சருமம் பாழாக முக்கிய காரணங்களில் ஒன்று, மன அழுத்தம். அடிக்கடி எதையாவது நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டும், சிந்தித்துக்கொண்டும் மன உளைச்சலிலேயே உழன்றுகொண்டிருப்பது சருமத்தின் புத்துணர்வை பாதிக்கும். சீக்கிரமே சருமச் சுருக்கங்களை ஏற்படுத்தி வயதான தோற்றத்தைக் கொடுத்துவிடும். மேலும் மன அழுத்தத்தால் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங் களாலும் சருமம் கெடலாம். ஆக, மனதை எப்போதும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ளுங்கள். தினமும் அதிகாலை யில் பத்து நிமிடங்கள் கண்களை மூடி மூச்சுப் பயிற்சி செய்வது உங்களை ரிலாக்ஸ்டாக உணரவைக்கும். அதே நேரத்தில் ஆழ்ந்த சுவாசத்துக்கும் வழிவகுக்கும்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

தலைகுளிக்க வெந்நீரா... நோ!

எண்ணெய்ப் பசை கேசம் உள்ளவர்கள் தினமும் தலையை அலசலாம். அதுவே வறண்ட கேசம் கொண்டவர்கள் ஷாம்பூ பயன்படுத்தும் தினங்களை குறைத்துக்கொள்ளலாம். அதிகம் குளிர்ச்சியான தண்ணீர், அதிகம் சூடான நீர்... இரண்டுமே கேசத்தை அலச தவிர்க்கப்பட வேண்டும். வெதுவெதுப்பான நீரிலேயே எப்போதும் தலைக்குக் குளிக்கவும்.

கேசம் பளபளக்க...

பொதுவாக, சருமத்துக்கு இணையான முக்கியத்துவத்தை கேசத்துக்கும் கொடுப்பது நம் வழக்கம். மரபு, உணவு, தட்பவெப்ப நிலை, மாசு, கேசப் பராமரிப்புக்கு நீங்கள் ஒதுக்கும் நேரம் என இவை எல்லாவற்றையும் பொறுத்தே கேசத்தின் ஆரோக்கியம் அமையும்.

அழுக்கு, பொடுகு, பிசுபிசுப்பு என்று இல்லாமல் தலையையும் கேசத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் பொடுகு பிரச்னையைத் தவிர்க்கலாம். முடி உதிர்வதைத் தவிர்க்கவும் கேச வளர்ச்சியைத் தூண்டவும், உணவில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். புரோட்டீன் நிறைந்த முட்டை, கோழி, துத்தநாகச் சத்து அடங்கிய வால்நட், ஒமேகா ஃபேட்டி ஆசிட் கொண்ட தயிர், மீன் என கேச ஆரோக்கியத்துக்கான உணவுப் பொருள்களை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

பொலிவு சாதனப் பொருள்களில்வேண்டும் கவனம்!

நீங்கள் முகத்துக்கும், சருமத்துக்கும், கேசத்துக்கும் உபயோகிக்கும் பொலிவு சாதனப் பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். தரம் குறைந்த பொருள்களைப் பயன்படுத்தும்போது அவற்றால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. காஸ்மெட்டிக்ஸ் வாங்கும்போது அது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி என எல்லாவற்றையும் செக் செய்து வாங்கவும். சிலரது சருமத்துக்கு சில காஸ்மெட்டிக்ஸ் அலர்ஜியை ஏற்படுத்தலாம். உங்கள் சருமத்துக்கு எது ஏற்றது என்பதைத் தெரிந்துகொண்டு அதையே பின்பற்றுங்கள்.

மற்றவர்களின் பரிந்துரைகளை நம்பி நம்பகத்தன்மை இல்லாத காஸ்மெட்டிக்ஸ் பொருள்களை வாங்காதீர்கள்.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

மருத்துவ ஆலோசனை அவசியம்!

உங்களுக்கு ஏதேனும் சருமப் பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அவர் பரிந்துரை செய்தால் மட்டும் அடுத்தகட்ட சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்களாகவே ஏதாவது கை வைத்தியத்தில் ஈடுபடுவது ஆபத்து. அதேபோல் இணையத்தில் பார்த்துவிட்டு மருந்தகங்களில் நீங்களாகவே மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதும் தவறு.

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு - அத்தனைக்கும் தீர்வு 
உங்கள் கையில்!

வரும்முன் காப்பதே எப்போதும் சிறந்தது. ஏதாவது சருமப் பிரச்னை ஏற்பட்டு அதிலிருந்து குணமடைவதைவிட, எந்தப் பிரச்னையும் வராமல் உங்கள் சருமத்தை பாதுகாப்பதே சிறந்தது. முதலில் உங்களின் சருமம் எப்படிப்பட்ட தன்மையைக் கொண்டது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப அதைப் பராமரியுங்கள். தகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சரும மருத்துவரிடம் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

நினைவிருக்கட்டும்... சரும ஆரோக்கியத்திலும் பராமரிப்பிலும் அக்கறை எடுத்துக்கொண்டால், வெளிப் பூச்சுகளின் தேவை இல்லாமல் போகும்!