
ஹெல்த் இஸ் வெல்த்
‘‘பலருக்கும் இங்கே `ஹெல்த் கான்சியஸ்’ங்கிறது `கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்ற கதையாதான் இருக்கு. கிட்டத்தட்ட இப்போ எனக்கும் அப்படித்தான். நான் காவல் துறையில ஐ.பி.எஸ் அதிகாரியா ஒன்பதரை வருஷம் வொர்க் பண்ணியிருக்கேன். அப்போ ஃபிட்னஸ்ங்கறது என் வாழ்க்கையில இரண்டறக் கலந்த விஷயமா இருந்துச்சு. உடலுக்கான வொர்க் அவுட் மட்டுமல்லாம யோகா, மெடிட்டேஷன்னு ஹெல்த்துக்கான நிறைய விஷயங்கள் செஞ்சுகிட்டே இருந்தேன். உடலும் மனமும் ஸ்ட்ராங்கா இருக்கப்போ நாம எந்தளவுக்கு பலசாலியா இருப்போம்ங் கிறதை அந்த நேரத்துல நான் முழுமையா உணர்ந்திருக்கேன்.
போலீஸ் வாழ்க்கையிலிருந்து வெளியேறி அரசியல் வாழ்க்கைக்கு வந்ததுக்கு அப்புறம் நிறைய மாற்றங்கள். நேரம், காலம் பார்க்காம நிறைய டிராவல் பண்ணணும், நாம நினைக்கிற மாதிரி நேரத்துக்கு சாப்பிட முடியாது, சரியான நேரத்துக்கு தூங்க முடியாது... இப்படியான சூழல்ல என்னுடைய பழைய ஃபிட்னஸை நான் இழக்க ஆரம்பிச்சேன். குறிப்பா சொல்லணும்னா, கடந்த ஆறு மாசத்துல அதை நான் நல்லாவே உணர்ந்தேன். அதனால, கடந்த ரெண்டு மாசமா திரும்பவும் தீவிரமா உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சிருக்கேன்” - ஓர் அதிகாலையில் சென்னையில் தன் வீட்டருகே உள்ள கடற்கரையில் வாக்கிங் சென்றுகொண்டே தன் ஃபிட்னஸ் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

“அரசியல் வாழ்க்கையில நிறைய ஸ்ட்ரெஸ் இருக்கும். சொல்லப்போனா, அதிகமான டிராவலே ஸ்ட்ரெஸ்தான். அதுமட்டுமல்ல, இந்தக் காலகட்டத்துல செல்ஃபிங்கிறது பெரிய ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. தினமும் நிறைய பேர் அன்பா செல்ஃபி எடுக்குறாங்க. பல நூறைத் தாண்டும்போது ஃப்ளாஷ் அடிச்சு அடிச்சு ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ் ஆகிரும். என் கண்ல பவர் கூட ஆரம்பிச்சதுக்குக் காரணமே செல்ஃபிதான். நல்லதோ, கெட்டதோ... பாராட்டுகளோ, ட்ரோல்களோ... எல்லாத்தையும் சமாளிக்கணும்... இப்படி ஸ்ட்ரெஸ்ங்கிறது அரசியல்ல பல ரூபத்துல வரும்.
ஸ்ட்ரெஸ்ஸைக் கையாள்றதுக்கு மூச்சுப் பயிற்சியை ஆரம்பிச்சிருக்கேன். `ஒரு மனுஷன் தன் மூச்சை சரியான முறையில் பயன்படுத்தி சரியா மூச்சுப் பயிற்சி செஞ்சா, அவன் வாழ்க்கையில நோய் என்பதே எட்டிப் பார்க்காதுன்னு திருமூலர் சொல்லியிருக்கார். 16 நொடிகள் பிராண வாயுவை உள்ளே இழுக்கணும். பின்பு, 64 நொடிகள் உள்ளிழுத்த பிராணவாயுவை உள்ளேயே தேக்கி வைக்கணும். அடுத்து தேக்கிவைத்த பிராண வாயுவை 32 நொடிகள் வெளியேற்றணும். அடுத்ததாக, 16 நொடிகள் மீண்டும் பிராண வாயுவை உள்ளே இழுக்காமல் வயிற்றைக் காலியா வெச்சிருக்கணும்.
ஆரம்பத்துல 16, 64, 32, 16 என்ற கணக்குல செய்ய முடியாதவங்க 8, 32, 16, 8 என்ற கணக்குல செய்யலாம். இதை செய்யறப்போ உங்க வாழ்க்கை அப்படியே மாற ஆரம்பிக்கும். சிந்தனையில தெளிவும் நேர்த்தியும் வரும். சிறந்த முறையில் முடிவெடுக்க முடியும். நீங்க ஜிம் போகலாம், வீட்லயே எக்சர்சைஸ் பண்ணலாம், விளையாடலாம்... அதையெல்லாம் செஞ்சாலும் செய்யலைன்னாலும் மெடிட்டேஷனை மறக்காம வாழ்க்கையில கடைப்பிடிக்கணும்.
நம் ஆரோக்கியத்துக்கு உணவுப் பழக்கமும் ரொம்ப முக்கியம். இந்த தலைமுறையில ஒபிசிட்டி பெரிய பிரச்னையா இருக்கு. உணவுல கார்போஹைட்ரேட் அதிகமா எடுத்துக்கிற நாம் புரோட்டீனையும் ஃபைபரையும் போதுமான அளவு எடுத்துக்கிறதில்லை. குறிப்பா சிறுதானியங்களை எடுத்துக்கிறதே இல்லை. என் சின்ன வயசுல கிராமத்துல நான் சாப்பிட்ட சிறுதானியங்களும், இயற்கையான உணவுகளும் அங்குள்ள வாழ்க்கை முறையும்தான் எனக்கு ஃபிட்னஸ்ங்கிற வார்த்தை அறிமுகமாகுறதுக்கு முன்னாலயே ஃபிட்னஸைக் கொடுத்துச்சு. கிராமத்துல நிறைய சிறுதானியங்கள் சாப்பிட்டோம். ஓடியாடி விளையாடுனோம். கிணத்துல மணிக்கணக்கா நீச்சலடிச்சோம்... அதுதான் நம் ஆரோக்கியத் துக்கு அடித்தளமா இருந்துச்சு. ஒருகட்டத்துல படிப்பு முக்கியம்னு கிளாஸ் ரூம்லயே மூழ்கிடறோம்; ஃப்ரைடு உணவு களை அதிகமா சாப்பிடுறோம். வாழ்க்கைமுறை மாறுது. அதுதான் ஃபிட்னஸ்ல இருந்து விலகுற நேரம். நானும் அப்படித் தான் கல்லூரி காலத்துல முதல்ல என்னுடைய ஃபிட்னஸை இழக்க ஆரம்பிச்சேன்.
நல்லவேளையாக, உடனடியா நான் ஐ.பி.எஸ் டிரெய்னிங் போனதால, ஃபிட்னஸை மீட்க முடிஞ்சது. ஒன்றரை வருஷம் ஐ.பி.எஸ் டிரெய்னிங்ல கடுமை யான பயிற்சி. குதிரையேற்றம், நீச்சல்னு டிரெய்னிங் முழுக்க முழுக்க ஃபிட்னஸை மையப் படுத்தியதாவே இருந்துச்சு. ஒன்பது வருஷமா நான் ஃபிட்னஸா இருந்ததுக்கு காரணம், அந்தப் பயிற்சிகள்தான்.

அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் என் ஃபிட்னஸை மீண்டும் இழக்க ஆரம்பிச்சேன். பார்க்குற நண்பர்களெல்லாம் `உங்க பழைய ஃபிட்னஸ் என்ன ஆச்சுனு கேக்கறாங்க. ஏன் சில நேரங்களில் நம்ம எடை கூடும் போது உடல்ல ஃபேட் அதிகமாகும் போது நம் உற்சாகம் குறைவதை உணர்வோம். அப்படியான சூழல்லதான், நான் என்னுடைய பழைய ஃபிட்னஸை மீட்கணும்னு முடிவெடுத்து அதற்கான முயற்சிகள்ல தீவிரமா இறங்கி யிருக்கேன். நாம எதுவா வேணாலும் இருக்கலாம்... என்ன வேணாலும் செய்யலாம். ஆனா, சுவர் இருந்தாதானே சித்திரம் வரைய முடியும்?” எனக் கேட்டு விட்டு சிரிக்கிறார்.
“இந்த இன்டர்வியூவை சரியான நேரத்துல கொடுக்கறேன். ஏன்னா இப்போ என் வீட்ல உணவுப் பழக்கவழக்கம் மாறிடுச்சு, புரோட்டீன் அதிகமா எடுத்துக் கறேன். ஃபைபருக்காக சிறு தானியங்கள் எடுத்துக்கறேன். காலையில மூன்றில் ஒரு பங்கு பச்சை உணவா சாப்பிடறேன். முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கறேன். மதியம் கொஞ்சமா சாதம், நிறைய காய்கறிகள்னு பிரிச்சுக்கறேன். மிக முக்கியமான விஷயம், தண்ணீர். வேலை வேலைன்னு தண்ணி குடிக்கிறதையே மறந்துடு றோம். அதனால ஒரு லிட்டர் பாட்டில் வாங்கி வச்சு எவ்வளவு தண்ணி குடிக்கிறோம்னு தினமும் மானிட்டர் பண்ணிக்குறேன். முடிஞ்ச அளவுக்கு நேரத்துக்கு தூங்கிடுறேன்.
நேரம் ஒதுக்கி ஜிம்முக்கு போய் ஒரு மணி நேரம் வொர்க் அவுட் செய்யறேன். சுருக்கமா சொல்லணும்னா, ஃபிட்னஸ்ல பழைய அண்ணாமலையா மாற ட்ரை பண்ணிகிட்டிருக்கேன். சிரமமாத்தான் இருக்கு. தலைவர் பொறுப்புல இருக்கிற நான் எக்காரணத்தை முன்னிட்டும் அரசியல் வேலைகளை காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியாது. அதே சமயம், உடம்பும் முக்கியம். வீட்டுக்குப் பக்கத்துலயே கடல் இருக்கிறதால, கடற்கரையில காலையில ஒரு வாக். 20 நிமிடங்கள் நடப்பேன். 30 நிமிஷம் மூச்சுப்பயிற்சி. ஒருநாள் யோகா, ஒருநாள் ஜிம்னு பிளான் பண்ணிருக்கேன்.
கடைசியா நான் சொல்றது இதுதான் `தாமரை இலை மேலே இருக்கிற தண்ணீர்போல’ வாழ்க்கையை எடுத்துக் கிட்டா வாழ்க்கைல பாதிப் பிரச்னை குறைஞ்சிரும். திட்டும்போதும் சரி, பாராட்டும்போதும் சரி, பெருசா தலையில ஏத்திக்கக் கூடாது. ஒரு சமநிலைக்குப் போகும் போது ஸ்ட்ரெஸ்ங்கிறதை ஈஸியா வெல்ல முடியும். இன்னைக்கு காலையில இருக்கிற உலகம் நாளைக்கு மாறிடுது. எதுவுமே நிரந்தரம் இல்லாதப்ப கோபங்கள், சங்கடங்கள், ஈகோவை நாம ஏன் தாங்கிகிட்டு நடக்கணும்? அதையெல்லாம் உதறித்தள்ளிட்டாலே நம்ம உடம்பு நம்ம பேச்சைக் கேட்கும்” என்று அண்ணாமலை முடிக்க கடல் அலை காலைத்தொட்டு அதை ஆமோதிக்கிறது.