தென் கொரியாவில், 50 வயதுள்ள நபர், மூளையை உண்ணும் அமீபாவால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் ஒருபக்கம் கோவிட் தொற்று தன்னுடைய கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் தென் கொரியாவில் நடைபெற்ற இச்சம்பவம் ஒருவித அச்சத்தை விதைத்துள்ளது.

தென் கொரியாவில் வசித்து வந்த 50 வயது நபர், தாய்லாந்தில் நான்கு மாத காலம் தங்கியுள்ளார். இவர் கொரியாவிற்கு திரும்புவதற்கு முன்பு டிசம்பர் 10-ம் தேதியன்று உயிரிழந்தார். நெக்லேரியா ஃபோலேரி (Naegleria fowleri) என்ற அமீபாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதை கொரியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் உறுதி செய்தது.
இது குறித்து அமெரிக்காவிலுள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகையில், ``நெக்லேரியா ஓர் ஒற்றை செல் உயிரினம். இந்த அமீபா ஏரிகள், ஆறுகளில் காணப்படும். அமீபாவில் அனைத்தும் கொல்லும் தன்மையுடன் இருக்காது. ஆனால் நெக்லேரியா ஃபோலேரி மனிதர்களின் மூக்கு வழியாக நுழைந்து, மூளைக்குச் சென்று திசுக்களையும், நரம்புகளையும் தாக்கி சேதப்படுத்தி, மூளையில் `Primary amebic meningoencephalitis' தொற்றை ஏற்படுத்துகிறது.

இறப்பை விளைவிக்கும் அளவிற்கு இது ஆபத்தானது. அதிகப்படியான முன்தலைவலியோடு, காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். நோய் தீவிரமடையும்பட்சத்தில், வலிப்பு, மாறுபட்ட மனநிலை, பிரமை, கோமாவை கூட ஏற்படுத்தலாம். 1962 முதல் 2021 வரை அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட 154 நபர்களில், வெறும் 4 பேர் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளனர்'' என்று அறிவித்துள்ளது.
இது குறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம். பாலமுருகன் கூறுகையில், ``இது ஒரு செல் உயிரினம். பொதுவாக வெப்பம் மற்றும் தண்ணீர் அதிகம் உள்ள இடங்களில் இது போன்ற அமீபாக்கள் காணப்படும். இதற்கான அறிகுறி மூளைக்காய்ச்சல் மட்டுமே. இது மிகவும் அரியவகை என்பதால் இதை முழுவதும் குணப்படுத்துவதற்கான தீர்வு இதுவரை இல்லை.

இது போன்ற அமீபாவில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என்றால், அசுத்தமான தண்ணீரில் நீச்சல் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து இந்தியர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை; ஏனெனில் இந்தியாவில் இது போன்ற அமீபா கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் கவனமாக இருப்பது நல்லது" என்று தெரிவித்துள்ளார்.