Published:Updated:

சிறுநீரகப் பழுதை சரியாக்குமா பார்லி ஊறவைத்த நீர்... வாட்ஸ்அப் தகவல் உண்மையா? நிபுணர்கள் விளக்கம்

Barley
News
Barley ( Pixabay )

எடைக்குறைப்புக்கும், நீர்க்கடுப்புக்கும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படும் பார்லி தண்ணீருக்கு, சிறுநீரகங்களையே பழுது பார்க்கும் சக்தி உண்டா? இந்த வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையா? நிபுணர்களிடம் கேட்டோம்.

Published:Updated:

சிறுநீரகப் பழுதை சரியாக்குமா பார்லி ஊறவைத்த நீர்... வாட்ஸ்அப் தகவல் உண்மையா? நிபுணர்கள் விளக்கம்

எடைக்குறைப்புக்கும், நீர்க்கடுப்புக்கும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படும் பார்லி தண்ணீருக்கு, சிறுநீரகங்களையே பழுது பார்க்கும் சக்தி உண்டா? இந்த வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையா? நிபுணர்களிடம் கேட்டோம்.

Barley
News
Barley ( Pixabay )

``சிறிதளவு பார்லியை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். ஊறிய பார்லியை அப்புறப்படுத்திவிட வேண்டும். பார்லி ஊறிய தண்ணீரை மட்டும் தினமும் காலையில் குடித்துவர, சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்யும் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு பத்து, இருபது நாள்களில் கிரியாட்டினின் அளவு சீராகும். யூரிக் ஆசிட் குறையும். பழுதடைந்த சிறுநீரங்கள் 90 சதவிகிதம் சரியாக வாய்ப்புண்டு. டயாலிசிஸ் சிகிச்சையே தேவைப்படாது. சிறுநீரகத் தொற்றை குணமாகும். இது மருத்துவர்களே பரிந்துரைக்கும் சிகிச்சை...” - சமீபத்தில் வாட்ஸ்அப்பில் பரப்பப்பட்ட தகவல் இது.

சிறுநீரகவியல் , உறுப்பு மாற்று சிகிச்சை மருத்துவர் முத்துக்குமார்
சிறுநீரகவியல் , உறுப்பு மாற்று சிகிச்சை மருத்துவர் முத்துக்குமார்

எடைக்குறைப்புக்கும், நீர்க்கடுப்புக்கும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படும் பார்லி தண்ணீருக்கு, சிறுநீரகங்களையே பழுது பார்க்கும் சக்தி உண்டா? இந்த வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையா? நிபுணர்களிடம் கேட்டோம்.

``இது போன்ற தவறான தகவல்களை நம்பி, மருத்துவ ஆலோசனையின்றி பின்பற்றும் விஷயங்கள் நல்லது செய்வதற்கு பதிலாக, பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம். எனவே எந்தத் தகவலையும் மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம்'' என்ற எச்சரிக்கையுடன் பேச ஆரம்பிக்கிறார் சென்னையை சேர்ந்த சிறுநீரகவியல் மருத்துவரும், உறுப்பு மாற்று சிகிச்சை மருத்துவருமான முத்துக்குமார்.

``பார்லி தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்படுமா, சிறுநீரக பாதிப்புக்கு காரணமான கிரியாட்டினின் அளவு குறையுமா என்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கின்றன. தற்போதைய மருத்துவ அறிவியலின்படி பார்லி தண்ணீர் குடிப்பதால் கிரியாட்டினின் அளவு குறையும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பார்லி தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்களின் இயக்கம் சீராகும் என்பதும் மிகவும் தவறு.

டயாலிசிஸ்
டயாலிசிஸ்

டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்போருக்கு கூட, பார்லி வாட்டர் குடித்தால் டயாலிசிஸ் சிகிச்சையே தேவைப்படாது என்றும் சிறுநீரகச் செயல்பாடு மேம்படும் என்றும் சொல்கிறார்கள். அவையும் தவறான தகவல்கள். பார்லி தண்ணீர் குடிப்பதால் சிறுநீரக கற்களும் கரையாது. பொதுவாக சிறுநீரகக் கற்கள் இருப்பவர்களுக்கு நிறைய தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படும். 4- 5 லிட்டர் அளவுக்கு தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுவார்கள். அதுதான் சிறுநீரகக் கற்களைக் கரைக்க வழி செய்யும்.

சிலர் வெறும் தண்ணீராகக் குடிக்க முடியாது என்பதால் பார்லி வாட்டராக குடிப்பதுண்டு. எப்படியோ தண்ணீர் அருந்தும் செயல் நடைபெறுகிறது என்பதால் அதன் விளைவாக சிறுநீரக கற்கள் கரையலாம். அது பார்லியால் கரைவதில்லை, தண்ணீர் குடிப்பதால்தான். குறிப்பாக டயாலிசிஸ் நோயாளிகள் தண்ணீர் குறைவாகக் குடிக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள். அவர்கள் அளவுக்கதிகமாக தண்ணீர் குடித்தால் மூச்சு வாங்கி, சிரமத்துக்கு உள்ளாவார்களே தவிர அவர்களது பிரச்னை சரியாகாது'' என்கிறார் டாக்டர் முத்துக்குமார்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

``பார்லி என்பது சிறுநீர்க் கழிவைத் தூண்டும் இயற்கையான ஒரு பொருள். அதாவது சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளதுபோல பார்லி ஊறவைத்த நீரைக் குடிப்பதால் சிறுநீரகப் பழுதை சரிசெய்ய முடியும் என்பதெல்லாம் உண்மையல்ல. நாள்பட்ட நீரிழிவுகூட சிறுநீரகச் செயலிழப்புக்கு காரணமாகலாம். சிறுநீர்க் கடுப்பு மற்றும் சிறுநீரகத் தொற்றுக்கு இளநீர் குடிப்பதற்கு இணையானதுதான் பார்லி தண்ணீர் குடிப்பதும். இதனால் வேறெந்தப் பலனும் இல்லை'' என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

எனவே, வாட்ஸ் அப் போன்ற சமூகவலைதளங்களில் பகிரப்படும் ஃபார்வேர்டு மெசேஜ்களை கண்மூடித்தனமாக நம்பவும் வேண்டாம், மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் தவற்றையும் செய்ய வேண்டாம்.