Published:Updated:

ஹெர்டு இம்யூனிட்டி... இந்தியாவுக்குக் கைகொடுக்குமா?

corona
News
corona ( pixabay.com )

ஹெர்டு இம்யூனிட்டி கோட்பாட்டில் நம்பிக்கைவைத்து, மக்களை கோவிட்-19-க்கு எதிராக இயற்கையாக எதிர்ப்புரதம் பெறவைப்பதில் சாதகங்களும் உள்ளன, பாதகங்களும் உள்ளன.

Published:Updated:

ஹெர்டு இம்யூனிட்டி... இந்தியாவுக்குக் கைகொடுக்குமா?

ஹெர்டு இம்யூனிட்டி கோட்பாட்டில் நம்பிக்கைவைத்து, மக்களை கோவிட்-19-க்கு எதிராக இயற்கையாக எதிர்ப்புரதம் பெறவைப்பதில் சாதகங்களும் உள்ளன, பாதகங்களும் உள்ளன.

corona
News
corona ( pixabay.com )

இந்தியாவில் ஐந்தாம்கட்ட லாக்டௌனில் இருக்கிறோம் நாம். ஒவ்வொரு முறையும் லாக்டௌன் தளர்வு அறிவிக்கப்பட்டு, `கொரோனாவோடு வாழப் பழகுங்கள்' என்ற அறிவுரை முன்னிறுத்தப்படுகிறது. 'இது, மக்களின் குழு எதிர்ப்பாற்றல், அதாவது ஹெர்டு இம்யூனிட்டியின் மீது நம்பிக்கை வைத்து எடுக்கப்படும் முயற்சி. கோவிட்-19 வைரஸிடமிருந்து மக்களை தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக, கோவிட்-19 தொற்றை மக்கள் பெற அனுமதிப்பது. அதன்மூலம், இயற்கையாக கொரோனா தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடியை அவர்களைப் பெறவைப்பது' என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

corona
corona
pixabay.com

கோவிட்-19-க்கு தடுப்பூசியோ, மருந்தோ கண்டுபிடிக்க இன்னும் காலம் ஆகலாம் என்ற நிலையில், பொருளாதார முடக்கத்திலிருந்து நாடு விடுபட லாக்டௌன் தளர்வன்றி வேறு வழியில்லை. இந்த இக்கட்டான சூழலில், 'ஹெர்டு இம்யூனிட்டி இந்திய மக்களைக் காக்கும்' என்ற நம்பிக்கையே விஞ்சி நிற்கிறது.

ஹெர்டு இம்யூனிட்டி என்றால் என்ன என்பது முதல், இந்தியாவுக்கு அது எந்த அளவுக்கு கைகொடுக்க வாய்ப்புள்ளது என்பதுவரை விரிவாக விளக்குகிறார், தமிழக பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி.

''கொரோனாவோடு வாழப் பழகுவது, ஹெர்டு இம்யூனிட்டியை நோக்கிய பயணம்!"

''ஹெர்டு இம்யூனிட்டி என்பது உலகளாவிய ஒரு கோட்பாடு. கொரோனாவோடு வாழப் பகுவது என்பது, இந்த ஹெர்டு இம்யூனிட்டியை நோக்கிய பயணமே. ஹெர்டு இம்யூனிட்டியில் இரண்டு வகை உள்ளன.

* ஒன்று, நோய்க்கு எதிரான எதிர்ப்புரதத்தை செயற்கையாக உருவாக்கி மக்களுக்குச் செலுத்தி, அவர்களை நோயிலிருந்து காப்பது. இதைத்தான் தடுப்பூசி/தடுப்பு மருந்துகள் செய்கின்றன.

* இரண்டு, மக்களில் பெரும்பாலானோரை குறிப்பிட்ட நோயைப் பெற அனுமதித்து, அவர்களை குணப்படுத்தி, அந்த நோய்க்கு எதிரான எதிர்ப்புரதத்தை (ஆன்டிபாடி) அவர்களை இயற்கையாகப் பெறவைப்பது. இவற்றில், தடுப்பூசிக்கோ தடுப்பு மருந்துக்கோ இப்போது வழியில்லாத சூழலில், இரண்டாவது யுக்தியை நாம் தேர்ந்தெடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழக பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி
தமிழக பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி

எப்படிச் செயல்படுகிறது ஹெர்டு இம்யூனிட்டி?

ஒரு நாட்டில் பெருவாரியான மக்கள், குறிப்பிட்ட ஒரு நோயைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு பெரும்பாலானவர்கள் அந்நோயால் பாதிக்கப்படும்போது, இயற்கையாக அவர்களின் உடலில் அந்நோய்க்கு எதிரான எதிர்ப்புரதம் உருவாகிவிடும். எனவே, அந்நோய்க்கு எதிரான எதிர்ப்பாற்றலை இயற்கையாக அவர்கள் பெற்றுவிடுவார்கள். இப்படி ஒரு பெரும் திரளான மக்கள் பெறும் நோய் எதிர்ப்பாற்றலானது, இந்த நோய்க்கு ஆளாகாத மக்களுக்கும் ஒரு கவசமாக அமைந்துவிடுகிறது. அதாவது, நோய் எதிர்ப்பாற்றல் பெற்றவர்களால் நோய்ப் பரவல் சங்கிலி அறுபட்டு, பரவல் தடுக்கப்படும். நோய் தானாகக் கட்டுக்குள் வந்துவிடும். மற்றவர்கள் காக்கப்படுவார்கள்.

கோவிட்-19... ஹெர்டு இம்யூனிட்டி... சாதக, பாதகங்கள்!

ஹெர்டு இம்யூனிட்டி கோட்பாட்டில் நம்பிக்கைவைத்து, மக்களை கோவிட்-19-க்கு எதிராக இயற்கையாக எதிர்ப்புரதம் பெறவைப்பதில் சாதகங்களும் உள்ளன, பாதகங்களும் உள்ளன.

சாதகம்...

பெரும்பாலான மக்கள் எதிர்ப்புரதத்தைப் பெற வேண்டும் என்பதன் பொருள், பெரும்பாலான மக்கள் நோயிலிருந்து மீள வேண்டும் என்பது. இதில், ஒருவேளை அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்கள் குணமாகும் விகிதம் குறைவாகிவிட்டால் சிக்கல். என்றாலும், இப்போதைக்கு இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பாளர்கள் குணமாகும் சதவிகிதம் அதிகமாகவே இருக்கிறது. எனவே, இதன் அடிப்படையில், இந்தியாவுக்கு கோவிட்-19 ஹெர்டு இம்யூனிட்டி கோட்பாடு சாதமாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

herd immunity
herd immunity
pixabay.com

பாதகங்கள்...

* இந்தியாவில் அதிகமாக இருக்கும் இளவயது மக்களை நம்பி எடுக்கப்படும் முடிவு, ஹெர்டு இம்யூனிட்டி. நம் நாட்டில் கிட்டத்தட்ட 80% மக்கள் 44 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால், இந்த இளம் வயதினரில் பெரும்பாலானோர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் முதல் ஆஸ்துமா வரை பாதிப்பாளர்களாக இருக்கிறார்கள். எனவே, இவர்களைத் தொற்றுக்கு அனுமதிக்கும்போது, இவர்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படலாம். மேலும், இவர்களிடமிருந்து இவர்களின் வீடுகளில் உள்ள முதியவர்கள் தொற்றைப் பெறாமல் தவிர்க்க, அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்படும்.

* தடுப்பூசி என்பது பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு தயாரிக்கப்படுவது. அந்தத் தடுப்பூசி மூலமாக ஒருவருக்கு செயற்கையாக ஒரு நோய்க்கு எதிரான ஆன்டிபாடி செலுத்தப்படும்போது, பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. மேலும், செயற்கையான அந்த ஆன்டிபாடி உடலில் எந்தக் காலஅளவுவரை நீடித்திருக்கும் என்பது கணிக்கப்பட்டு, அதன் முடிவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும். இதுவே ஹெர்டு இம்யூனிட்டியில் உடலில் இயற்கையாக ஆன்டிபாடி உருவாகும்போது, அந்த ஆன்டிபாடி எத்தனை நாள்களுக்கு நீடித்திருக்கும் என்பது தெரியாது. ஒருவேளை, அதன் காலஅளவு குறைவு எனில், மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், இந்தியாவைப் பொறுத்தவரை ஹெர்டு இம்யூனிட்டி என்பது ஒரு தரப்பின் தனித்த முயற்சி அன்று. அதிகரிக்கப்படும் பரிசோதனைகள், வலுப்படுத்தப்படும் மருத்துவக் கட்டமைப்புகள், நோய்த்தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள இடங்கள், மக்களைக் கணித்து தனிமைப்படுத்துவது, அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் சமூக மற்றும் தனிமனித இடைவெளியைச் செயல்படுத்துவது என... இவற்றையெல்லாம் ஒருங்கிணைப்பதன் மூலம் பெறப்படும் வெற்றியாகவே ஹெர்டு இம்யூனிட்டி முயற்சி அமையும். ஆக, அதை நோக்கியே நம் பயணம் இருக்க வேண்டும்.

தடுப்பூசி மூலம் இதுவரை நாம் வென்றுள்ள நோய்கள்!

டெட்டனஸ் போலியோ

ஹெபடைட்டிஸ் பி மூளைக்காய்ச்சல்

ரூபெல்லா

தட்டம்மை

யெல்லோ ஃபீவர்

காலரா

vaccine
vaccine
pixabay.com

தடுப்பூசிக்கு வாய்ப்பில்லாதபோதும் நாம் வென்ற நோய்கள்!

ரூபெல்லா (தடுப்பூசி கண்டறியும் முன்புவரை)

டெங்கு

நிபா

பன்றிக்காய்ச்சல்

'ரூபெல்லா பார்ட்டி' ஒரு ஹெர்டு இம்யூனிட்டி கதை!

ரூபெல்லா நோய்க்கு தடுப்பூசி கண்டறியும் முன்புவரை, 'ரூபெல்லா பார்ட்டி' என்றொரு முறை பின்பற்றப்பட்டது.

ரூபெல்லா என்பது ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியால் வெல்லக்கூடிய மிதமான நோயே என்றாலும், கர்ப்பிணிகளுக்கு அந்த நோய் ஏற்படும்போது, அது கருவிலிருக்கும் குழந்தைக்கு இதய பாதிப்பு, செவித்திறன் பாதிப்பு உள்ளிட்ட குறைபாடுகளை ஏற்படுத்தலாம். சிசு மரணங்களையும் ஏற்படுத்தலாம். பெண்களுக்கு இந்த ஆபத்தைத் தவிர்க்க, 'ருபெல்லா பார்ட்டி' என்ற முறை கையாளப்பட்டது. இதன்படி, ரூபெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுடன், திருமணமாகாத இளவயதுப் பெண்களைப் பழகவிட்டு, தொற்றுக்கு உள்ளாக்கப்படுவார்கள். அப்படி தொற்று பெற்றவர்கள், சிகிச்சை மூலம் குணமாக்கப்படுவார்கள். இதன்மூலம், அந்த இளம் பெண்களுக்கு ஒருமுறை ரூபெல்லா தொற்றுவந்து அதிலிருந்து மீண்டுவிட்டதால், கர்ப்பகாலத்தின்போது அவர்களுக்கு ரூபெல்லா தாக்குவது தவிர்க்கப்படும். தடுப்பூசி கண்டறியப்படும் வரை, இப்படித்தான் இந்நோயைக் கையாண்டனர் நம் மக்கள்.

corona
corona
pixabay.com

ரூபெல்லாவும் கோவிட்-19ம் ஒன்றல்ல என்றாலும்...

ரூபெல்லா என்பது, குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய, இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ள நோய். எனவே, அதில் வலுக்கட்டாயமாக பெண்கள் தொற்றுக்கு ஆளாக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டனர். ஆனால், கோவிட்-19 தொற்றின் இம்யூனிட்டி கோட்பாட்டில், வலுக்கட்டாயமாக யாரையும் தொற்றுக்கு ஆளாக்கப்போவதில்லை. என்றாலும், கோவிட்-19 பல கட்ட தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி மக்களுக்குப் பரவலாகத் தொற்றை ஏற்படுத்துவதைத் தடுக்கவும் முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஹெர்டு இம்யூனிட்டியின் திசையில் சென்று அவர்களுக்கு இயற்கையாக ஆன்டிபாடிகள் உருவாகக் காத்திருப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

யுக்தி!

கொரோனா தீவிரமாகப் பரவிவரும் இந்தச் சூழலில், வீட்டிலிருந்து வெளியே செல்பவர்கள் இளவயதினராகவும், ஆரோக்கியத்துடன் இருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஒருவேளை கோவிட்-19 நோய்த்தொற்று அவர்களுக்கு ஏற்பட்டாலும், அதிலிருந்து அவர்கள் மீள்வது சுலபமாக இருக்கும். இப்படி, இந்தியாவிலுள்ள 60% - 70% ஆரோக்கியமான நபர்கள் நோய்க்கு ஆளாக நேர்ந்து அதிலிருந்து மீண்டுவிட்டால், நோய் பரவும் விகிதம் தானாகக் குறைந்துவிடும்.

social distance
social distance
pixabay.com

கவனிக்கவேண்டிய விஷயம்!

ஹெர்டு இம்யூனிட்டி பாதையில் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம், வெளியே சென்றுவருவதால் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ள ஆரோக்கியமானவர்கள், தங்கள் வீடுகளில் தொற்றால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஏற்கெனவே நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூச்சுக்குழல் பிரச்னை உள்ளவர்கள், முதியவர்கள் என இவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். நோய் பாதிப்பு அல்லது தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டிலேயே ஒருவர் தனிமைப்படுத்தப்படும்போதும், மேலே குறிப்பிட்டவர்கள் வீட்டில் இருக்கும்பட்சத்தில், அவர்கள் வீட்டைத் தவிர்த்து, மருத்துவமனையில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது சிறந்தது.

ஹெர்டு இம்யூனிட்டி மூலம் கோவிட்-19ஐ ஒழிக்க முடியுமா?

பேண்டெமிக் நோய்களை ஹெர்டு இம்யூனிட்டி மூலம் ஒழிப்பது சாத்தியமில்லை. தடுப்பு மருந்து கிடைப்பதே தீர்வு. 'தடுப்பூசி கண்டுபிடித்தாலும், கொரோனா உலகை விட்டு ஒழியாது' என்று சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மக்கள் இனி எந்தச் சளி, காய்ச்சல் தொந்தரவையும் உதாசீனப்படுத்தக்கூடாது. அரசு, எப்போதும் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கான முன்னேற்பாடுகளுடனேயே இருக்க வேண்டும்.

corona
corona
pixabay.com

கோவிட்-19 பாதிப்புகள் நீங்கி உலகம் இயல்பு நிலைக்கு எப்போது திரும்பும்?

இன்னும் ஆறு முதல் ஏழு மாதங்கள்வரை ஆகலாம். 2020 டிசம்பர் மாதம் வரை இந்த நிலை நீடிக்கலாம் என்பதால், அதுவரை ஆரோக்கியமானவர்கள் மட்டுமே பொதுவெளிகளுக்கு வர வேண்டும். மற்றவர்கள் நிச்சயம் வீடுகளுக்குள்தான் இருந்தாக வேண்டும். சிலர், 'நோய்த்தொற்று வந்தா பார்த்துக்கலாம்' என்ற அலட்சியத்தால், மாஸ்க் அணியாமல் இருப்பது, சமூக, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பது போன்றவற்றைப் பார்க்க முடிகிறது. அப்படியானவர்கள், ஒரு விஷயத்தை உணர வேண்டும். நீங்கள் எவ்வளவு தாமதமாக நோயைப் பெறுகிறீர்களோ, அந்த அளவுக்கு எளிதாக உங்களால் நோயை வெல்ல முடியும். காரணம், நாளாக ஆக கோவிட்-19 வைரஸின் வீரியம் குறையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டிசம்பர் கணிப்பு, அதற்கு முன்னதாகவேகூட முடியலாம். ஒருவேளை நோயாளிகள் எண்ணிக்கை ஒரேயடியாக மிக மிக வேகமாக அதிகரித்தால், நோய்த்தொற்று அதன் உச்சத்தை அடைந்தபின், வேகமாகக் குறையவும் செய்யலாம். ஆனால், இந்த வேகம் குணமாகும் விகிதத்தைக் குழப்பும். இறப்பையும் அதிகரிக்கும். இன்றைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் நிகழ்வது இதுதான். வேகம்தான் அவர்களின் பிரச்னை. அந்த வகையில் கோவிட்-19 தொற்றைப் பொறுத்தவரை, எவ்வளவு மெதுவாக நோயாளிகள் அதிகரிக்கிறார்களோ அந்த அளவுக்கு நமக்கு நல்லது. அதுவே, உயிரிழப்புகளைக் குறைக்கும், ஆரோக்கியமானவர்களின் நோய் எதிர்ப்பாற்றல் மீது நம்பிக்கைகொள்ளச் செய்யும்.''