
புற்றுநோயின் தொடக்கப் புள்ளி நாம் தொலைத்துவிட்ட உணவு மரபு.
புற்றுநோய் என்றதுமே, ‘ஐயோ… அது கொடிய நோயாச்சே!’ என்று வாய்விட்டு அலறாதவர்கள் நம்மிடம் இருக்க முடியாது. என்ன காரணம்? நம் பொதுப்புத்தியில் புற்றுநோயைக் குணப்படுத்த முடியாத நோய் வரிசையில் புதைத்து வைத்திருக்கிறோம். அதுதான் காரணம்.
போனதலைமுறை வரை இது சரி. இப்போது அனுதினமும் ஏற்படுகிற அறிவியல் வளர்ச்சியில் காட்சிகள் மாறிவருகின்றன. உயர் ரத்த அழுத்தம் போலவோ, சிறுநீரகப் பிரச்னை போலவோ புற்றுநோயையும் தடுக்க முடியும்; கட்டுப்படுத்த முடியும்; ஏன், 100% குணப்படுத்தவும் முடியும். அதற்கு, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் சிகிச்சைக்குரிய ஒத்துழைப்பும் நமக்குத் தேவை!
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ள புள்ளிவிவரப்படி இந்தியாவில் 22.6 லட்சம் பேருக்குப் புற்றுநோய் இருக்கிறது. வருடந்தோறும் 12 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் உருவாகிறார்கள். 10 இந்தியரில் ஒருவருக்குப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. புற்றுநோய் வந்த 15 பேரில் ஒருவர் நோய்த்தாக்கம் அதிகமாகி இறப்பை ஏற்கிறார்.
நமக்கு ஏற்படும் புற்றுநோய்த் தாக்கத்துக்கு நவீன வாழ்க்கை முறைகளே முக்கிய காரணம். நுரையீரல் புற்றுநோய்க்குப் புகைப்பழக்கமும், வாய்ப்புற்றுநோய்க்குப் புகையிலை போடுவதும், பான்மசாலா சுவைப்பதும் அதிமுக்கிய காரணிகள். மார்பகப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் உடல் பருமனுடன் தொடர்புடையவை. உடல் செயல்பாடு குறைவதும், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைச் சூழலும், தொடர்ந்து பல மணி நேரம் அமர்ந்தே பார்க்கும் பணிச் சூழல் அதிகமானதும் புற்றுநோய் பாதிப்பு எகிறுவதற்கு வாசல் திறக்கின்றன.
கேன்சர் ஸ்க்ரீனிங்!
இன்றைய நவீன மருத்துவத்தில் புற்றுநோய்க்கான அறிகுறி எதுவும் தென்படும் முன்னரே ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறதா, இனிமேல் வர வாய்ப்பிருக்கிறதா என்பதைத் தெரிவிக்கும் ‘அலாரங்கள்’தான் ‘கேன்சர் ஸ்க்ரீனிங்’ பரிசோதனை. இதில் இடம்பெற்றுள்ள புற்றுநோய் முன்னறிதல் பரிசோதனைகளைப் புற்றுநோயைத் தடுக்கும் ‘சீனச்சுவர்கள்’ என்றும் சொல்லலாம்.

புகைபிடிப்பவர்கள், புகையிலை போடுபவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் போன்றவர்களுக்குப் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு. இவர்கள் ‘கேன்சர் ஸ்க்ரீனிங்’ மேற்கொள்வது நல்லது. அடுத்து, வம்சாவளியில் ஏற்கெனவே புற்றுநோய் வந்துள்ள குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும், தொழில்ரீதியாக இந்த நோய் வரலாம் என்னும் எச்சரிக்கையில் இருப்பவர்களுக்கும் இந்தப் பரிசோதனைகள் அவசியம்.
மார்பில் புற்றுநோய்... உஷார்!
மார்பகச் சுய பரிசோதனை: பெண்கள் தாங்களாகவே மார்பகங்களை அழுத்தமாகத் தொட்டு மாதம் ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளலாம். அப்போது ஏதேனும் வலி இல்லாத கட்டி, வீக்கம், மார்புக் காம்பில் மாறுதல் போன்றவை தெரிந்தால், உடனே மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம்.
மெமோகிராம்: எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது போன்ற எளிய பரிசோதனைதான் இது. பெண்கள் 40 வயதுக்கு மேல் இதை மேற்கொண்டுவிடுவது நல்லது. வருடத்துக்கு ஒருமுறை இது தேவைப்படும். சந்தேகம் வலுத்தால் வருடத்துக்கு இரண்டுமுறைகூட அவசியப்படலாம். சமயங்களில் ‘பயாப்சி’ பரிசோதனை தேவைப்படும்.
கருப்பைவாய்ப் புற்றுநோய் அறிய...
‘பாப் சிமியர்’ பரிசோதனை: பெண்களுக்கான ‘விஐபி’ ஸ்க்ரீனிங் இது. கருப்பை வாயில் உள்ள செல்களை லேசாகச் சுரண்டி எடுத்து, நுண்ணோக்கியில் நேரடியாகப் பார்த்து நோயை அறிவது. 21 - 65 வயதுவரை உள்ள பெண்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இதை மேற்கொள்ள வேண்டும். இதன் முடிவுகள் தொடர்ந்து நார்மலாக இருந்து, 65 வயது கடந்துவிட்டது என்றால், இந்த ஸ்க்ரீனிங்கை நிறுத்திக்கொள்ளலாம்.
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை: பெண்ணுறுப்பை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்வதன் மூலம் கருப்பை மற்றும் சினைப்பைப் புற்றுநோய்களை முன்னரே அறியலாம்.
அசைவ உணவில் மீன் புற்றுநோயைத் தடுக்கும் அரண். மிருக இறைச்சிகளில் ஒமேகா - 6 ஆயில் உள்ளது. இது புற்றுநோய்க்கு ‘டோக்கன்’ தரக்கூடியது.டாக்டர் கு.கணேசன், பொதுநல மருத்துவர்
தடுப்பது எப்படி?
புற்றுநோயின் தொடக்கப் புள்ளி நாம் தொலைத்துவிட்ட உணவு மரபு. நிலத்தில் பயிராக்குவதில் தொடங்கி, தட்டில் பரிமாறுவது வரை ஏகப்பட்ட ரசாயனங்கள்! அயல்நாட்டு உணவுகளுக்கு அடிமையாகிவிடுகிறோம். எனவே, தொலைத்ததை மீட்டெடுப்பதுதான் புற்றுநோயை வெல்லும் முக்கிய வழி. நம் விழிப்புணர்வு தொடங்க வேண்டிய முக்கியப் புள்ளியும் இதுதான்.
சிறு வயதிலிருந்தே பூண்டு, வெங்காயம் சாப்பிடப் பழகுவோம். காரணம், அவற்றில் ‘அலிசின்’ உள்ளது. அது புற்றுநோய் செல்களை எரிக்கும் ஆற்றல் உடையது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், புற்றுநோய்க்குப் பரம எதிரி. முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் நல்லது. இவற்றிலுள்ள பைட்டோகெமிக்கல்கள் புற்றுநோய்க்குப் பலத்த வைரி!

தக்காளி, தர்ப்பூசணியில் ‘லைக்கோபின்’ உள்ளது. இது பெண்களுக்கு ஏற்படும் பல புற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வோம். புதினா, மஞ்சள், கருஞ்சீரகம், மிளகு, வெந்தயம், இஞ்சி போன்ற மகிமைமிக்க ‘நாட்டு மருந்துகளை’ வாரம் ஐந்து நாள்களுக்காவது சாப்பிடுவோம். சிறுதானிய உணவுகள், நார்ச்சத்து உணவுகள், வண்ணவண்ணக் காய்கறிகள் ஆகியவற்றால் வயிற்றை நிரப்பினால் குடல் புற்றுநோய் ‘குடித்தனம்’ புக மறுப்பது உறுதி.
ஆர்கானிக் உணவுகள் முக்கியம்!
நாம் சாப்பிடும் தட்டில் தினமும் ஒரு கீரை இருக்கட்டும். மாலையில் ஒரு பழச்சாறு அருந்துவோம். க்ரீன் டீ நல்லது. கேசரியோ, கோழிக்கறியோ செயற்கைச் சாயம் எதில் இருந்தாலும், அதைத் தவிர்க்கப் பழகுவோம். ஆர்கானிக் உணவுகளுக்கே முன்னுரிமை தருவோம். துரித உணவுகள், உப்புக்குளிக்கும் பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட குப்பை உணவுகளை வீசி எறிவோம். செயற்கைச் சுவையூட்டிகள் கும்மாளம் போடும் இனிப்புகள் வேண்டவே வேண்டாம். பதிலாக, இந்தியப் பாரம்பர்யப் பலகாரங்களுக்கு மாறிவிடுவோம்.
அசைவ உணவில் மீன் புற்றுநோயைத் தடுக்கும் அரண். மிருக இறைச்சிகளில் ஒமேகா - 6 ஆயில் உள்ளது. இது புற்றுநோய்க்கு ‘டோக்கன்’ தரக்கூடியது. உணவகங்களில் எண்ணெயில் ஊறி வரும் பிராய்லர் கோழிக் கொழுப்புகளை ஓரங்கட்டுவோம். புகையில் வாட்டித் தயாரிக்கப்படும் ‘பார்பெக்யு’ போன்ற ரெசிபிகள் ‘புற்றுநோய்த் திருவிழா’வைத் தொடங்கிவைக்க முன்வரிசையில் காத்திருக்கும். கவனமாக இருப்போம்.
புகைக்கு டாட்டா!
நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்க்குப் பூட்டப்போட, புகையிலைப் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவோம். பான், குட்கா வேண்டவே வேண்டாம்.
வைரஸ் தொற்றுகளை ஓரங்கட்ட ஹெச்பிவி, ஹெபடைடிஸ் முதலிய தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுக்கொள்வோம். உடற்பருமனுக்கு இடம் கொடேல். சுய சுத்தம் மிக முக்கியம். சுத்தமான குடிநீரைக் குடிப்பதும், மாசுபட்ட சூழலைத் தவிர்ப்பதும் அவசியம். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்போம். தினமும் அரை மணிநேரம் நடைப்பயிற்சியும், 20 நிமிடம் மூச்சுப்பயிற்சியும் கட்டாயம்.
இத்தனையும் இருந்துவிட்டால், புற்றுநோய் இல்லாத புதிய உலகம் நம் கண்முன்னே காத்திருக்கிறது மக்களே!
பெண்கள் கவனம்!
பெண்களுக்குப் புற்றுநோய் வாய்ப்பு அதிகம் உள்ள இடங்கள் மார்பகம், கருப்பை, கருப்பை வாய் (Cervix), சினைப்பை (Ovary).
மார்பகத்தில் ஏற்படும் சில கட்டிகள் நாட்படும்போது புற்றுநோய்க் கட்டிகளாக மாறலாம். தங்கள் வயதுக்கு ஏற்ப ‘ஸ்க்ரீனிங்’ பரிசோதனைகளைச் செய்துகொள்ளும் வழக்கம் நம் நாட்டுப் பெண்களுக்கு இல்லை என்பதாலும், மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் தயக்கம் காட்டுவதாலும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
மார்பில் கட்டி, மார்புக் காம்பில் நீர்க்கசிவு, ரத்தக்கசிவு, மார்புக் காம்பு உள்வாங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்போது மார்பகப் பரிசோதனைகள் அவசியம்.

கருப்பையின் உட்புறத்தில் கட்டி தோன்றுவதற்கு முன்னால், அதன் உட்புறச் சதைகளில் மாற்றங்கள் தோன்றும். மாதவிலக்கில் மாற்றங்கள், அடிவயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். அப்போதே அவற்றை கவனித்து விட்டால், கருப்பைப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்திவிடலாம்.
கருப்பை வாயில் வைரஸ் தொற்று, ஹெச்ஐவி தொற்று போன்றவற்றால் புண் ஏற்பட்டு நீண்ட நாள்களுக்குக் கவனிக்கத் தவறினால், அங்கு புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.
சிறு வயதிலேயே திருமணம் செய்வது, அதிக குழந்தைகளைப் பெறுவது, பெண்ணுறுப்பில் சுத்தம் குறைவது போன்ற காரணங்களாலும் கருப்பை வாயில் புற்றுநோய் வரும்.
அதிக நாள்களுக்கு மாதவிலக்கு, மாதவிலக்கு இல்லாத நாள்களிலும் ரத்தப்போக்கு, தாம்பத்திய உறவுக்குப் பிறகு ரத்தக்கசிவு, நாள்பட்ட வெள்ளைப்படுதல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால், மருத்துவப் பரிசோதனைகள் அவசியம்.