ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

ஹெல்த்: உயர் ரத்த அழுத்தம் உதாசீனம் வேண்டாம்!

ரத்த அழுத்தப் பரிசோதனை
பிரீமியம் ஸ்டோரி
News
ரத்த அழுத்தப் பரிசோதனை

சாதாரண காய்ச்சல், தலைவலிக்குச் சென்றால்கூட மருத்துவமனையில் ரத்த அழுத்தப் பரிசோதனை செய்வார்கள்.

காரணம், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராக இருந்தால்தான் உடலியக்கம் சரியாக நடக்கும்.

சர்க்கரைநோய், இதயக்கோளாறுகள், இதயச் செயலிழப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பிரச்னைகள், பார்வைக் கோளாறு போன்ற அனைத்து வாழ்வியல் பாதிப்புகளின் தொடக்கநிலையை ரத்த அழுத்த அளவு மாறுபடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம். ‘ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால், எதிர்காலத்தில் பல்வேறு நோய்களைத் தவிர்க்கலாம்’ என்கின்றனர் மருத்துவர்கள்.

 ஹெல்த்: உயர் ரத்த அழுத்தம் உதாசீனம் வேண்டாம்!

ஆனாலும், ‘ரத்த அழுத்தம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். ‘உலகளவில், ஐந்தில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. பக்கவாதம் மற்றும் இதயப் பிரச்னை காரணமாக இறப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளானவர்கள். ஒவ்வொரு வருடமும் உயர் ரத்த அழுத்தத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 94 லட்சம்’ என்கின்றன உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னையை, ‘இந்தியர்கள் எந்தளவுக்குக் கவனமாகக் கையாள்கின்றனர், உலக அளவிலான தரவுகளில் இந்தியாவின் நிலை என்ன?’ என்பன குறித்து, ‘பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வின் முடிவில், ‘ரத்த அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களில், 45 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களுக்கே அந்தப் பிரச்னை இருப்பது தெரியவருகிறது. அதிலும் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தங்களின் பிரச்னை குறித்த முழுமையான புரிந்துணர்வோ, தெளிவோ இல்லை. 15 முதல்

49 வயதுக்குட்பட்ட ரத்த அழுத்த நோயாளிகளில் 5.3 சதவிகித ஆண்களும், 10.9 சதவிகிதப் பெண்களும் மட்டுமே முறையாக மருந்துகள் உட்கொண்டு அளவைக் கட்டுக்குள்வைத்திருக்கிறார்கள்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

ரத்த அழுத்த விஷயத்தில் இந்தியர்கள் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தரவுகளே சிறந்த சான்று. இந்த நிலை ஏன்... இதைச் சரிசெய்ய என்ன செய்யலாம்... ஆய்வாளர்களில் ஒருவரான இதயநோய் மருத்துவர் பிரபாகரனிடம் கேட்டோம்.

 ஹெல்த்: உயர் ரத்த அழுத்தம் உதாசீனம் வேண்டாம்!

“பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமைதான் இதற்கு முக்கியக் காரணம். அதை அதிகப்படுத்துவது மட்டுமே அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வாக இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வு, கால தாமதமின்றி உடனடியாக அதிகப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்துக் கூடுதல் விழிப்புணர்வு தேவை. எங்களது ஆய்வில் தெரியவந்த மற்றொரு முக்கியமான உண்மை என்னவென்றால், 10-ல் ஓர் இந்தியர்தான் தனது ரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள்வைத்திருக்கிறார். அதிலும், 7-ல் ஒருவர்தான் தனது ரத்த அழுத்தப் பிரச்னைக்கு முறையான சிகிச்சைகள் எடுத்துக்கொள்கிறார். இந்த நிலை தொடரும்பட்சத்தில் வருங்காலத்தில் இதயம் தொடர்பான தீவிர பிரச்னைகள் ஏற்படலாம். பிற வாழ்வியல் பாதிப்புகளுக்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே, தேவை உடனடி கவனம்” என்றார் டாக்டர் பிரபாகரன்.

ஆய்வு குறித்தும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் முக்கிய பக்கவிளைவான இதய பாதிப்புகள் குறித்தும் இதயநோய் மருத்துவர் பாரதி செல்வனிடம் கேட்டோம்.

“ஆய்வு சொல்லும் முடிவுகளை கவனத்தில்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும், இந்தச் சூழலைப் பதற்றமின்றி எதிர்கொள்ள வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த ரத்த அழுத்த விழிப்புணர்வு அளவுக்கான தரவுகளுடன் இந்தத் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், இன்று விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை உணரலாம். ஆகவே, ‘எதிர்காலத்தில் இந்த நிலை நிச்சயம் மாறும்’ என்ற நம்பிக்கையுடன் அடுத்தகட்ட நகர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும். ‘பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா’வின் ஆய்வின் முடிவிலும் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்’ என்ற வாதத்தையே முன்வைக்கின்றனர். விழிப்புணர்வை அதிகப்படுத்துவதில் மருத்துவர்களின் பங்கு இன்றியமையாதது.

போதிய விழிப்புணர்வு இல்லாமல், உயர் ரத்த அழுத்தப் பிரச்னையை கவனிக்காமல் விடும்பட்சத்தில் மூன்று பிரச்னைகள் ஏற்படலாம்.

 • ரத்த அழுத்தம் அதிகரித்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகமாகும். இதனால், இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்படலாம். அது பின்னாளில் மாரடைப்பு போன்ற தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம்.

 ஹெல்த்: உயர் ரத்த அழுத்தம் உதாசீனம் வேண்டாம்!
 • ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது இதயத்தின் கீழ்ப்புறத்தில் இடது அறையின் (வென்ட்ரிக்கிள்) சுவர் தடிமனாகும். அதனால், இதயத்தின் செயல்திறன் குறையத் தொடங்கும். பிரச்னை நாள்படும்போது இதயச் செயலிழப்பு ஏற்படலாம்.

 • ரத்த அழுத்தம் அதிகரித்தால் சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படலாம். ரத்த அழுத்தம் சீராக இருந்தால், ஒரு நிமிடத்தில் 60 முதல் 90 முறை இதயம் துடிக்கும். சீரற்ற இதயத்துடிப்பு இருப்பவர்களுக்கு ஒரு நிமிடத்தில் 150 முதல் 200 முறை இதயம் துடிக்கக்கூடும். நாளடைவில் அது ரத்தம் உறைதல் பிரச்னையை ஏற்படுத்தும். ரத்த ஓட்டம் காரணமாக, உறைந்த ரத்தம் சிதறி, உடலில் ஆங்காங்கே பாயும்நிலை உருவாகலாம். உறைந்த ரத்தம் சிதறி, எந்த உறுப்பில் சென்று சிக்கிக்கொள்கிறது அல்லது அடைப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட பிரச்னைகள் ஏற்படும். உதாரணமாக, மூளையில் ரத்தம் தேங்கினால் பக்கவாதம் ஏற்படக்கூடும். அதுவே சிறுநீரகம் என்றால், அது தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்” - எச்சரிக்கிறார் டாக்டர் பாரதி செல்வன்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் கவனத்துக்கு...

 • ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் கொலஸ்ட்ரால் அளவையும் பரிசோதிக்க வேண்டும்.

 • ரத்த அழுத்தப் பிரச்னை இதயநோய்க்கு வழிவகுக்கும் என்பதால், இதயநலனையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

 • உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை (பி.எம்.ஐ) தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

 • சர்க்கரைநோய் பாதிப்புக்கான பரிசோதனை அவசியம். நோய் கண்டறியப்பட்டால், அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

 • ரத்த அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் ஒரு முறை அதன் அளவைப் பரிசோதிக்க வேண்டும். அளவு கட்டுக்குள் வந்த பிறகு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது.

 • உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்

 • தினமும் 40 நிமிட நடைப்பயிற்சி கட்டாயம்.

 • மது மற்றும் புகைப்பழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

 • மருந்து மாத்திரைகளை உதாசீனப்படுத்தக் கூடாது.

 • வீட்டிலேயே ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பவர்கள், நேர வரைமுறையை வைத்துக்கொண்டு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், முடிவுகளில் தவறுகள் இருக்கலாம்.

 • கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு உள்ள உணவுகளான சர்க்கரை, பிரெட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.

 • தூக்க நேரத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்க வேண்டும்.

 • மனநலத்துக்கும் ரத்த அழுத்த மாற்றங்களுக்கும் தொடர்பிருக்கிறது என்பதால், மகிழ்ச்சியான, பதற்றமில்லாத மனநிலைக்குப் பழக வேண்டும்.