திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற பெண்ணை எலி கடித்ததால் அவருக்கு 60,000 ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஸ்ஸாமின் குவகாத்தி கேல்லரியா திரையரங்கில், 2018 அக்டோபர் 20-ம் தேதி, 50 வயது பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் படம் பார்க்கச் சென்றிருந்தார். இடைவெளி நேரத்தில் அவருடைய காலை ஏதோ ஒன்று கடித்துள்ளது.

பதறியடித்து வெளியே வந்து பார்த்த போது அவரது காலில் இருந்து ரத்தம் வந்துள்ளது. திரையரங்கில் இருப்பவர்கள் யாரும் அவருக்கு முதலுதவி அளிக்கவில்லை. உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் சென்று இருக்கிறார்.
மருத்துவர்கள் அவரை இரண்டு மணிநேரம் அப்சர்வேஷனில் வைத்திருந்து, பரிசோதனை செய்தனர். பெண்ணின் காலை கடித்தது என்னவென்று ஆரம்பத்தில் ஊர்ஜிதமாக தெரியவில்லை. அதன் பின்னர் எலி கடிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் 6 லட்சம் இழப்பீடு கோரி புகார் அளித்தார். புகாரைத் தள்ளுபடி செய்யுமாறும், 15,000 ரூபாய் இழப்பீடாக வழங்க ஒப்புக் கொள்வதாகவும் திரையரங்கு தரப்பில் கூறப்பட்டது.
பெண்ணின் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த நுகர்வோர் நீதிமன்றம், திரையரங்கின் சுகாதாரமின்மை மற்றும் அலட்சியத்தைச் சுட்டிக் காட்டியது.

அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மன வேதனை ஏற்படுத்தியதாக 40,000 ரூபாயும், வலி மற்றும் துன்பத்திற்காக 20,000 ரூபாயும், மருத்துவக் கட்டணத்திற்கு 2,282 ரூபாயும், சட்ட நடவடிக்கை செலவுகளுக்காக 5,000 ரூபாயும் தர உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகையை 45 நாள்களுக்குள் கொடுக்க வேண்டும் எனவும், அப்படிச் செய்யத் தவறும் பட்சத்தில், தீர்ப்பின் தேதியிலிருந்து ஆண்டுக்கு 12 சதவிகிதம் வட்டி விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.