உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், ஹெச்.1.என்.1 வைரஸ் என்று நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் வரிசையாகப் படையெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் அவற்றினால் நமக்குத் தொற்று ஏற்படாமல் இருக்கச் சுகாதாரத் தற்காப்பு முறைகளைப் பின்பற்றவேண்டியது அவசியம். சுகாதாரத் தற்காப்பு நடவடிக்கைகளில் "கை சுத்திகரிப்பு" என்பது முதலிடம் பெறுகிறது.

கைகள் வழியாகத்தான் நோய்த்தொற்றுகள் அதிகம் உண்டாகின்றன. அதாவது, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கைகளின் மூலமாகத்தான் நோய்க் கிருமிகள் எளிதில் பரவும். எனவே, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்குமே இது பொதுவான ஒன்று. கைகளைக் கழுவி தூய்மையாக வைத்திருக்கும்போது பிறரிடமிருந்து நமக்கு நோய்க்கிருமிகள் பரவுவதைப் பெரும்பாலும் தடுக்க முடியும்.
``கைகளின் சுகாதாரம்" என்று வரும்போது கைகளைக் கழுவப் பலர் சோப் அல்லது ஹேண்ட் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்கின்றனர். தற்போது சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் காரணமாக அங்கு ஹேண்ட் சானிடைசர்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

மேலும் சோப், ஹேண்ட் வாஷ்களோடு ஒப்பிடுகையில் ஹேண்ட் சானிடைசர்கள் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளிடமிருந்து நம்மை அதிகம் பாதுகாக்கின்றன என்று சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாகப் பல இடங்களில் ஹேண்ட் சானிடைசர்களுக்குப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
கைகளைக் கழுவ நாம் பயன்படுத்தும் ஹேண்ட் வாஷ் மற்றும் ஹேண்ட் சானிடைசர்கள் பற்றியும், இவற்றில் எது சிறந்தது என்பதைப் பற்றியும் பொது மருத்துவர் அர்ஷத் அகிலிடம் பேசினோம்.

"தினமும் தூய்மையான நீரில் கைகளைக் கழுவுவது மிகவும் ஆரோக்கியமானது. பொதுவாக நாம் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவுவது வழக்கம். இதைத் தவிர்த்துச் செல்லப்பிராணிகளோடு விளையாடிய பிறகு, கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, ரசாயனப் பொருள்களைக் கையாண்ட பிறகு சோப், ஹேண்ட் வாஷ் அல்லது ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்தவேண்டியது அவசியம்.
முன்பெல்லாம் கைகளைச் சுத்தப்படுத்த சோப்புகளை மட்டும்தான் பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று நமக்குப் பலவித வடிவங்களிலும் நறுமணங்களிலும் ஹேண்ட் வாஷ், ஹேண்ட் சானிடைசர்கள் கிடைக்கின்றன.

ஹேண்ட் வாஷ்களோடு ஒப்பிடுகையில் ஹேண்ட் சானிடைசர்கள் அதிக திறன் மிகுந்தவை. இவை நோய் ஏற்படுத்தும் கிருமிகளிடமிருந்து நம்மைக் காக்கின்றன. திரவம் அல்லது ஜெல் வடிவில் இருக்கும் ஹேண்ட் சானிடைசர்களை சிறிதளவு எடுத்துக்கொண்டு கைகளில் முழுவதும் தேய்த்த பிறகு கைகளில் உள்ள நோய்க்கிருமிகள் முழுவதும் செயலிழந்தது போகின்றன.
ஹேண்ட் வாஷ் பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்தும்போது கைகளைக் கழுவத் தண்ணீர் தேவைப்படும். ஆனால், ஹேண்ட் சானிடைசர்களைப் பொறுத்தவரையில் தண்ணீர் தேவையில்லை. எனவே, வெளியில் செல்லும்போதும், தண்ணீர் இல்லாத நேரங்களிலும் கைகளைச் சுத்தப்படுத்த ஹேண்ட் சானிடைசர்கள் ஏற்றவையாக இருக்கின்றன. ஹேண்ட் சானிடைசரைப் பயன்படுத்திய உடனேயே அதே கைகளால் உணவுப்பொருள்களைச் சாப்பிடலாமா என்று சிலர் கேட்கலாம்.

இந்த ஜெல்லை கையில் தேய்த்த சில நிமிடங்களிலேயே அது உலர்ந்துவிடுவதால் அது எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், சானிடைசர் ஜெல்லை கைகளில் தேய்த்த பிறகு அது உலர்வதற்கு முன்னால் கண்களையோ, முகத்தையோ கைகளால் தொடக் கூடாது.
ஹேண்ட் சானிடைசர்களில் ஆன்டிபயாடிக்(Antibiotics), கிளிசரால்(Glycerol), ஐசோ புரோப்பைல் ஆல்கஹால்(Isopropyl alcohol) மற்றும் நறுமணத்திற்குக் காரணமான ரசாயனங்கள் உள்ளன. இதில் உள்ள ஆன்டிபயாடிக் மற்றும் ஐசோ புரோப்பைல் ஆல்கஹால் இரண்டும் நோய்க்கிருமிகளை அழிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
கைகளைச் சுத்தம் செய்யும் முறைகள்:
முதலில் இரண்டு கைகளையும் குழாய் நீரில் கழுவ வேண்டும். சூடான அல்லது வெதுவெதுப்பான நீர் என்றால் நல்லது. இது கிடைக்காத பட்சத்தில், குளிர்ந்த நீரில் கழுவலாம். அல்லது தரமான ஹேண்ட் சானிடைசரைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்தலாம் . கைகளைக் கழுவ சோப்பை எடுத்துக்கொள்வதைவிட ஹேண்ட் சானிடைசரைப் பயன்படுத்துவதே சிறந்தது என்பதை நினைவில்கொள்ளவும்.

கையில் சிறிதளவு ஹேண்ட் சானிடைசரை எடுத்துக்கொண்டு இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து நன்கு தேய்க்கவும். இரண்டு கைகளிலும் சானிடைசர் ஜெல்லை நன்கு பரவச்செய்ய வேண்டும். வலது கை உள்ளங்கையால் இடது புறங்கையை நன்கு தேய்க்க வேண்டும். பின்னர் அதையே இடது கை உள்ளங்கையால் வலது புறங்கையைத் தேய்க்கவும். கைமுழுவதும் நன்றாகப் பரவியுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
இரண்டு கைகளையும் கோத்து விரல்களுக்கு நடுவிலும் சானிடைசர் செல்லும்படியாக விரல் இடுக்குகளை நன்கு தேய்க்க வேண்டும். முன்னும் பின்னும் தேய்த்து நன்கு பரவச்செய்ய வேண்டும். விரல்களின் பின்புறத்தை உள்ளங்கையில் தேய்க்க வேண்டும். ஒரு கையின் உள்ளங்கையை மறு கையின் கட்டை விரலால் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். அப்படியே இரண்டு கைகளுக்கும் செய்ய வேண்டும்.

சுழற்சி முறையை வைத்து இரண்டு உள்ளங்கைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். விரல்களை வைத்து உள்ளங்கையைத் தேய்க்க வேண்டும். ஒரு கையை வைத்து மற்றொரு கையின் மணிக்கட்டைச் சுழல் முறையில் தேய்க்க வேண்டும்.
கைகளை நன்கு தேய்த்த பிறகு, சோப் பயன்படுத்தியிருந்தால் தூய்மையான நீரில் இரு கைகளையும் கழுவ வேண்டும்.ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தியிருந்தால் ஜெல் காயும்வரை கண்கள், முகத்தில் கைகள் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார் மருத்துவர் அர்ஷத் அகில்.