``கோவிட்19 தடுப்பு மருந்து அனைவரையும் சென்றடைய 4 ஆண்டுகள் ஆகும்!" - சீரம் நிறுவன சி.இ.ஓ

தடுப்பு மருந்து தயாரிக்கும் விவகாரத்தில் உலகம் நம்பிக்கை வார்த்தைகளை எதிர்பார்க்கிறது - அடார் பூனாவாலா
கோவிட்-19 தடுப்பு மருந்து கண்டறியப்படுவதைக் காட்டிலும் அது எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால்தான் பாதிப்பின் தீவிரம் கட்டுக்குள் வரும். உலகம் முழுவதும் 140 தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பரிசோதனைகளையும் வெற்றிகரமாக முடித்து எந்த நாட்டின் தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.

அண்மையில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், "2021-ம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் கோவிட்-19 தடுப்பு மருந்து தயாராகிவிடும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவின் முக்கிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனாவாலா அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
சீரம் நிறுவனம் கோவிட்-19 வைரஸுக்கான மருந்து தயாரிப்பதற்காக ஐந்து சர்வதேச மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, தடுப்பு மருந்து தயாரிப்புக்காக அந்நாட்டின் கமாலியா ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணையவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 ஆண்டுகள்!
சீரம் நிறுவனம் 100 கோடி மருந்துகளைத் தயாரிக்கவும் அவற்றில் 50 கோடி மருந்துகளை இந்திய மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கவும் உறுதி தெரிவித்துள்ளது.
லண்டனிலிருந்து ஃபினான்ஷியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அடார் பூனாவாலா அளித்துள்ள பேட்டியில், "உலகத்தில் அனைவரையும் இது சென்றடைவதற்கு இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகலாம். குறைந்தபட்சம் 2024-ம் ஆண்டு இறுதியில்தான் கிடைக்க வாய்ப்புள்ளது. உற்பத்தித் திறனைவிட மிகவும் அதிக அளவில் மருந்து தயாரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பிற மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் ஆளாகியுள்ளன.
தடுப்பு மருந்து தயாரிக்கும் விவகாரத்தில் உலகம் நம்பிக்கை வார்த்தைகளை எதிர்பார்க்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால், ஒருவர்கூட அந்த நம்பிக்கைக்கு அருகில் இன்னும் செல்லவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தடுப்பு மருந்து இரண்டு ஷாட்டாகத் தயாரிக்கப்பட்டால் உலக மக்கள்தொகைக்கு 1,500 கோடி மருந்துகள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. "உலகத்தின் தேவைக்கேற்ப அதிக அளவில் தடுப்பு மருந்தைத் தயாரிப்பதும் விநியோகிப்பதும் மிகவும் கடினமான பணியாக இருக்கும்.

சீரம் நிறுவனத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான தடுப்பு மருந்துகளை வளரும் நாடுகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் ஆர்டர்கள் வருவதால் வளரும் நாடுகளுக்கான முன்னுரிமை குறையும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.