ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

நீண்ட ஆயுள், ஆரோக்கியமான மனநிலை... பொது வாழ்க்கை தந்த பரிசு! - தோழர் நல்லகண்ணு

தோழர் நல்லகண்ணு
பிரீமியம் ஸ்டோரி
News
தோழர் நல்லகண்ணு

மனசே மனசே...

ளிய மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான நெடும் பயணத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று தினம்தோறும் அதிகாரவர்க்கங்களுக்கு எதிராகக் களமாடுகிறார், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’யின் மூத்த தலைவர் நல்லகண்ணு!

95 வயதைத் தொடவிருக்கும் தோழர், இப்போதும் இளைஞர்தான்! ``வாசிப்புப் பழக்கம்தான் எனக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு. பயணங்களின்போது, பாரதியார் பாடல்கள், திருக்குறள் புத்தகங்களை மறக்காமல், உடன் எடுத்துச்செல்வேன். பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்’’ என்று சொல்லிச் சிரிக்கும் நல்லகண்ணு, எப்போதும் தோழர்கள் புடைசூழவே காட்சியளிக்கிறார்.

``கட்சிக் கூட்டம், பிரசாரம், போராட்டம் என்று வாழ்க்கையின் பெரும்பகுதி தோழர்களோடுதான் கழிந்திருக்கிறது. நாள்தோறும் நிறைய மக்களைச் சந்திக்கிறோம். அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக அறவழியில் போராடுகிறோம். லட்சியத்தை நோக்கிய இந்தப் பயணத்தில், தனிப்பட்ட எங்களுடைய குடும்பத்தைப் பற்றிய எண்ணமோ அல்லது சுயநலச் சிந்தனைகளோ எழுவதற்கு வாய்ப்பேயில்லை. அதனால்தானோ என்னவோ, பொது வாழ்க்கைக்குள் வந்துவிட்டவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமான மனநிலையில் நீண்டநாள் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன். தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்ததால், சிறு வயதிலிருந்தே நீச்சல் அடித்துக் குளிக்கும் பழக்கம் உண்டு. இப்போதும்கூட நீர்நிலைகள் உள்ள ஊர்களுக்குச் செல்லும்போது, மனம் குளிர நீந்திக் குளிக்கப் பிடிக்கும். உடலையும் மனதையும் ஒருசேரப் புத்துணர்வாக்கும் பயிற்சி இது’’ என்கிற நல்லகண்ணுவுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்ற பிரச்னைகள் எதுவும் கிடையாது.

பொது வாழ்க்கை தரும் அன்றாட அழுத்தங்களிலிருந்து இவர் தன்னை எப்படி மீட்டெடுத்துக்கொள்கிறார்?

``அண்மையில், தி.நகர் அரசு குடியிருப்பிலிருந்து நான் வெளியேற்றப்பட்டபோது, ‘அரசே எனக்குப் புதிதாக ஒரு வீட்டை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்’ எனப் பலரும் குரல் கொடுத்தார்கள். நகரின் மையத்தில், சாலை ஓரத்திலேயே தனி வீட்டில் நான் வசித்துவந்தபோது, தோழர்களும் மக்களும் எந்நேரமும் எளிதாக என்னைச் சந்திக்க வசதியாக இருந்தது. இப்போது வீடு மாறிய பிறகு, எனக்குச் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மனைவியின் ஓய்வூதியத்தில் அந்திமக்காலத்தை கழித்துவரும் எனக்கே திடீரென வீட்டை காலி செய்துவிட்டு இடம் மாறுவதென்பது இத்தனை சிரமங்களைத் தருகிறதென்றால், ஆண்டாண்டு காலமாக கூவம் கரையோரமாக, குடிசை வீடுகளில் குடும்பத்துடன் தங்கி, கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவரும் எளிய மக்களை திடீரென ஓர் அரசு உத்தரவில் வீட்டை காலி செய்து, நடுத்தெருவில் நிராதரவாக நிறுத்துவதை எண்ணிப் பாருங்கள்.

கடந்த வருடம், கிரீம்ஸ் சாலையிலுள்ள கூவம் கரையோரக் குடியிருப்புகளை காலி செய்து, அந்த மக்களை செம்மஞ்சேரியில் குடியேற்றினார்கள். வீட்டை இழந்த ஒரு சிறுமி என்னிடம் வந்து, ‘தாத்தா, நான் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வீட்டை மாற்றினால், தேர்வு எழுத நான் எப்படிப் பள்ளிக்கு வந்து செல்ல முடியும்?’ என்று கேட்டாள். அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனாலும், அந்தச் சிறுமிக்கு, செம்மஞ்சேரி அருகே எந்தப் பள்ளியிலும் இடம் கிடைக்கவில்லை. பாதியிலேயே அவள் படிப்பு நின்றுபோனது. இது ஓர் உதாரணம்தான். வீட்டு வேலை, கூலி வேலை செய்து கிடைத்து வந்த சொற்ப வருமானத்தையும் இழந்து, சென்னைக்கு வெளியே அந்த மக்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாதவை.

இப்போதும் அந்தச் சிறுமியின் வார்த்தைகள் என் மனதைக் கீறிக்கொண்டே இருக்கின்றன. `மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற மாறாத தத்துவத்தை மனதில் இருத்திக்கொண்டுதான், அடுத்தகட்டப் போராட்டத்துக்குத் தயாராக வேண்டியிருக்கிறது!’’ அழுத்தமும் அர்த்தமுமாகச் சொல்லி முடிக்கிறார் தோழர் நல்லகண்ணு!