பட்டம் பறக்கவிடப் பயன்படும் மாஞ்சா நூலால், இதுவரை பல விபத்துகள் நடந்துள்ளன; உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக சென்னையில் கடந்தாண்டு மாஞ்சா நூலால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு காவல்துறை தடை விதித்தது. எனினும், இதைப் பொருட்படுத்தாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவோர் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் சென்னையில் மாஞ்சா நூலால் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது வேதனையளிக்கிறது.
உயிரைப் பறிக்கும் அளவுக்கு மாஞ்சா நூல் ஆபத்தானதா... அதற்கு காரணம் என்ன.. சிகிச்சை இருக்கிறதா என்பது பற்றி, இந்திய அவசர மருத்துவத்துக்கான சங்கத்தின் துணைத்தலைவர் டாக்டர் சாய் சுரேந்தரிடம் கேட்டோம்...

``மாஞ்சா நூல் தயாரிக்க, சாதாரண கண்ணாடித் துண்டுகள், பல்லியின் வால், ஒருசில விஷம் நிறைந்த வேதிப்பொருள்கள் கலந்து, அதை மிகவும் பலம் பொருந்தியதாகச் செய்கிறார்கள். காற்றாடி விடும்போது, அது எதிலும் மோதி அறுபடாமல் இருக்கத்தான் இப்படிச் செய்கிறார்கள். வடசென்னையில் காற்றாடித் திருவிழா நடைபெறும். அப்போது காற்றாடி வைத்து, டீல் விடுவார்கள். ஒருசிலநேரம் மாஞ்சாவை பலமாகச் சேர்த்தாலும், அது அறுபடத்தான் செய்யும். அப்போது காற்றாடி மட்டும்தான் அறுபடுமே தவிர அந்த நூலுக்கு ஏதும் ஆகாது.
காற்றாடியில் இருந்து அந்த நூல் அறுந்து, காற்றில் பறந்து கீழே வரும்போதுதான் சாலையில் இருச்சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு இத்தகைய விபத்து ஏற்படுகிறது. மாஞ்சா கயிறு கழுத்தை இழுக்கும்போது, கழுத்து அறுபடுகிறது. கழுத்துப் பகுதியின் மேலிருக்கும் சருமம் முதலில் அறுபடும். அடுத்து , சருமத்தின் அடியிலுள்ள ஃபேஷியா என்கிற லேயர், பின்னர் தசைப்பகுதி, அதைத் தொடர்ந்து ட்ரெக்கியா எனப்படும் மூச்சுக்குழாய் ஆகியவை அறுபடும். மூச்சுக்குழாய் அறுபடும் போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இது தொண்டைக்குழி வரை கிழிப்பதால், சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு நேரிடுகிறது. பாதிக்கப்பட்டவர் ஒருவேளை மீட்கப்பட்டாலும் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்குள் மரணம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தாலும்கூட, அவர்களைக் காப்பாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு.

தற்போது கழுத்து வரை நீளும் ஹெல்மெட் கிடைக்கிறது. கழுத்துப் பகுதியில் அணியும் பேண்டுகள் (neck bands) உள்ளன. கழுத்தில் அணியக்கூடிய இத்தகைய பேண்டுகள், மாஞ்சாநூல் பட்டாலும் அறுபடாது. இருச்சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு இது கவசமாக இருக்கும். தற்போது இதுபோன்ற பேண்டுகள் ஆன்லைனிலும் கிடைக்கின்றன. ஹெல்மெட்டுடன் நெக் பேண்டும் சேர்த்து அணியும்போது மாஞ்சாநூல் ஆபத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்" என்றார்.