அ.உமர் பாரூக், அக்கு ஹீலர்
உணவு / சாப்பாட்டுச் சரித்திரம்
உணவால் ஆனது உலகம். இந்த உயிர்க்கோளத்தில் உள்ள பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்கும் உணவுதானே உயிர் ஆற்றல் தரும் ஜீவாமிர்தம்!
உணவுக்கு என ஒரு வரலாறு உண்டு. உயிரினம் தோன்றிய காலத்துக்கு முன்பே தொடங்குகிறது உணவின் வரலாறு. மனிதனுக்கும் முன் தோன்றியது உணவுதான். மனிதன் இங்கு பிறந்தபோதே, அவனுக்கான உணவுகள் இருந்தன. நாடோடியாகத் திரிந்த மனிதன், வேட்டையாடி உணவை உண்டான். நெருப்பைக் கண்டுபிடித்ததும், உணவைச் சமைத்துச் சாப்பிடும் முறையைக் கற்றுக்கொண்டான். ஓர் இடத்தில் குடியேறி நிலையான வாழ்க்கையை வாழ்ந்தபோது, விவசாயத்தைக் கற்றுக்கொண்டான். வரலாறு முழுக்க நடந்த பல போர்களுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் உணவும் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. உணவின் வரலாறு என்பது உண்மையில் மனிதகுல வரலாறே!

‘உணவு’ என்ற சொல்லின் மீது, பிற மக்களுக்கு இல்லாத கூடுதல் பற்று தமிழர்களுக்கு இருக்கிறது. தமிழில் உணவு என்ற சொல்லை ‘அறுசுவை உணவு’ என முன்னொட்டு சேர்த்தே பயன்படுத்துவோம். உணவு எப்படிப்பட்டது, எதனால் ஆனது என்பவற்றை இந்தச் சொல் குறிக்கிறது.
‘உணவு’ எனும் சொல் நம் வழக்கத்தில் உடல்நலத்தோடு தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது. நம் அன்றாட வாழ்வில் சுவாசிப்பதும் உறங்குவதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்குத் தவிர்க்க முடியாதது சாப்பிடுவது. அதனால்தான், நம் முன்னோர்கள் ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்று உணவிலேயே உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறையைப் போற்றினர். உயிரின் ஊறுபாடு தொடங்குவது உணவின் மாறுபாட்டால்தான். என்ன நோய்க்கு, என்ன உணவு சாப்பிடலாம் என்பதில் தொடங்கி, எந்தெந்த உணவு வகைகள் யார் யாருக்குப் பொருந்தாது என்பது வரை மிக விரிவான உணவுக் கோட்பாடுகள் தமிழ் மரபில் உள்ளன.
‘அமெரிக்கக்காரன் மின்சாரம் கண்டுபிடிச்சான், சீனாக்காரன் பேப்பரைக் கண்டுபிடிச்சான்... தமிழன் சாப்பாட்டைக் கண்டுபிடிச்சான்’ என வேடிக்கையாகச் சொல்வார்கள். சரி, விஷயத்துக்கு வந்துவிடலாம். உணவைப் பற்றி இவ்வளவு அறிந்த, மூத்தகுடிகளான நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? சமைப்பது முதல் சாப்பிடுவது வரை ஏதும் அறியாதவர்களாக, உலகின் ஆகப்பெரிய நோயாளிக்கூட்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறோம்.

பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் நமது விவசாயத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், அதனை ஒழுங்குபடுத்தவும் ஆங்கிலேய அரசின் சார்பாக இங்கிலாந்தில் இருந்து அகஸ்டஸ் வால்கர் என்பவர் அனுப்பப்பட்டார். இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு “இந்தியர்களிடம் இருந்து நீர் மேலாண்மையை நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். உணவு உற்பத்தியில் அவர்களுக்குக் கற்றுத்தர நம்மிடம் எதுவும் இல்லை” என்றார். ஆனால், நம்முடைய இன்றைய நிலை தலைகீழானது. உணவு உற்பத்தியில் மட்டும் அல்லாமல், அவற்றைச் சமைப்பது முதல் சாப்பிடுவது வரை அனைத்தும் சிக்கலானதாக மாறியிருக்கிறது. விதை நெல்லை எடுத்து, பயிர் விதைக்கும் காலம் போய், விதைத்தன்மையே இல்லாத பயிர் ரகங்கள் வந்துவிட்டன. ரசாயனக்கலவையாக கிடைக்கும் உணவுப் பொருட்களை, கூடுதல் நஞ்சுகளைக் கலந்து டப்பாவில் அடைத்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நாமும் எந்த பிரக்ஞையும் இல்லாமல், அதை க்யூவில் நின்று வாங்கி, உண்கிறோம். இன்ஸ்டன்ட் சமையல் மூலம் கூடுதல் விஷத்தன்மையை உணவில் ஏற்றிக்கொண்டே ஆரோக்கிய வாழ்வுக்கு ஆலோசனை கேட்பவர்களாக மாறி இருக்கிறோம்.
சுழலும் இந்தப் பூமிப்பந்தின் மைய அச்சாகத் திகழ்வது உணவுதான். உணவென்னும் முதுகெலும்பை மனிதர்கள் இழந்துவிட்டால் உடல் நலம் எப்படி நிமிர்ந்து நிற்கும்? ‘லாபம்’ என்ற ஒற்றைச் சொல் உலகத்தின் விளை நிலங்களையும் நம் உணவு வகைகளையும் தின்று செரித்துக்கொண்டிருக்கிறது. நாம் வாழும் இந்த நவீன உலகில் பின்னோக்கித் திரும்புவது சாத்தியம் இல்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், மரபுவழி அறிவோடு நவீனத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியும்தானே!
நம் இன்றைய உணவுகளை, நமது மரபான உணவு அறிவின் வழி நின்று, நவீன அறிவியலின் துணையோடு ஆராய்வதுதான் இந்தத் தொடரின் நோக்கம். தொடங்கலாமா? எடுங்கள் உங்கள் தினசரி மெனுவை... ஒவ்வொரு உணவாக பகுத்துப் பார்க்கலாம்.
- பயணம் தொடரும்
அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்...
மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பம் மற்றும் எக்ஸ்ரே தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பையும், அக்குபஞ்சரில் பட்டயம், அக்குபஞ்சர் மருத்துவ பட்ட மேற்படிப்பும் முடித்துள்ளார். உணவு, உடல், மருத்துவம் குறித்த பல்வேறு கட்டுரைகளை எழுதிவருகிறார். இதுவரை 20 நூல்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களில் சில மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர்’ கல்வி நிறுவனத்தின் முதல்வராகவும், தமிழ்ப் பல்கலைக்கழக அக்குபங்சர் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். பொதுமக்களுக்கான ‘வீட்டுக்கொரு மருத்துவர்’ பயிற்சியைத் தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் இவரது கல்வி நிறுவனம் நடத்திவருகிறது.