Published:Updated:

உணவின்றி அமையாது உலகு - 2

உணவின்றி அமையாது உலகு - 2

உணவின்றி அமையாது உலகு - 2

ர் அறிஞர் குழந்தைகளின் மனோபாவம் பற்றி அறிவதற்காக அவர்களின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுத்து ஏதாவது வரைந்து தருமாறு கேட்டாராம். குழந்தைகள் வரைந்து தந்த விதவிதமான ஓவியங்களில் ஓர் ஒற்றுமையைக் கண்டு வியந்தார்.

அது என்ன ஒற்றுமை தெரியுமா? ஒரு வட்டத்தை முதலில் வரைந்துகொள்ளும் குழந்தை கள் அதைச் சுற்றி இன்னும் சில வட்டங்களையோ கோடுகளையோ கிழித்து ஓவியமாக மாற்றியிருந்தார்கள். குழந்தைகளைப் பற்றி அறிவதற்கான அவருடைய ஆய்வு கடைசியில் எதில் முடிந்தது தெரியுமா? வயிற்றில்தான்.

உணவின்றி அமையாது உலகு - 2

எல்லாக் குழந்தைகளும் வரையத் தொடங்கிய முதல் வட்டம் நம்முடைய வயிறுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏனென்றால், குழந்தைகள் தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதும் சரி, வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகும் சரி வயிற்றை மையமாகக்கொண்டுதான் நம் சிந்தனைகள் தோன்றுகின்றனவாம்.

வாழ்க்கையின் மையமே வயிறுதான் என்பதைக் குழந்தைகள் எவ்வளவு அழகாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நமக்கும் இந்த உண்மை தெரியும்தான். ஆனால், சகல உயிரினங்|களிலும் வயிற்றைக் கெடுத்துக்கொள்வதில் முன்னிலை வகிப்பது மனிதர்கள் மட்டும்தான். எல்லா உயிரினங்களும் தன் தேவைக்குச் சாப்பிடுகின்றன. நாம் பசிக்கும் சாப்பிடுகிறோம்; ருசிக்கும் சாப்பிடுகிறோம்.

ருசிக்குச் சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், ருசிக்குச் சாப்பிடும்போது அளவைத் தாறுமாறாக மீறுகிறோம். அளவை மீறுவதோடு நிறுத்திக்கொள்வது இல்லை. ருசிக்காகப்  பசியையும் மதிப்பது இல்லை. சரி, இந்தப் பிரச்னைகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

எது இயற்கையான ருசி, எது செயற்கையான ருசி என்ற பிரிவினையே இல்லாமல், நாக்குக்கு நன்றாக இருக்கிறது எனும் ஒரே காரணத்துக்காக நச்சுக்களைக்கூட சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். செயற்கையான சுவையை முன்னிறுத்தி, நம் உணவுகளில் கூடுதல் சுவைக்காக ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.

உணவுக் கலப்படம் குறித்து நாம் அறிந்துகொள்வதற்கு முன்னால், கேரளா வரை ஒரு பயணம் போய்வர வேண்டும். ஏனென்றால், தென் இந்தியாவில் உணவுக் கலப்படம் குறித்த விழிப்புஉணர்வு வேகமாகப் பரவிய இடம் கேரளா. உணவின் தன்மை பற்றி இரு மலையாளிகள் பேசிக்கொள்ளும்போது, ‘இவர் பெரிய மோகனன் வைத்தியர். உணவைப் பற்றி பேச வந்துட்டார்’ என்கிற சொல்லாடலை நாம் கேட்க முடியும். அந்த அளவுக்கு உணவு பற்றிய விழிப்புஉணர்வுப் பணியில் செயல்பாட்டாளராக இருப்பவர் மோகனன் வைத்தியர்.

உணவின்றி அமையாது உலகு - 2

கேரளா, ஆலப்புழாவில் இருக்கும் மோகனன் வைத்தியர், ஆயுர்வேத மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தாத்தாவிடம் பயின்ற மருத்துவம் ஒருபுறம் இருந்தாலும், இவருக்கு மருத்துவத்தில் ஆர்வம் ஏற்படவில்லை. இந்தியா முழுவதும் தொழில் தொடர்பாக பயணம் மேற்கொண்ட மோகனன், பிற்காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்துக்குத் திரும்புவது என முடிவு செய்தார்.

தாத்தாவிடம் பயின்றபடி, மூட்டு வலிக்கான தைலம் ஒன்றைத் தயாரித்து, ஒரு நோயாளிக்குக் கொடுத்திருக்கிறார். சிறுவயதில், தன் தாத்தா காலத்தில், அப்பா காலத்தில் தயாரிக்கப்பட்ட அதே தைலம் இப்போது தயாரிக்கப்பட்டபோது, அதன் ஆற்றல் குறைந்திருப்பதை உணர்ந்தார். தயாரிப்பு முறைகள், மூலப்பொருட்கள் என எல்லாம் சரியாக இருந்தும் வலி குறைக்கும் தன்மை மட்டும் குறைந்து போயிருப்பதைக் கண்டார் மோகனன் வைத்தியர்.

மனித உடலின் தன்மை மாறியிருக்கிறதா? அல்லது தான் தயாரித்த மருந்தின் தன்மை மாறியிருக்கிறதா என ஆராய்ந்தார். சில ஆண்டுகள் முயற்சிக்குப் பின் ஓர் உண்மை அவருக்குப் புரிந்தது. அதாவது,  மூலப்பொருட்களிலேயே கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு மருந்தைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் எண்ணெய், தேன், பால் போன்ற அடிப்படைப் பொருட்களின் தன்மை கலப்படத்தால் மாறியிருப்பதைக் கண்டுகொண்ட வைத்தியர் மோகனன், எந்தெந்த பொருட்களில் என்னென்ன விதமான கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்ற ஆய்வைத் தொடங்கினார்.

ஆய்வு போகும் பாதை அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது. நாம் அன்றாட உணவுக்காக வீட்டுச் சமையல் அறையில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள், மிக மோசமான ரசாயனக் கலப்படங்களால் தயாராக்கப்பட்டவை எனும் உண்மை அவரைப் புரட்டிப்போட்டது.

இப்போது அவர் உணவு குறித்த விழிப்புஉணர்வை,  பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று விளக்குகிறார்.

அவர் கிளினிக்குக்கு முதன் முதலாகச் செல்லும் நோயாளி, ஒரு முழு நாளை அதற்காகச் செலவிட வேண்டும். நோயாளி குறித்த நேரத்துக்கு வந்தவுடன், உணவுக் கலப்படம் குறித்த தன் விளக்கத்தைக் கூறுகிறார். பிறகு, அவருடைய பெட்டியைத் திறந்து ரசாயனங்களக் கலந்து, நாம் கேட்கிற உணவுப் பொருட்களைத் தயாரித்துக் காட்டுவார். அதுவும், நாம் கேட்கிற கம்பெனியின் பொருளைப் போன்றே! பால் முதல் தேங்காய் எண்ணெய் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பு என்று அவர் தயாரித்துக்காட்டும் பொருட்களைப் பார்க்க நமக்கே பயமாக இருக்கும்.

வைத்தியருடைய தயாரிப்பைப் பார்த்த பின்பு, எந்த உணவுப் பொருளைப் பார்த்தாலும், இது உண்மையானதா அல்லது ரசாயனத் தயாரிப்பா என எழும் சந்தேகத்தை நம்மால் தவிர்க்க முடியாது.

உணவின்றி அமையாது உலகு - 2

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் யாரும் அவர் தயாரித்துக்காட்டுகிற பொருட்களைப் பயன்படுத்த மாட்டார்கள். ‘யூடியூப்’ போன்ற சமூக வலைதளங்களிலும் அவருடைய உரைகள், செய்முறைகள் மலையாளத்தில் கிடைக்கின்றன.

தன்னிடம் வரும் நோயாளிகள் பற்றி மோகனன் வைத்தியர் சொல்லும் விஷயம் இன்னும் அதிர்ச்சியானது. “பெரும்பாலான நோயாளிகளுக்கு நான் சொல்லும் உணவுகளை நிறுத்தியவுடன், அவர்களுடைய நோய்கள் குணமாகிவிடுகின்றன. அவர்களுக்குத் தனியாக சிகிச்சை எல்லாம் தேவை இல்லை. உணவை மட்டும் சரி செய்தாலே போதும்.” இதுதான் அவர் தரும் செய்தி.

இன்று ஏற்படும் எல்லா நோய்களுக்கும் என்ன காரணம்? என ஆய்வுசெய்யும் விஞ்ஞானிகள், முதல் இடத்தில் நம் நவீன உணவுகளை வைத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.

‘ரசாயனம், ரசாயனம் என்று கூறுகிறீர்களே? அப்படி என்ன உணவுகளைத்தான் நாங்கள் சாப்பிடுகிறோம்?’ என நீங்கள் கேட்பது புரிகிறது. வாருங்கள்... பழைய சாப்பாட்டு வரலாறுகளை மாற்றி எழுதிய நவீன உணவுகள் பற்றிப் பார்ப்போம்.

- பயணம் தொடரும்

படம்: ம.நவீன்

புற்றுநோய் ஆபத்து!

இன்று, உலகையே அச்சுறுத்தும் நோயாக இருப்பது புற்றுநோய்தான். முன்பு, யாராவது ஓரிருவருக்குத்தான் புற்றுநோய் இருப்பதாகக் கேள்விப்பட்டிருப்போம். இப்போது புகை, மது என எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவருக்குக்கூட புற்றுநோய் வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம், நம் உணவுகளின் ரசாயனக் கலப்படம்தான். ஒரு சாதாரண, நடுத்தரக் குடும்பத்தின் சமையலறையில் உள்ள பொருட்களில், பெரும்பாலானவை ரசாயனக் கலப்பு உள்ளவைதான். இவை போதாது என்று, பாக்கெட் உணவுகள் வேறு.

மஞ்சள் தூளும் மஞ்சப்பொடியும்!

மஞ்சள் தூளை நாம் பேச்சுவழக்கில் ‘மஞ்சப்பொடி’ என்போம் இல்லையா? அது உண்மையாகிவிட்டது என்கிறார் மோகனன் வைத்தியர். மஞ்சள் கிழங்கை உலர்த்தி, அரைத்துப் பெறப்படுவதுதான் மஞ்சள் தூள். ஆனால், இப்போது நமக்குக் கடைகளில் கிடைப்பது மஞ்சப்பொடிதான். இரண்டுக்கும் என்ன வேறுபாடு? வேறு ஒன்றும் இல்லை. மஞ்சள் தூள், மஞ்சள் கிழங்கிலிருந்தும், மஞ்சப்பொடி வெறும் நிறம் தரும் ரசாயனத்திலிருந்தும் வருகின்றன. உணவுகளில் நிறம் கூட்டுவதற்குப் பல்வேறு வண்ணப்பொடிகள் இருக்கின்றன. அதில், மஞ்சள் நிறம் தரும் ரசாயனக் கலவையைக் கலந்து தயாரிக்கப்படுவைதான் இன்று உள்ள பெரும்பாலான மஞ்சள் பொடிகள். இவை உணவுப்பொருள் அல்ல. வெறும் செயற்கை நிறம் தரும் பொருள்.

செயற்கை மிளகாய்ப்பொடி!

மிளகாயைக் காயவைத்து, அரைத்துச் செய்யும் மிளகாய்ப் பொடிக்குப் பதிலாக, அதிக காரத்தைத் தரும் ரசாயனப் பொருளைக் கலந்து, செயற்கை சிவப்பு நிறமும் கலந்து தயாரிக்கிறார்கள். மிளகாய்த் தூள். நல்ல மிளகாய்ப்பொடியைக் கண்டுபிடிக்கும் டெக்னிக்காக அதன் நிறமும் காரமும் சொல்லப்படும். இவை இரண்டையுமே செயற்கை ரசாயனங்களால் கொண்டுவர முடியும் என்பதுதான் அதிர்ச்சி!