உணவின்றி அமையாது உலகு - 4

கடந்த வாரச் செய்திகளில் எண்ணெய்க் கலப்படம் ஊடகங்களில் பிரதான இடம் பிடித்திருந்ததைக் கவனித்தீர்களா? ஒருவழியாக, ‘நாம் பயன்படுத்தும் எண்ணெய்களில் கலப்படம் இருக்கிறது’ என்கிற உண்மை மெள்ள மெள்ள மக்களைச் சென்றைடைந்து வருகிறது. ரீஃபைண்டு ஆயில்களில் பாமாயிலைக் கலப்பது பற்றிய விழிப்புஉணர்வு மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது.
‘லிக்யூட் பாரஃபின்’ என்கிற அமெரிக்க மண்ணெண்ணெய் கலக்கப்படுவது தேங்காய் எண்ணெயில் மட்டும்அல்ல... விலை உயர்ந்த எல்லா எண்ணெய்களிலும்தான். சாதாரணமாக நாம் பயன்படுத்துகிற எண்ணெய்களையே சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய கட்டாயமான சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இப்போது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன? ஒரு பொருளில் இருந்து எண்ணெய் எடுக்க வேண்டுமென்றால், அந்தப் பொருளைக் காயவைத்து, அரைத்து எடுப்பார்கள். பழைய காலத்தில் செக்கில் ஆட்டி, பிழிந்து எண்ணெய் எடுப்பது வழக்கத்தில் இருந்தது. ஆனால், இப்போது நடப்பது வேறு கதை.

ரீஃபைண்டு ஆயிலைப் பொறுத்தவரை இப்படி அரைப்பதற்குப் பதிலாக, வேறு முறையில் எண்ணெய் எடுக்கப்படுகிறது. முதலில், எண்ணெய் வித்துக்களைப் பிரித்தெடுத்து நசுக்குகிறார்கள். பின்பு, நீராவிமுறையில் 110 முதல் 180 டிகிரி வரை வெப்பநிலையை ஏற்படுத்தி எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. வித்துக்களில் இன்னும் மிச்சம் உள்ள எண்ணெயையும் பிரிப்பதற்காக ‘ஹெக்சேன்’ என்னும் ரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஹெக்சேன் எங்கிருந்து வருகிறது தெரியுமா? பெட்ரோலிய கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் இன்னொரு கழிவுப் பொருள் இது. ஹெக்சேன் வாயுவால், தசைகள், எலும்புகள் போன்றவற்றில் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்று உலகம் முழுவதும் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எண்ணெய் உற்பத்தியைக் கூடுதலாக்கும் நோக்கோடு செய்யப்படும் இந்த ஹெக்சேன் பயன்பாடு ஆபத்தானது. ‘இது ஒரு புற்றுநோய்க் காரணி’ என்றும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படிப் பிரித்தெடுக்கும் எண்ணெயை இன்னும் சுத்தமாக்க, பாஸ்பேட் என்னும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை நடந்தது எல்லாம் எண்ணெய் பிரித்தெடுப்புதான். இதற்கு அடுத்தடுத்த நிலைகளான ரீஃபைனிங், டிகம்மிங், நியூட்ரிலைசேஷன், பிளீச்சிங் என்று ஒவ்வொரு நிகழ்ச்சியாக நாம் பார்த்தால் வேதியியல் மாணவர் மாதிரி ஆகிவிடுவோம். ரீஃபைனிங் பற்றி சுருக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.
காஸ்டிக் சோடா அல்லது சோடா ஆஷ் மூலம் எண்ணெயின் மணம் நீக்கப்படுகிறது. இதற்குப் பிறகு ரசாயனங்களைக்கொண்டு சலவை செய்கிறார்கள். பிசுபிசுப்புத்தன்மையற்ற, நிறமற்ற, மணமற்ற திரவமாக எண்ணெய் மாற்றப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் எண்ணெயில் இருக்கும் இயற்கையான சத்துகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. எண்ணெயின் அடிப்படைத்தன்மையே மாறிப்போகிறது. தெருக்களில் விற்கப்படும் சாலை ஓரக் கடைகளில் வடை சாப்பிடக் கூடாது, சிக்கன் சாப்பிடக் கூடாது என்று ஏன் சொல்லப்படுகிறது தெரியுமா? அங்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காகத்தான். அப்படியானால், ஒருமுறை சூடாக்கப்பட்ட எண்ணெயை மீண்டும் சூடாக்குவது நல்லது இல்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம்தானே? ரீஃபைண்டு ஆயிலின் உச்சக்கட்ட தயாரிப்புமுறை என்ன தெரியுமா?

பல்வேறு செயற்கைமுறைகளால் தயாரிக்கப்பட்ட எண்ணெயை 500 டிகிரிக்கும் மேல் கொதிக்கவைக்கிறார்கள். இந்த உச்சக்கட்ட வெப்பநிலையில் இருந்து குளிர்விக்கப்பட்டு ரீஃபைண்டு ஆயில் தயாராகிறது. இப்படி ஏற்கெனவே கொதிக்கவைக்கப்பட்ட எண்ணெயைத்தான் நாம் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். இயற்கையான தாதுக்கள் எல்லாம் இந்த எண்ணெயில் இருந்து அழிந்திருக்கும் என்று தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை. அப்படியும் இரும்பு, தாமிரம் போன்ற தாதுக்கள் எண்ணெயில் மிஞ்சிவிடக் கூடாது என்பதற்காக, சிட்ரிக் அமிலம் கலக்கப்படுகிறது. இயற்கையான சத்துக்கள் எல்லாம் அழிந்துவிடுவதால், மார்க்கெட்டில் கிடைக்கும் எண்ணெய்கள் அனைத்தும் சத்து இல்லாத எண்ணெய்கள் என்று நாம் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, நம் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு வேலை செய்கிறார்கள். ஏற்கெனவே செயற்கையான மணம் சேர்த்தாகிவிட்டது. செயற்கையான நிறம் சேர்த்தாகிவிட்டது. நிறைவாக செயற்கையான ரசாயனச் சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. உலகில் எந்த ஒரு பரிசோதனைக்கூடத்தில் ஆய்வு செய்தாலும் ரீஃபைண்டு ஆயிலில் சத்துக்கள் இருக்கும்.
இப்படியான எண்ணெய்களில் குறைந்த அளவு பெட்ரோலியக் கழிவுகளை (லிக்யூட் பாரஃபின்) ‘வெள்ளை எண்ணெய்’ என்ற பெயரிலும், ‘மினரல் ஆயில்’ என்ற பெயரிலும் கலப்பதற்கு அரசுகளின் அனுமதியே உண்டு. அப்புறம் என்ன? கம்பெனிகளுக்கு அளவா முக்கியம்? எவ்வளவு லாபம் வேண்டுமோ, அவ்வளவு கலப்பு நடக்கிறது.
அந்தக் காலத்தில் கலப்படம் என்பது விலை அதிகமுள்ள உணவுப்பொருட்களோடு, விலை குறைந்த உணவுப் பொருட்களைக் கலப்பது. ஆனால், இன்றைய நிலை என்ன? உணவுப் பொருள் எங்கு விளைகிறது என்பதும், அதனைத் தயார் செய்பவர் யார் என்பதும் வெளிப்படையாகத் தெரிவது இல்லை. வெளிநாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மக்கள்தொகை அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளைக் குறிவைத்து தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றன. லாபம் ஒன்றே குறிக்கோள் என்பதால், மக்கள் உடல்நலனைக் காவு கொடுக்கவும் அந்த நிறுவனங்கள் தயங்குவது இல்லை. இப்போது உணவுப் பொருட்களில் கலக்கப்படும் பெரும்பாலான பொருட்கள், உடல்நலனைச் சீரழிக்கும் ரசாயன நஞ்சுகளே. இன்னும் நாம் பார்க்கப்போகிற உணவுகளில் நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத விஷங்கள் கலந்திருப்பதை அறியப்போகிறோம்.
- பயணம் தொடரும்
படம்: தே.தீட்ஷித்
எண்ணெய் அறிந்தால்...
பாக்கெட் எண்ணெய்களைத் தவிர்ப்பது எப்போதும் நல்லது. எண்ணெய் எடுக்கப்படும் முறையில் தொடங்கி, அதில் கலக்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் வரை அவற்றின் உண்மைத்தன்மையை அறியாமல, எண்ணெயைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல. ஒவ்வொரு கம்பெனி எண்ணெயையும் பரிசோதிப்பதும், எல்லா தயாரிப்புகளையும் முழுமையாகக் கண்காணிப்பதும் உணவுக் கட்டுப்பாட்டு நிறுவனங்களால் முடியாத காரியம். நாம் பயன்படுத்தும் பொருட்களில் விழிப்புஉணர்வோடு இருப்பது நம் கடமையும்கூட.
உள்ளூரில் கிடைக்கும் பேக் செய்யப்படாத எண்ணெயை வாங்கிப் பயன்படுத்தலாம். இதிலும் கலப்பட நிறுவனங்களின் எண்ணெயை மொத்தமாக வாங்கி, சில்லறையாக பேக் செய்யாமல் விற்கும் அபாயமும் இருக்கத்தான் செய்கிறது. உள்ளூரில் செக்கில் ஆட்டி, எண்ணெய் எடுப்பவர்களிடம் இருந்து நேரடியாக வாங்கிப் பயன்படுத்தலாம்.
”செக்கா... அது எப்படி இருக்கும்...” என்று நகரவாசிகள் கேட்கும் கேள்வி இப்போது மாறிவிட்டது என்றே சொல்லலாம். இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார், பாமயன், உணவு விழிப்புஉணர்வை கிராமங்கள் வரைக்கும் பரப்பிய மருத்துவர் கு.சிவராமன், ஹீலர் பாஸ்கர் போன்றோரின் பணிகளைத் தொடர்ந்து, பெரும்பாலான நகரங்களில் சிறுதானியங்கள் கிடைப்பதைப் போலவே, செக்குகளும் தயாராகிவிட்டன. நம் ஊரில் செக்கு எங்கு இருக்கிறது? என்று கண்டுபிடிக்க வேண்டியதுதான் நம் வேலை.